அதிகாரபலம்,
பண பலம், சினிமா பிரபலங்களுக்கு ஒரு நீதி, சாமான்யனுக்கு ஒரு நீதி என
இந்தியாவில் இருவேறு நீதிகள் தான் இங்கு கிடைக்கும் என
சொல்லாமல் சொல்லி தன் கொள்கையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது நீதித்துறை.
நீதித்துறையை கேள்வி கேட்டால் சட்டம் பாயும் என்கிறார்கள். இருந்தாலும் மனதில்
உள்ள குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
தமிழ்
திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக கொண்டாடப்படும் ரஜினி யின்
கபாலி திரைப்படம் ஜீலை 22ந்தேதி வெளியாகவுள்ளது. 100
கோடிக்கு மேல் வருமானம் பார்த்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இறங்கி
அடிக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், நடிகர் ரஜினியும்.
ஒரு
மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி ஒரு பானையை உருவாக்கும் போது அதை லாபத்தோடு
விற்க முயல்வான். அது இயல்பு. அதே மண்பாண்ட வியாபாரி அதேபோன்று ஒரு பானையை உருவாக்கும் போதே, இந்த
பானையில் தண்ணீர் ஊற்றாமலே தண்ணீர் அலம்பும் சத்தம் கேட்கும், இந்த காலி
பானையில் உங்கள் முகத்தை பார்க்க முடியும் என மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளி நம்பும்படி சொன்னால் அந்த பானை மீது
ஒரு ஈர்ப்பு உருவாகிவிடும்.
கேட்பவன் தனது பகுத்தறிவு கொண்டு அப்படி தெரியும்மா ?, சத்தம் வருமா என சிந்தித்தால் அதன் மீது ஈர்ப்பு வராது. சிந்திக்க விடாமல் பானையில் தண்ணீர்
ஊற்றினால் பெட்ரோல் கிடைக்கும், தண்ணீர் தங்கமாக மாறும் என தினம் தினம் புரூடா
விட்டு சிந்திக்க விடாமல் செய்வது ஒரு வித தந்திரம். இதன் மூலம் பானை
மீதான எதிர்பார்ப்பு எகிரும். அந்த பானையை வாங்க நான், நீ என
போட்டிப்போடுவார்கள். அதைத்தான் கபாலி டீம் தினம் தினம் செய்தது,
செய்கிறது.
இணையத்தில்
சிந்தனையாளர்கள் எழுதியாதுபோல கபாலி வெளியாகும் நாளன்று பொதுவிடுமுறை விட வேண்டும்
என கபாலி தயாரிப்பாளர் தாணு கோரிக்கை வைக்காதது தான் குறை. ஒருவேளை அந்த
கோரிக்கையை வைத்திருந்தால் ஜெ அரசாங்கம் பரிசீலித்திருக்கும். ஏன் எனில் படத்தை
அவருக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் ஜாஸ் சினிமா தான்
தமிழகத்தில் வெளியிடுகிறது. ஒருவேளை அரசாங்கம் பொதுவிடுமுறை விடவில்லை என்றாலும்
நீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தால் நிச்சயம் பொதுவிடுமுறையென்ன தடையில்லா
மின்சாரமும் திரையரங்களுக்கு கிடைத்திருக்கும் போல.
இதை
சொல்லக்காரணம். கபாலி திரைப்படம் இணையத்தில் திருட்டு தனமாக வெளியிட்டுவிடுவார்கள்
அதனால் சினிமா திரைப்படங்கள் சம்மந்தமான இணையதளங்களை முடக்க வேண்டும்மென 167 இணைய
முகவரிகள் அடங்கிய பட்டியலை சென்னை உயர்நீதிமன்றத்திடம் கடந்த வாரம்
தந்து முறையிட, அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு முடக்க உத்தரவிட்டுள்ளது. அதே
நீதிமன்றத்தில், அதே நீதிபதியிடம், கபாலி திரைப்படத்துக்காக அதிக கட்டணம்
திரையரங்குகள் வசூலிக்கின்றன என தனிநபர் ஒருவர் ஆதாரத்தோடு பொது நலவழக்கு தாக்கல்
செய்ய, ரசிகர் விருப்பப்பட்டு அதிக விலை தருகிறார் அதனால் அதை
தடுக்க முடியாது என வழக்கை முடித்துவைத்துள்ளார்.
இப்படி ஒரு திரைப்படத்துக்காக வித்தியாசமான தீர்ப்பை தந்தது பெரும்
அதிர்ச்சியாகவுள்ளது. அதுமட்டும்மல்ல, கபாலி சம்மந்தமான வழக்கை விசாரிக்க எத்தனை வேகம். ஜெட் வேகத்தில் தீர்ப்பும்
வந்துள்ளது. ஒரு சமானியன் வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தால் அதன் வழக்கறிஞர்களிடம்
எத்தனை கேள்வி, எத்தனை ஆவணம் கேட்டு, அதை பதிவு செய்ய எவ்வளவு தாமதம்
செய்கிறார்கள். இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான
வழக்குகள் பதிவு செய்யாமல் வரிசையில் உள்ளது என்கிறார்கள் வழக்கறிஞர் நண்பர்கள்.
அப்படியிருக்க இந்த வழக்கு எப்படி முன்னிலைக்கு வந்தது என தெரியவில்லை.
நீதிமன்றம்
என்பது சமான்யனின் நம்பிக்கையை உடைப்பதாக இருக்ககூடாது. அப்போது தான் மக்களுக்கு
நம்பிக்கை வரும். ஆனால், இங்கு நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கை வரும் அளவுக்கே
சமீபத்திய நடவடிக்கைகள் உள்ளன.
கோடி
கோடியாய் பணம் போட்ட தயாரிப்பாளர் தன் பொருளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அவரது
பொறுப்பு. ரஜினி படம் என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்பு தரவேண்டும், பொதுமக்கள்
ஒத்தைழைப்பு வழங்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்.
இந்த படத்தால் பொதுமக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா அல்லது அரசாங்கத்துக்கு தான்
நன்மையுள்ளதா ?.
அரசுக்கு
வரி கட்டுகிறேன் என்பார்கள். இன்றும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை
போன்ற நகரங்களிலேயே டிக்கட் கட்டணம் 5 ரூபாய் என பிரிண்ட் செய்து தருகிறார்கள்.
பார்க்கிங் கட்டணம்மே சென்னை போன்ற நகரங்களில் 50 ரூபாய். அப்படியிருக்க டிக்கட்
விலை 5 ரூபாய் என்றால் பைத்தியக்காரன் கூட சிரிப்பான். டிக்கட் கட்டணம் அதிகம்
என்ற வழக்கு வந்தபோது, பார்க்கிங் கட்டணம், திரைப்பட டிக்கட் கட்டணம்,
திரையரங்கில் உணவு பொருட்கள் மீதான விலை போன்றவை அரசு நிர்ணயித்த படி வாங்க
வேண்டும் என உத்தரவிட்டுயிருக்க வேண்டும். அப்படி எந்த உத்தரவையும் இந்த
நீதிமன்றம் இடவில்லை, ஏன் சின்னதாக ஒரு கேள்விக்கூட எழுப்பவில்லை.
திரையரங்குகளில் டிக்கட் விலை அதிகமாக விற்பதும், பார்க்கிங் கொள்ளை,
திண்பண்ட கடைகளில் கொள்ளையடிப்பது நீதிபதிகளுக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.
கபாலி தயாரிப்பாளர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த நீதிமன்றம்,
பொதுமக்களில் ஒருவராக இருந்து வழக்கு தொடுத்தவரின் கோரிக்கையில் அதுவும் அடங்கியிருந்தது. அதனால் அந்த கோரிக்கைகளில் கொஞ்சமாவுது
பார்த்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம். ஒருவேளை திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும்
என்ற புனித கருத்து மட்டும் தான் சட்டப்புத்தகத்தில் இருந்ததா என்ன ?.
கபாலி
என்கிற திரைப்படம் மட்டும்மல்ல இங்கு எல்லாம்மே வியாபாரமாக்கப்பட்டு விட்டது
நீதியும் அதற்கு விதிவிலக்கல்ல போல………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக