வெள்ளி, பிப்ரவரி 20, 2026

ஹீக்அப் கலாச்சாரம்.


நாம் கல்லூரியில் படிக்கும்போது நமக்கு பிடித்த பெண் நம்மை ஒருமுறை திரும்பி பார்க்கமாட்டாளா என மனம் ஏங்கும் தலைமுறை இருந்தது.

காதல் கடிதம் தந்துவிட்டு பதில் வருமா? அண்ணன்களை அழைத்துவருவாளா எனத்தெரியாமல் தவித்த தலைமுறை உண்டு.

அவள் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தவன், போன் செய்து ஹலோ சொல்ல வாரக்கணக்கில் பயந்த தலைமுறை உண்டு.

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து அட்டையில் காதலை வெளிப்படுத்திவிட்டு பதில் வருமா என காத்திருந்தவர்கள் உண்டு.

காதல் வந்தாலும் பார்த்து பேசிக்கொள்வது என்பது கனவாகவே இருந்த தலைமுறையும் உண்டு.

அந்த தலைமுறையெல்லாம் பூமராகிவிட்டார்கள். இன்றைய தலைமுறை வாழ்வியல் முறை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. காதலுக்காக காத்திருப்பதும், கத்தி குத்துகளும், அடிதடிகளும், வீட்டை விட்டு ஓடிப்போவதும், திருட்டு கல்யாணம் செய்துக்கொள்வதுயெல்லாம் கடந்துப்போய் மாமங்கமாகிவிட்டன.

காதல் என்பதற்கு புது அகராதியை உருவாக்கியிருக்கிறது இன்றைய Gen Z தலைமுறை. புதுப்புது ரிலேசன்ஷப்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது புதியதாக ஹீக்கப் கலாச்சாரம் என ஏதோ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் போல. அது லிவிங் டூ கெதர் போன்றது என்கிறார்கள். லிவிங்கில் ஒரு கமிட்மென்ட் இருக்கிறது. இந்த ஹீக்அப் கலாச்சாரத்தில் அப்படியொரு கமிட்மென்ட் கூட கிடையாதாம். அதாவது கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், உடலுறவு இதனை சாதாரணமாக செய்துக்கொள்வதுதான் ஹீக்அப் கலாச்சாரமாம்.

மச்சி வா போய் டீ சாப்பிட்டுட்டு வருவோம், டார்லிங் வா டின்னர் போகலாம் என அழைப்பதுப்போல் டீல் செய்கிறார்களாம் இந்த ஹீக்அப் கலாச்சாரத்தில். மெட்ரோ சிட்டிகளில், கார்ப்பரேட் பணிகளில் அதாவது ஐடி செக்டாரில் பணியாற்றும் இடங்களில் வாரஇறுதியில் பப் களுக்கு போகும்போது, வெளியே ப்ரண்ட்ஸ் டூர் போகும் இடத்தில் நடக்கிறது என்கிற தகவல்கள் பூமர் அங்கிள்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

2008, 2009 காலக்கட்டத்தில் பிரபலமான இந்தியா டுடே இதழில் பாலியல் சார்ந்த கருத்து கணிப்பு கட்டுரைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும். திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்கு பின்பு பாலியல் உறவுகள், பாலியல் நட்புகள், உறவு பொஷி***சன்ஸ், லெஸ்பி என பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சர்வே எடுத்து வெளியிடுவார்கள், ஒவ்வொரு ஆண்டும் அது பரபரப்பாக பேசப்படும். (அந்த சர்வே வெளியீட்டின் பின்னால் வேறு வர்த்தக காரணங்கள் உண்டு) ஆண்டு நினைவில் இல்லை இந்தியா டுடே தமிழ் பதிப்பில் வெளியான பாலியல் உறவு குறித்து நடிகை குஷ்பு சொல்லியிருந்த கருத்து தமிழ்நாட்டில் புயலை உருவாக்கியது. ( தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு என்னவாவது என சிலகட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஊருக்கு ஊர் அவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள். அதன்பின்தான் குஷ்பு அரசியலுக்குள் நுழைந்தார்.)

அப்போது மேற்கத்திய கலாச்சாரம் என நாம் சொல்லிக்கொண்டுயிருந்த கலாச்சாரங்கள் தமிழ்நாட்டின் மெட்ரோநகரங்கள் வரை டேட்டிங் கலாச்சாரம், லிவிங் டூ கெதர், மைக்ரோ ஷிப்ட், Situationships, Open Relationships, ஒன் நைட் செக்****ஸ், ஹீக்அப் என்கிற பெயரில் பரவி அது உலக கலாச்சாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. எனக்கு தெரிந்ததே இவ்வளவு என்றால் இன்னமும் என்னன்ன மாதிரி இருக்கும் எனத்தெரியவில்லை.

GenZ தலைமுறையே இப்படியென்றால் ஆல்பா தலைமுறை வேறு உருவாகி இருக்கிறது, 15 வயதிலேயே GenZ யை தூக்கி சாப்பிடும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வரும் காலங்களில் இன்னும் என்னன்ன செய்யப்போகிறார்கள் எனத்தெரியவில்லை.


திங்கள், பிப்ரவரி 02, 2026

உலக தலைவர்களை மிரட்டும் பாலியல் புரோக்கரின் ஆவணம்.

 

அமெரிக்கா நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பில்கேட்ஸ், பிரதமர் மோடி, கிளிண்டன் என பல உலகமே அதிர்ச்சியாகிறது. அதிகாரத்தில் இருப்பவர் இதனை கடந்துப்போவார்கள். அவர்கள் கவலைப்படுவது, அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற மக்களிடம் நல்லவர் என்கிற பிம்பம் தேவை. அது உடைவதால்தான் பதறுகிறார்கள்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் போல் பாலியல் தரகர்கள் உலகம் முழுவதும்மே கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உண்டு. சாதாரண மக்களுக்கு தெரியாது, ஆட்சி அதிகாரத்திலுள்ள பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சமூகத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தெரியும். இந்த பிரபலங்களின் பாலியல் தேவையை வெளியுலகத்துக்கு தெரியாமல் பூர்த்தி செய்துதரும் புரோக்கர்கள் தேவை. தங்களுக்கு தேவையானதை கச்சிதமாக செய்துதந்துவிட்டால் அந்த புரோர்க்கர்களுக்கு என்ன தேவையோ அதை இவர்கள் தங்களது அதிகாரத்தை வைத்து செய்துதருவார்கள். இது ஆதிகாலம் முதல் இப்போதுவரை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

 நம்ம தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

 எம்.ஜி.ஆர் உயிரை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவருக்கு தரப்பட்ட சன்மானம் என்ன?

 1991 – 1996 ஜெயலலிதா ஆட்சியில் கவர்னருக்கு தரப்பட்ட விருந்து என்ன?

 ஆட்டோ சங்கர் எழுதிய மரணவாக்குமூலம் நக்கீரன் இதழில் தொடராக வெளிவந்தபோது, சமூகம் மதித்த அரசியல் பிரபலங்களின் கறுப்பு பக்கம் தெரிந்து மக்கள் அதிர்ச்சியாகவில்லையா?

 2005 காலக்கட்டததில் ஆந்திராவை சேர்ந்த பாலியல் புரோக்கர் ஒருவர் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டாரே நினைவில் இருக்கிறதா? அவரின் வாக்குமூலம் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பிம்பத்தை உடைத்தது.

 

அதற்கு முன்பு பிரபல மருத்துவர் பிரகாஷ் என ஒருவர் இருந்து, இளம்பெண்கள், குடும்ப பெண்களை பிரபலங்களுக்கு பாலியல் சேவை செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் விற்று தண்டனை பெற்றாறே அவரின் வாக்குமூலம் நினைவில் இருக்கிறதா?

 தமிழ்நாட்டில் பாலியல் புரோக்கராக இருந்தவர்கள் கடந்தக்காலத்தில் எம்.எல்.ஏக்களாக அமைச்சர்களாகி நம் கண்முன் இப்போதும் நடமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

 நமது இந்தியாவின் உச்ச அதிகாரத்தில் உள்ளவர் உத்தரவில் நடத்தப்பட்ட சொரபுதின் என்கௌண்டர் வழக்கு எதற்கானது?

 இது எல்லாமே அதிகாரத்தில் இருப்பவர்களின் பாலியல் வேட்கைக்காகத்தான். புரோக்கர்களை அதிகாரவர்க்கம் பாதுகாக்கும். தங்கள் கைமீறி செல்லும்போது பலி தந்துவிடும். அப்படி பலி தந்தவர் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்………. ஜீன் லூக் புருனெல் போன்றவர்கள்.

 இது அமெரிக்கா அதிபர் முதல் உள்ளுர் கவுன்சிலர் வரை யாராக இருந்தாலும் இதுதான் எழுதப்படாதவிதி.

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026

அமெரிக்கா முதல் இந்தியா வரை பரபரப்பாக்கியுள்ள எபஸ்டின் பைல்ஸ். - உலக தலைவர்களை தலைகுனிய செய்த ஆவணங்கள்.

 





30 லட்சம் பக்கங்களை கொண்ட "எப்ஸ்டின் பைல்ஸ்" வெளியாகி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் முதல் பல நாட்டு பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போது அமெரிக்காவை தாண்டியும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.  

 

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் யார்?

 

இவர் ஒரு அமெரிக்க கோடீஸ்வரர். இவர் வங்கி மற்றும் நிதி தொடர்பான பணியில் இருந்ததாகவும், அதனால் இவருக்கு அமெரிக்காவின் அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுடனும் மிக நெருக்கமான நட்பு இருந்தார். ஏராளமான, சிறுமிகளையும் இளம்பெண்களையும், ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, அவர்களை பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய மிக மோசமான பாலியல் குற்றவாளியாக இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

 

கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.  "லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்" எனும் தீவில், சிறுமிகளை ஏமாற்றி கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுவந்தது. 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், புளோரிடா பொலிஸாரிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் வைத்து தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் ஒன்றை தந்தார்கள். விசாரணையை ஆரம்பித்த  புளோரிடா காவல்துறையினர், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் Palm Beach வீட்டில் நடத்திய சோதனையில்  அங்கிருந்து  சிறுமிகளின் புகைப்படங்களை கைப்பற்றினர். ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார்.  எனினும் ஜெஃப்ரி எப்ஸ்டீனை கைது செய்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். அதன்பின் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் 2019 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலுக்காக குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு வலையமைப்பை (Network) நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார். அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. எப்ஸ்டீன் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதி சிறையில் வைத்தே அவரது கதையை முடித்துவிட்டார்கள் என பரபரப்பாகின.

 

எப்ஸ்டின் பைல்ஸ் என்றால் என்ன? 

 

ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார் என வழக்கு முடிக்கப்பட்டது. எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லேன் மாக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். அமெரிக்க நீதிமன்ற சட்டப்படி வழக்கு முடிவுக்கு வந்தபின் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் அவை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும். அதன்படி குற்றவாளியாக அறியப்பட்டு, உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற நபர் பற்றிய நீதிமன்ற ஆவணங்கள் தான் எப்ஸ்டின் பைல்ஸ். 

 

ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் என சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் அடங்கிய 300GB அளவிலான ஆவணங்களை அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ சேமித்து வைத்திருந்தவற்றைத்தான் அமெரிக்கா நீதித்துறை ஜனவரி இறுதியில் நீதித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றி வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள "எப்ஸ்டின் பைல்ஸ்" உள்ள தகவல்தான் இந்தியா வரை பரபரப்பாக்கியுள்ளன.

 

அதில், அமெரிக்க ஜனாதிபதியாவுள்ள டொனால்ட் ட்ரம்ப், 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் வைத்து 13-14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை ட்ரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். அப்போது அச்சிறுமி தற்காப்புக்காக ட்ரம்ப்பைக் கடித்ததாகவும், அதற்காக அவர் அச்சிறுமியின் முகத்தில் தாக்கியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

ட்ரம்ப்பின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் நடைபெற்ற விருந்துகளில் ஈலோன் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதாக எப்ஸ்டின் பைல்ஸ் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

 

உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் குறித்து கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 18 ம் திகதி ஈ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், "Microsoft இன் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தார். அதன்பிறகு பாலியல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளை நாடினார்.  இந்த ஈ-மெயிலை அழிக்க பில்கேட்ஸ் வலியுறுத்தினார்'' என்ற விவரங்கள் உள்ளன. பில்கேட்ஸ் - மெலிண்டா ஆகியோர் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்தனர். அதன்பிறகு இருவரும் விவகாரத்து செய்தனர். அந்த சமயத்தில் பில்கேட்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில் எப்ஸ்டீன் உடனான தனது நட்பும் விவகாரத்துக்கு ஒரு காரணம்'' என்று கூறியிருந்தார்.

 

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், 26 வயது ரஷ்ய இளம்பெண் ஒருவரை ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் எப்ஸ்டீன். அவரது மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஆண்ட்ரூ, தான் ஐரினா என்னும் அந்த ரஷ்ய இளம்பெண்ணை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் எப்ஸ்டீனுடைய மாளிகைக்கு விருந்துக்குச் சென்றபோது, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் 17 வயது பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாக பின்னாட்களில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்ததால் ஆண்ட்ரூவையும் அவரது மனைவியும் அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்கள். அதற்கான ஆவணங்கள் அதில் உள்ளன.


 

ஜெப்ரி எப்ஸ்டீன் விசாரணை ஆவணங்களில், அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு மெலானியா ட்ரம்பிற்கும், எப்ஸ்டீனின் உதவியாளரும் காதலியுமான கிஸ்லேன் மாக்ஸ்வெல்லிற்கும் (Ghislaine Maxwell) இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் உரையாடல்கள் இதில் அம்பலமாகியுள்ளன.

 

2002 அக்டோபரில் மெலானியா எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், "அன்புள்ள G! எப்படி இருக்கிறீர்கள்? நியூயார்க் இதழில் எப்ஸ்டீன் (JE) பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அந்த புகைப்படததில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ஸ்வெல் மீண்டும் நியூயார்க் வரும்போது தன்னை அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மெலானியாவின் மின்னஞ்சலுக்கு பதிலளித்த மாக்ஸ்வெல், அவரை "Sweet pea" என குறிப்பிட்டு, தனது பயணத்திட்டங்கள் மாறியுள்ளதால் தற்போதைக்குச் சந்திக்க முடியாது எனச்சொல்லியுள்ளார். இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காலத்தில் மெலானியாவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் திருமணம் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது. 

 

இந்த வரிசையில் நம்ம இந்திய பிரதமர் மோடியை 2017ல் நடனம் ஆடச்சொன்னதாக அதில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் உள்ளது. நான் சொன்னதுப்போல் இந்திய பிரதமர் நடந்துக்கொண்டார் என ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

 

இந்த விவகாரம் இன்னும் சிலமாதங்களுக்கு உலகநாடுகளில் பரபரப்பாக இருக்கும்.



செவ்வாய், ஜனவரி 27, 2026

ரசிகர்களை அடமானம் வைக்கும் நடிகர்கள். இப்போது விஜய்.

 


என் கேரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துயிருக்கிறேன் என மேடை தோறும் பேசிக்கொண்டே இருக்கிறார் நடிகர் விஜய். நான் 100 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு வருகிறேன், எனக்கு பணம் பெரிதில்லை, மக்களுக்கு சேவை செய்யவருகிறேன் என உருட்டுகிறார்.

அவர் சொல்வதுப்போல் கேரியரின் உச்சத்தைவிட்டு வருகிறாறா என்றால் உண்மை தான். வருகிறார் ஏன் வருகிறார்?

மக்களுக்கு சேவை செய்ய அரசியலக்கு வருகிறேன் எனச்சொல்வதெல்லாம் உருட்டுகள்.

உண்மை என்னவென்றால், முன்பெல்லாம் கோடம்பாக்கத்துக்கு 10 கோடி ரூபாய் எடுத்துவந்தால் ஒருபடத்தை எடுத்து வெளியிட்டுவிடமுடியும். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. 10 கோடி பட்ஜெட்டில் நடிகர் ரியோவை வைத்து வேண்டுமானால் எடுக்கமுடியும். சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம்மை வைத்து படம் எடுக்கவேண்டும் என்றாலே 25 முதல் 50 கோடி வரை தேவைப்படும். அதுவே அஜித், கமல், விஜய், ரஜினியை வைத்தெல்லாம் படம் எடுக்கவேண்டும் என்றால் 100 கோடிக்கு மேல் முதலீடு தேவை. அந்தளவுக்கு முதலீடு போட்டு படம் எடுக்க கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் மிகமிகமிக குறைவு.

பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் சன், லைக்கா, ரெட்ஜெயன்ட், பி.வி.ஆர், வேல்ஸ், தாணு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிறுவனங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் எத்தனை எடுத்துவிடமுடியும்? ஒரு நேரத்தில் இரண்டு படங்களுக்கு மேல் எடுத்தால் திணறிவிடுவார்கள். தோராயமாக 300 கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுத்தால் 500 கோடி வசூலித்தால் மட்டுமே லாபம். இந்தளவுக்கு விஜய், ரஜினி படங்கள் லாபம் வருகிறதா என்றால் திரையரங்கு டிக்கட் கட்டணம், சாட்டிலைட் கட்டணம், ஓ.டி.டி கட்டணம் என பேப்பர் கணக்கு தான் சொல்கிறார்கள். இவ்வளவு வசூல், அவ்வளவு வசூல் என்பதெல்லாம் தங்களை சூப்பர் ஸ்டார் என வெளிப்படுத்த வசூல் கணக்கை உயர்த்திக்காட்டுகிறார்கள் என்பதே நிஜம். பெரிய லாபம் வருகிறது என்றால் அந்த நிறுவனம் மீண்டும் அடுத்தப்படத்தை ஏன் அதே நடிகரை வைத்து தயாரிப்பதில்லை?

நடிகர் விஜய்யின் கடைசி 5 படங்களின் தயாரிப்பாளர்கள் யார் எனப்பாருங்கள். இந்த நடிகர்களே பினாமிகளை உருவாக்கி தன்னை வைத்து படம் தயாரிக்கிறார்கள். காரணம் தங்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை, அந்தளவுக்கு பெரிய தயாரிப்பாளர்களும் இல்லை. அதனாலயே பினாமி பெயரில் படம் எடுக்கிறார்கள். தங்களின் சம்பளம் 50 கோடி, 100 கோடி என வாங்கியவர்கள் அதிலிருந்து குறைக்கமுடியாது. அப்படி குறைத்தால் தங்கள் இமேஜ் குறைந்து தாத்தா ரோலில் நடிக்க அழைத்துவிடுவார்கள் என பயப்படுகிறார்கள். ஹீரோ மெட்டீரியலாக அரசியலுக்குள் நுழைந்தால் அதிக வருமானம் வரும் என அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

அதிகாரத்துக்கு வரமுடியாமல் எப்படி இவர்களால் சம்பாதிக்க முடியும்?

அதற்கு தான் இவர்களுக்கு நடிகர் டூ அரசியல்வாதியான விஜயகாந்த் வழிக்காட்டியுள்ளாரே.

சினிமாவில் பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை கொத்தாக வைத்திருந்தவர் விஜயகாந்த். தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மன்றத்தை பக்காவாக அரசியல் அமைப்பாக மாற்றியவர் அரசியல் கட்சி தொடங்கியபோதே ஆட்சி அதிகாரத்தை பிடிக்கமுடியாது என்பது அவருக்கு தெரியும். 2006 சட்டமன்ற தேர்தல் முடிவும், அவர் கட்சி வாங்கிய வாக்கு சதவிதம் தெளிவாக அவருக்கும், அவரது கட்சிக்கும் உணர்த்தியது. ஆனாலும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று தன்னுடைய பலம் இதுதான் எனக்காட்டினார். தன் பலத்தைக்காட்டி 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பெரியளவில் சீட் வாங்கினார், அதே அளவுக்கு ஜெ விடம் பணமும் வாங்கினார். வெற்றி பெற்றார். அப்போதே நான் என் ப்ளாக்கில் எழுதினேன். அவருக்கு இனி அரசியலில் தேய்மானம் என்று. அதுதான் நடந்தது. பின்பு அதிமுகவுடன் கூட்டணி முறிந்தது. பணம் மட்டுமே குறி என களம்மிறங்கியது விஜயகாந்த் மனைவி பிரேமலதா – மச்சான் சுதிஷ் தரப்பு. விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதை என்னிடம் இவ்வளவு வாக்குகள் உள்ளது, நீ எனக்கு இவ்ளோ தா என பேரம் பேசி 2014ல் பாஜகவிடம் கூட்டு வைத்து லாபம் பார்த்தார்கள். 2016ல் மநகூ என உருவானது முழுக்க முழுக்க பணத்துக்காகத்தான். அதன்பின் 2019, 2021, 2024 வரை சீட் வேண்டாம் ரேட் எவ்வளவு என பேரம் பேசியே கூட்டணி வைத்து தோல்வியடைந்து வருகிறார் பிரேமலதா. வெற்றி பெறவேண்டும் என நினைத்தால் அவரின் அரசியல் நிலைப்பாடு வேறுமாதிரி எப்போதே இருந்திருக்கும். 2026 தேர்தலும் தேமுதிகவின் நிலைப்பாடு சீட்டல்ல நோட்டு தான்.

விஜயகாந்த்துக்கு பின்னர் அரசியலுக்கு வந்த நடிகர் கமல்ஹாசனும் மாநிலங்களவை போதும் என சுருங்கிவிட்டார். ரசிகர்களின் வாக்குகளை தேர்தலுக்கு தேர்தல் பெரிய கட்சிகளிடம் அடமானம் வைத்து சம்பாதிப்பதை பார்த்த நடிகர் விஜய், அந்த இருநடிகர்களை விட அதிகளவில் ரசிகர்கள் வைத்துள்ளோம். நாம் அரசியல்கட்சி தொடங்கினால் சினிமாவில் சம்பாதிப்பதைவிட அரசியலில் சம்பாதிக்கலாம் என்றே கட்சி தொடங்கியுள்ளார்.

அரசியல் என்பது சினிமாவில் வசனம் பேசுவது போன்றதல்ல. மக்களின் மனங்களில் நம்பிக்கையை பெறவேண்டும், எதிர்ப்புகளை தைரியமாக எதிர்க்கொள்ளவேண்டும், மக்கள் பிரச்சனைகள் குறித்து தெரிந்துயிருக்கவேண்டும், மக்களை நேருக்கு நேராக எதிர்க்கொள்ளும் தைரியம் வேண்டும். இது எதுவுமே இல்லாத பயந்தாங்கெல்லி தான் நடிகர் விஜய்.

தான் நடித்த ஜனநாயகன் படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் நெருக்கடிக்கு உள்ளாகி படம் வெளிவராமல் நிறுத்தப்பட்டு பந்தாடப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் எனத்தெரிந்தும் இதுக்குறித்து வாய் திறக்காமல் பயந்துப்போய் இருப்பவர் விஜய். கரூரில் 42 பேர் பலிக்கு காரணம் என ஒப்புக்கொள்ளாமல், குறைந்தப்பட்சம் நேரடியாக சென்று அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லாமல் பதுங்கியது எல்லாம் மக்களிடம் அதிருப்தியை தான் உருவாக்கியுள்ளது. அப்படியிருக்க இப்போதும் தன்பின்னால் கட்சிகள் வரும், முதலமைச்சராகிவிடுவேன் என என்பதுயெல்லாம் போதை மருந்து உட்க்கொண்டவன் காணும் கனவும், பேசும் பேச்சு போன்றது.

தன்பின்னால் உள்ள பெரும் ரசிகர் பட்டாளத்தின் பலத்தை அரசியல் கட்சிகளுக்கு காட்ட நினைக்கிறார் விஜய். இதனால்தான் நான் அழுத்தமாக சொல்லிவருகிறேன். விஜய் கூட்டணியெல்லாம் போகமாட்டார். தனித்து நின்று என் பலம் இதுதான் எனக்காட்டுவார். அந்த வாக்குசதவிதத்தை வைத்து அடுத்துவரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பேரம் பேசுவார். கேமரா முன் பேசியதற்கு ஒரு ரேட் வைத்திருப்பதைப்போல அரசியலில் அவர் பேசுவதற்கு ஒரு ரேட் வைத்திருப்பார். அதிக தருபவருக்கு தன் ஆதரவை தருவார். அதனால்தான் சினிமா வசங்களையே மேடையில் பேசிவருகிறார். சினிமாவைப்போலவே அரசியலை, மக்களை அனுகுகிறார். 

முதல். கோணல் முற்றிலும் கோணல் என்பதுப்போல் விஜய்யின் தொடக்கமே கோணலாகத்தான் தொடங்கியுள்ளது. விஜயகாந்த் அளவுக்குகூட விஜய்யால் பிரகாசிக்க முடியாது. அது தற்குறிகளுக்கு தெரிந்து தெரியும்வரை சீமானை சகித்துக்கொள்வதுப்போல விஜய்யையும், சிஷ்ய தற்குறிகளையும் சகித்துக்கொள்ளவேண்டும்.