செவ்வாய், டிசம்பர் 26, 2017

ஆர்.கே. நகர் - திமுக தோல்வியை உள்ளிருந்து அலசுவோம்.



ஆர்.கே. நகரில் திமுக டெப்பாசிட் போனதும் திமுக அவ்வளவு தான் என பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில் இயங்கும் அரசியல் விமர்சகர்களும், நடுநிலைவாதிகளும். இந்த இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே தான் போட்டி, வெற்றி யாருக்கு என்பது களத்தில் இருந்த செய்தியாளர்கள் அறிந்தேயிருந்தனர். ஆனால், அதை வெளிப்படுத்தாமல் மறைத்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்.கே.நகர் சென்ற திமுகவின் உண்மை தொண்டர்கள் பலர் முதல் நாளே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை சுற்றி வந்தவுடனே தினகரன் தான் வெற்றி பெறுவார் என ஆணித்தரமாக சொன்னார்கள். அவர்கள் இதே சமூக வளைத்தளத்தில் உள்ளார்கள். அவர்கள் அதற்கான காரணத்தையும் விளக்கினார்கள். அது பின்பு தேர்தல் முடிவில் அப்பட்டமாக தெரிந்தது.

தினகரன் வெற்றிக்கான முழு முதல் காரணம் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட மறுநாள், எனக்கு ஓட்டுக்கு பணம் வரவில்லை என தினகரன் அணிக்கு போன் செய்த வாக்காளர்களுக்கு வீடு தேடி 6 ஆயிரம் ரூபாய் பணம் சென்றுள்ளது. இது தொகுதியில் நன்றாக பரவிவிட்டது. அதனால் தான் 20 ரூபாய் நோட் தந்து எனக்கு ஓட்டுப்போட்டால் 10 ஆயிரம் தருவேன் எனச்சொன்னது பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியது. அடுத்ததாக, கட்சிகள் எப்போதும் தேர்தல் பணிக்கு சம்மந்தப்பட்ட தொகுதி மக்களை அழைத்து செல்வார்கள். காலை அதிமுகவுக்கு சென்று வாக்குகேட்டால் மாலை திமுகவுக்கு இரவு வேறு கட்சிகளுக்கு என சென்று ஷிப்ட் போட்டு கல்லா கட்டுவார்கள் மக்கள். இதில் மாற்றம் செய்தது தினகரன் டீம். மாதச்சம்பளம் போல் புக் செய்துள்ளார். குறிப்பாக பெண்களை மட்டும்மே புக் செய்தார்கள். தினமும் 300 குக்கர் தரப்படும். பிரச்சாரத்துக்கு வருபவர்களுக்கு தரப்படும் குக்கர் அப்படியே எடுத்தும்போய் தொகுதியில் தரவேண்டும். இப்படி வித்தியாசமான பார்முலாக்களை வகுத்துள்ளார். இப்படி சில பல திட்டங்களை பயன்படுத்தியுள்ளார்.

இவைகள் எதையும் திமுக தடுக்கவில்லை. அதோடு, ஓட்டுக்கு பணம் தருவதில்லை என்பதை ஸ்டாலின் முன்பே முடிவு செய்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம் தோல்வி என்பது மட்டும்மல்ல. இந்த இடைத்தேர்தலில் தோற்றால், ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியாது, 89 உடன் ஒன்று சேர்ந்து 90 ஆகும் அவ்வளவு தான் என்பதை உணர்ந்தே இருந்தார். அதனால் கடும் போட்டியில் இறங்க அவர் தயாரில்லை. அதோடு, தினரகன் வெற்றி பெற்றால் அதிமுகவில் இன்னும் குழப்பம் ஏற்படும், ஆட்சிக்கு சிக்கல் வரும், சட்டசபைக்குள் சலசலப்பு ஏற்படும் அது ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கும் என அவரை இயக்குபவர்கள் கூற அதை அவரும் புறந்தள்ளவில்லை. இப்படிப்பட்ட காரணங்களோடு, ஆர்.கே.நகரில் கவனம் செலுத்தாமல் ஸ்டாலின் போனதுக்கு பின்னால் உள்கட்சி ரீதியாக வேறு சில காரணங்களும் உள்ளன. அது இங்கு தேவையில்லை.

தேர்தல் முடிவு ஸ்டாலின் மட்டும்மல்ல திமுக முன்னணி தலைவர்களே எதிர்பார்க்காதது, அதிமுக அணிகள் பிரிந்து நின்ற நிலையில் தனக்கு டெப்பாசிட் பறிபோகும் என்பதை அறியவில்லை. திமுக இதற்கு முன்பு பல முறை டெப்பாசிட் இழந்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் ஆளும்கட்சியான அதிமுக டெப்பாசிட் இழந்துள்ளது. ஆனால் ஆர்.கே.நகரில் திமுக டெப்பாசிட் இழந்ததற்கு காரணம் கட்சி நிர்வாகிகள் தான். கட்சி ஓட்டு எங்கே சென்றது என்பது தான் மிக முக்கிய கேள்வி. திமுக உறுப்பினர்களை சேர்க்க வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் எண் என வாங்கி இணைத்து, கையெழுத்து பெற்று உறுப்பினராக சேர்க்கிறார்கள். அந்த உறுப்பினர்கள் என்னவானார்கள்?. துரைமுருகன் சொன்னது போல திமுக உறுப்பினர்கள் வாக்கும் விலை போய்விட்டதா அல்லது சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் போலியா?. இது ஆய்வுக்கு உட்பட்டது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிகள் எங்களை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றவில்லை என்கிற குற்றச்சாட்டை அதன் தலைமைகள் வைக்கின்றன ?. அவர்களை வேலை செய்யவில்லை, இதில் கூட்டணி கட்சியை எப்படி இணைத்துக்கொண்டு வேலை செய்வார்கள்.

தோல்வியே என்றாலும் மோதியிருக்க வேண்டாமா என்பதே பலரின் கேள்வி ?.

நிச்சயமாக மரியாதைக்குரிய தோல்விக்காகவாவுது மோதியிருக்க வேண்டும். அப்படி மோதாமல் விட்டதற்கான காரணம், ஓட்டுக்கு பணம் தருவதில்லை என தலைமை முடிவெடுத்து கீழே தெரியப்படுத்தியதும் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்ந்து போனது மிக முக்கிய காரணம். பணம் தந்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிற மாயை கட்சி நிர்வாகிகளிடம்மே உருவாகியுள்ளது. அவன் பணம் தர்றான், நீ பணம் தரலயா என மக்களிடம்மிருந்து வரும் கேள்வியை எதிர்க்கொள்வது களத்தில் உள்ள நிர்வாகியும், தொண்டனும் தான். எங்களிடம் பணம்மில்லை எனச்சொல்ல முடியாது. நீங்கயென்ன சம்பாதிக்காமலா இருந்திங்க என கேள்வியை வீசுவார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பார்கள் தொண்டர்கள்.

அதற்காக தேர்தல் என்றால் பணம் தான் பிரதானம் என்பதல்ல ஒருக்காலத்தில் அடிமட்ட மக்களோடு மக்களாக இருந்த திமுக நிர்வாகிகள், மக்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு களப்பணியாற்றினார்கள். இன்று மேட்டுக்குடிகளாக தங்களை நினைத்துக்கொண்டு கட்சி பணி செய்வது, மக்களிடம்மிருந்து அந்நியப்பட்டு நிற்பது, அடிதட்டு மக்களிடம் நெருக்கம்மில்லாதது, பணம் தந்தால் ஓட்டுப்போடுவான் என்கிற மமதை போன்றவையால் மக்கள் திமுகவை விட்டு விலகி நிற்கிறார்கள். மக்களும் நீ பணம் தந்தால் ஓட்டுப்போடறன் என திமுகவை ஒதுக்கிவைத்துள்ளார்கள். திமுக பணம் தரவில்லை. அதனால் அதிகமாக பணம் தந்த மக்களும் பணம் வாங்கியவர்களுக்கு விசுவாசமாக ஒட்டை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

இந்த தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுகவும் பணம் தந்தது. அப்படியிருக்க தினகரன் மட்டும் எப்படி வெற்றி பெற்றார் ?.

மக்களிடம் ஆளும்கட்சி மீதான எதிர்ப்பலை இயல்பாகவே உள்ளது. அதை நியாயமாக எதிர்கட்சி தான் அறுவடை செய்துயிருக்க வேண்டும். அதற்கான பணிகளில் திமுக இறங்கவேயில்லை. அதோடு, திமுகவின் பலகீனம். அந்த தொகுதி முழுக்க முழுக்க அதிமுக விசுவாச தொண்டர்களால் நிரம்பிய தொகுதி, தேர்தல் நேரத்தில் பலகீனமாக திமுக வேலை செய்தது. பணம் தந்தது. எனக்கு ஓட்டுப்போட்டால் இன்னும் பணம் தருவேன் என தினரகன் ஏற்படுத்திய நம்பிக்கை இதுதான் அங்கு வெற்றி பெற்றது. இந்த இடத்தில் சாமானிய மக்கள் இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும். ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் வருகிறது. சாமானிய ஏழை மக்களுக்கு பத்தாயிரம் எவ்வளவு பெரிய தொகை என்பது 250 ரூபாய் கூலி வேலைக்கு செல்லும் மக்களுக்கு தான் தெரியும். அதனால் தான், வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் செய்யாமல் குத்திவிட்டார்கள்.

ஜெவை கொலை செய்த குடும்பத்தை எப்படி அதிமுக தொண்டர்கள், மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் ?.

மக்களிடம் மறதி என்பது இயல்பானது. இதுதான் அரசியல்கட்சிகளின் பெரும் பலம். ஜெ இறந்தபோது சசிகலா மீது மக்களுக்கு இருந்த கோபம், சிறைக்கு சென்றபின் அது மெல்ல குறைய தொடங்கியுள்ளது. அதிமுக அமைச்சர்களின் அந்தர்பல்டி பேச்சுகளால் முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான எண்ணம் தவிடுபொடியானது. சசிகலாவுக்கு இ.பி.எஸ் செய்த நம்பிக்கை துரோகம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது. இதை பத்திரிக்கைகள், சமூக வளைத்தளங்கள் உணர்வதில்லை. நாம் எழுதுவதே எழுத்து, மக்கள் மடையர்கள் என நினைக்கின்றனர். அதேபோல் மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜக மோடி, தமிழக அரசையும், அதிமுகவை சின்னாபின்னமாக்குவது மக்களுக்கு அப்பட்டமாக தெரிகிறது. தமிழக அரசை பாஜக தான் இயக்குகிறது என்பது மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல. சசிகலா குடும்பத்தை மோடி வகையற ரெய்டு பாய்ச்சி நசுக்குவது தினகரன் அதை எதிர்த்து நிற்பதால் பாமர மக்களிடம் தினகரனை ஹீரோவாக சித்தரித்துள்ளது. ( இதையே 2011 சட்டமன்ற தேர்தலின்போது சிபிஐ வைத்து காங்கிரஸ் திமுகவை நசுக்கியபோது திமுக எதிர்த்து அடித்துயிருந்தால் அப்போது வலிமையான எதிர்கட்சியாக இருந்துயிருக்கும் அப்போது அது கோட்டைவிட்டது. 2011லும் காங்கிரஸ்சை சுமந்தது பம்மியதை மக்கள் ரசிக்கவில்லை அதனால் தான் எதிர்கட்சியாக ஆட்சியில் உட்கார்ந்தது ). மக்களின் மனநிலையை உள்வாங்கி அதற்கு தகுந்தார்போல் அரசியல் செய்கிறார் தினகரன். ( 2011ல் இருந்து மக்கள் மனநிலைக்கு தகுந்தார்போல் அரசியல் செய்ய துவங்கினார் ஜெ. அதற்கு முன்பே மருத்துவர் ராமதாஸ் தை கையில் எடுத்தார். ஜெ மறைவுக்குகு பின் தினகரன் ஜெ பார்முலாவை கையில் எடுத்துள்ளார். )

அதனால் இந்த வெற்றி திமுகவை பலகீனப்படுத்தாது. ஆட்சிக்கட்டிலில் உடனடியாக ஏறி சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் ஆட்சியை கலைக்க வேண்டும் என துடிக்கிறார்கள்.

முதல்வராக இருந்த அதிமுக நிறுவனர் ராமச்சந்திரன் இறந்தபின்பு சுமார் ஒன்னரை ஆண்டுகள் அந்த கட்சி ஆட்சியில் இருந்தது, அப்போது எதிர்கட்சி தலைவராக கலைஞர் இருந்தார் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ஒரு கட்சியின் தலைவர், முதல்வர் இறந்தவிட்டால் எல்லாம் உடனடியாக ஆட்சியை கலைக்க முடியாது. அதோடு, அப்போது முதல்வரான ஜானகிக்கு ஆதரவாக மத்தியரசு இல்லை. அந்த ஆட்சியை கலைக்கவே 1 ஆண்டுகள் ஆனது. இப்போதைய எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் உள்ள பாஜகவும் – மோடியும் தாங்கி பிடிக்கிறார்கள். கட்சிக்குள் பெரிய பிளவு கிடையாது. மத்தியில் ஆளும் பாஜக மாநிலத்தை ஆளும் அதிமுக இரண்டும் கூட்டணியில் பலமாக உள்ளார்கள். இந்த கூட்டணி உடையாமல் ஆட்சியை கலைக்க முடியாது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

ஜெயலலிதா போல் ஸ்டாலினால் கட்சியை நடத்த முடியவில்லை என்கிறார்கள். அரசியல் அறியா தற்குறிகளே………… அதிமுக அடிமைகளை உருவாக்கியது. அதன் வரலாறை எடுத்துப்பாருங்கள் புரியும். திமுக தொண்டர்கள் அடிமைகள் கிடையாது. சுயமரியாதை உள்ளவர்கள். தொண்டனே அப்படியிருந்தால் தலைவர்கள் எப்படி இருப்பார்கள். அதை உணர்ந்தே அனைவரையும் அரவணைத்து கட்சியை நடத்தினார் கலைஞர். அந்த பக்குவம் நிச்சயம் ஸ்டாலினிடம் இல்லை அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பத்திரிக்கைகள் சொல்வதும், கட்சியினர் சொல்வதும், அதிகாரிகள் சொல்வதும், குடும்பத்தினர் சொல்வதும், கருத்தாளர்கள் சொல்வதும், அறிவுஜீவிகள் சொல்வதும் சரியாகவே படும். அந்த பரந்துப்பட்ட கருத்துக்களை ஸ்டாலின் உள்வாங்க வேண்டும். ஒவ்வொருவருர் சொல்வதும் சரியென்பது போல் தோன்றும். அதை அவர் மட்டும்மே ஆய்வு செய்ய வேண்டும். தனக்கு, கட்சிக்கு, தமிழகத்துக்கு நீண்ட கால பயணத்துக்கு எது சரி வரும் என்பதை அவரே முடிவெடுக்க வேண்டும். இதைத்தான் கலைஞர் செய்தார்………

2 கருத்துகள்:

  1. எம்ஜிஆர் மறைந்த பின் ஜானகி அரசைக்கலைக்க ஒராண்டு ஆகவில்லை.வெறும் 13 நாட்களில் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.
    ஜெயலலிதா ராஜீவுடன் தனக்கிருந்த நட்பை பயன்படுத்தி இதனை சாதித்தார். அதன் பின்பு 6 மாதத்துக்கு கவர்னர் ஆட்சி நடைபெற்று அதன் பின்னரே தேர்தல் நடந்து திமுக ஆட்சிக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. Ok.Sir...Y R U write now? If youare write after election and before counting, I believe you. Now..?

    பதிலளிநீக்கு