புதன், ஆகஸ்ட் 04, 2010

ஆடையும் பயணமும்.



சில தினங்களுக்கு முன்பு வந்தவாசியிலிருந்து திருவண்ணாமலைக்கு 2 மணி நேர பேருந்து பயணத்தில் வந்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களில் பஸ்சில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில் கண்ணுறங்கி விடுவேன். அன்றும் அப்படித்தான் உறங்கி விட்டேன். 

இதுங்கயெல்லாம் எதுக்கு தான் பஸ்ல வருதுங்களோ என ஒரு பெண் லேசாக முனுமுனுக்கும் சத்தம் காதில் விழ சடாரென விழித்துக்கொண்டேன். வாயை பேன்னு திறந்துக்கிட்டு தூங்கனதால திட்டறாங்களோ என யோசித்துக்கொண்டிருக்கும் போதே டீச்சர் இப்படி வாங்க என நம்மருகே நின்றுக்கொண்டிருந்த முனுமுனுப்பு பெண்மணியை பின்னாலிருந்து ஒரு பெண் அழைத்த போது புரிந்தது மு.மு பள்ளிக்கூட ஆசிரியர் என்பது. 

பின்னால் 5 அடி தள்ளி போய் பக்கத்தில் நின்றவர். இதுங்கயெல்லாம் பஸ்ல வந்து நம்ம உயிர வாங்குதுங்க…… படிச்சியிருந்தா தானே டீசன்ட் தெரியும் என சத்தமாகவே திட்டுவது கேட்டது. கொய்யால…. தூங்கறது தப்பா? எதுக்கா நம்மை இப்படி மறைமுகமா போட்டு தாக்குது என எண்ணியபடியே எதுக்காக திட்டறிங்க என கேட்டுடலாம் என யோசித்தபோது, பஸ்ல ஏர்றப்ப படிச்சவங்களுக்கு வழிய விட்டு நாம ஏறன பிறகு அப்பறம்மா ஏறலாம்மேங்கற எண்ணம்மிருக்கா என ஏசினார். தூங்கிக்கிட்டுயிருந்த நம்மை திட்டல என்பது புரிந்தது. 

பிறகு…….

பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் நைசாக கேட்டேன். எதுக்குங்க அந்தம்மா திட்டிக்கிட்டு வர்றாங்க?. அதுவென்னும்மில்லப்பா அந்த டீச்சர் பஸ் ஏறனாங்க. அப்ப இரண்டு பேர் அவசரத்தல இந்தம்மாவ இடிச்சிட்டாங்க. அதுக்கு தான் அந்தம்மா திட்டிக்கிட்டு வருது என்றார். 

அதோ முன்ன நிக்கறாங்களே அவுங்க தான் அந்த 2 பேர் என காட்டினார். 40, 45 வயதிருக்கும் அப்பெண்மணிகளுக்கு. உழைத்து வாழும் உழைப்பாளர் வம்சம் என்பது அவர்களின் உடை, உடல்வாகிலேயே தெரிந்தது. 

வர்கள் இடித்தது ஒரு தப்பா?.

பொதுவாக நகரவாசிகளை பார்த்தாலே கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள் மரியாதை தருவார்கள். அப்படிப்பட்டவர்கள் இவர்களை இடித்து விட்டு பஸ் ஏறுகிறார்கள் என்றால் பேருந்து புறப்பட்டு விடும் என்ற பயத்தால் அவசரத்தில் அப்படி செய்திருக்கலாம்.

இடித்து விட்டு பஸ் ஏறி ஏதோ கப்பலை ஓசியில் அவர்கள் மட்டும் வாங்கிவிட்டதை போல திட்டினார் அந்த ஆசிரியர் பெண்மணி. எப்படியும் இவர் ஒரு அரசுப்பள்ளியில தான் பணி புரிவார். அங்கே படிக்க வரும் பிள்ளைகள் 90 சதவிதம் ஏழை வீட்டு பிள்ளைகள். அவர்களை இவர் எப்படி நடத்துவார் என்பது இவரின் இந்த செய்கையே நமக்கு உணர்த்தியது. 

கிராமங்களில் இன்றும் ஆசிரியர்கள் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்து தங்களது நிலங்களில் விளையும் கடலை, தேங்காய், மாங்காய், நெல்லிக்காய், பூ உட்பட பலவற்றை தன் வீட்டு மகளுக்கு தந்து அனுப்புவதை போல மாலையில் தந்து அனுப்புவார்கள். அதற்கு காரணம் பெரும்பாலான ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஒருநாள் லீவு போட்டால் ஏன் எதுக்காக என சொந்தக்காரரை போல் அவர்கள் வீட்டுக்கே போய் விசாரித்து வீட்டில் பிரச்சனை என்றால் பிள்ளைகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் வகுப்பறையில் அமர்ந்து குடும்ப கதையும், அடுத்தவர்கள் பற்றி புறம் பேசுபவர்கள் ஏராளம். 

ஆசிரியர் ஆனவுடன் ஏதோ சந்திர மண்டலத்துக்கு சொந்தக்காரர் ஆனதை போலவும், தாங்கள் மற்றவர்களை விட வேறு பட்டவர்கள், சிறந்தவர்கள், தாங்கள் இல்லையேல் உலகே இயங்காது என்பது போல பேசுவதும் நடப்பதும் வேடிக்கையானது. 10 கி.மீ தூரம் நின்றுக்கொண்டு பயணம் செய்ய துப்பில்லாத இவர்கள் பள்ளியில் நின்று தான் பாடம் நடத்த வேண்டும் என்ற விதியை எந்தளவுக்கு கடை பிடிப்பார்கள் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள். 

ஜன நெருக்கடி, அதுவும் பேருந்தில் இட நெருக்கடி என்பது தவிர்க்க முடியாதது. பேருந்தில் பயணம் செய்ய நினைத்தாலும், பயணம் செய்தாலும் சில சங்கடங்களை பொருத்துக்கொள்ள வேண்டும். கிராமவாசிகளுடன், ஏழைகளுடன், கிழிந்த ஆடையுடன், அழுக்கான உடையுடன் பயணம் செய்ய வரும் பயணிகளுடன் பயணம் செய்ய முடியாதவர்கள் நடந்து போங்கள். இல்லையேல் அரசாங்கத்திடம் பாத்ரும் போய் வர டிஏ கேட்டு போராடுவதை போல பள்ளிக்கு வந்து செல்ல கார், வகுப்பறைக்கு செல்ல பேட்டரி கார் வேண்டும் என கேட்டு போராட்டம் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இடித்துவிட்டு ஏறுவது குற்றம் என்று திட்டுவது எந்த விதத்தி;லும் நியாயமில்லை. 

கழுத்தில், காதில் தொங்கும் தங்கமும், உடுத்தும் உடையில் உள்ள வசிகரத்தை கண்டு மயங்கும் நீங்கள் இதற்க்கு முன் உன் தந்தை-தாய்;, உன் முன்னோர்கள், நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்தை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள் உண்மை உங்களுக்கு உணர்த்தும். 

இன்று பணம், பொருள் வந்து விட்டது என்பதால் மற்றவர்களை விட நீங்கள் உயர்ந்தவர்கள் இல்லை. செய்யும் வேலையை பொருத்து மரியாதை தருகிறார்கள். அவ்வளவு தான். உனக்கு வேலையில்லை என்றால் உன் வீட்டு நாய்க்கூட உன் அருகில் வர தயங்கும். கிராமத்தான், படிக்காதவன் அப்படியல்ல. நீ விழுந்து விட்டால் ஓடி வந்து தூக்கி விட்டு உதவுபவன். அதனால் தான் உனது அப்பாவும்-அம்மாவும் உன்னை படிக்க வைத்தார்கள். 

புடித்துவிட்டு வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கிறிர்கள். திருமணம் ஆகி கணவனுடன் தனிக்குடித்தனம் சென்று விட்ட உங்களை காண உங்களது அப்பாவும், அம்மாவும் இப்படி பேருந்தில் உங்களை பார்க்க வந்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கிராமத்து மனிதர்கள் பெண் படித்து விட்டாள், சம்பாதிக்கிறாள் அவளுக்கு தகுந்தார்கள் போல் மாற வேண்டும்மென மாற மாட்டார்கள். 

உங்களைப்போல் பகட்டாக வாழ பழகியவர்கள் அல்ல. உற்றார், உறவினர்களை மதித்து சக மனிதனின் சுக துக்கங்களில் கலந்து கொண்டு தோள்கொடுப்பவர்கள். பேருந்து பயணத்தில் உங்களைப்போன்ற ஆசிரியர் பெண்மணி திட்டியிருந்தால் உங்களிடம் திட்டுவாங்கிய அந்த பெண்களை போல் தான் அவர்களும் அமைதியாகயிருந்திருப்பார்கள். அவர்கள் படிக்காதவர்கள். மற்றவர்களின் கஸ்டத்தை புரிந்தவர்கள். உங்களைப்போல் படிப்பு என்ற திமிர் பிடித்தவர்களல்ல. 

மனிதரை மனிதராக பாருங்கள். மிருகமாக பார்க்காதிங்கள். நாளை உங்களை இந்த சமுகம் இதை விட கேவலமாக பார்க்க தொடங்கி விடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக