ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஸ்டாலின் பயணம் வெற்றி பெறுமா ?.



தனது ஐடி டீம் ஐடியாப்படி நமக்கு நாமே என மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார் ஸ்டாலின். தமிழகத்துக்கு இது புதியது.

மேற்கத்திய நாடுகளில் இது பழைய பார்மூலா. எம்.பியாக, அதிபராக விரும்புகிறவர்கள் சுமார் ஓராண்டுக்கு முன்பாகவே பிரச்சார பயணத்தை தொடங்கிவிடுவார்கள். மக்களோடு பேசுவார்கள், கருத்துக்களை கேட்பார்கள். எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்றி கேள்விக்கு பதில் சொல்வது சர்வசாதாரணம். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி குறிப்பாக இணையத்தை பிரச்சார வாகனமாக பயன்டுத்தி, வெற்றி பெற முடியும் என்பதை செய்து காட்டியவர் அமெரிக்க அதிபர் ஓபாமா. அதை அப்படியே காப்பியடித்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தி பிரதமர் பதவியை பிடித்தவர் மோடி. அதைத்தான் இன்று தமிழக அரசியல் கட்சிகள் காப்பியடிக்கின்றன. பாமக போஸ்டர் ஒட்டுகிறது. இருந்தும் அதன் பணிகள் வன்னியர் என்ற சமுதாயத்தின் வட்டத்ததை தாண்டி செல்லவில்லை.

ஓபாமா, மோடி ஸ்டைலில் ஸ்டாலின் முழு மூச்சாக களம்மிறங்கி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினருடன் கருத்துக்களை கேட்கிறார், ஆட்டோ பயணம், ஸ்கூட்டி ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல் என சாமானியனாக தன்னை காட்டிக்கொள்வதை ஒரு பக்கம் கிண்டல் அடிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் மக்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைக்கிறது.


துணை முதல்வராக இருக்கும் போதே சுய உதவிக்குழு பெண்களின் மனதில் சிம்மாசனம் போட முயன்றவர் அது ஓரளவு தான் ஓர்க் அவுட் ஆனது. சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தல் தோல்விக்கு பின் கட்சியின் அடிமட்டத்தினருடன் நெருக்கம் காட்டிய ஸ்டாலின். இப்போது அனைத்து தர மக்களுடன் நெருக்கம் காட்ட துவங்கியுள்ளார்.

இதனை சில அரசியல் தலைவர்கள், நடுநிலையா பேசறோம் என்பவர்கள் அரசியலுக்காக ஸ்டாலின் இதை செய்கிறார் என கிண்டலடிக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தங்களால் முடியாததை, ஜெவால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்கிறார் அதனால் கிண்டல் செய்கிறார்கள். ஸ்டாலின் செய்வது முழுக்க முழுக்க அரசியல் தான். அதில் மாற்றுக்கருத்துயில்லை.

இதில் இன்னொன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இனி மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். கடந்த காலங்களைப்போல ஏசி போட்ட கார்க்குள் அமர்ந்தபடி சென்றால் மக்கள் துரத்திவிடுவார்கள். நடுத்தர, படித்த மக்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தங்கள் மனதில் பட்டதை வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், பிளாக் போன்றவற்றில் எழுதி தங்களது கருத்தை வெறிப்படுத்தி விடுவார்கள். இதனால் அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாறவில்லையென்றால் மாற்றம் தருபவர் என நம்புவர் பக்கம் போய்விடுவார்கள்.

மாற்றத்தை நோக்கி போகும் ஸ்டாலினின் இந்த பயணம் வெற்றி பெறுமா?.

திமுகவை தாண்டி பல தரப்பினரின் கேள்வி, எதிர்பார்ப்பு இதுதான். வெற்றியா, தோல்வியா என்பது ஒருபுறம்மிருக்கட்டும். ஸ்டாலின் கட்சியில் மட்டும்மல்ல மக்கள் மத்தியிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இனி கலைஞரே கூட ஸ்டாலினை தலைமை பதவிக்கு கொண்டு வரவில்லையென்றால் மக்கள் ஏச்சுக்கு ஆளாகும் அளவுக்கு பல தரப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு முதல்வருக்கு தகுதியானவர் என்ற பெயரை பெறுகிறார். அந்த விதத்தில் இது வெற்றி.

மக்களிடம் இந்த பயணம் நம்பிக்கையை தந்துள்ளதா ?.

மக்களுடன் பேசும்போது, அவர்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்கிறார். இந்த குறைகள் எல்லா அரசியல் தலைவர்களும் கேட்பது தான். ஆனால், இதனை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவை, பிரச்சனைகளை புரிந்துக்கொள்ள வேண்டும். 30 ரூபாய் இருந்தால் இந்தியாவில் ஒரு மனிதன் நிம்மதியாக உண்டு உறங்கிவிடலாம் என கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு அறிக்கை மத்தியரசால் வெளியிடப்பட்டது. அது எந்தளவுக்கு அபத்தம் என்பதை இந்த பயணம் புரிந்துக்கொள்ள உதவியிருக்கும். தம்மிடம் கேட்ட கோரிக்கைகளை, பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டால் போதும். நம்பிக்கையை தந்துள்ளதா என கேட்டால் தேர்தல் முடிவுகள் தான் அதை காட்டும்.


இது ஸ்டாலின்க்கு தேர்தலில் வெற்றி கிட்டுமா ?.

இது அதிபர் தேர்தல் கிடையாது. மக்கள் முதல்வரை நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்து வைக்க. எம்.எல்.ஏ என்ற பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்வது. தன் பயணத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையை போல மக்களின் நம்பிக்கை பெற்ற வேட்பாளரை நிறுத்த வேண்டும். தொகுதியில் சீனியர், ஜீனியர் என பார்க்காமல் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவரை தேர்வு செய்ய வேண்டும். பணம் உள்ள வேட்பாளர் வேண்டும்மென பார்க்காமல், பிரச்சனையில்லாத ஆளா?, மக்கள் நம்பிக்கை பெற்றவரா?, இளைஞரா? எம்.எல்.ஏ பதவிக்கு தகுதியானவரா? என பார்த்து சீட் தந்தால் வெற்றிக்கு மிக அருகில் செல்லலாம்.

சனி, செப்டம்பர் 19, 2015

அரசியல் அகதி வை.கோ.





ஈழப்போர் முடிந்தபின் ஈழப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள படகு முதலாளிகளை பிடித்து தங்கள் உயிரை காப்பாற்றச்சொல்லி கேட்டார்கள். பணம் வேண்டும் என படகு முதலாளிகள் கேட்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி தரதயாராக இருந்தனர். 

உயிரை காப்பாற்றுவாரா, சொன்னயிடத்தில் கொண்டும்போய் சேர்ப்பாரா என ஆராயவில்லை. காரணம், படகோட்டியின் வாய் வார்த்தைகள் அவர்களை கட்டிப்போட்டது. அவர் சொல்வதை அப்படியே அந்த அகதிகளை நம்பவைத்தது. படகோட்டியின் வார்த்தைகளை நம்பி பலர் போட்டி போட்டுக்கொண்டு அந்த படகில் ஏறினர். கடல் பயணம் மேற்க்கொள்ளும்போது தான் தெரிந்தது அந்த படகின் முதலாளிக்கு படகை செலுத்த தெரியவில்லை என்பது. அதுமட்டும்மல்ல கப்பலில் பெரிய ஓட்டை விழவும் படகோட்டியே காரணமாகம் என்பதும் தெரியவந்தது. இருந்தும் தன் வாய்வார்த்தையால் உங்களை நான் கொண்டும்போய் சேர்ப்பேன் என்றார். லட்சக்கணக்கில் பணம் தந்தும் தம் உயிரை இந்த படகின் முதலாளி பறித்துவிடுவான் போல் உள்ளதே என பயந்த பலர் படகின் அருகில் பயணம் செய்துக்கொண்டுயிருந்த கப்பல் முதலாளியிடம் பேசி அதில் தொத்திக்கொண்டு உயிர் பிழைத்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓட்டையை அடைத்துவிடுவார், கொஞ்ச தூரம் போனால் படகை சரியாக ஓட்டிவிடுவார் என நம்பிக்கையில் சிலர் படகிலேயே இருந்தனர். அப்படி இருந்தவர்களும் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைய இதை உணர்ந்த படகு முதலாளி, அந்த கப்பல் பழைய கப்பல், நம் படகு நல்ல தரமான படகு, நியாயமான கூலி வாங்குகிறேன், அதோடு, படகில் பெட்ரோல் உள்ளது என நம்பிக்கை குறையாமல் பேசினார். அதுபோன்ற பேச்சை நம்பிதான் படகில் ஏறினோம். இப்போதும் அப்படியே பேசுகிறாறே என சிலருக்கும் பயம் வந்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். 

இந்த கதையை அப்படியே ஈழ ஆதரவு கட்சியான மதிமுகவிற்கு பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள். 

( படகு மதிமுக, படகோட்டி வை.கோ, அகதிகள் மதிமுக தொண்டர்கள். ) 

வை.கோபால்சாமி என்கிற வை.கோ திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், 93ல் தமிழகத்தை ஆண்ட அதிமுக ஆதரவுடன் பெரும் ஆராவரத்துடன் துவங்கிய கட்சி மதிமுக. திமுகவில் இருந்த பல பலம்மிருக்க மா.செக்கள் வை.கோ பின்னால் சென்றார்கள். போன வேகத்தில் பலர் திரும்பி ஓடிவந்தார்கள். அப்போதே வை.கோ உஷாராகியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

96 தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி, 98 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 99 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2001 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி, 2004 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2006 சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2009 நாடளாமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி, 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, 2014 நாடாளமன்ற தேர்தலில் ஒரு கூட்டணி. அழைக்கிறார்கள் என இப்படி மாறி மாறி கூட்டணி வைத்த வை.கோவை யாரும் குற்றம்சொல்லவில்லை. தேர்தல் அரசியலாக பார்த்தார்கள். ஆனால், 2006 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இருந்த வை.கோ யாரும் எதிர்பாராத நிலையில் (அவரது தாயர் கூட எதிர்பார்க்கவில்லை ) அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, அவரது செல்வாக்கு சுத்தமாக மக்கள் மத்தியில் சரிந்து சராசரி அரசியல்வாதியை விட மிக மோசமானவராக பார்க்கப்பட்டார். 

அந்த கரையை துடைக்க வை.கோவின் அடிப்பொடிகள் ஊடகம் மூலமாகவும், இணையதளம் மூலமாக எத்தனை பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை என்பதே எதார்த்தம். ஆனாலும் இன்றளவும் அதை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார் வை.கோ.

 ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி என்ன செய்வார். நிறுவனத்துக்கு லாபம் வரும் வழிகளை ஆராய்வார். அப்படித்தான் ஒரு அரசியல் கட்சி தலைவரும் இருக்கவேண்டும். அரசியல் கட்சி தேர்தலில் பங்குகொண்டு சேர்மன், எம்.எல்.ஏ, எம்.பி, வாரியம் என ஏதாவது ஒரு பதவியில் கட்சியினரை உட்காரவைக்க வேண்டும். உட்கார்ந்தால் தான் அவன் சம்பாதிப்பான், சம்பாதித்தால் தான் அவன் போஸ்டர் ஓட்டுவான், கொடிபிடிப்பான், பேனர் வைப்பான், ஆட்களை அழைத்து வருவான். தொண்டனுக்கு பதவியே கிடைக்காமல் கட்சியை நடத்த செய்தால் இப்போது நடப்பது போன்று தான் தொண்டன் தாவி குதித்து தப்பி ஓடிவிடுவான்.

 
ஒரு கட்சிக்கு கொள்கை என்பது இருக்க வேண்டும். ஆனால் தேர்தல்களம் என வரும்போது, கொள்கைகளோடு முரண்டுபட்டுதான் ஆக வேண்டும். இல்லையேல் யாருடனும் கூட்டணி வைக்கமுடியாது, வெற்றி பெற முடியாது, கட்சியை நடத்த முடியாது. இது தெரிந்தவர் தான் வை.கோ. ஆனால் அவரால் செயல்பட முடியவில்லை. காரணம் கட்சியை நடத்த தெரியவில்லை என்பதை விட வெகுவாக உணர்ச்சி வசப்படுகிறார். உணர்ச்சி வசத்தால் எடுக்கப்படும் எந்த முடிவும் சரியாகயிருக்காது.

முக்கியமாக அரசியல் தலைவர்கள் உணர்ச்சி படுவது கூடாது. கட்சி தலைவருக்கு என்றும்மே அழகல்ல, கூடவேகூடாது. ஆனால் வை.கோ மிக அதிகமான உணர்சிவசப்படும் தலைவர். அரசியலில் உணர்ச்சி வசப்படுபவர்கள் காணாமலே போவார்கள் தமிழகத்தில் அப்படி காணாமல் போனவர்களை உதாரணமாக காட்ட பல அரசியல் பிரபலங்கள் உள்ளார்கள். அந்த பட்டியலில் வை.கோ சேர்ந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் அரசியலில் ஒரு அகதியாக வலம் வருகிறார் வை.கோ. 

காலம் கடந்துவிடவில்லை. சரியான முடிவு எடுப்பதற்கான நேரம் உள்ளது. அதை வை.கோ தற்கால அரசியலோடு பொருத்தி முடிவு எடுக்க வேண்டும்.

சனி, ஆகஸ்ட் 01, 2015

வேடிக்கை பார்க்கும் கூட்டம். – சசிபெருமாளுக்கு வேண்டாத வேலை.





இன்னும் சில தினங்களில் 69வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடவுள்ளோம். சுதந்திரம் பெறும்போது ஜனநாயக நாடகா, மக்களுக்கான நாடாக, மக்கள் நலன் கொண்ட, நம்மால் தேர்ந்தெடுக்கப்படபோகும் ஆட்சியாளர்களால் நாம் ஆளப்போகிறோம் என மக்கள் நம்பினார்கள். ஆனால் எவ்வளவு முட்டாள்தனமான நம்பிக்கை என்பதை ஒவ்வொரு முறையும் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் கற்று தந்து வருகிறார்கள். இங்கு எதுவும்மே மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் கிடையாது, ஆட்சியார்கள், அதிகாரிகள், பணம் படைத்தவர்களை காப்பாற்றும் சட்டமாகவே உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனே குறிக்கோளாக செயல்படுவோம் எனும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தபின் மக்கள் விரோத போக்குகளை தான் கையால்கிறார்கள். 

மக்கள் ஒவ்வொரு அரசியல்வாதியிடமும் நம்பிக்கைவைத்து தோற்று போய்விட்டார்கள். தற்போது இருப்பதில் எந்த பேய் நல்ல பேய் என பார்த்து ஆட்சி பொறுப்பை தரும் அளவுக்கு வந்துள்ளார்கள். மக்கள் இந்தளவுக்கு மாற காரணம் அரசியல்வாதிகள் என்றால், அரசியல்வாதிகள் இப்படி மாற காரணம் மக்களும் தான் காரணம். 

மக்கள் உணர்ச்சி வசப்படுவது, சினிமா கட்டவுட்களுக்கு பாலபிஷேகம் செய்வது என காலத்தை கடத்துகிறார்கள். தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவது பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை.

கூடாங்குளம் அணுமின்நிலையம் திறக்ககூடாதுயென 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்தினார்கள். இது அந்த பகுதி மக்களின் ஆர்ப்பாட்டம் என பக்கத்து மாவட்டத்துக்கு மக்கள் கூட அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. டெல்டா மாவட்டத்தில் நியூட்ரேன் எடுக்க விவசாய நிலங்கள் அழிக்கப்பட மாத கணக்கில் அந்த பகுதி விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது அவர்கள் போராட்டம் என பக்கத்தில் உள்ள கடலூர் மாவட்ட மக்களும் ஒதுங்கி நிற்கிறார்கள். 

செம்மரம் வெட்ட சென்று 20 தமிழக கூலி தொழிலாளர்கள் ஆந்திரா அரச அதிகாரம் சுட்டுக்கொன்றுள்ளது. இது திருவண்ணாமலை மாவட்ட பிரச்சனை என மற்ற மாவட்டங்கள் மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்ட மக்களே ஒதுங்கி நின்றுவிட்டார்கள்.

காவிரி நீர் பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சனை என இப்படி பல பிரச்சனைகளை பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அங்கு பாதிக்கப்படுபவர்கள் தான் போராடுகிறார்களே தவிர பிற பகுதி மக்கள் இந்த போராட்டங்களில் இணைவதில்லை. தஞ்சையில் விளையும் அரிசியை அந்த விவசாயிகள் மட்டும்மா உண்கிறார்கள், கூடங்குளம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை அந்த பகுதி மீனவர்கள் மட்டுமா உண்கிறார்கள். மற்ற பகுதிகளுக்கும் தானே செல்கிறது மற்றவர்களும் உண்கிறார்கள் தானே. பின் ஏன் அவர்கள் வாழ்வாதார போராட்டத்தில் பிற பகுதி மக்கள் கலந்துக்கொள்வதில்லை ?. 

பயம், அலட்சியம், இது அவன் பிரச்னை என ஒதுங்கி செல்வதே காரணம். 

இது என் பிரச்சனை கிடையாது என ஒவ்வொருவரும் ஒதுங்கி செல்கின்றனர். அரசாங்கத்தை எதிர்த்துக்கிட்டு வாழ முடியும்மா என்ற ரெடிமேட் பதிலை வைத்துக்கொண்டு பேசுவது. ஒரு விபத்து நடந்தால் கூட உதவி செய்யக்கூட தயங்கும் சமூகமாக நம் சமூகம் மாறியுள்ளது. அரசாங்கத்தை கண்டு அன்று மக்கள் பயந்திருந்தால் இன்று நாம் சுதந்திர நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கமாட்டோம். ஆனால் இங்கு தொட்டதிற்கெல்லாம் பயம். அரசாங்க ஆஸ்பத்திரியில் கம்பவுண்டரிடம் கூட பயப்படும் நிலை தான் நம் படித்த, படிக்காத மக்களிடம் உள்ளது.

மக்களிடம் பயத்தை உருவாக்கிய அரசாங்கம் நம்மை குனிய வைத்து மட்டுமல்ல படுக்க வைத்தும் மிதிக்கிறது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ரோட்டுக்கு வருவதேயில்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கி போகின்றனர். மக்களுக்காக போராடுபவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவை கூட வழங்க தயங்குவது தான் வேதனையிலும் வேதனை. 
 
சசிபெருமாள் யாருக்காக போராடினார். இந்த சமூகத்துக்காக வழக்கொழுந்து போன காந்திய கொள்கையை வைத்துக்கொண்டு போராடினார். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தார். இறுதியாக ஜீலை 31ந்தேதி கன்னியாகுமரி உண்ணாமலைக்கடை பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஒரு டாஸ்மாக் கடையை மூடு என அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்துக்கு அறிவித்துவிட்டே சென்று தொலைபேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்துள்ளார் சசிபெருமாள். உச்சி கோபுரத்தில் நின்று போராடிய சசிபெருமாளை அரசு அதிகாரிகள் 5 மணி நேரம் தேமே என நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு ருந்துள்ளனர். வயதானர் அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும் ஆனால் ஈடுபடவில்லை. இந்த சமூகத்துக்காக தான் அவ்வளவு உயரமான கோபுரத்தில் ஏறி நின்று போராடுகிறார். மக்களுக்காக போராடியவரின் உயிரை அரசாங்கம் பறித்துள்ளது. இது அரசாங்கம் செய்த படுகொலை தான். 

எந்த மக்கள் நலனுக்காக போராடினாரோ, அவர் இறந்ததை கண்டும் இந்த மக்களுக்கு இன்னமும் சூடு சொரணை வரவில்லை. வேடிக்கை பார்க்கும் கூட்டமாக தான் உள்ளது. ஒரு சினிமா நடிகன் வந்தால் முண்டியடித்து போய் பார்க்கும் கூட்டம் தனக்காக போராடி போராட்டக்களத்தில் உயிர் விட்டதை கேட்டு உச் கொட்டிவிட்டு தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு நகர்ந்து சென்றுவிட்டது. 

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் குரூப்களில் மதுவிலக்கு தேவை என மது அருந்திக்கொண்டு சசிபெருமாளுக்கு அய்யோ சசிபெருமாள் போய்விட்டாரே என தங்கள் துக்கத்தை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

வாழ்க மக்கள்……………