புதன், நவம்பர் 14, 2012

சாதியும் வெண்டக்காயும்.




தருமபுரி மாவட்டத்தில் கொல்லன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மகளை, அந்த கிராமத்துக்கு மிக அருகில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மகன் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டனர். தன் மகளை கடத்தி திருமணம் செய்துக்கொண்டான் என அந்த பெண்ணின் பெற்றோர், ஊராசர் சிலர் காவல்நிலையத்தில் புகார் தந்தபோது, பையன் சார்பாக சிலர் காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். இரு தரப்புக்கும் காரசாரமாக பேசிக்கொள்ள அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ, பொண்ண ஒழுங்கா வளக்க தெரியல புகார் தரவந்துட்டான் மானம் போச்சின்னா போய் சாவுடா என ஏச அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பெண்ணின் அப்பா. 

இதில் கோபமான வன்னிய சமூக இளைஞர்கள் இறந்து போனவரின் உடலோடு சாலை மறியல் செய்துள்ளனர். காவல்துறை கண்டுக்கொள்ளாததால் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து சில வீடுகளை தாக்கி தீ வைத்துள்ளார்கள் வன்னிய இளைஞர்கள். அதன்பின் காவல்துறை வருகை தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பாதுகாப்பு. வன்னிய மக்கள் வசிக்கும் பகுதியில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், குடும்பதலைவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டையென காவலர்கள் நுழைய பதட்ட பரபரப்பில் உள்ளது தருமபுரியின் பென்னாகரம் பகுதியே. அங்கு என்ன நடக்கிறது என தெரியாமலே பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், வன்னிய தரப்பு மக்களுக்கு எதிர்ப்பாகவும் களம்மிறக்கி கருத்துக்களை பதிவிட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார்கள். 

முதலில் சாதி ஒழிப்பையும் காதலையும் போட்டு குழப்பிக்கொள்வதை நிறுத்துங்கள். காதலித்து சாதி மாறி திருமணம் செய்துக்கொண்டால் சாதி ஒழிந்து விடும் என எண்ணுவது முட்டால் தனமான கற்பனை. 



காதலித்து திருமணம் செய்துக்கொள்பவர்கள் ஆண் தலித்தாக, பெண் பிராமின் வகுப்பை சார்ந்தவராக இருந்தால் திருமணத்துக்கு பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தையாக வளர்கிறது. ஆண் முதலியராக இருந்து பெண் தலித், வன்னியர், செட்டியராக ஏதோ ஒன்றாக இருந்தாலும் அவர்களது குழந்தை முதலியராக பதிவு செய்யப்படுகிறது. அல்லது எந்த சாதியில் சலுகைகள் கிடைக்கிறதோ அந்த சாதியை பதிவிடுகிறார்கள். பிறப்பு சான்றிதழிலும், பள்ளி சேர்ப்பிலும் சாதி குறிக்காமல் இருப்பதில்லை. (சாதி குறிப்பிட தேவையில்லை என சட்டம் கூறுகிறது) ஆக காதல் திருமணங்களால் எந்த நிலையிலும் சாதி அழிக்கப்படுவதில்லை. சாதியை ஏதோ ஒரு வடிவில் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள் காதல் திருமணம் செய்தவர்களும். 

அதுமட்டுமல்ல மேல்சாதி என அழைத்துக்கொள்ளும் முதலியார், நாயுடு, வன்னியர், தேவர், பிராமின் இப்படி எந்த சாதியினராக இருந்தாலும் இந்த சாதிகளுக்குள் உள்ள இளம் தலைமுறையினர் காதலித்தால் அவர்களது பெற்றோர் சாதி மாறி திருமண பந்தம் வைத்துக்கொள்ள முற்படுவதில்லை. இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாமிய, கிருத்துவ மதத்திலும் இந்த வழக்கம் உள்ளது. தற்போது அதிகரித்து வருகிறது. சாதி பிரச்சனைகளை காதல் திருமணங்களால் மட்டும் முடித்து வைக்க முடியாது. 

காரணம், வர்ணாசிரம் என ஒன்றை காட்டி சாதி பிரிக்கப்பட்டது முதல் நம் உடலில் உள்ள அணுக்களில் பதியமிட்டு வைத்துவிட்டார்கள். தலைமுறைகள் மாறினாலும் அந்த அணுக்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே நிலவி வருகிறது. தந்தை பெரியார் தமிழகத்தில் சாதியை எதிர்த்து பலப்பல போராட்டங்களை தன் வாழ்நாள் முழுக்க நடத்தி தமிழகத்தில் சாதியை வெளிப்படையாக பேசும் தன்மையை வெகுவாக குறைத்தார். ஆனால் அரசியல் கட்சிகள் சாதியை அழியவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தேர்தலில் நிற்க ‘சீட்’ பெற சாதியை முக்கிய காரணியாக, தகுதியாக ஒவ்வொரு கட்சியும் முன் வைக்கிறது. எம்.எல்.ஏ, எம்.பி முதல் அடிமட்ட தொண்டன் வரை ஒவ்வொரு கட்சியிலும் இரண்டு சாதிக்குள் பிரச்சனை என வந்தால் தாங்கள் பிறந்த சாதிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். வெளியுலகத்துக்கு சாதிகளே இல்லை என பேசுவது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல சாதியில்லை என போராடுபவர்கள் பலர் தங்கள் குடும்பத்தில், உறவு வட்டாரங்களில் இப்படி சாதி மாறி காதலிக்கும் தங்களது பிள்ளைகளை மிரட்டுவது இல்லையேல் கவுரவ கொலை செய்கிறார்கள். 



ஆக அரசியல் கட்சிகள், காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், காதலிப்பவர்கள், சாதி மறுப்பாளர்கள், முற்போக்கு சிந்தனை பேசுபவர்கள், பொதுமக்கள் என எல்லோர் தரப்பிலும் சா’தீ’ உள்ளது. இதனை சாதி சங்கங்கள், இயங்கங்கள், சாதிக்கென கட்சி வைத்துள்ளவர்கள் கன கட்சிதமாக அந்த தீயை அணைய விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

சாதி அடையாளத்தை தோளில் கிடக்கும் துண்டை போல் வைத்திருக்க வேண்டும். வேண்டாம் என்னும் போது அதை தூக்கி எறியும் மனம் வேண்டும். தங்களது பிள்ளைகளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நான் எந்த சாதியையும் சார்ந்தவனில்லை என குறிப்பிட்டு வளர்க்கும் மனம் இருந்தால் எந்த சாதி தலைவனும் பிரிவை ஏற்படுத்த முடியாது. இரண்டாயிரம் ஆண்டாக உணவு முதல் உடுப்பு வரை மனிதனை பிரித்து வைத்துள்ளதோடு, உயிர்களை பலி வாங்கும் இந்த சாதி தீயை ஒரே நூற்றாண்டில் அணைத்து விடலாம். 



4 கருத்துகள்:

  1. அது சரி ஊரையே எரித்த நிகழ்வு குறித்து உங்கள் கருத்து என்ன? அதைக் கூறுங்கள் அதைவிடுத்து இப்படி மறைமுகமாக காதல் திருமணத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் நேரடியாகவே எதிர்த்துப் பதிவு எழுதுதலாம் யாரும் உங்களை எரிக்கப் போவதில்லை. கருத்து சுதந்திரம் யாருக்கும் உண்டு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாகை அவர்களே,

      சாதி வெறியாலும், தங்களை சார்ந்த ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீடுகள் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்க தக்கது. நான் இத்தகைய நிகழ்வுகள் எதனால் நடக்கிறது என்பதைத்தான் எழுதியுள்ளேன்.

      அதில் காதலால் சாதி ஒழியவில்லை என்பதைத்தான் சொல்கிறேன்.
      காதலித்தும், கலப்பு திருமணம் செய்துக்கொண்டால் சாதி ஒழியும் என நம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை தான் விளக்கியுள்ளேன். நீங்கள் காதலை எதிர்ப்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் காதலிக்கறத வேணாம்ன்னு சொல்லவேயில்ல. காதலை எதிர்ப்பதாக இருந்தால் மறைமுகமாக எழுத மாட்டேன் வெளிப்படையாக எழுதுவேன்.

      நீக்கு
    2. அட கடவுளே! என்னமோ அந்த இளைஞனும் பெண்ணும் ” நாம ரெண்டு பேரும் சோ்ந்து காதலித்து திருமணம் செய்து கொள்வோம் ... அதனால் காலங்காலமாக இருக்கும் சாதி ஒழியும்” என்று முடிவெடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் ஏற்பட்ட சாதி ஒழிப்புககு எதிராக கோபமே ஊரைக் கொள்ளையடித்து எரித்தது என்பதாக இருக்கிறது உங்கள் கருத்து. (இன்னும் உள்ளது உங்கள் கட்டுரையின் மையக் கருத்து ஆனால் என்ன இங்கு மின்சாரம் போய்விட்டது)

      நீக்கு
  2. மிக நல்ல பதிவு.

    கலப்புத் திருமணங்களால் சாதி ஒழியவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்கியிருக்கிறீர்கள்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு