திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தமிழ் உணர்வாளர்களின் திராவிட எதிர்ப்பு அரசியல்.



இராஜிவ்காந்தி இறப்பு விவகாரத்தில் தூக்குதண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை ஜனாதிபதி ரத்து செய்துவிட்டார் என்ற தகவலால் தமிழ் உணர்வாளர்கள் ரத்தம் கொதித்து போய்வுள்ளனர். போராட்டம், மக்கள் எழுச்சி, சைக்கிள் பயணம், இணையத்தில் பிரச்சாரம் என உணர்வு பொங்குகிறது. ஆனால் ஒரு விவகாரத்தை திட்டமிட்டே திசை திருப்பி வருவதாக தோணுகிறது.

அதாவது, இதற்க்கு முன் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, ஈழ தமிழர்களுக்காக அவர் அறிவித்த ஒவ்வொரு விவகாரமும் எதிர்மறையாகவே விமர்சித்தார்கள். நாடகம் என்றார்கள். மத்தியரசிடம் கேட்க வேண்டிய விவகாரத்தை கருணாநிதியை நோக்கியே கேட்டார்கள் உணர்வாளர்களான அய்யா பழ.நெடுமாறன், சீமான் போன்றோர்.


இன்று ஜெ ஆட்சி நடைபெற்றுவருகிறது, தூக்குதண்டனை கைதிகளின் கருணை மனு ரத்து என்ற பதில் மாநில அரசுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். காரணம் மாநில அரசு தான் தூக்குதண்டனையை நிறைவேற்ற போகிறது. அப்படியிருக்க இதுப்பற்றி ஜெ வாயை திறக்கவில்லை. ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஜெ, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை அதனால் தூக்குதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி ஒப்புதல் அளித்தது தவறு என இந்த தைரியலட்சுமி குரல் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுப்பற்றி மூச் விடவில்லை. அதோடு ஜெ வுக்கு சொம்பு தூக்கும் சீமான், நெடுமாறன் யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. இதுவே கருணாநிதி ஆட்சியாக இருந்திருந்தால் இவர்களின் அறிக்கை, பேட்டிகள் தமிழகத்தை களோபரமாக்கியிருக்கும்.

தமிழக மக்களிடம் ஈழ மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் ஒரு பாசம், ஈர்ப்பு சமீபகாலத்தில் வந்துள்ளது. ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது கருணாநிதி தலைமையிலான ஆட்சி நடந்துவந்தது. அப்போது ஈழ யுத்தத்தை தடுத்து நிறுத்தவில்லை என கோரிய தமிழ் உணர்வாளர்கள் அதை பெரும் பிரச்சனையாக பிரச்சாரம் செய்தார்கள். கருணாநிதி ஈழ எதிரி என திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. ஜெ நல்லவர், தமிழ் உணர்வாளர்கள் என பிரச்சாரம் செய்தனர். அது கருணாநிதி ஆட்சியை பதம் பார்க்க ஒரு காரணமாகிவிட்டன. அவர்கள் எதிர்பார்த்தை போல ஜெ முதல்வராகிவிட்டார். ஈழத்துக்காக அவர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் இயற்றியதை,  பேசுவதுயெல்லாம் நாடகம் என தெரிந்தும் அவரை கொண்டாடுகிறார்கள் இந்த உணர்வாளர்கள்.


நாடகம் என அழுத்தம் திருத்தமாக கூற காரணம், பழையதை மறந்திருக்கமாட்டார் அய்யா பழ.நெடுமாறன், விடுதலைப்புலிகளை பலகீனப்படுத்திவிட்டு, தலைவர் பிரபாகரன் மீது பலப்பல குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு இயக்கத்தை விட்டு வெளியே வந்து சிங்கள அரசோடு கைகோர்த்த துரோகி கருணா கடந்த 2001-2006வரையிலான ஜெ ஆட்சியில் விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஜெ அனுமதியோடு தமிழகத்தில், பின் கேரளாவில் பாதுகாப்பாக புலனாய்வு துறையால் தங்க வைக்கப்பட்டார். இங்கு தங்கிக்கொண்டே கருணா காட்டிதர, புலிகளின் பல முக்கிய அரசியல் விவகார, ஆயுத, நிதி பிரமுர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்களே அது எல்லாம் மறந்துவிட்டதா?, இன்று சிறையில் உள்ளவர்களுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும், பிரபாகரனை தமிழகம் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என ஜெ கேட்டது, பேசியது மறந்துவிட்டதா? அப்படிப்பட்டவர் இன்று எப்படி ஈழத்தாய் ஆனார் என்பதை சீமானும், நெடுமாறன் அய்யா அவர்களும் விளக்கினால் சிறப்பாகயிருக்கும்.

இந்த தைரியலட்சுமி, உண்மையில் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்தால் உடனே இந்த கருணை மனுவை ரத்து செய்தததை ஏற்றுக்கொள்ளமுடியாது என அறிக்கைவிடச்சொல்லுங்கள் நான் அவரை ஈழ மக்களின் தாய் என ஏற்றுக்கொள்கிறேன்.

திராவிட அரசியல், தமிழகம் பற்றி பேசும் இவர்கள் மறைமுகமாக பார்ப்பன, ஈழ எதிரி ஜெவுக்கு பல்லக்கு தூக்குவதை என்னவென்று சொல்வது………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக