மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்படும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தார்கள், மதமாற்றம் செய்ய முயன்றார்கள் என தரப்பட்ட புகாரின் அடிப்படையில் 7 டீம் லீடர்களையும், ஊழியர்களின் புகார்களை விசாரிக்காத எச்.ஆர் என்கிற மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ஒரு பெண்மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.
இதில் கவனிக்கவேண்டியது சம்மந்தப்பட்ட 6 பேரும் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். இங்குதான் சந்தேகம் வருகிறது. காரணம், கார்ப்பரேட் அலுவலகத்தில் மதப்பிரச்சாரம் என்பதெல்லாம் காமெடிக்கானது. இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்களின் பின்னணியை பார்த்தாலே தெரிந்துவிடும். சங்கிகளை விட மோசமான சங்கிகள் அவர்கள். இந்தியாவில் 90 சதவித நிறுவனங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுடையது. அந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் கோலோச்சுகிறார்கள். இந்த சங்கிகள் திறமையான பிறமதத்தவரை வேலைக்கு எடுத்தாலும் முதலாளிகள் என்ன வழியோ அந்த வழியவே இவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதாவது முதலாளிகளின் விருப்பத்தின்படியே உணவு, உடை கூட இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டினில் அசைவ உணவு வெளியில் இருந்துக்கூட எடுத்துவந்து சாப்பிடகூடாது என சிலநிறுவனங்கள் பாலிஸியாகவே வைத்துள்ளன. இப்படி யார் செய்வார்கள் என யோசித்துப்பாருங்கள்? அப்படியிருக்க மதப்பிரச்சாரம் செய்தார்கள் என்பதை ஏற்கமுடியாது.
அதேநேரத்தில் பாலியல் குற்றத்தை புறந்தள்ளமுடியாது. ஊழியர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் நிறுவன தலைமை பீடங்கள் இப்போதுயெல்லாம் கண் மூடிக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களில் எச்.ஆர்கள், சாதாரண ஊழியர்களுக்கு பதில் டிப்பார்ட்மென்ட் ஹெட்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள், புகார்களை நியாயமாக விசாரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு.
கார்ப்பரேட் பணி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கடியானதோ அதே அளவுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்குகிறது. அது இன்று நேற்றல்ல ஐ.டி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெறத்துவங்கியபோதிலிருந்தே அதைச்சார்ந்து பாலியல் பிரச்சனைகள் எழத்துவங்கியுள்ளன, அது கடந்தகாலத்தில் உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அதுக்குறித்து பலசெய்திகள் வெளியாகும், இப்போது அதுக்குறித்து யாரும் எங்கும் எந்த தளத்திலும் பேசுவதில்லை. தற்போதைய சூழலில் பார்ட்டி, ட்ரக்ஸ், செக்ஸ் போன்றவற்றை சமூகம் நார்மலைஸ் செய்துவருகிறது, கார்ப்பரேட், மெட்ரோ சிட்டிகளில் இது சர்வே சாதாரணம் என இதுக்குறித்து பெரும்பாலும் எந்த ஊடகமும் பேசுவதில்லை. புகாராகி வெளிவந்தபின்பும் பத்தோடு ஒன்றாக பேசுகிறது.
கார்ப்பரேட் நிறுவனம் மட்டும்மல்ல பெரும்பாலும் எந்த இடத்திலும் சக ஊழியர்கள் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு தருகிறார்கள் என எந்த பெண் ஊழியரும் எச்.ஆர் உட்பட எங்கும் புகார் தந்துவிடமுடியாத சூழ்நிலையே பெரும்பாலும் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் திறமைக்குதான் மரியாதை என்பார்கள், சமத்துவம் பேசுகிறார்கள். உண்மையில் அது ஆணாதிக்க உலகமாகவே உள்ளது. டீம் லீடர்கள், எச்.ஆர்கள் என வேலை வாங்கும் இடத்திலுள்ள உயரதிகாரிகள் டீம் சேர்ந்துக்கொண்டு பெண் ஊழியர்களை பாலியல் தொந்தரவு தருவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது. சில பெண்கள் நேரடியாகவே அதனை எதிர்த்து கேட்டுவிட்டு போங்கடா நீங்களும் உங்க வேலையும் என உதறியவர்கள் உண்டு. பலர் தங்களுடைய குடும்ப சூழ்நிலையால் சகித்துக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு, சிலர் இதனையே அட்வான்டேஜ்ஜாக எடுத்துக்கொண்டு அட்ஜஸ் செய்துக்கொண்டு உயர்கிறவர்களும் உண்டு. இதில் புகார் தெரிவிப்பவர்களை, மசியாதவர்களை டார்கெட் செய்து வெளியேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது ஐடி உலகம்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வார இறுதி நாட்களில் வாரவிடுமுறை, மாதவிடுமுறை, ஆண்டு விடுமுறை என விதவிதமாக சம்பளத்தோடு விடுமுறை தந்து சுற்றுலா அனுப்புவார்கள். இதெல்லாம் தப்பில்லை என மூளைச்சலவை செய்யப்பட்டு ட்ரக்ஸ்க்கு, பார்ட்டிகளுக்கு அடிமையாக்கினார்கள். இதன்பின்னால் பெரிய உளவியல் பாடம் இருக்கிறது. காலப்போக்கில் நிறுவனத்தின் லாபம் பாதிக்கிறதே என ஐடி நிறுவனங்கள் உட்பட பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை ட்ரிப் அனுப்புவதை மெல்லமெல்ல குறைத்தது. ஆனால் அதனை பார்த்து, கேள்விப்பட்ட பெரும்பாலான இளசுகள் அதனை விடத்தாயாரில்லை, நீங்கள் இன்ஸ்டாவில் பாருங்கள் என்னடா இப்படியெல்லாமா பார்ட்டிக்கு பெயர் வைப்பிங்க என இருக்கிறது. பலபல ஆஃபர்கள் தந்து பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் ஒன்றுமட்டும் நீக்கமறவுள்ளது. அதாவது, பெண்களுக்கு என்ட்ரீ ப்ரீ அல்லது மிகமிக குறைந்த கட்டணம். யுவாதிகளுக்கு சரக்கு ப்ரீயாக தருவதாகவும் விளம்பரம் செய்கிறார்கள்.
நகரம் விட்டு நகரம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு சென்று விடுதியில் தங்கி வேலை செய்யும் இளைஞனுக்கும் – இளைஞிக்கு பெரிய சுதந்திரம் கிடைத்ததாக நினைக்கிறார்கள். தங்களை இனி கட்டுப்படுத்த குடும்பத்தார் இல்லை, என்ன செய்கிறாய் எனக்கேட்க கண்காணிக்க யாரும்மில்லை. கையில் மாதாமாதம் தேவைக்கு அதிகமான சம்பளம் வருகிறது நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து செய்பவர்களே அதிகமாக உள்ளார்கள். இந்த மிடில் க்ளாஸில் இருந்துவருபவர்களைத்தான் அனைவரும் டார்க்கெட் செய்கிறார்கள்.
குட்டி கோவா என கொண்டாடப்பட்டும் பாண்டிச்சேரிக்கு கல்லூரி, ஐடி இளசுகள் என படையெடுத்து வந்து வாராவாரம் குவிகிறார்கள். பார்ட்டி, டான்ஸ் என விதவிதமாக நடக்கிறது. எல்லாமே கிடைக்கிறது, எல்லாமுமே. சில மாதங்களுக்கு முன்பு பப் ஒன்றில் தகராறு நடந்து மரணம் நடக்கிறது. அதன் விசாரணையின்போது, பிரபல கல்லூரி விடுதியில் இருந்தும், பெங்களுரு ஐ.டியில் பணியாற்றும் பையன்கள் பாண்டிச்சேரிக்கு வந்து பார்ட்டி செய்து புகாரில் சிக்கியபின்பே குடும்பத்தாருக்கே தெரிந்தது. ஏலகிரியில் ஒரு ஐ.டி பெண் விடுதி அறையில் இறந்து கிடந்தபின்பே குடும்பத்தாருக்கு தெரிந்தது. வேலூரில் ஒரு கார் விபத்தில் சிக்கியபோதே தன் மகள் நண்பர்களோடு சென்னையில் இருந்து ஏலகிரி ட்ரிப் போனது ஐதராபாத்தில் இருந்த பெற்றோர்களுக்கு தெரிந்தது. இப்படி பலவற்றை சொல்லமுடியும்.
நாம் வீட்டுக்கு தெரியாமல் செய்கிறோம்………… செல்கிறோம். இங்கே நம்மை யாருக்கு தெரியும், நாம் செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் 2கே கிட்ஸ், ஜென் ஸி தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்களேயே ஏமாற்றிக்கொள்கிறார்கள். குடும்பத்தார், நண்பர்கள் அவர்கள் மீது வைக்கும் அதீத நம்பிக்கையை, அவநம்பிக்கையாக்கும்போது அதன்பின் அவர்கள் மீது யாருக்கும் எக்காலகத்திலும் நம்பிக்கை வராது. அதை அவர்கள் உணரும்போது அவர்கள் எடுக்கும் முடிவு என்பது விபரீதமாகவே இருக்கிறது. நான் சமீபத்தில் அப்படி இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை பார்த்து வேதனை மட்டுமே படமுடிந்தது.
தங்களின் லாப வெறிக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி இளசுகளின் வாழ்க்கையை சீரழிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் விசாரணை கமிட்டியில் வெளிநபர்கள், நிறுவனத்தில் சங்கம் அமைக்கும் உரிமை, அரசின் சட்டவிதிகள் கடைப்பிடிக்காதவரை இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக