சனி, செப்டம்பர் 24, 2022

நிர்வாணம். காமம் அறிய நாம் கடக்கவேண்டியது வெகு தூரம்.


 

அருவி குளியல் என சில புகைப்படங்களை பெண்ணியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கவிதாயினி ஒருவர் வெளியிட்டு முகநூல் பக்கத்தில் அதகளம் செய்துள்ளார். இதற்கு வழக்கம்போல் ஆதரவு – எதிர்ப்பு என கடந்த மூன்று, நான்கு நாட்களாக முகநூல் பொங்கல் வைத்துக்கொண்டு இருக்கிறது. இப்போதுதான் அந்தப்பதிவை பார்க்க நேர்ந்தது. அந்தபதிவிலுள்ள புகைப்படங்களை ஆ………வென வாயை பிளந்து பார்ப்பவர்கள், கிராமங்களுக்கு போகாதவர்கள் என்பது தெரிகிறது. கிணறு, ஏரி, குளம், கண்மாய்களில் வெறும் உள்பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு குளிக்கும் பெண்களை சாதாரணமாக காணலாம். விவசாய நிலங்களில், பொதுக்குழாய் இடத்தில் பெண்கள் உள்பாவாடையுடன் புடவையை முட்டிக்குமேல் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு தண்ணீர் பிடிப்பதும், நாற்று நடுவது ரொம்ப, ரொம்ப சர்வசாதாரணம். அங்குயெல்லாம் ஆண்கள் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள். நிலத்தில் வேலை செய்யும் இடத்திலும் இரட்டை அர்த்த வார்த்தைகள் எல்லாம் தூள் பறக்கும். இதையெல்லாம் பார்த்தால், கேட்டால் சமூகவளைத்தளங்களில் குந்தவைத்து உட்கார்ந்துள்ளவர்கள் அந்த பெண்களுக்கு என்னப்பெயர் வைப்பார்கள் எனத்தெரியவில்லை.

இங்கு ஆணோ, பெண்ணோ யார் நிர்வாணத்தை பற்றி, காமம் பற்றி சும்மா பேசினாலே பேசுபவர்களை காமவெறியர்களாக இந்த சமூகம் பார்க்கிறது. தங்கள் மகன், மகளிடம் கூட தந்தை, தாய் இருவரும் பாலியல் குறித்து பேசாமல் விலகிப்போகும் முட்டாள்தனம் இந்தியாவில் மட்டும்தான் என நினைக்கிறேன். கூட்டு குடும்பமாக இருக்கும்போது தாத்தா, மாமன், மச்சான் என ஏதாவது ஒரு உறவு இளைஞனுக்கும், பாட்டி, அத்தை, அண்ணி போன்றவர்கள் திருமண வயதில் உள்ள பெண்ணுக்கு காமம், உடல்உறவு குறித்து லேசுபாசாக சொல்லித்தருவார்கள்.

2000ஆம் ஆண்டு வரை இளைஞர்களாக இருந்தவர்களுக்கு காமக்கதைகள் படிக்கவேண்டும் என்றால் செக்ஸ் புத்தகங்கள்தான் ஒரேவழி. இன்று எல்லாம்மே மொபைலுக்குள் வந்துவிட்டது. ஃபோர்ன் வெப்சைட்கள், ஃலைவ் ஷோ வரை வந்துவிட்டது. அப்படிப்பட்ட யுகத்தில் ஒருபெண், தனது மார்பை காட்டிவிட்டாரே என பொங்குகிறார்கள். ஆடையை கழட்டுவதுதான் பெண்ணியம்மா? புரட்சியா என களமாடிக்கொண்டு இருக்கிறார்கள். அது புரட்சியா அல்லது பப்பாளியா என்கிற ஆராய்ச்சியை பிறகு செய்யுங்கள். அவர் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள். நீ ஜட்டியை மட்டும் போட்டுக்கிட்டு தொந்தியுடன் அருவியில் குளிக்கலாம், பெண்கள் மேலாடை இல்லாமல் குளிக்ககூடாதா? உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயம்மா எனக்கேட்கிறார்கள்.

அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கே ஓப்பாரி வைப்பவர்களின் நோக்கம், அய்யோ என் பொண்டாட்டி எனக்கு மட்டும்மே. அவள் உடம்பை எனக்கு மட்டுமே காட்டவேண்டும், வேறு ஒருவர் எப்படி பார்க்கலாம் என்கிற ஆதிக்க மனோபாவமே. அதே ஆண் என்கிற மனோபாவம்தான் பொதுயிடத்தில் தன்னை ஜட்டியுடன் குளிக்கச்சொல்கிறது. என் கணவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒருபெண் நினைத்தால் அதை தவறு என்கிறோம். அந்த மனோபாவத்தை உடைக்கவேண்டும்மென, என்னை முடிக்கிட்டு குளிக்கனும்னு சொல்லிட்டு, நீ அவுத்துப்போட்டுட்டு குளிக்கறமாதிரி நானும் அவுத்துப்போட்டுட்டு குளிக்கறன், இதேப்பார் எனக்காட்டியுள்ளார் அந்த பெண். அந்த பெண் அப்படி காட்டிவிட்டாரே என்பதல்ல இவர்களது கோபம். தங்கள் வீட்டு பெண்களும் இப்படி செய்துவிட்டால் என்ன செய்வது என்றே வெதும்பி விஷத்தை கக்குகிறார்கள்.

காமம் குறித்த உரையாடல் சமூகத்தில் வெளிப்படையாக நடக்காதவரை இப்படி வெதும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மேற்கத்திய நாடுகளில் காமம் குறித்தும், பெண், ஆண் உடல் அமைப்புகள் குறித்த புரிதல் அங்கு உண்டு. வெளிப்படையாக பள்ளிகளிலேயே அங்கே அதுக்குறித்து பேசுகிறார்கள், பாலியல் கல்வி அங்கு உண்டு. நம்மைப்போல் பெண்களின் கற்பு, மானம், மரியாதையை அவர்கள் யோனியில் வைக்கவில்லை.

நம்நாட்டில் பாலியல் கல்வி இல்லாதது, கூட்டு குடும்பம் என்கிற சிஸ்டம் உடைந்து தனிக்குடும்பங்கள் என்கிற நிலைவந்தபிறகு, இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு காமம் குறித்த புரிதலுக்கு ஃபோர்ன் வெப்சைட்கள், செல்போனில் வரும் காம வீடியோக்களை தவிர்த்தால் வேறு வழியில்லை. கற்றுதருவதா காமக்கலை என பழைய சொற்றொடரை இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். டெக்னாலஜி உலகத்தில் சொல்லித்தரவேண்டிய நிலையிலேயே இளைய சமூகம் இருக்கிறது. எனக்கு தெரிந்து, நன்றாக படித்த சிட்டியில் வாழும் ஒருஜோடிக்கு, திருமணமாகி 5 வருடங்களை கடந்துவிட்டது, இன்னமும் குழந்தை இல்லை. தங்களது கட்டில் அறை வாழ்க்கை குறித்து மருத்துவரிடம் வெளிப்படையாக பேசவே தயங்குகிறார்கள். உடல்கூடல் எப்படி என்பது தெரியாமலே வளர்ந்து சிட்டியில் வளர்ந்து, வாழ்கிறார்கள்.

இன்னொருவன் 10 நிமிஷத்துக்குமேல் முடியலடா என்கிறான். ஃபோர்ன் வெப்சைட்களில் மணிக்கணக்காக செய்யும் வீடியோக்களை பார்த்துவிட்டு நம்மால் அவ்வளவு நேரம் முடியவில்லையே என்றும், ஒருநாளைக்கு பத்துமுறை செய்வேன் என காமகதை படித்துவிட்டு அதை உண்மை என நினைத்துக்கொண்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார்கள்.

பாலியல் குறித்து விவாதிக்க முடியாத நிலையிலேயே நம்முடைய சமூக கட்டமைப்பு உள்ளது. அந்த கட்டமைப்பு உடையாதவரை சாலையில் இடுப்பு தெரியும் ஆன்டிகளை பார்த்தும், லெக்கின்ஸ், டீசர்ட் அணிந்த யுவாதிகளை பார்த்து இப்படியொல்லாம் ட்ரஸ் போடுவதால்தான் நாடு கெட்டுவிட்டது, நாட்டில் ரேப் நடக்கிறது என்பார்கள். இவர்களிடம் சமூகத்தை திருத்துகிறேன் என்கிற பெயரில் ஒருப்பெண் நிர்வாணத்தை வெளிப்படுத்தினால் எதிர்க்கத்தான் செய்வார்கள்.

கலவி விவகாரத்தில் இந்தியர்கள் கடக்க வேண்டிய தூரம் பல்லாயிரம் கிலோ மீட்டர். அதை நோக்கி நடைபோடும்போது பலப்பல தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை சமூகம் நெருங்கும்போது நிர்வாண படங்களை மட்டும்மல்ல நிர்வாணமாக பெண்களை பார்த்தாலும் இவ்ளோதானா என நாம் கடக்க துவங்கியிருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக