இறந்து போன மனுஷன் எப்படிய்யா வருவாரு என தலைப்பை படித்து விட்டு முனுமுனுப்பது கேட்கிறது. ராமசாமிநாயக்கர் என்ற வெண்தாடி வைத்த அந்த கிழவன் தன் செயல்களால் மக்களால் மரியாதையாக பெரியார் என அழைக்கப்பட்டார். தமிழகத்தில் எந்த இயக்கம், கட்சிகள் தோன்றினாலும் பெரியார் என்ற பெயரை உச்சரிக்காமல் இயக்குவதுயில்லை. காரணம் அந்த பெயருக்கு அவர் உருவாக்கிய கொள்கைக்கு இருக்கும் வலிமை அப்படி.
அந்த வெண்தாடி கிழவன் உடல் மண்ணுக்கு போனது, அவரது கொள்கைகள் காற்றில் கரைந்து வருகிறது. அந்த கொள்கைகள் கரையாமல் பார்த்துக்கொள்ளவும், அந்த கொள்கைகளை பரப்பவும் தேவை மற்றொருமெரு வீரியமான ஆசாமி.
அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்துவாக, முஸ்லிமாக, கிருஸ்த்துவராக, பௌத்தராக, ஆணாக-பெண்ணாக யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் அந்த ஒருவர் இந்த சமுகத்துக்கு இப்போது தேவைப்படுகிறார். உங்களது செயல்பாடுகள் அந்த வெண்தாடி கிழவரதை போல் இருந்தால் இச்சமுகம் அவருக்கு தந்த பெரியார் என்ற பட்டத்தை, மரியாதையை இச்சகமுகம் இவருக்கும் தரும்.
ஏன் எதற்க்காக மீண்டும் அந்த வெண் தாடி கிழவன் போல் ஒருவர் வர வேண்டும் என கேட்கிறிர்களா ?.
நிறைய காரணங்கள் இருக்கிறது. சமுகத்தில் மாற்றம் தேவை. மக்களிடம், அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் மாற்றம் தேவை. அதனால் தான்.
இன்று பெரியார் கருத்துக்களை, கொள்கைகளை பரப்புகிறேன் என அவரின் சிஷ்யர்களாக, தளபதிகளாக இருந்தவர்கள் காமெடி செய்துக்கொண்டுயிருக்கிறார்கள். அதனால் தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், ஆன்மிகம் பெயரால் மோசடியும் அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன.
தீவிர ஆத்திகராக வலம் வந்து வீட்டை விட்டு வெளியேறி இந்துக்களின் புனித தளம் எனச்சொல்லப்படும் காசிக்கு சென்று தான் அனுபவ பூர்வமாக அறிந்ததை, பட்டு தெளிந்ததை பக்தியின் பெயரில் மயங்கி கிடந்த மக்களுக்கு எடுத்துச்சொல்லி தெளிவுபடுத்த நாத்திகராக மாறி தனது 94 வயது வரை மூத்திர சட்டியோடு உலகம் முழுக்க பயணமாகி பிரச்சாரம் செய்தவர் ராமசாமி.
கடவுள் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்தவர், தூக்கி போட்டு உடைத்து கடவுள் என்பவர் மாயை அவர் கிடையாது அவர் பெயரை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பி ஏமாறாதிர்கள் என்றார்.
எதிரியையும் நண்பராக பாவித்தவர். தன் வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை போல பிராமணிய வெறியர் என வர்ணிக்கப்படும் ராஜாஜியுடன் நல்ல நட்புடன் இருந்தார்.
கடவுள் எதிர்ப்பாளராகயிருந்தாலும் தீண்ட தகாதவர்கள் என கிராமத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட, தாழ்ந்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் போகும் உரிமையை கிராமங்கள் தோறும் சென்று ஆதிக்க சாதியிடம்மிருந்து பெற்று தந்தவர்.
சமுகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாரும்மில்லை என சாதி கட்டுமானத்தில் சிக்கி கிடந்த தமிழகத்தில் தாழ்ந்தசாதிக்காரன் வீட்டில் போய் உண்டு உறங்கி சமத்துவத்தை போதித்தவர். சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்மென கூறி போராடி சட்டமாக்கியவர்.
குடும்பத்தில், பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் என எங்கும் பெண்களுக்கு சரிசமம் தேவை என வலியுறுத்தி போராடியவர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதுக்கு என்ற நிலையை மாற்ற போராடி வென்றவர்.
அரசியலில், இயக்கத்தில், சமுகத்தில் பெரியமனிதராக உலாவருபவர்கள் நேர்மையாளராக, தவறு செய்யாதவர்களாக, மக்கள் சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்மென வலியுறுத்தியவர்.
மக்களுக்காக தான் அரசாங்கம், அரசுக்காக மக்களல்ல என அரசின் தவறுகளை விடுதலை இதழில் எழுதி மக்களுக்கான உண்மையான விடுதலைக்காக குரல் கொடுத்து போராடியவர்.
காந்தி வாழும் போது உலக தலைவர்கள் அவரை கண்டு பயந்து, நடுங்கிய போது, காந்தியின் தவறுகளை அவரிடமே நேரடியாக சாடியவர். காந்தி சாதி பற்று உள்ளவர் என வெளிப்படையாக உண்மையை பேசி தான் யாருக்கும் அஞ்சியவன் அல்ல சொல்ல வேண்டியதை சொல்பவன் என உணர்த்தியவர்.
கள்ளு கடை கூடாது என்பதற்காக தன் தென்னந்தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி குடிக்கு எதிராக போரானார்.
மேல் சாதிக்காரர்களுக்கான இயக்கமாக உள்ள காங்கிரஸ் கட்சியை அழிப்பேன் என சபதமெடுத்து அதை தன் வாழும் போதே செய்து காட்டிய மாவீரன்.
கம்யூனிச நாடான ரஷ்யா மக்கள் மீதான தன் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள வில்லையென்றால் அடுத்து வரும் சில ஆண்டுகளில் சிதறி சின்னாபின்னமாகி விடும் என தன் கணிப்பை சொல்லியவர்.
ஆதிக்க சாதியிடம் போராட முடியவில்லை என இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்க்கு போக முயன்ற அம்பேத்கரை போக வேண்டாம் என் தோழா இங்கிருந்தே போராடு என் தோழா தடுத்தவர்.
இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் தான் மக்களால், தலைவர்களால், உலகத்தால் அவர் தந்தை பெரியார் என அழைக்கப்பட்டார். அவர் சொன்னதை அப்போது மக்கள் பெரும்பாலானோர் கேட்டு தெளிவு பெற்றார்கள். இதனால் தான் அவர் இன்றும் வர்ணிக்கப்படுகிறார். பேசப்படுகிறார்.
அவர் பேசப்படுகிறார், ஆனால் அவரின் கொள்கைகள்…………………
தமிழகம் ஆன்மீகவாதிகளின் பிடியில் சிக்கி சீரழிகிறது. மக்கள் ஆன்மீக வியாரிகளிடம் ஓடிச்சென்று அழிகிறார்கள். மூளையை அடகு வைக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால் கவுரவ கொலைகள் நடக்கின்றன. சாதி சண்டைகள் ஊருக்கு ஊர் நடைபெறுகிறது. கோயிலில் மட்டுமல்ல அரசு அலுவலகத்தில் கூட தாழ்த்தப்பட்டவன் அதிகாரியானாள் தள்ளி வைக்கப்படும் அவலம் உள்ளது.
சாதி ஒழிய வேண்டும்மென பாடுபட்ட பெரியாரின் வாரிசுகள் தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் ( ஜெ ஆட்சி காலம் நீங்கலாக ) மேலாக தமிழகத்தை ஆண்டுவருகிறார்கள். அவர்களின் ஆட்சி காலத்தில் தான் படிக்கும் மாணவர்களுக்கு சாதியை குறிப்பிட்டு மாணவர்களை பிரித்து விடுதிகள் கட்டி தங்க வைக்கப்படும் முறை விரிவானது.
திராவிட தளபதி என வர்ணிக்கப்படுபவரின் ஆட்சி காலத்தில் தான் பாட்டில் சாராயம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது. ( மது விலக்கு கொண்டு வருவது பற்றி கலைஞர் பேசியுள்ளார். அமுலானால் தலைவர்க்கு தளபதி செய்யும் தொண்டாகயிருக்கும் ).
மக்களுக்காக தான் அரசாங்கம் என்ற நிலை போய் அரசாங்கத்துக்காக மக்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள் அரசியல்வாதிகள். உழைத்து வாழ வேண்டும்மென ஊக்குவித்த பெரியாரின் பூமியில் சோம்பேறிகள் உருவாக்கப்படுகிறார்கள்.
இன்னும், இன்னும் சொல்லலாம். இதனையெல்லாம் மாற்ற வேண்டும். மக்களிடம், அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்க்கு பதவிக்கு, பணத்துக்கு ஆசைப்படாத தலைவன் தேவை. மக்களுக்காக மட்டுமே போராடும் தலைவன் தேவை. ஆட்சியாளர்களை அதட்டி கேள்வி கேட்கும் தலைவன் தேவை. அந்த தலைவன் வெண்தாடி கிழவரான பெரியார் போல் தேவை. அப்போது தான் சமத்துவம் கிடைக்கும். சிக்கி சீரழியும் பெரியார் பூமி மாற்றம்மடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக