திங்கள், ஏப்ரல் 18, 2022

நெற்றியில் நாமத்தை போடு ஐ.ஏ.எஸ்ஸாக வாய்ப்புண்டு.

 


பாப்பா படிச்சிட்டு என்னவாகப்போற?

கலெக்டர்.

தம்பி உனக்கு என்னவாக ஆசை?

போலிஸ் அதிகாரி.

தமிழ்நாடு மட்டும்மல்ல இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியோ, தனியார் பள்ளியில் 12வது தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் பிள்ளைகளிடம் கேட்டால் மேற்கண்டதைத்தான் சொல்வார்கள். இப்படி சொல்லிய பிள்ளைகள் இனி கடினமாக படித்து தேர்வு எழுதினாலும் அவர்கள் கனவு கானும் அதிகாரியாக வரமுடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

ஒன்றியரசின் சிவில் சர்விஸ் அதாவது நிர்வாக பணிகளுக்கு செல்லவேண்டும்மென்றால் குரூப் 1 தேர்வுகளை எழுதவேண்டும். இந்த தேர்வை UPSC ( Union Public Service Commission ) என்கிற அமைப்புதான் அதற்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த அமைப்பு தன்னிச்சையான அமைப்பு, அதாவது தேர்தல் ஆணையம் போல் என வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான தலைவரை ஒன்றியரசின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவர் நியமிப்பார்.

இந்தியாவை ஆள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எனச்சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அதிகாரம் கொண்டவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் இவர்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் என்பதால் சிவில் சர்விஸ் தேர்வு என்பது மிககடுமையான தேர்வாக இருக்கும். ஆண்டுதோறும் பலலட்சம் இளைஞர்கள் கனவுகளோடு இந்ததேர்வை எழுதுகின்றனர். இதற்காக பலஆண்டுகளாக தேர்வு எழுதி தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றவர்களும் உண்டு.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி யூ.பி.எஸ்.சி சேர்மனாக மனோஜ்சோனி என்பவரை நியமித்துள்ளது ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மனோஜ்சோனி?

மும்பையில் சுவாமி நாராயணன் என்கிற சாமியாரின் அனுபாம் மிஷன் என்கிற அமைப்பில் மனோஜ் தந்தை இணைந்து சேவை செய்துவந்துள்ளார். இவருக்கு 5 வயதாகும்போதே அவர் தந்தை இறந்துவிட்டதால் மனோஜ்கான கல்வி உதவியை அந்த அமைப்பே ஏற்றுக்கொண்டது, அதன் சேவகராக இணைந்துள்ளார். பட்டப்படிப்பு அரசியல் அறிவியல் படித்துள்ளார். படித்து முடித்தும் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். வதோராவில் உள்ள மகாராஜா சயாஜீரோ பல்கலைக்கழகத்தில் 40 வயதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர். சர்ச்சை அதுவல்ல.

ஆர்.எஸ்.எஸ் ஊழியர், சிறுவயது முதலே அந்த இயக்கத்தில் இணைந்து மதப்பணிகள் செய்துவந்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக இருந்துக்கொண்டு பாஜகவின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தாரே, எதிர்வீட்டு வாசலில் மூத்திரம் பெய்த வழக்கில் கைது செய்யப்பட்டாரே டாக்டர் சுப்பையா அவரைப்போலவே இவரும் பேராசிரியாக இருந்துக்கொண்டு பாஜகவுக்கு வெளிப்படையாக வேலை செய்துவந்துள்ளார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவர் என்ன பேசவேண்டும், எதைப்பேசவேண்டும் எனச்சொல்லி தந்தவர், எழுதி தந்தவர் சாட்சாத் மனோஜ்சோனி.

குஜராத் கலவரத்துக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தவர். குஜராத் கலவரத்தில் முதலமைச்சர் மோடியின் செயலை புகழ்ந்து புத்தகம் எழுதியுள்ளாராம். 2020 ஆம் ஆண்டு நிஷ்கர்ம கர்மயோகி அதாவது துறவி என அறிவித்துக்கொண்டுள்ளார். அவரைத்தான் யூ.பி.எஸ்.சி அமைப்பின் தலைவராக நியமித்துள்ளனர். 2023 ஜீன் வரை அவரது பதவிக்காலம் உள்ளது.

பெரும்பாலும் அந்த பதவியில் சிவில் சர்விஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களையே நியமிப்பது வழக்கம். இந்நிலையில் இந்தியாவை வழிநடத்தப்போகும் சிவிஸ் சர்விஸ் அதிகாரிகளை உருவாக்கும் அமைப்புக்கு துறவி என அறிவித்துக்கொண்டவரை தலைவராக்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்சின் மறைமுக துணையுடன் சங்கல்ப் என்கிற அமைப்பு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் சிவில் சர்விஸ்க்கான பயிற்சி மையங்களை நடத்திவருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்விஸ் தேர்வு எழுதுபவர்கள், எழுத்து தேர்வில் தேவையான மதிப்பெண் எடுக்கவில்லையென்றாலும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்றதாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது தொண்டர்களுக்கு பயிற்சியளித்து அரசு துறைகளில் அவர்களை ஊடுருவச் செய்துள்ளது. இதுவரை 4000 தொண்டர்கள் அரசு அதிகாரியாக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் மீது வெளிப்படையாக முன்னாள் முதல்வர் வைத்த குற்றச்சாட்டை இதுவரை விசாரிக்கப்படவேயில்லை. அந்த சங்கல்ப் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியவர், ஆடு வளர்க்கப்போகிறேன் எனச்சொல்லிவிட்டு வந்தவர்தான் தற்போதைய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

பல்கலைக்கழகங்களில் மதவாதிகளை துணைவேந்தராக நியமித்தார்கள் இப்போது அரசு பணிகளுக்கான துறையில் வெளிப்படையாக நுழைந்துள்ளார்கள். இனி கண் விழித்து படிக்க தேவையில்லை, ஆண்டுக்கணக்கில் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு போகதேவையில்லை. 10 சதவித பொருளாதார இடஒதுக்கீடு பெற்ற சாதியாகவோ, அவாக்களின் அனுக்கிரகம் பெற்றவர்களாகவோ, நெற்றியில் திருநீறு பட்டை அல்லது நாமம், கழுத்தில் உத்திராட்சக்கொட்டை, கண்டிப்பாக காவி உடை அணிந்துக்கொண்டுபோய் நேர்முகத்தேர்வில், பாரத் மாதாகீ ஜே, ஜெய் அனுமான், ராமர் நமது கடவுள், மனுசாஸ்திரம்மே நமது சட்டப்புத்தகம் என சொன்னால் நேர்முகத்தேர்வில் 100 மதிப்பெண் தந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஸாக்கிவிடுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக