குடியும் நட்பும்.
டாஸ்மாக்கில் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் அவரது கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அடிக்கடி எனக்கு தகவல்களை தந்துக்கொண்டிருப்பவர். அந்த கடையில் பணியாற்றிய சேல்ஸ்மேன். எனது நண்பரிடம் அண்ணே அடிக்கடி வர்றாரு. உங்கள பாக்க வர்றவங்க ஓசியில எல்லாத்தையும் குடிக்கறாங்க. இவர் உங்கள பாக்க வர்ற இந்த ஒரு வருஷமா பாக்கறன் இவர் மட்டும் எதுவும் குடிக்க மாட்டேன்கிறாரு ஏதாவது குடிக்க சொல்லுங்கன்னே என எனக்கு எப்படியாவது சரக்கு ஊத்தி தந்து விட வேண்டும் என்பதில் குறியாகயிருந்தார். நண்பரோ, அவர் குடிக்க மாட்டாருய்யா என சாத்தியம் செய்யாத குறையாக அவரிடம் சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நான் அவர்களின் உரையாடல்க்கு மெல்ல புன்னகைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
என் இரண்டு சக்கர வாகனம் தான் முன்னேக்கி போய்க்;கொண்டிருந்தது. எண்ணமோ சில ஆண்டுகள் பின்னோக்கி பயணமாகிக்கொண்டிருந்தது. தற்போது காபி, டீ சாப்பிடுவதையே அறவே விட்ட நான் சில ஆண்டுகளுக்கு முன் குடிகாரன். இன்றைய பணி முடிந்தது என மனதில் தோன்றிவிட்டாள் நண்பர்களோடு யாரும் காணாதயிடத்தில் பீர், ரம், பிரியாணி, முறுக்கு, சிப்ஸ் பாக்கெட்களோடு பொட்டல் காட்டில் ஆஜராகிவிடும் நாட்கள் ஞாபத்தில் வந்து வேகமாக மோதியது.
2001 ஆம் ஆண்டு தற்போது வழக்கறிஞராக உள்ள அந்த நண்பன் தான் குடிக்க கற்று தந்தான். மச்சான் எங்க தாத்தா-பாட்டிக்கு சதாபிஷேகம் வந்துடுங்கடா என அழைப்பு விடுத்தான். சாகபோற காலத்தல அவுங்களுக்கு விசேஷம் பண்றிங்க. அங்க நாங்க வந்து என்னடா பண்றத்து. சும்மா வாங்கடா ஜாலியாயிருக்கும் என்றான். நான், பிரபு, கோபி, முகைதின் என எங்களது பட்டாளம் கிளம்பியது. இரவு 7 மணி சதாபிஷேகத்துக்கு 8 மணிக்கு தான் போனோம். மச்சான் யார், யார் என்ன சாப்பிடறிங்க என்றான். இருக்கறத சாப்பிடலாம்டா என நான் உணவை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன். வாடா என கிளம்பியபோது தான் தெரிந்தது அவன் கேட்டது சரக்கு என்பது.
மச்சான் எனக்கு பழக்கமில்லடா என்றேன். அப்பறம் எப்ப கத்துக்கறது. காலேஜ் போறோம். இதுகூட கத்துக்காம போனா மத்த பசங்க காறி துப்புவானுங்கடா என்றான். பேருந்து நிலையம் எதிரேயிருந்த அந்த ஒயின் ஷாப்புக்கு அழைத்து போனான். தனியார் கடைகள் தான் அப்போது. பார்க்கு போகலாம் என்றவனிடம் யாராவது பாத்துட்டா அசிங்கம்டா என்றேன்.
சரி என்ன வேணும் என கேட்டவன். அவனே மச்சான் நீ முதல் முறையா சாப்பிடற பீர் சாப்பிடு என்றவன். என்ன கம்பெனி வேணும் என கேட்டான். டேய் இப்ப தான் முதல் முறையா குடிக்கவே போறன். ஏதோ பரம்பரை குடிக்காறன் ரேஞ்ச்க்கு கம்பெனி பேர்யெல்லாம் கேட்கறியேடா என்றேன். ஏன்னை கேவலமாக பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு 10வது படிக்கும் போதே நாங்கயெல்லாம் ஆரம்பிச்சிட்டும்டா என பந்தா பண்ணான்.
ஏதோ ஒரு கம்பெனி பீர் வாங்கி கையில் திணித்தான். புல் பீர் பாட்டிலை பாத்ததும் இவ்வளவு எப்படிடா குடிக்கறது என்றேன். பிரபுவும் இதையே சொன்னான். எங்க இரண்டு பேர்க்கு ஒன்னு போதும் எனச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த ஒரு மூத்திர சந்தில் நின்று நீ ஓரு மடக்கு, நான் ஒரு மடக்கு என ஒரு புல் பீர் பாட்டிலை மூன்று பேராக பங்கு போட்டு குடித்து காலி செய்தோம். அதன் பின் நண்பர்களிடம், நீண்ட நாள் அதையே பெருமையாக வடிவேல் போல பாரு பாரு நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என அலப்பறை தருவதை போல நாங்களும் குடிச்சோம்மில்ல என அலப்பறை தந்துக்கொண்டிருந்தோம்.
1 ஆண்டுக்கு பின் நிலை தலை கீழாக மாறியது. 2002 ஆம் ஆண்டு. பத்திரிக்கை துறையில் சேர்ந்து செய்தியே எடுக்க தெரியாமல் நிருபராக சுத்திக்கொண்டிருந்த போது எனக்கு நண்பரானார் இளம் பத்திரிக்கையாளர் ஒருவர். அந்த பத்திரிக்கை நண்பர் ஒருநாள் குடிப்பியாடா என்றார். இல்………..ல என இழுத்தேன். இழுப்பை கண்டு சரி வா என ஒயின் ஷாப்புக்கு அழைத்து சென்றவர். என்ன வேணும் என்றார். நான் குடிக்க போவது இது இரண்டாவது தடவை என்பதால் மினி பீர் என்றேன். பயப்படாதடா காசுயிருக்கு என்றார். இல்லைன்னே நான் இதான் இரண்டாவதா குடிக்க போறது என்றேன்.
சரியென வாங்கிக்கொண்டு டவுனை விட்டு 5 கிமீ தூரம் வெளியே அழைத்துச்சென்று ஒரு ஏரியில் உட்கார வைத்து மூடியை எப்படி ஒப்பன் செய்வது என கற்று தந்தார். கூடவே நீ கிராமத்தலயிருந்து வர்றவன். பெரிய நிறுவனம். உஷாராயிரு. உனக்கு தெரியாம உன்ன வச்சி வியாபாரம் பண்ணிடுவானுங்க. யாரையும் ஏன் என்னைக்கூட நம்பாத, உன்னை மட்டுமே நீ நம்பி வேலையப்பாரு, ஒழுங்காயிருந்தா நீ நிலைச்சி நிக்கலாம், தைரியாமா போராடு, பணத்துக்கு அடிமையாகிடாத என்றார். அது எனக்கு வேத வாக்கானது. அப்பறம் இதயும் மனசுல வச்சிக்க. எப்ப குடிச்சாலும் உடனே சாப்பிட்டுடனும் உடம்பு நல்லாயிருந்தா தான் வேலை பாக்க முடியும் என்றார்.
அதன் பின் மாதத்திற்க்கு 3 முறை நான் அவருடன் குடிக்க ஆரம்பித்தேன். அரை பீர், ஒரு பீரானது, ஒன்னு இரண்டானது, இரண்டு முணானது. நண்பர் அரண்டு விட்டார். ( என் தங்கச்சி, அண்ணன் காலேஜ் போகுது, வேலை பாக்குது அதுங்கிட்ட எப்பவும் காசுயிருக்கனும் என படிப்பை விட்டு விட்டு சித்தாள் வேலை செய்து அது தரும் பணத்தில் தான் குடித்தேன். ஓசியில் குடிப்பது எனக்கு எப்போதும் பிடிக்காது.) குடித்துவிட்டு டவுனிலிருந்து வீட்டுக்கு 7கிமீ தூரம் சைக்கிள்ளில் தான் செல்வேன் என்பதால் நண்பர் பயப்படுவார். கவலைப்பாடாதிங்க என சொல்லிவிட்டு போவேன். நான் குடிப்பது வீட்டிற்க்கு தெரியக்கூடாது என்பதில் உஷாராயிருந்தேன். தெரிந்தால் கை அல்லது கால் நிச்சயம் உடைக்கப்படும் என்கிற பயம்.
2005க்கு பின் அந்த நண்பருடன் மட்டுமல்லாமல் போலிஸ் நண்பர், புகைப்பட நண்பர், பள்ளி ஆசிரியர், மீடியா நண்பர் கேங்கில் சேர்ந்து தினமும் இரவு நேரத்தில் குடிப்பது வாடிக்கையானது. தொடர்புகள் அதிகமாக தகவல்கள் கொட்ட ஆரம்பித்தது. பணிக்கு பணி, குடிக்கு குடி என பொழுது போனது. பணப்பிரச்சனை கழுத்தை நெறித்தது. இருக்கவே இருக்கார் தங்கை என கஸ்டத்திம் கஸ்டமாக ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பணம் வாங்கி எல்லா வேலையும் அதில் பார்த்துவிடுவேன். நிரந்தர சம்பளம் வாங்க ஆரம்பித்த பின் கொஞ்ச பணப்பிரச்சனை குறைந்தது. ஆனால் வேலையில் கவனம் குறைந்தது இ.ஆ அடிக்கடி திட்டு வாங்குவது அதிகமானது.
ஒரு விதத்தில் நான் உஷாராகயிருந்தேன். என்ன தான் குடித்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டேன். அதனால் தான் இன்றளவும் நான் ஒரு காலத்தில் குடித்தவன் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர வேறு யாருக்கும் ஏன் என்னுடன் நெருக்கமாகயிருந்த நண்பர்கள் உட்பட பலருக்கும் தெரியாது.
ஒரு காலத்தில் என்றால் இப்போது குடிப்பதில்லையா என கேட்பது புரிகிறது. ஆம் குடிப்பதை சுத்தமாக நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
2007 ஆம் வருடம் மறக்க முடியாத ஆண்டு. காதல் தோல்வி. ஒருநாள் இரவு தொடங்கிய நேரம் தொலைபேசியில் என் காதல் அஸ்தமனம் ஆன போது, இரண்டு பீர் வாங்கிகுடித்து விட்டு வீட்டிற்க்கு செல்ல பேருந்திற்க்காக காத்திருந்தேன். எனது நண்பி ஒருத்தி அவரது அம்மாவுடன் அங்கு ஊருக்கு செல்ல காத்திருந்தார். நான் நிற்பதை பார்த்துவிட்டு அவரது அம்மா என்னிடம் பேச வர. நான் குடித்தது தெரியக்கூடாது என ஒதுங்க சங்கடம் ஆரம்பமானது.
அன்று முதல் இரவு பகல் என குடிக்க ஆரம்பித்தேன். நண்பன் பிரபு மட்டும் தினமும் போன் செய்து குடிக்காதடா என சொல்லிக்கொண்டேயிருந்தான். என் நெருங்கிய தோழி ஒருத்தி அதிகமாகவே அமைதி காத்தார். அமைதிக்கு பின் இருந்த அந்த ................. எனக்கு தெரியவில்லை. காதல் தோல்விக்கு பின் பீரிலிருந்து மெல்ல ஹாட் டிரிங்ஸ்க்கு மாற ஆரம்பித்தேன்.
2007 தீபாவளி. எனது தோழியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் ராஜா எப்படியிருக்காரு. பாக்கனும் என கேட்டுக்கொண்டேயிருந்துள்ளார். என்னை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தார் கூறிக்கொண்டேயிருந்தார்கள். தீபாவளியன்று செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, அவருடன் பேசிவிட்டு எனது தோழியிடம் பேச தொடங்கினேன். எங்கயிருக்க. தீபாவளியன்னைக்கி எங்கயிருப்பாங்கன்னு உன் வீட்டுக்காரர்க்கிட்ட கேளு சொல்லுவாரு. அவரிடம் கேட்க என்ன ஜாலியா சரக்கு அடிச்சிக்கிட்டுயிருப்பாங்க என்றார். சடாரென எங்க ராஜா அப்படிப்பட்ட ஆள்யில்ல என நான் குடிப்பது தெரிந்தும் நான் அப்படிப்பட்டவன் அல்ல என வாதிட்டார். இதை செல் வழியாக கேட்டபோது, செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன். மெதுவான குரலில் கொஞ்சமா குடிச்சிட்டு வீட்டுக்கு போ என்றாள். ச்சே குடிக்கறத முதல்ல நிறுத்தனும் என எண்ணினேன். கிங்பிஷர் பீரை பாத்ததும் வேகமா போய் வாங்க சொன்னது மனது.
2008 தை பொங்கள் இரவு நண்பன் பிரபுவோடு கடைசியாக குடித்தேன். அடுத்த சில தினங்களில் மருத்துவமனை ஒன்றில் தனது குழந்தையுடன் வந்திருந்த எனது தோழி ஆஸ்பிட்டல் வரை வா என்றாள். போனேன். குடிக்கறத நிறுத்தவே மாட்டியா என சண்டை போட ஆரம்பித்தாள். அவ உன்ன விட்டு விலகனாயென்ன, அவளுக்கு கல்யாணமாயிடுச்சி, ஏன் குடிச்சி உடம்ப கெடுத்துக்கற என திட்ட ஆரம்பித்தாள். எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை. இருந்தும் இனி குடிக்க மாட்டேன் என குழந்தை தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன். கடவுள் மீது தான் நமக்கு நம்பிக்கையில்லையே நாம குடிக்கலாம் என எண்ணம் வரும்போது எதையும் எதிர் பாராத கணவரிடம் கூட என்னை விட்டுக்கொடுக்காத அந்த நட்பு தான் என் கண் முன்னால் வந்தது. நட்பு மீது வைத்த மரியாதையால் அன்று முதல் இன்று வரை குடிக்காமல் இருக்கிறேன்.
சில சமயம் அவசர பட்டுட்டமோ என எண்ண தோன்றுகிறது. ஆனாலும் நட்பு தானே முக்கியம். அதனால் இனி குடிப்பதில்லை என்பதில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக உறுதியாகயிருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக