புதன், நவம்பர் 09, 2016

தயக்கத்தை உடை………… தலைநிமிர்…………………..




23 வயது இளைஞன் அவன், பி.எஸ்.சி கம்பயூட்டர் சைன்ஸ் படித்துள்ளான். சில மாதங்களுக்கு முன்பு, அண்ணே வேலை தேடறன் சரியா கிடைக்கல. உங்களுக்கு நிறையப்பேரை தெரியும், ஏதாவது ஒருயிடத்தல சொல்லி எனக்கொரு வேலை வாங்கி தாங்கண்ணே என வந்து நின்றான். 

நானும் சிலயிடங்களில் வேலைக்கு சொல்ல என் படிப்புக்கு ஏத்த வேலையில்லண்ணா, நல்ல வேலையா பார்த்து சொல்லுங்கண்ணா என்றான். சரியென மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மருந்து விற்பனை நிறுவனத்தில் நண்பர்கள் வேலை செய்ய அவர்கள் மூலமாக விற்பனை பிரதிநிதி வேலைக்கான நேர்காணல்க்கு அனுப்பிவைத்தேன். 80 சதவிதம் வேலை உறுதி, 22 ஆயிரம் சம்பளம் எனச்சொல்ல அதற்கான நேர்காணல்க்கு அவனை அனுப்பிவைத்தேன். போன வேகத்தில் சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பி வந்தான். கம்மி சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை இங்கயே சொல்லுங்கண்ணா என்றான். என்னடா என கேட்டும் சரியான பதில்யில்லை.

நேர்காணல் நடத்தியவர் உடன் பணிபுரிந்த எனது நண்பரிடம் விவகாரத்தை கேட்டபோது, ஒரு கேள்வி கேட்கறோம், பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும், அதவிட்டுட்டு தயங்கி தயங்கி, தலையை கீழ தொங்கப்போட்டுக்கிட்டு நிக்கறான், சரியாவே பேச வரல, இப்படிப்பட்டவன் எப்படி டாக்டர்கள்கிட்ட பேசி கம்பெனி பொருட்களை சிபாரிசு பண்ண வைப்பான், அதான் போடான்னு சொல்லிட்டன் என்றுள்ளான். 

இது அந்த இளைஞனின் தவறல்ல. கிராமபுற சூழ்நிலையில் பிறந்து, படித்துவிட்டு வரும் 99 சதவித இளைஞர்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு தான் கல்லூரி படிப்பை முடிக்கிறார்கள். கீழ்நிலை கல்வி மாணவர்கள் மட்டும்மல்ல உயர்கல்வி படித்து முடிக்கும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். நகர் புறத்தில் பயிலும் பிள்ளைகள் பரவாயில்லை, தயக்கத்தை அதிகமாகவே உடைத்துள்ளார்கள்.
எதனால் உள்ளுரிலேயே வேலை கேட்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டு, அவனிடம் பேச தொடங்கியபோது தான் கவனித்தேன். அவன் என்னிடம்மே அவ்வளவு பயத்தோடும், தயக்கத்தோடும் பேசினான்.
தம்பீ, தயங்காதே. என்ன பார்த்து எதுக்கு பயப்படற, தயங்கி தயங்கி பேசற, முதல்ல சேர் நுனியில உட்கார்றதுக்கு பதிலா நல்லா உட்கார். நீ என்ன கடனா வாங்க வந்துயிருக்கற. படிச்சியிருக்கற. வேலை ஏதாவுது இருந்தா சொல்லிவிடச்சொல்ற அவ்வளவு தானே இதுக்கு எதுக்கு தயங்கிக்கிட்டு என்றதும், இல்லண்ணா நீங்க பெரிய ஆளுங்களோட பழங்கறிங்க, அதான். 

நான் தொழில் நிமித்தமா பலதரப்பட்டவங்களோட பழகறன், அவ்வளவு தான். அதுக்கு நீ எதுக்கு பயந்து பயந்து பேசற, எங்கிட்ட எதுக்கு தயங்கனும் என கேட்டதும் அமைதியாக இருந்தான்.

உனக்கிருக்கற தயக்கம், இப்ப வரைக்கும் எனக்கும் உண்டு. நீ வந்து என்கிட்ட நிக்கற. 15 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு என்ன படிக்கனும்ன்னு கூட தெரியாது, வழிகாட்ட ஆள்கிடையாது. எதைப்பார்த்தாலும் பயம். அப்படியிருந்தவன் தான். இந்த பயம் தொடர்ச்சியா இருந்தா நம்மை முடக்கிடும். பயத்தை, தயக்கத்தை முதல்ல விட்டுடு. பயமும், தயக்கமும் இருந்தா சாதிக்க முடியாது, தெளிவான முடிவு எடுக்க முடியாது. பயத்தோட வேலை செய்யறப்ப வேலையை நடக்காது. அப்படிப்பட்ட இளைஞர்களை எந்த நிறுவனமும் விரும்பாது. 

நீ நேர்காணல்க்கு போறப்ப நேர்காணல் நடத்தறவரை நேர்கொண்ட பார்வையா பார்த்து பேசு. அவுங்க கேள்வி கேட்டதும் நீ சொல்றதை தயக்கமில்லாம சொல்லு. உனக்கு தெரியாததை தெரியாது, ஆனா தெரிசிக்குவன்னு சொல்லு. இங்க யாரும் பிறக்கும் போதே எல்லாம் கத்துக்கிட்டு வந்தவங்கயில்ல. அதுக்காக மக்கு சாம்பிராணியா போய் நிக்காத. பொது அறிவ வளர்த்துக்க. தினமும் செய்தித்தாள்களை படி. நீ நேர்காணல்க்கு போகும் நிறுவனத்தைப்பத்தி, அந்த நிறுவனத்தின் பணிகளைப்பத்தி கொஞ்சமாவுது தெரிஞ்சிக்க. ஒரு வேலைய முழு ஈடுப்பாட்டோட செய்தா தான் அதில் வெற்றி பெற முடியும். விருப்பம்மில்லாம வேலை செய்தா அந்த நிறுவனத்துக்கும் இழப்பு, உன் வாழ்க்கைக்கும் இழப்பு. 

டவுன்ல இருக்கற பசங்களோட போட்டி போட முடியலண்ணா ?. 

நகரத்தில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து வந்தவங்கயில்ல. அவுங்க தாத்தா கிராமத்தில் ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், பையனை படிக்க வச்சார். அந்த பையன் நகரத்துக்கு வேலைக்கு வந்தான். அந்த பையன் தன் மகனை நகரத்தில் படிக்க வச்சான். அதனால் அவனுக்கு பறந்துப்பட்ட உலகத்தை தெரிஞ்சி வச்சிக்கறான், தயக்கத்தோட நிக்காம, தைரியமா எதையும் எதிர்கொள்றான். 

உன் தாத்தா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தார், உங்கப்பா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், உன்ன படிக்கவச்சியிருக்கார். என்ன அந்த நகர வாழ்க்கை வாழும் தந்தையைப்போல உன் தந்தை கிடையாது. அதனால உனக்கு பறந்துப்பட்ட உலகம் அறிய முடியாம போச்சி. அவ்வளவு தான். அதுக்காக அவனோட எந்த விதத்திலும் நீ குறைந்தவனில்லை. 

அவன் படிச்ச அதே படிப்பதான் நீயும் படிச்சியிருக்கற. அவன் படிக்கறப்பயிருந்து தன்னோட தகுதிகளை வளர்த்துக்கிட்டான், அதுக்கான வாய்ப்புகள் இருந்தது. உனக்கில்ல, அவ்வளவுதான். இப்ப கத்துக்க. மோதிப்பார். மோதாமலே என்னால முடியாதுன்னு சொல்லாத. அத சோம்பேறி சொல்றது. 

நீ தைரியமா சவால்களை எதிர்க்கொள், அதற்கு தகுந்தார்போல் உன்னை தயார் படுத்திக்க என்ன உதவி வேணும்ன்னாலும் கேளு செய்யறன் என்றேன். கேட்டுக்கொண்டு போனவன் அதன்பின் வரவில்லை. அடுத்த சில நாட்களில் அவன் ஊரில் இல்லை. அவனை நானும் மறந்துபோயிருந்தேன். 

இரண்டு மாதத்துக்கு பின் இப்போது இனிப்பு பாக்ஸ்சோடு வந்து சந்தித்து வேலைக்கு சேர்ந்துட்டன், முதல் மாத சம்பளம் வாங்கனன், நீங்க சொன்னமாதிரி என்னை மாத்திக்கிட்டன், வேலை கிடைச்சிடுச்சி. அதான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தன் என்றான். 

வாழ்த்துக்கள்டா………… நகர வாழ்க்கைக்கு போற கிராமத்தை மறந்துடாத என்றேன். யோசித்தபடியே சென்றான்.

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

ஜெ வை பற்றி கேள்வி கேட்காதே……விசுவாசத்தல தீயை வைக்க.






 மாலன் நாராயணன். ஒருக்காலத்தில் பிரபல பத்திரிக்கையாளர். அவரது பத்திரிக்கை அனுபவம் தான் என்னுடைய வயதே. நான் நிருபராக பணிணை தொடங்கிய 14 ஆண்டுகளுக்கு முன்பு சில பிரபல பத்திரிக்கையாளர்களை பிரமிப்பாக பார்த்ததுண்டு. அதில் மாலனும் ஒருவர். 

இன்று?. அதிமுகவின் அடிமைகளில் அவரும் ஒருவர். இதை அழுத்தம் திருத்தமாக சொல்லக்காரணம், சொத்து குவிப்பு வழக்கில் ஜெவுக்கு, தண்டனை தரப்பட்டபோது அதிமுககாரர்களை விட அதிககமாக முகநூலில் துக்கம் அனுசரித்தார், கணக்கு குமாரசாமி, ஜெவை விடுதலை செய்தபோது அதிகம் கொண்டாடியவரும் அவரே. 

அப்படிப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர் தான் தனது முகநூலில் ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். ஜெ உடல் நலம் பற்றி கலைஞர் எழுப்பிய கேள்விக்கு, மாலன் தனது முகநூலில், அவரது (ஜெ) தனிப்பட்ட உடல் சார்ந்த விஷயம், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என கேட்ககூடாது. மத்தியஅமைச்சர் முரசொலிமாறன் மருத்துமனையில் இருந்தபோது, அவர் சிகிச்சை பற்றிய தகவல்களை மக்களுக்கு தந்தீர்களா என கேட்கும் பதிவது.

மாலன் சார் மட்டும்மல்ல, முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேயகட்ஜீவும், பொங்கியுள்ளார். எதையாவுது சொல்லி அடிக்கடி அடிவாங்கற கைப்புள்ள அவர் என்பதால் அவர் பற்றி இங்கு பேசவில்லை. மாலன் அவர்கள் எழுதிய விவகாரத்தை மட்டும் பேசுவோம். 

ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கையாளர் என்ன கேட்க வேண்டும். கடந்த 10 தினங்களாக முதல்வர் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை ஏன் தலைமைசெயலாளர் செய்யவில்லை? கவர்னர் ஏன் அவரை சென்று சந்திக்கவில்லை?, வதந்திகளுக்கு ஏன் அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை?, மத்தியரசு ஏன் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது என கேட்க வேண்டும். கவர்னர் சந்தித்துவிட்டு வந்தபின்னும் உப்பு சப்பில்லாத அறிக்கை ஒன்றை தந்துள்ளது கவர்னர் இல்லாம். இதுப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்பி மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். இதுதான் பத்திரிக்கையாளனுக்கு அழகு, தொழில் நெறியும் கூட. 

இந்த கேள்விகளை கூட ஏன் கேட்கசொல்லப்படுகிறது. ?

 தமிழக முதல்வராகவுள்ள ஜெ கடந்த செப்டம்பர் 22ந்தேதி இரவு மருத்துவமனையில் காய்ச்சல், நீர்சத்து குறைபாடுகளுக்காக அனுமதிக்கப்பட்டார் என அறிவித்தது அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம். மறுநாள் வந்துவிடுவார் என்றார்கள், வரவில்லை. வதந்திகள் பரவ பரவ தான் அப்போல்லோ நிர்வாகம், முதல்வர் நன்றாக உள்ளார் இட்லி சாப்பிட்டார், சாம்பார் குடித்தார் என நான்கு வரி அல்லது 8 வரியில் ஒரு விளக்க குறிப்பு செய்தியாக தந்தது அவ்வளவு தான். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார், நுரையீரல் பிரச்சனை, சக்கரை அதிகம் என வெவ்வேறு தகவல் வர வர இல்லையில்லை முதல்வர் காவிரிக்காக கூட்டம் நடத்தினார், உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை நடத்தினார், அமைச்சரை சந்தித்தார் என விதம் விதமாக அரசு செய்திக்குறிப்பு வருகிறதே தவிர. அப்படி ஏதாவது நடந்ததா என்பது பெரும் கேள்விக்குறியே. அதனால் தான் கலைஞர் உட்பட பல தலைவர்கள், ஜெ உடலுக்கு என்ன என கேள்வி எழுப்பினார்கள். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் முதல்வர் உள்ளார். மரபுப்படி கவர்னர் போய் சந்தித்து விளக்க வேண்டும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கலைஞர் கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டார் என்பதை விட மரபை நினைவூட்டினார். இதைக்கூட கேட்ககூடாது என்கிறார்கள் ஜெவின், நடுநிலை பத்திரிக்கை பக்தர்கள்

ஜனநாயக நாட்டில், தங்களை ஆள்பவருக்கு என்ன நேர்ந்தது என அறிந்துக்கொள்ள கூட மக்களுக்கு அதிகாரம்மில்லையா என்ன ?. அப்பறம் என்ன வெங்காயத்துக்கு ஜனநாயகம். 

மற்ற நேரங்களில் தான் கிராபிக்ஸ், மார்பிங் போட்டோக்களை அரசின் சார்பில் தந்தபோது கேள்வி கேட்காமல் பிரச்சுரிக்க வேண்டிய கட்டாயம், பிரச்சுரித்தீர்கள். இப்போது அந்த மூலவருக்கு என்னவானது என்கிற குழப்பம் அதிமுக தொண்டர்கள் மட்டும்மல்ல எதிர்கட்சிகள், பொதுமக்களிடமும் கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் போட்டோவை தாங்கள், வீடியோவை, வெளியிடுங்கள் என கேட்கிறார்கள். நியாயமாக இந்த நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை, ஆதாரங்களை தரவேண்டியது கட்டாயம். 

மாலன், தினமணி வைத்தி, தந்தி பாண்டே, அதிமுக ஆதரவு பத்திரிக்கை, மீடியாக்கள் கேள்வி கேட்காமல் இருக்கலாம். அவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு பின்னால் பல தேவைகள் உள்ளது. மக்களுக்கு அப்படியல்லவே. 


போயஸ்கார்டன் என்பது மர்மங்கள் நிறைந்த அரசியல் தலைவரின் இல்லம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஜெயாவை நோக்கி கேள்வி கேட்டால் பிடிக்காது என்பதும் தெரியும். இருந்தும் மக்கள் கேள்வி கேட்க காரணம், தன்னை ஆளும் முதல்வர் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளாரா என எதிர்பார்க்கிறார்கள். இதை விளக்க மாநில அரசு தான் மறுக்கிறது என்றால் மத்தியரசு என்ன செய்துக்கொண்டு உள்ளது? என்பதே அரசு மரபு அறிந்தவர்கள் கேள்வி. 

மக்களின் மற்றொரு பயம். நேரடியான உறவுகள் என ஜெயாவுக்கு யாரும்மில்லை. அவரது அண்ணன் பிள்ளைகள் உள்ளார்கள், அவர்களை கார்டன் பக்கம் கூட சேர்ப்பதில்லை. ஜெவை சுற்றி இருப்பது மன்னார்குடி சசிகலா கும்பல் தான். இந்த சசிகலா 30 வருடங்களாக ஜெயாவின் நிழலாக தொடர்ந்தாலும், சில நேரங்களில் எனக்கும், அவருக்கும் எந்த சம்மந்தமும்மில்லை என ஜெ வால் துரத்தியடிக்கப்பட்டவர். அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஆனால், என்ன காரணம்மோ மீண்டும் அவர்களை திரும்ப அழைத்துக்கொள்கிறார். ஜெவுக்கு பின் கட்சியை கைப்பற்ற சசிகலா துடிக்கிறார் என்பது இலைமறை காயாக அதிமுக நிர்வாகிகள் மத்தியில் உள்ள ஒரு பேச்சு. இதை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் அந்த தொண்டர்கள் தனது தலைவிக்கு என்னவானதோ என பதறுகிறார்கள். என்ன அவர்களால் எங்கள் தலைவிக்கு என்னவானது என வெளிப்படையாக கேட்க முடியாது. அதனால் அமைதியாக மனதுக்குள் குழம்பிக்கொண்டு உள்ளார்கள். அதனால் மற்றவர்கள் கேட்கிறார்கள். இதைத்தான் கேட்ககூடாது என்கிறார்கள் ஜெ பக்தர்கள்.

இவைகளை காணும்போது, ஜெவுக்கு லட்சக்கணக்கான அடிமைகள் காரணத்தோடு இருக்க ஜெவே ‘யாருக்கோ’, எதற்கோ அடிமையாக இருக்கிறார் போல. அதனால் தான் அவர் பற்றிய விவகாரம் வெளியே வரமறுக்கின்றன. அதனால் ஜெவின் நடுநிலை அடிமைகள், அவர் யாருக்கு அடிமையாக உள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டு பின் எதையும் கேள்வி கேட்காதே என மற்றவர்களுக்கு புத்தி சொல்லட்டும்............

புதன், செப்டம்பர் 21, 2016

தவறான பாதையில் திமுக.......??????






உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்கவே திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தினோம் என தமிழ்மாநில காங்கிரஸ், கொங்கு ஈஸ்வரப்பன் போன்றோர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்து கருத்து சொல்லும் போது, திமுக மீண்டும் தவறு இழைக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.  

தமிழகத்தில் வாக்குவங்கியுள்ள கட்சிகள் என்றால் அது திமுகவும், அதிமுகவும் தான். ஒட்டுமொத்தமாக 80 சதவித வாக்குகளை இந்த இரண்டு கட்சிகளும்மே வைத்துள்ளன. காங்கிரஸ்க்கு தென்தமிழகத்தில் ஓரளவு செல்வாக்குள்ளது, பாமக, தேமுதிகவுக்கு வடதமிழகத்தில் செல்வாக்குள்ளது. மத்தப்படி எந்த கட்சிக்கும் தமிழகத்தில் நான் அறிந்தவரை செல்வாக்கு கிடையாது. இந்த 20 சதவித வாக்குகளை தான் காங்கிரஸ், பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் பிரித்து வைத்துக்கொண்டு குதிக்கின்றன. 

இவர்களால் தனித்து நின்று ஒரு பேரூராட்சி தலைவர் பதவியைக்கூட பிடிக்க முடியாது என்பதே எதார்த்தம். இதை தெரிந்துக்கொண்டு தான் ஜெ, இந்த கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் ஒதுக்கி டேமேஜ் செய்வார். ஆனால் திமுகவிலோ, வாரி வழங்கிவிடுகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்குவதை முதலில் திமுக நிறுத்த வேண்டும். கட்சிகளின் பலம் அறிந்து சீட் வழங்க வேண்டும். ஒரு சீட்க்கு தகுதியில்லாத கட்சிகளுக்கு 10 சீட் தருவது, 10 சீட்க்கு மட்டும்மே தகுதியுள்ள கட்சிக்கு 50 சீட் வாரி வழங்குவது மக்களிடையே கேலியாக பார்க்கப்படுவதோடு, திமுக பலவீனமான கட்சி என்கிற முத்திரையை மக்கள் குத்துகிறார்கள். 

மக்களின் எண்ணம்மே அடிமட்ட கட்சியினரிடம் எதிரொலிக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்கிற மாயையை 2016 சட்டமன்ற தேர்தலில் உருவாக்காமல் இருந்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. கட்சிக்காரனே சோர்ந்துவிட்டான். ஆனால் அவர்களின் உண்மையான பலம் என்ன என்பது பின்பு வெட்டவெளிச்சமானது.  

திமுகவிடம் தங்களது பலத்தை மீறி சீட் பெறும் கட்சிகள் அதை எதிர்த்து நிற்கும் கட்சிகளிடம் பறிக்கொடுக்கிறார்கள். 

இதுதான் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது. 2016ல் திமுக அதிக இடங்களில் நின்றிருந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்திருக்கும், ஆனால் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது.  மிரட்டி சீட் வாங்கும் கட்சிகளை திமுகவும் ஒதுக்கிவைக்க வேண்டும். தனித்தே திமுக நிற்கலாம்.  அனால் அந்த ரிஸ்க்கை எடுக்க ஏனோ தயங்கிக்கொண்டே இருக்கிறது அன்று முதல் இன்று வரை. 

என்னால் தனித்து தேர்தலை சந்திக்க முடியும் என திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக கூட நிரூபித்துவிட்டது. ஆனால் இன்னமும் திமுகவுக்கு அந்த தைரியம் ஏன் வரவில்லை என்பது ஆச்சர்யமாகவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி என்கிற கூடாரத்தை உருவாக்குவதால் திமுக தன் பலத்தை இழந்தே வந்துயிருக்கிறது. நேரடியாக நான் மக்களை சந்தித்த 7 பொது தேர்தல்களில் பெரும்பான்மையானவரின் கருத்து ஜெ போல தைரியம் வருமா என்பது தான். அந்த பொம்பளை தனிச்சி நிக்குதுய்யா, இவுங்க ஒன்னும்மில்லாத கட்சிக்குயெல்லாம் சீட்ட வாரி வழங்கிட்டு நிக்கறாங்க, அதுக்கு காரணம், பயம் தானே என்றவர்கள் அநேகம் பேர்.

கடந்த தேர்தலில் மூன்றாவது அணி என உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக, தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் லட்டர் பேடு அமைப்புகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. தனித்து நின்ற பாமகவை விட குறைவாகவே இந்த மூன்றாவது அணி வாக்கு வாங்கியது. அப்படியிருக்க செல்லாத இந்த கட்சிகளில் சிலவற்றை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் தர வேண்டியிருக்கும். அதோடு, வரப்போகும் நாடாளமன்ற தேர்தலில் சீட் பெறவே இப்போதே உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி சேருகிறார்கள். ஒன்னும்மில்லாத கட்சிகளை திமுக தன்னோடு இணைத்துக்கொண்டால் திமுகவின் அடிமட்ட தொண்டன் தான் விரக்தியடைவான் என்பதை தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அடுத்த நாடாளமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளும், சட்டமன்ற தேர்தலுக்கு 5 ஆண்டுகளும் முழுமையாகவுள்ளன. இப்போதிலிருந்தே திமுக வலிமை குன்றிய பகுதிகளில் கட்சியை வளர்க்க திட்டமிட வேண்டும். தனது சொந்த நலனுக்காக அதாவது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள, குற்றவழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, சம்பாதிக்க கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை முதலில் களையெடுக்க வேண்டும். கட்சி வெற்றிக்காக பாடுபடுபவர்கள் தான் கட்சிக்கு முக்கியம். பணம் இருப்பவனுக்கு தான் பதவி என்கிற கொள்கையை விட்டுவிட்டு தொண்டர் பலம் உள்ளவனுக்கும், கட்சிக்காக களத்தில் வேலை செய்பவனுக்கும் பதவி வழங்க வேண்டும். 

இளைஞரணி மட்டும்மல்ல கட்சி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற அணிகளை ஊக்குவிக்க வேண்டும். புதுப்புது இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கும் கட்சி பதவி வழங்க வேண்டும், தேர்தல் களத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களை நுழைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு அவர்களை வரவைக்க வேண்டும். அதோடு, கட்சி வரலாறு தெரிந்தவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும், இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு பதவி தர வேண்டும். இணையத்தில் பணியாற்றினால் கட்சி வெற்றி பெரும் என கீபோர்டு வீரர்களை தட்டி வைத்து நீ மட்டும்மல்ல கட்சி நாட்டில் படிக்காத மக்களும் உள்ளார்கள்  என்பதை நிரூபிக்க களத்திலும் பணியாற்ற வைக்க வேண்டும். இதை செய்தாலே அதிமுக போல் திமுகவாலும் தனித்து தேர்தலை சந்திக்க முடியும். 

அதைவிட்டுவிட்டு கூட்டணி சேர்வது என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு என்பதை திமுக தலைமை மறக்ககூடாது.