வியாழன், ஆகஸ்ட் 11, 2011

இந்தியாவில் தூக்கு தண்டனையை தடுப்பது எப்படி ?.



ஒரு மனிதனை இன்னோரு சக மனிதனை சட்டத்தின் பெயரால் கொல்லும் கொடூரம் இன்னும் இந்தியாவில் தான் உயிர்ப்போடு உள்ளது. உலகத்தின் பல நாடுகளில் மரண தண்டனையை ஒழித்துவிட்டார்கள். காரணம், சட்டத்தின் பெயரால் குற்றவாளி என ஒருவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பின்பு அவர் நிரபராதி என தெரிந்தபின் அவரை மீண்டும் உயிர் பெறவைக்கும் சக்தி மனித குலத்திற்க்கு இல்லை என்பதால் தான் சட்டத்தின் பெயரால் ஒருவரை கொல்லும் சட்டப்பிரிவை நீக்கிவிட்டார்கள். ஆனால் இந்தியாவில் ஆட்சியாளர்கள் மனித உயிர்களை துச்சமாக பார்க்கிறார்கள். அதிகார  சிம்மாசனத்தில் அமர்ந்தபின் தங்கள் நலனை மட்டுமே பார்க்கிறார்கள். மக்கள் நலனை சிந்திப்பதில்லை.

உலகத்தில் பல வல்லரசு நாடுகள், வளராத குட்டி நாடுகள் என பலவும் தூக்கு தண்டனைக்கு எதிராக உள்ளன. ஆனால் மனித உரிமையை வாய்கிழிய உலக அரங்கில் பேசும் இந்தியா இன்னமும் மரண தண்டனை என்கிற சட்டத்தை நீக்காமல் வைத்துள்ளது. காரணம் கேட்டால், தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்கிறார்கள். ஒருவர் தப்பு செய்ய எப்படி பல காரணங்கள், சூழ்நிலைகள் அமைகின்றனவோ அதேபோல், ஒரு குற்றவாளியை திருத்த ஆயிரம்மாயிரம் வழிகள் உள்ளன. ஆனால் அதை இந்தியாவில் எந்த நீதிமன்றமும், சிறைச்சாலையும் செய்வதில்லை. ஏன் எனில் இங்கு சட்டத்தை மதிப்பவர்களை விட சட்டத்தை தங்களுக்காக வலைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.

இந்தியாவில், கொடூர கொலை, அரசியல், அதிகார பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டால் மட்மே தற்போது தூக்குதண்டனை அ மரணதண்டனை என்ற நிலை. ஊழல் செய்தாலும் தூக்குதண்டனை என சட்டத்தில் இருந்திருந்தால் இந்நேரம் உலகத்துக்கு முன் மாதிரியாக இந்தியாவில் அனைத்து தூக்கு தண்டனை கைதிகளும் விடுவிக்கப்பட்டுயிருப்பார்கள்.

ஆனால் சட்டத்தை உருவாக்கியவர்கள் வருங்காலத்தில் நம்மை விட யோக்கியவான்கள் அதிகமானோர் இந்தியாவை ஆளுவார்கள் என கனவுலகில் இருந்தபடி சட்டத்தை உருவாக்கியிருப்பார்கள் போல……. அதனால் ஊழல், கறுப்பு பணம், அரசு சொத்துக்கள் சுரண்டல் போன்றவற்றை சேர்க்காமல் விட்டுவிட்டனர். இதனால் அது ஆளும் வர்க்கத்தினருக்கு சவுகரியமாகிவிட்டது. அதனால்தான் அந்த சட்டத்தை இந்தியாவை ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.

அதனால் தோழர்களே தூக்கு தண்டனை என்கிற சட்டத்தை நீக்கச்சொல்லி போராடாதீர்கள், அந்த சட்டத்தில் ஊழல் செய்பவர்கள், அரசாங்க பணத்தை கொள்ளையடிப்பவர்கள், அரசாங்க வளத்தை சுரண்டுபவர்களுக்கும் தூக்கு தண்டனை என சட்டத்தில் திருத்தம் கொண்டு வாருங்கள் என போராடினோம் என்றால் தூக்குதண்டன, மரணதண்டனை போன்றவை சட்டம் சட்டப்புத்தகத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படும்…………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக