திங்கள், ஆகஸ்ட் 02, 2010

ஆபத்தாக உருவாகும் ஆன்மீக வியாபாரிகள்.



ஆன்மீகம் லாபகரமான வியாபாரம். அதனால் தான் புதுசு புதுசாக தினுசு தினுசாக ருத்திராட்ச மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு ஆசாமிகள் பலர் சாமியார்களாகிறார்கள். நான் சாமியார், நான் சாமியார் என சொன்னால் நம்பமாட்டார்களே என தங்களை பிரபலப்படுத்த, பிரபலப்படுத்திக்கொள்ள சின்ன சாமியார்கள் நோட்டிஸ் போட்டு நான் சின்ன வயசுலயே அம்மன் அருள் பெற்றவன்(ள்), என் நாக்கில் நாற்காலி போட்டு சக்தி குடியிருக்கிறாள் என விளம்பரம் செய்கின்றனர். வசதியான சாமியார்கள் அதையே இணையதளங்கள் உருவாக்கி அதன் மூலம் விளம்பரம் செய்கிறார்கள்.

இவர்கள் பிரபலமாகும் வரை தான் பிரச்சனை. பிரபலமாகிவிட்டால் பணம், புகழ், அரசியல்வாதிகள் என இவர்களை தேடி வருபவர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது. அப்புறம்மென்ன அதற்க்கு முன் அலுமினிய தட்டில் சாப்பிட்டவர்கள் பின் தங்க தட்டில் தான் சாப்பாடு, தங்க செருப்பு, தங்க சிம்மாசனம், விதவிதமான விலை உயர்ந்த கார்கள், வாட்ட சாட்டமான பாதுகாவலர் பாதுகாப்பு என பிரமாண்டம் உருவாக்கி கொள்கிறார்கள். குறிப்பிட்ட சில ஆண்டிலேயே 1000 கோடி, 2000ம் கோடிக்கு அதிபதிகளாகிவிடுகிறார்கள். நினைத்த நாட்டுக்கு பறந்து போய் ஜாலியாக ஜல்சா செய்கிறார்கள்.

சரி எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் வந்தது, வருகிறது. ஏழை தரும் 5 ரூபாய், 10 ரூபாயால் இவர்கள் இத்தனை கோடிகளுக்கு அதிபதியாக முடியாது. ஆனால், ஏமாந்த இளிச்சவாயன்கள், கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்கும் பெருச்சாளிகள், அரசாங்கத்தை, தொழிலாளிகளை ஏமாற்றி பிழைக்கும் தொழிலதிபர்கள், உடல் உறுப்புகளை காட்டி பணம் பறிக்கும் சினிமா கும்பல்கள், பணக்கார-பதவியாளுக்கு சல்யூட் அடிக்கும் அதிகாரிகள் கும்பல், ஆள்பவர்கள், ஆளபோகிறேன் என்பவர்கள், ஆள்வதை இழந்தவர்கள்யெல்லாம் கடவுள் என இந்த சாமியார்களை வணங்கி இவர்கள் காலடியில் கொட்டும் பணம் தான் இவர்களிடம் கோடிகளாக குவிந்துக்கிடக்கின்றன.

ஏமாற்றி பிழைக்கும் இந்த சாமியார்களின் முகத்திரையை எத்தனை எத்தனை முறை கிழித்தாலும் இவர்களை ஒடுக்க முடிவதில்லை. காரணம் மேலே சொன்ன இந்த பேர்வழிகள் தெரிந்தே அரவணைத்து ஆதரவு தருவதால் தவறே நடக்கவில்லை என்பதை போல மீண்டும் மக்கள் முன் பிரசன்னமாகி பேசி சொகுசாக வாழ்கிறார்கள் இந்த சாமியார்கள்.


நித்தியானந்தா. சில ஆண்டுகளிலேயே மல்டி மில்லியனர் ஆன இளம் சாமியார். ரஞ்சிதா என்ற நடிகையுடன் கட்டிலில் சிங்கம் மான் மேல் பாய்வதை போல காமத்திற்க்காக பாய்ந்ததை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதை பார்த்து மக்கள் காறி துப்பினார்கள். சட்டம் தேடியது, சட்டத்துக்கு பயந்து ஒடி ஒளிந்து பின் கைதாகி சிறையில் புலம்பி பின் பெயிலில் வெளியே வந்து இன்று அதே ஆசிரமத்தில் அமர்ந்து பிரசங்கம் செய்கிறார். அதற்க்கு ஜே ஜே என கூட்டம். அந்த கூட்டத்தில் இருந்தது அன்னடம் காய்ச்சிகள் அல்ல. கோடிகளில், லட்சங்களில் புரளும் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள். இவர்கள் தற்போது நித்திக்கு பிரச்சார பீரங்கிகள், நித்தியை காக்குகள் நந்திகள்.


நித்தியாவது கட்டில் வித்தை மட்டும் தான் காட்டினார். கட்டில் வித்தையோடு கத்தி வித்தை காட்டிய காஞ்சி கம்பெனி அதிபதிகளான சங்கராட்சியார்கள். மாமிகளோடு செய்த கட்டில் வித்தைகளையும், கரன்சி வித்தைகளையும் பகிரங்கப்படுத்திய சங்கரராமன் என்பவரை ரவுடியை ஏவி கடவுளின் வீடு எனச்சொல்லப்படும் கோயிலியே வெட்டி கொன்றார்கள். சட்டத்தின் முன் நிறுத்தி சிறைக்குள் தள்ளப்பட்டு பின் வெளியே வந்த சங்கராட்சாரியார் கம்பெனி தற்போது சைலண்டாக மீண்டும் வியாபாரம் நடத்தி வருகிறது. கொலை வழக்கு நடந்து வருகிறது. இருந்தும் ஆட்சி-அதிகாரத்தில் உள்ளவர்கள், அதிகாரத்தை வளைப்பவர்கள் கூவி கூவி நல்லவரு என காலில் விழுகிறார்கள்.


இவர்கள் மட்டுமல்ல மக்கள் முன்பு அமர்களாக அமர்ந்து வாயிலிருந்து லிங்கம் எடுக்கிறேன் என கண் கட்டு வித்தை நடத்தும் புட்டர்பதி சாய்பாபாவுக்கும் இப்படி பல பிரச்சார பீரங்கிகள் உள்ளார்கள். அரசாங்கமே நல்லது செய்ய பணம்மில்லைங்கிறியாமே?. நான் தர்றன் இந்தா என அரசாங்கத்துக்கு கோடிகளை தெருக்கோடியில் குப்பைகளை கொட்டுவது போல கொட்டுகிறார். சின்ன வயது பெண்களை கற்பழித்து கொலை செய்த சாமியார், ஹவாலா மோசடி செய்யும் சாமியார்கள், தங்கத்தை காட்டி கொள்ளையடிக்கும் சாமியார்கள் என ஊருக்கு ஊர் இவர்கள் உருவாகி தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். இவர்களை பிரமாண்டப்படுத்த பல மைக் செட் இல்லாத பல வாய்கள் ஊர் சுற்றி வருகிறது.

ஆதிகாலத்தில் மழை, புயல், கூ+ரியன், நிலா போன்றவற்றுக்கு பயந்த மனிதன் நாகரீகம் வளர்ந்து கூட்டமாக வாழ தொடங்கிய போது சில அறிவு ஜீவியான மனிதர்கள், வருங்காலத்தில் மக்கள் கூட்டம் நிறைய தவறு செய்ய ஆரம்பித்துவிடும். உதாரணமாக அடுத்தவன் மனைவியை அபகரிப்பது, ஏமாற்றுவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது, ரவுடிஷம், ஊழல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். அதை குறைக்க வேண்டும் என்றால் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் அவன் தவறு செய்யக்கூடாது இதைச்சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதை யூகித்தே கடவுள் என்ற ஒரு பிம்பத்தை ஆதிகாலத்தில் முன்னோர்கள் உருவாக்கி தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்றார்கள்.


கால சுழற்சியில் தங்களை உயர்சாதி என அடையாளப்படுத்திய சோம்பேறி பூணுல் சக்திகள், கடவுள் என்ற பிம்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என யோசிக்க தொடங்கியது. வருங்காலத்த சொல்றன், நிகழ்காலத்த விளக்கறன் என ஓதி சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் கூட்டத்தில் தவறுகள் அதிகமாக நடக்க தவறு செய்பவர்கள் கடவுளுக்கு காணிக்கை தந்தால் மன்னிப்பார் என அளந்தார்கள். பூணுல் சக்திகள் திட்டத்தில் உண்டியல்கள் உருவானது. தவறு செய்யும் நபர்கள் அதிகமாக அதிகமாக தங்களது பாவத்தை போக்க கடவுளிடம் கெஞ்சி, கொஞ்சி தவறை மன்னிக்க வேண்டும் என தவறின் தன்மைக்கு ஏற்ப பணமாக, பொன்னாக, பொருளாக உண்டியல் மூலம் கடவுள்க்கு பங்கு தர ஆரம்பித்தார்கள். தவறுக்கு ஏற்றாற்போல் காணிக்கைகள் மாறின. கோழிகள் அறுப்பட்டன, ஆடுகள் வெட்டப்பட்டன, தேகத்தில் வளறும் முடியை காணிக்கையாக வெட்டி தந்தார்கள், பரிகாரம் செய்தார்கள். லாபம் மொத்தமும் என்னவோ பூணுல் சக்திகளுக்கு தான்.

காலம் மாற மாற இது நல்ல லாபகரமான தொழில் என தெரிந்துக்கொண்டதோடு கடவுள், பாவம் என்ற ஆயுதத்தை ஏவினால் எவ்வளவு பெரிய ஆளாகயிருந்தாலும் தொபுக்கடிர் என விழுந்து விடுவான் என்பதை உணர்ந்து பலரும் சாமியார்களாக உருவாகி நான் கடவுளின் பிரதிநிதி உங்கள் கோரிக்கையை என்னிடம் வையுங்கள் நான் கடவுளிடம் கொண்டு போய் சேர்க்கிறேன் என கிளம்பினார்கள். இவர்களிடம், அரசியல்வாதிகள் அதிகாரம் வேண்டும்மென்றும், அதிகாரிகள் பதவியுர்வு வேண்டுமென்றும், பணக்காரன் மேலும் பணம் வேண்டும்மென்றும் கோரிக்கை வைத்தார்கள், வைக்கிறார்கள்.

இதை அப்படியே பிடித்துக்கொண்டு அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, பணக்காரர்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் இந்த ஆன்மீக வியாபாரிகள். இன்று அரசியல்வாதிகளை விட வேகமாக வளர்ந்து கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் என உள்நாட்டில் வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி கொழிக்கிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம் கோடி என சர்வசாதாரணமாக புழங்குகிறது இவர்களிடம். இந்த வளர்ச்சி ஏதோ 20 ஆண்டு, 30 ஆண்டுகளில் வந்தது அல்ல. அதிகபட்சம் 10 ஆண்டிற்க்குள் வந்தது.

தினமும் வேர்வை சிந்தி உழைப்பவர்ள், மூட்டை தூக்கி பிழைப்பவர்கள், கல் உடைத்து வாழ்பவர்கள், ஒட்டுநராகயிருந்து கஸ்டப்பட்டு சம்பாதிப்பவர்களால் கூட 10 ஆண்டுகளில் 1 கோடி சம்பாதிக்க முடியாது. ஆனால் கடவுள் என்ற பிம்பத்தை காட்டி பயமுறுத்தி மல்டி மில்லியனராகி வாழும் இவர்கள் இன்று ஆட்சி-அதிகாரத்தில் உள்ளவர்களை ஆட்டி வைக்கிறார்கள். இது தொடர்ந்தால் நாளை இவர்கள் நாட்டை பிடித்து உலுக்க போகும் பெரு வியாதிகாரர்காக மாறிவிடுவார்கள். இவர்களை அடக்கவில்லை என்றால் ஆபத்து மக்களுக்கு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக