ஆதினங்கள் சைவ சித்தாந்தத்தையும், தமிழை வளர்க்கவும் உருவானது. சைவ சிந்தாந்தம் என்பது சாதி மறுப்புக்கொண்டது, சைவ கடவுள்களை வணங்குவது, தமிழ் மொழியை, தமிழ் மரபை வளர்ப்பது. காலப்போக்கில் சில ஆதினங்கள் சமஸ்கிருதத்தை ஏற்றன, சாதி வளையத்துக்குள் சிக்கிக்கொண்டன.
தமிழ்நாட்டில் திருவாவடுதுறை ஆதினம், மதுரை ஆதினம், தருமபுர ஆதினம், போரூர் ஆதினம், குன்றக்குடி ஆதினம், திருப்பாள் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம் என சைவ, வைணவ, சக்தி என்கிற பெயரில் 45 ஆதினங்கள் உள்ளன என்கிறது இந்து சமய அறநிலையத்துறை.
ஆதினங்களின் தலைமை பதவியான குருசந்நிதானம் எனப்படும் ஆதினக்கர்த்தாக்கள் எனப்படுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டினபிரவேசம் என்கிற நிகழ்வை நடத்துவார்கள்.
பட்டின பிரவேசம் என்றால் என்ன?
ஆதினகர்தாவாக பதவியில் அமர்ந்துயிருக்கும் குருசந்நிதானம் என்பவர் பிறந்த நட்சத்திர நாளில், ஆதினத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்வலம் வருவார். வெளிப்படையாக சொல்வதுயென்றால் நானே கடவுள் என்பதே அது. ஆதின மடத்துக்கும், கோயிலுக்குள் வரமுடியாத மக்களுக்கு குருசந்நிதானம் வீதிகளில் வலம் வரும்போது தரிசனம் செய்துக்கொள்ளலாம், பூஜை செய்யலாம். அதேபோல் ஆதின சொத்துக்களை பராமரிப்பவர்கள், குத்தகையாளர்கள், ஆதினத்துக்கு சொந்தமான நிலங்களில் பயிர் செய்பவர்கள் கட்டணத்தை இந்நாளில் வழங்குவார்கள் இதுதான் பட்டிணபிரவேசம் என்பது. சைவ ஆதினங்களில் ஆண்டுதோறும் இந்த நிகழ்வு நடந்துவருகிறது.
தமிழ்நாட்டில் திருவாவடுதுறை ஆதினத்தில் மனிதர்கள் சுமக்கும் பட்டிணபிரவேசம் நிகழ்வு நடந்துவருகிறது. மதுரை ஆதினம், குன்றக்குடி ஆதினம் பட்டிணபிரவேசம் நடத்துவதில்லை. கோவை பேரூர் ஆதினம் வாகனம் வழியாக பட்டிணபிரவேசம் நடத்துகிறார். தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டிணபிரவேசம் என்கிற நிகழ்வு நிறுத்தப்பட்டுவிட்டது. ஆதினகர்த்தாவாக மாசிலாமணி தம்பிரான் சில ஆண்டுகளுக்கு முன்பு பதவிக்கு வந்ததும் 2019ல் பட்டிணபிரவேசம் நடத்த முடிவு செய்தார். திராவிடர் கழகத்தின் எதிர்ப்பால் பல்லக்கை மனிதர்கள் சுமப்பதை நிறுத்திக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவரேதான் பட்டிணபிரவேசம் 2022 மே மாதம் மீண்டும் நடக்கும் என அறிவித்தார்.
எதிர்ப்பு ஏன்?
பட்டிணபிரவேசம் நடப்பதை யாரும் தடுக்கவில்லை. குருசந்நிதானம் எனப்படுபவர் அமர்ந்துக்கொள்ளும் பல்லக்கை பக்தர்கள் என்கிற பெயரில் தோளில் அந்த பல்லக்கை தூக்கிச்செல்வர். அந்தக்காலத்தில் ஆதினங்களின் கட்டுப்பாட்டிலிருந்த விவசாய கூலி அடிமைகள் பல்லக்கை தூக்கி சுமந்தனர். குருசந்நிதானம் என்பவர் பல்லக்கில் கால்நீட்டி படுத்துக்கொள்ள ஆதினங்களின் அடிமைகள் பலப்பல கிலோ மீட்டர்கள் சுமந்து செல்வார்கள்.
பட்டிணபிரவேசம் என்கிற பெயரில் பல்லக்கில் ஒருமனிதன் அமர்ந்துக்கொள்ள வேறு சிலமனிதர்கள் சுமந்து செல்வதைத்தான் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள் எதிர்கின்றன.
பட்டினபிரவேசம் என்பது காலம்காலமாக கடைபிடித்துவரும் மரபு என்கிறார்கள் ஆதினங்களும், அவர்களை சார்ந்தவர்களும். அந்தக்காலத்தில் நீண்ட தூர பயணத்துக்கு மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகளை அரசர்கள், அமைச்சர்கள், ஆதினங்கள் பயன்படுத்தினார்கள், குறைந்த தூரத்துக்கு மனிதர்கள் தூக்கும் பல்லக்குகளை பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் வாகனங்கள் வரவுக்கு பின்னர் பல்லக்கு பயணம் என்பது மாறி, லக்ஸரி வாகனமான ஆடி கார், விமான பயணம் என வலம் வலம்வருகிறார்கள். கணக்குகள் எழுத கம்யூட்டரையும், பேசுவதற்கு ஐபோன்களை பயன்படுத்துகிறார்கள். மரபுகளை உடைத்து ஆதினகர்த்தாக்களே மாற்றங்களை ஏற்றுக்கொண்டனர். ஆனால் மனிதர்களை மனிதர்கள் சுமக்கும் பல்லக்கை மரபு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும், பக்தர்கள் விருப்பப்பட்டு சுமக்கிறார்கள், பல்லக்கில் நகர்வலம் வருவோம் அதை கைவிடமாட்டோம் பாரம்பரியமானது எனச்சொல்வது எப்படி சரியாகும்?
காஞ்சி சங்கரமட பீடாதிபதியாக சந்திரசேகர் இருந்தபோது, சானாதான ஆச்சாரத்தை தீவிரமாக கடைப்பிடிப்பார். பிரதமர் இந்திராகாந்தியை நேருக்கு நேராக சந்திக்க மறுத்தவர் சந்திரசேகரர். அதற்கு காரணம் அவர் விதவை என்பதால் பார்த்தால் தீட்டு என இருவருக்கு இடையில் சேலையையும், பசுமாட்டையும் கட்டிவைத்து சந்தித்தார். கார்கள் புழக்கத்துக்கு வந்தபின்பும் ஆச்சாரம் என பல்லக்கிலே செல்வதை வழக்கமாக கொண்டுயிருந்தார். தந்தைபெரியார் அவர்கள் ஒரு பகுத்தறிவு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, சந்திரசேகர் அமர்ந்துயிருந்த பல்லக்கை மனிதன் சுமந்து செல்வதைப்பார்த்த பெரியார், இந்த அவலம் இன்னும் எத்தனை காலத்துக்கு என அதேமேடையில் கோபமாக கேள்வி எழுப்பிகார். அதைக்கேட்ட சங்கராச்சாரி சந்திரசேகர் பல்லக்கை உடனே கைவிட்டு வாகனத்தை பயன்படுத்த துவங்கினார்.
குன்றக்குடி ஆதினத்தின் குருசந்நிதானமாக வருபவர்கள் பல்லக்கை கைவிட்டுள்ளனர், பல ஆதினங்கள் அப்படி செய்துள்ளனர். சில ஆதினங்கள் மட்டும் தொடர்ந்து பட்டினபிரவேசம் என்கிற பெயரில் மனிதன் தூக்கும் பல்லக்கை பயன்படுத்திவருவதைத்தான் எதிர்க்கிறார்கள். அரசாங்கம் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து பாஜக, அதிமுக, பாமக உட்பட இந்துத்துவா சக்திகள் அதை வைத்து அரசியல் செய்தன.
அரசின் உத்தரவு மாறியது ஏன் ?
தருமபுர ஆதினத்தின் பட்டிண பிரவேசம் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி நீக்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இது திராவிட பற்றாளர்கள், பகுத்தறிவாதிகள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. திமுக பற்றாளர்கள், ஆதரவாளர்கள் ஏன் திமுக உறுப்பினர்களை கூட அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் அரசின் பின்வாங்கல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுக்கு என கொள்கைகள் உள்ளன. அந்த கொள்கைகளை மக்கள் மத்தியில் பேசுகின்றனர், மக்களும் அதை ஏற்றுதான் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள், அந்த கொள்கையை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள், ஆனால் திமுகவுக்கு வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள். ஆட்சி நிர்வாகம் என்பது அனைவருக்குமானது. சட்டம்மே மதசார்பற்ற அரசு என்றே சொல்கிறது. வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடு பார்க்காமல் அனைவரின் கருத்துக்கு ஏற்பத்தான் அரசாங்கம் செயல்படமுடியும்.
மனிதனை மனிதன் சுமப்பது என்பது மனித உரிமைகள் சட்டம் தவறு என்கிறது. அதனை சுட்டிக்காட்டித்தான் பகுத்தறிவு இயக்கங்கள் பல்லக்கு தூக்குவதை தடுக்கவேண்டும் என போராடுகின்றன. மனித உரிமையை ஆன்மீக மரபு எனச்சொல்லி அது அரசியலாக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டுள்ளன. ஆதினங்கள் அந்த அரசியலுக்கு பலியாகியுள்ளனர் அல்லது அவர்களே அரசியல் செய்கிறார்கள்.
இந்த அரசியலை தணிக்கவே அரசின் உத்தரவு மாறியுள்ளது, தடையை நீக்கியுள்ளது. இல்லையேல் இந்த பிரச்சனையை வைத்து தமிழ்நாட்டில் மத அரசியலை செய்ய பாரதிய ஜனதா உட்பட இந்துத்துவா சக்திகள் தயாராகவுள்ளன. இந்துத்துவா கொள்கைவாதியான கவர்னர் ரவி, சிறுபான்மை இயக்கங்கள் மீது வேட்டைநாய் போல் பாய்கிறார்.
ஆதினங்கள் கவனிக்க வேண்டியது.
தமிழ்நாட்டில் கடவுளை வணங்கும மக்களுக்கு பகுத்தறிவு அதிகம். வடநாட்டைப்போல் கோமியத்தை பிடித்து தீர்த்தம் குடியென்றால் இங்கே யாரும் குடிக்கமாட்டார்கள். பிணங்கள் மிதக்கும் ஆற்றில் குளித்தால் பாவம் போகும் எனச்சொன்னால் சொல்பவனை எட்டி உதைப்பார்கள். ரமலான் பண்டிகையன்று இஸ்லாமிய நண்பனோடு சேர்ந்து பிரியாணி சாப்பிடும் இந்து சகோதரனும், பொங்கல் பண்டிகையன்று கிருஸ்த்துவ நண்பனோடு சேர்ந்த கேக் வெட்டி கொண்டாடும் சமத்துவம் இங்கே அதிகம் என்பது ஆதினங்களுக்கு நன்றாக தெரியும். வடஇந்தியாவைப்போல் மாற்று மதத்தினருக்கு எதிராக வெட்டு குத்து என இறங்கும் இந்துத்துவா வெறிக்கொண்ட சமூகம் தமிழ் சமூகம்மல்ல.
சாமியார்களை ஓடஓட விரட்டும் ஆட்சியாளர்களும், இயக்கங்களும் இங்கில்லை. ராமன் எங்கே இன்ஜினியரிங் படித்தார்? ராமன் ஒரு திருடன் என கடவுளை பகிரங்கமாக விமர்சித்த நாத்திகர், பெரியாரின் தொண்டர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதுக்கூட ஆதினங்களை அடக்கவோ, அப்புறப்படுத்தவோ நினைக்கவில்லை. ஆதினங்களின் வளர்ச்சிக்கே துணை நின்றார். இதையெல்லாம் மறந்து தருமபுர ஆதினம், பாஜகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் வேலை செய்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. எப்போதே நிறுத்தப்பட்ட பட்டிணபிரவேசத்தை மீண்டும் தொடங்க முயல்வதும், கவர்னர் ரவியை மடத்துக்கு அழைத்துவந்து அரசியல் பேசுவதும், மதுரை ஆதினம் என் உயிருக்கு ஆபத்து நான் உள்துறை அமைச்சரிடம் முறையிடுவேன் எனச்சொல்வதின் பின்னால் ஆன்மீக அரசியல் உள்ளதோ எனத்தோன்றுகிறது.
ஆதினங்கள் அரசியலில் ஈடுப்படுவதையும், அரசியல் செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான சைவ சமய பணியையும், தமிழ் வளர்ச்சி பணியையும் செய்ய வேண்டும். சங்கரமடம் பிராமணீயம் போல் அரசியல் செய்ய நினைத்தால், தமிழ் மக்களின் கோபம் இளையராஜாவை தாக்கியதுப்போல், நேரடியாகவே உங்களை தாக்கும். உங்களுக்காக இன்று குரல் கொடுக்கும் சோடாபாட்டில் ஜீயர், பாஜக யாரும் அப்போது வரமாட்டார்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.
அரசு செய்ய வேண்டியது?
குழந்தை விவாகம், பெண்கள் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்றவற்றை ஒழிக்க மதவெறிக்கொண்ட பிற்போக்குவாதிகளை எதிர்த்து பல தலைவர்கள் போராடியே வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.
கடவுளின் பெயரால், ஆன்மீக நம்பிக்கை, சமய மரபு, பாரம்பரியம் என்கிற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் மக்களுக்கு விரோதமான சமய விவகாரங்களில் பின்வாங்காமல் பக்குவமாக செயல்பட்டு காலத்துக்கு ஏற்றாற்போல் ஆன்மீகவாதிகளின் பழக்கவழக்களை மாற்றிக்கொள்ள செய்யவேண்டும், இல்லையேல் கடுமையான முறையில் அவர்களை வழிக்கு கொண்டுவரவேண்டும்.
அதுவே பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் கொள்கை வாரிசுகள் செய்ய வேண்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக