இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு பெண்களுக்கு எதிரான கட்டுரையாக தோனும் வகையில் தான் இந்த கட்டுரையிருக்கும். ஆனால் இதில் உள்ள ஆண் பிள்ளைகள் நியாயத்தை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்.
கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி, தனக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பார். பசங்கள் படித்து முடித்து வேலைக்கு போனதும் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் முதலில் பெண் பிள்ளைகளுக்கு தன் வசதிக்கு தகுந்தயிடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பார். முதல் பெண்ணுக்கு என்ன வரதட்சனை தருகிறாறோ அதே வரதட்சனையை தான் சின்ன பெண்ணுக்கும் செய்வார். சில நேரங்களில் சின்ன பெண்ணுக்கு அதிகமாக செய்தால் முதலில் திருமணம் செய்து வைத்த பெண்ணுக்கு செய்து விடுவார். அதே போல் பண்டிகை நாட்களில் இரு பெண்ணுக்கும் சமமாக தான் சீர் செய்வார்.
அதன்பின் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பார். அந்த விவசாயியால் இனி அதிகமாக உழைக்க முடியாது என்ற நிலை வந்தபின் ஊர் முக்கியஸ்தர்களை வைத்து சொத்துக்களை பிரிக்கச்சொல்வார். அதன்படி உறவினர்கள் சாகிதம் அந்த குடும்ப வாரிசுகள் அனைவரையும் அழைத்து சொத்துக்களை பிரிப்பார்கள்.
நிலம் 10 ஏக்கர் உள்ளது என்றால் ஆளுக்கு 5 ஏக்கர் தருவார்கள். ஒரே வீடாக இருந்தால் இரண்டு பேர் பெயரில் எழுதி வைப்பார்கள். வீட்டில் அந்த குடும்ப தலைவிக்கு உள்ள நகைகள் அந்த குடும்பத்தில் பிறந்து திருமணம் செய்துக்கொண்டு போய்விட்ட பெண்களுக்கு சமமாக பிரித்து தருவார்கள். பண்ட பாத்திரங்களையும் அதேபோல் மகள்களுக்கு பிரித்து தருவார்கள்.
அந்த குடும்ப தலைவர் கடன் பெற்றிருந்தால் அந்த கடன்களை மகன்களுக்கு பிரித்து தருவார்கள். சில நேரங்களில் மகளை கட்டி தந்தயிடத்தில் பிரச்சனையாகி மருமகன் குடிகாரனாக இருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை பாதுகாப்புக்கு சொத்தில் கொஞ்சம் பங்கு தருவார்கள். இதான் நடைமுறை. கடன்களை மகள்களுக்கு தரமாட்டார்கள். இப்படித்தான் இருந்தது தமிழகத்தில்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்ற பின் நகரங்களில் பெண்களுக்கு சொத்தில் பங்கு தர தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களுக்கும் அது வந்தது.
இப்போது இதன் நிலை ?.
எனது கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞன். அவனுக்கு மூன்று சகோதரிகள். விவசாயம் தான் தொழில். அவனது அப்பா அவருக்கு இருந்த நிலங்களை விற்றதால் அவரது அம்மா மூனு பொட்ட புள்ளைய பெத்து வச்சியிருக்கன். இப்படி சொத்த வித்தா என்ன அர்த்தம் என சண்டை போட்டு 3 ஏக்கர் நிலத்தை மட்டும் தன் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார். அதோடு குடியிருந்த வீட்டை தனது மூன்று மகள்கள் பெயரில் எழுதி வைத்தார். அப்போது அவரது உறவினர்கள் ஒரே பையன் அவன் பேர்ல எழுதி வைங்க என கூற அவுங்க அப்பனை போல அவன் விக்கமாட்டான்னு என்ன அர்த்தம் என கேட்டனர். அப்போது அவனுக்கு வயது 15. அவன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் என் தங்கச்சிங்க பேர்லயே இருக்கட்டும். வீடு தானே எங்க போயிடபோகுது என்றான். வீடு அவனது தங்கைகள் மேல் பதியப்பட்டது.
பத்தாவதுக்கு மேல் அவன் படிக்கவில்லை. விவசாயம் பார்க்க ஆரம்பித்தான், உடன் பால் வியாபாரம் செய்தான். நல்ல வருமானம். அதை தந்தையிடம் தான் தந்தான். அவனுக்கு 21 வயதாகும் போது அவனது முதல் தங்கைக்கு 20 வயது. திருமணம் முடிந்தது. அடுத்த இரண்டு ஆண்டில் அவனது இரண்டாவது தங்கைக்கும் திருமணம் முடிந்தது. அவனது வருமானமும் அதில் உண்டு. அதன்பின் அவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். கொஞ்சம் தடம் மாறி குடிக்க தொடங்கினான். மூன்றாவது தங்கைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவன் அண்ணன் என்ற முறையில் 2 லட்சம் வரை செலவு செய்தான்.
மகனின் குடி பழக்கத்தால் அவனது அப்பாவும் அம்மாவும் தனிக்குடித்தனம் போனார்கள். குடி பழக்கத்தில் இருந்து கொஞ்சம் மாறினான். விவசாயம் மட்டும் செய்ய தொடங்கினான். 2 பிள்ளைகள் அவனுக்கு. குடும்பத்தை கவனிக்க தொடங்கினான். அவனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த வகையில் அவனது அப்பா வாங்கிய சில லட்ச கடன்கள் மகன் என்ற முறையில் இவனிடம் வந்தது. அதை பொறுப்பு ஏற்று அடைக்க தொடங்கினான். மகன் பொறுப்புள்ளவனாக மாறிவிட்டான், கடன்களை அடைக்கிறான் என்றவுடன் அவனது அம்மா தன் மகள்கள் பெயரில் எழுதி வைத்த வீட்டை தன் மகன் மேல் எழுதி வைக்க ஆசைப்பட்டார்.
மகள்களை வரவைத்து உறவினர்கள் மூலம் அண்ணன் மேல வீட்டை எழுதி வைக்கலாம்ன்னு இருக்கன்ம்மா என கேட்டுள்ளார். எங்க பேர்ல இருக்கற வீட்டை நாங்க ஏன் தரனும். அதெல்லாம் தர முடியாது. முதல்ல உன் பேர்ல இருக்கற நிலத்தை நாலு பாகமா பிரி. அதுயென்ன அது மட்டும் பயிர் வைக்கறது என கேட்டுள்ளார்கள் மூவரும் கோரஸாக. அந்த தாய் அதிர்ந்து போய்வுள்ளார்.
என்னங்கடீ இப்படி பேசறிங்க. உங்களுக்கு கல்யாணம் பண்ணது, புள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்திங்களே அப்ப சீர் செய்தது, நல்லது கெட்டதுக்குன்னு அவன் செலவு செய்துயிருக்கான், இனிமே அவன் தான் உங்களுக்கு ஏதாவது செய்யனும் எனச்சொல்ல அதெல்லாம் பேசாத என்றுள்ளார்கள். இதனை கேட்டு உறவினர்களும் அதிர்ந்து போய்வுள்ளார்கள். அந்த தாய் முடிந்த வரை மகள்களிடம் போராடியபோது மருமகன்கள் மனைவிகளுக்கு விடாத என கீ தந்தபடி இருந்துள்ளார்கள்.
கடைசியில் நிலத்தை பிரிச்சித்தர்றன் வீட்ட அவன் பெயர்க்கு எழுதி தாங்க என கேட்டபோது, முடியவே முடியாது. வீடு எங்கள்து. அத பிரிக்க கூடாது. நீ நிலத்த பிரிச்சி தரலன்னா கேஸ் போடுவோம் என்றுள்ளார்கள்.
இதில் கோபமான கணவன் மனைவி இருவரும், இது அவுங்க அப்பன் சம்பாதிச்சது. நானோ, நீங்களோ சம்பதிக்கல. அந்தாளு போனா போகுதுன்னு என் பேர்ல எழுதி வச்சாரு. நான் உங்க பேர்ல எழுதி வச்சன். நீங்க என்ன இப்படி பேசறிங்க. எல்லாத்தலயும் பங்கு வேணும்ன்னா கடன்லயும் பங்கு வாங்கிக்குங்க என்றுள்ளார்கள்.
கடன்யெல்லாம் ஏத்துக்க முடியாது. நீ பிரிக்கலன்னா நாங்க கேஸ் போட்டா எங்களுக்கும் சொத்துல பங்கு வரும் தெரிஞ்சிக்க என்றுள்ளார்கள். அந்த தாய் என்னங்கடி வாய் நீளுது என கேட்க சும்மா பேசாத என்றுள்ளார்கள்.
இறுதியில் வீட்ட பிரிச்சிக்க சம்மதிக்கறோம் அதல அதுக்கும் ( அண்ணன் ) பங்கு தர்றோம் என்றுள்ளார்கள். அந்த பெண்களின் அண்ணன் மூனு பேருக்கும் சேர்த்து 5 லட்சம் தர்றன் வீட்டை எனக்கு தாங்க என கேட்டுள்ளான். ஒரு தங்கை ஒத்துக்கொள்ள மற்ற இரண்டு தங்கைகள் 5 லட்சமா அது எந்த மூலைக்கு ஆளுக்கு 5 லட்சம் வேணும் என கேட்டுள்ளார்கள்.
வீடு அவ்ளோ போகாது என உறவினர்கள் எடுத்து சொல்ல. அதெல்லாம் வீண் பேச்சு. தந்தா 5 லட்சம். இல்லன்னா அத வீட்ட விட்டு அத வெளியில போகச்சொல்லுங்க. இனிமே இருக்கறதா இருந்தா வாடகை தரச்சொல்லுங்க என கேட்க அதிர்ந்து போனவன் எனக்கு எதுவும்மே வேணாம் என வந்துள்ளான். அவனது தாய் இப்போது அழுதுக்கொண்டு இருக்கிறார்.
ஒரு சாதாரண சின்ன கிராமத்தில் தற்போது நடந்துள்ள இன்னும் முடியாத ஒரு சம்பவம்.
அந்த குடும்ப தலைவன் வாங்கிய நிலம். அவர் கட்டிய வீடு. பிள்ளைகளை படிக்க வைத்தார். திருமணம் செய்த வகையில் 10 லட்சம் கடன். மகள்கள் பெயரில் இருக்கட்டும் என எழுதி வைத்த வீட்டை அந்த மகள்கள் இப்போது காலி செய் இல்லையேல் வாடகை தா என கேட்கிறார்கள். இல்லையேல் ஆளுக்கு 5 லட்சம் கேட்கிறார்கள். அந்த வீடே 5 லட்சத்துக்கு மேல்போகாது.
எங்கே போனது இவர்களது ரத்த பாசம். அந்த குடும்பத்தில் உழைத்ததே அந்த இரண்டு ஆண்கள் தான். சகோதரிகளுக்கு செய்த திருமண கடனை இவனே அடைக்க வேண்டும். கடனில் அந்த சகோதரிகள் பங்கு பெற மாட்டார்கள். ஆனால் சொத்தில் மட்டும் பங்கு வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?.
பதில் அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
உண்மையான நிலையை அழாக சொல்லி இருக்கீங்க..
பதிலளிநீக்குநம்மை காத்துக்கொள்ளத்தான் சட்டம் வந்ததே ஒழிய ரத்த பந்தங்களை பிரிக்க அல்ல பழைய சம்ரதாயப்படி பெண் பிள்ளைகள் விட்டுக்கொடுப்பதே சிறந்தது என்பது என் கருத்து இனி ஒரு பிறவி இருக்கா தெரியாது இருந்தாலும் ஒட்டிப்பிறப்போமா தெரியாது அப்படி இருக்க சொத்துக்காக எதற்கு உறவுகளை உதறி காயப்படுத்த வேண்டும்.
பதிலளிநீக்கு100% correct sasikala
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி ஆளாக இருப்பதையே விரும்புகிறார்கள். காரணம் - சுயநலம். பொதுவாக, சொத்து விஷயத்தில், ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் எழுத வேண்டும். இல்லையென்றால் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டியதுதான்.
பதிலளிநீக்கு