காங்கிரஸ் இல்லா இந்தியா என்பது பாஜகவின் நீண்டகால திட்டம். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்தை தீவிரமாக செயலாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக. வடமாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எரியப்பட்டுவிட்டது. தனித்து அக்கட்சியால் ஒருமாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கமுடியாது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்றால் அக்கட்சியை தென்மாநில மக்கள் ஓரளவு நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவே. அதிலும் காங்கிரஸ் பாரம்பரிய வழக்கப்படி தொடர்ந்து துரோகங்கள் செய்வதை நிறுத்தவில்லை.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் நடந்தபோதே காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள் என திமுகவுக்கு நெருக்கடி தந்துவந்தது ஒன்றியத்தை ஆளும் பாஜக. ஜெ இறந்தபின் எதிர்கட்சியாக வலிமையாக இருந்த திமுகவிடம் எங்களோடு கூட்டணி கூட வேண்டாம், காங்கிரஸ்சை கழட்டிவிடுங்கள், அதிமுக உடைத்துதருகிறோம் நீங்கள் ஆட்சியமையுங்கள் என ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியது பாஜகவும் பாஜக அதிமுக அணியும். திமுக அதனை செய்யாது என மறுத்துவிட்டார்.
2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின்பும் காங்கிரஸ்சை கழட்டிவிட்டால் நிதிகளை தருகிறோம் எனச்சொன்னது பாஜக. முதலமைச்சர் ஸ்டாலின் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆளுநர் வழியாக தமிழ்நாடு அரசுக்கு தரப்பட்ட பெரிய பெரிய நெருக்கடிகளை தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அத்தனை நெருக்கடிகளை சட்டத்தின் உதவியோடும், அரசியல் ரீதியாகவும் அடித்து நொருக்கி களத்தில் செயல்பட்டு தமிழ்நாட்டை பொருளாதாரத்தில், கல்வியில், சுகாதாரத்தில், தொழில்வளர்ச்சியில், பெண்கள் முன்னேற்றத்தில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக்கி காட்டினார். பாஜகவை எதிர்த்து நின்ற ஸ்டாலினை தான் மக்கள் தோற்கடித்துள்ளனர்.
தேர்தல் களத்தில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது. இதனை புதியதாக அதிகாரத்துக்கு வரும் தற்குறிகள் புரிந்துக்கொள்ளவில்லை, அவர்கள் புரிந்துக்கொள்ளவும்மாட்டார்கள். அதெல்லாம் ஒருபுறம்மிருக்கட்டும்.
அரசியல் சாசனப்படி நாடாளுமன்றமோ – சட்டமன்றமோ – உள்ளாட்சி அமைப்புகளோ எதுவாக இருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அதிகார நாற்காலியில் அமரப்பார்கள். ஒருவேலை தொங்கு சட்டசபை அமைந்தால் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்றுள்ள கட்சியை ஆளுநர் என்பவர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பதவியேற்றபின் ஆளுநர் குறிப்பிடும் நாளில் தங்களுக்கு ஆதரவு இருப்பதை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தவேண்டும், இதுதான் நடைமுறை.
இந்த தேர்தலில் நடிகர் விஜய் கட்சியிடம் 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சியமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை. இரண்டாவது அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள திமுக எதிர்கட்சியாக செயல்படுகிறோம் என அறிவித்துவிட்டது. மூன்றாவதாக அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அதிமுக, விஜய் கட்சிக்கு ஆதரவில்லை எனச்சொல்லிவிட்டது. திமுகவுடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு 5 எம்.எல்.ஏக்களுடன் ஓடிப்போய் தவெகவுடன் துண்டுப்போட்டு உட்கார்ந்துக்கொண்டது காங்கிரஸ், விஜய்யும் ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக விசிக, இடதுசாரிகள், பாமக போன்றவை விஜய்யுடன் கைகோர்க்க பின்வாசல் வழியாக பேசுகிறார்கள், கூட்டணி ஆட்சிக்கு அடிப்போடுகிறார்கள். தொங்கு சட்டசபை அமைந்தால் இதுயெல்லாம் நடக்கும்தான். குதிரை பேரங்களும் நடக்கச்செய்யும்.
தவெக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கு பேச பேரங்கள் ஒத்துவராததால் அதுவும் பாதியில் நிற்கிறது.
காங்கிரஸ்சுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் பாஜக தனது கோபத்தைக்காட்டும் என்பது அரசியல் புரிந்தோர் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ்சை தனித்துவிடச்செய்வதோடு அந்தகட்சியை காலி பெருங்காய டப்பாவாக மாற்றிக்கொண்டு வருவதை பாஜகவின் சமகால அரசியல் ஆட்டத்தில் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். நிலைமை அப்படியிருக்க பெரிய பலமே இல்லாத காங்கிரஸ் ஆதரவை தவெக ஏற்றுக்கொண்டது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. இன்னும் அவருக்கு அரசியலே தெரியவில்லை.
முதல்முறையாக முதலமைச்சராக வந்த வாய்ப்பை சினிமா தனமாகவே இன்னும் அனுகுகிறார் நடிகர் விஜய். அவர் மீதான அதிருப்தியை ஒதுக்கிவிட்டு இதனைப்பாருங்கள். ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்கிற கடிதத்தை தருவதற்காக ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் நடிகர் விஜய்யின் வீடியோவை பாருங்கள் நான் சொல்வது புரியும்.
11 இடங்களை நான்கு, ஐந்து கட்சிகளிடம்மிருந்து ஆதரவு வாங்கி ஆட்சியமைப்பது என்பது தலைமேல் தொங்கும் கத்திப்போன்றது. தேர்ந்த கட்சியாலே அதனை சிறப்பாக செய்யமுடியாது. அப்படியிருக்க அரசியல் அரிச்சுவடி தெரியாத, அரசு நிர்வாகம் செய்யத்தெரியாத, ஒருமாநிலத்தை ஆட்சிச்செய்ய தனது அதிகாரம் குறித்து தெரியாத விஜய்க்கு தனக்கு பக்கபலமாக ஒருபெரிய கட்சி இருக்கவேண்டும் என்பதை நோக்கி காய்களை நகர்த்தி சில விட்டுக்கொடுத்தல்களை செய்திருக்கவேண்டும். காரணம், விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அல்லது கடந்தகாலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசின் ஆதரவு பலமாக தேவை. இவர் ஸ்டாலினல்ல அதிகாரத்திலுள்ள பாஜகவை எதிர்த்து நின்று ஆட்சி செய்ய.
பதவியேற்கவிடாமல் கவர்னரை வைத்து சத்தம்மில்லாமல் ஆட்டமாடிக்கொண்டு இருக்கிறத ஒன்றியத்தை ஆளும் பாஜக. அதுக்குறித்து தற்குறிகள் தவிர அனைவருக்கும் தெரிகிறது. அதுக்குறித்து வாய்திறக்கவில்லை. இப்போதுவரை நாங்கள் அதிக எம்.எல்.ஏ சீட்களை பெற்றுள்ளோம், சட்டப்படி எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள் என இப்போதுவரை விஜய்யால் அல்லது அந்த கட்சியால் வாய் திறந்து பேசமுடியவில்லை. இதிலேயே அவரின் வீரம், அவருக்கு ஓட்டுப்போட்ட தற்குறிகளுக்கு தெரிந்துயிருக்கும். புரியாததுப்போல் நடிப்பார்கள்.
புதிய கல்வி (மும்மொழி) கொள்கையை அமல்படுத்தச்சொல்லி மத்தியரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தவரை அதை எதிர்த்து 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. விஜய் ஆட்சியமைக்கப்போகிறார் என்றதும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. 20 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, ஆனால் அதுக்குறித்து எதுவும் சொல்லவில்லையே என அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள், விஜய் மீது வெறுப்பு உருவாகியுள்ளது. பதவியேற்கும் முன்பே விஜய்யின் தைரியம் ஏலனமாக பார்க்கப்படுகிறது. இவனெல்லாம் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துட்டால் பாஜக குட்டிக்கரணம் போடச்சொன்னாலும் போடுவான் போலயே என நினைக்கிறார்கள்.
விஜய்யின் காக்கும் கடவுளாக கட்டமைக்கப்பட்ட நாயக பிம்பம் சரிகிறதே என நேற்று நள்ளிரவு முதல் ஒருதகவலை பரப்பிக்கொண்டு இருக்கிறது ஒரு கும்பல். அதாவது திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்கப்போகிறார்கள், விஜய்யை பார்த்து பயந்து நடுங்குகிறார்கள், அப்படியாயின் அவரின் பலத்தை பாருங்கள் என பரப்புகிறது. வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என நினைப்பதுப்போல ஆங்கில ஊடங்களில்தான் இப்படியொரு செய்தி வெளியாக செய்தார்கள். இதன்பின்னால் இருப்பது யார்? விஜய்யை இயக்கிக்கொண்டு இருப்பவர்கள்.
பாஜகவை விடுங்கள், ஆளுநர் தன்னை ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து முனுமுனுப்பு கூட விஜய்யிடம்மிருந்தோ அவரது கட்சியிடம்மிருந்தோ இதுவரை வரவில்லை. இதுதான் பாசிசம் விஜய்.
இப்போது நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்றாலும் நீங்கள் தீயசக்தி எனச்சொன்ன திமுகவும், ஜனநாயக சக்திகளும் தான் குரல் கொடுக்கவேண்டும். உங்களுக்காக ஸ்டாலின் குரல் கொடுப்பாரா என பயப்படவேண்டாம், உங்களுக்காக இல்லையென்றாலும் பாசிசத்துக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார்.
ஏன் எனில் அவர் ஸ்டாலின், திமுகவின் தலைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக