சனி, ஜூன் 19, 2010

பால்ய காதல்.




டேய் மாப்பிள என்ன நீ பஸ்ல வர்ற. சைக்கிள் என்னாச்சி. சைக்கிள் டயர் கிழிஞ்சிடுச்சி. மாத்தச்சசொன்னா. காசுயில்ல ஒருவாரம் ஆகட்டும்ன்னு எங்கப்பா சொல்லிட்டாரு. ஆதனால தான்டா பஸ்ல வர்றன் என சொன்னதும். பொய் சொல்லாதடா அந்த பொண்ணுக்காக தானே பஸ்ல வர்ற என லந்தை ஆரம்பித்தார்கள் என்னுடன் 11வது படிக்கும் பக்கத்து ஊரைச்சேர்ந்த நண்பன்கள் முருகேசன், சக்திவேல், ரமேஷ்.

சும்மாயிருங்கடா பொண்ணுக்காக வர்றனா அந்தளவுக்கு எந்த அழகிடாப்பா பஸ்ல வருது என எதிர்பாட்டு பாடினேன். அவ்வளவு கூட்டத்திலும் இதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர் டேய் நீங்கயெல்லாம் படிக்கவாடா போறிங்க. ஆமாண்ணே என்னன்னே சந்தேகம். இல்ல பொண்ணுங்கள பத்தியே பேசிம்போறிங்களே நியாயமாடா?. சும்மா ஜாலின்னே கண்டுக்காதிங்கன்னே என்றதும் தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார்.

ஏன்னடா அப்படி சொல்றா முன் பக்கம் ஒரு பொண்ணு ஏறனத பாத்தோமே.

ஆவளா. நீங்க வேறடா அது ரெட்டியார் பொண்ணு. 9வது படிக்கறா. அவுங்கப்பன் அவள கேள்ஸ் ஸ்கூல்ல சேர்த்துயிருக்கான். இதல நான் காதலிக்கறன்னு சொன்னாலோ பிரச்சனைடா என சொல்லிவிட்டு கூட்டத்தில் நெளிந்தபடி நின்றேன்.

சும்மா சொல்லாத அந்த பொண்ணுக்காக தானே பஸ்ல வர்ற என திரும்ப உசுப்பேத்தியபடியே வந்தனர். பள்ளியை விட்டு மாலை வீடு திரும்பும்போதும் அவள் நாங்கள் ஏறிய அதே பேருந்தில் வந்தால். அடுத்தடுத்த நாட்களும் பேருந்து பயணம் தான். இவன்கள் தினமும் உசுப்பேத்தியதன் விளைவு. நான்காவது நாள் அவளை ஓரக்கண்ணால் பார்க்க வேண்டியதானது. நல்லா தான்யா இருக்கா என மனம் சொன்னது. சினிமாவில் காட்டுவதை போல ரசித்ததும் காதல் வந்தது. காலை-மாலை பேருந்து பயணத்தில் அவளை பார்ப்பதிலேயே நேரம் போனது. நாட்களும் போனது.

மறுவாரம்…………..

எவன்தான் காலையில 9 மணிக்கு ஸ்கூல் வச்சான்னு தெரியல. 11 மணிக்கு ஸ்கூல் தொறந்தா நல்லாயிருக்கும் சொன்னா எவன் கேட்கறான். 7கி.மீ சைக்கிள் மிதிக்கனும் என திட்டியபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு புலம்பியபடி வந்தேன். கூட்ரோடு நெருங்கும்போது தூரத்திலேயே அவள் பேருந்துக்காக காத்திருப்பது தெரிந்தது. வேகமாக சைக்கிளை நிறுத்தி இறங்கி காற்றை பிடிங்கிவிட்டுவிட்டு பஞ்சர் என பாவ்லா காட்டி நிழல் கூடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு பேருந்துக்காக அவளுடன் காத்திருந்தேன்.

தினமும் அவளுடன் பயணம் ஆரம்பமானது. அவளின் பார்வையில் படுவதற்காக படியில் தொங்குவதும், ஸ்டைல் செய்வதுமாக பயணமானது என் வாழ்க்கை. என் வகுப்பு தோழர்களாகயிருந்து இன்று வரை என்னுடன் பயணிக்கும் நண்பன்கள் பிரபு, முகைதின், கோபிநாத்திடம் மச்சான் நான் ஒரு பொண்ண காதலிக்கறன்டா என்றேன். யார்ர்ரா அது என கோஷம் எழுப்பினார்கள். நம்ம ஸ்கூல் இல்லடா. கேள்ஸ் ஸ்கூல். பொண்ணு யாரு? ……… தங்கச்சிடா. பிரபு, முகைதீன்க்கு தெரியும் என்பதால். அப்பறம் என்ன ரெட்டியார் மருமகன் என ஓட்ட ஆரம்பித்தார்கள்.

டேய் நீங்களும் என்கூட பஸ்ல வாங்கடா என்றேன். எங்க வீடு அதிகபட்ச தூரமே 3கி.மீ தான். நீ பஸ்ல போ நாங்க பஸ் ஏத்த வர்றோம் என பஸ் ஏற்றி விட வருவார்கள். பேருந்து நிறுத்தத்தில் அவள் முன் பந்தா செய்து நாங்கயெல்லாம் பில்கேட்ச விட பெரிய ஆள் தெரிஞ்சிக்க என்கிற ரேஞ்சில் பில்டப் தூள் பறந்தது.

வேறு சில நண்பர்கள் ஒருநாள் திருவண்ணாமலை நகரின் பஜாரின் மைய பகுதியில் நட்ட நடு சாலையில் என் காதல் கடிதம் அவளிடம் தந்தார்கள். பதிலுக்காக மறுநாள் அவளுடன் பேருந்தில் பயணமானேன். பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் அவள் பின்னால் நானும் நடந்தேன். நின்றவள் என்னிடம் இதுயெல்லாம் நல்லாயில்ல எனக்கு இதுயெல்லாம் புடிக்காது என முறைத்து கோபத்தில் பேசிவிட்டு போய்விட்டாள்.

அப்ப தாடி வலரல இல்லன்னா தேவதாஸ் மாதிரி சுத்திக்கிட்டுயிருந்திருப்பன். அந்தளவுக்கு என் காதல் வெற்றி பெறவில்லையே என்ற சோகம். அந்த சோகத்தை மறைக்க, காதலை மறக்க கணிப்பொறி பயிலகத்தில் நானும் நண்பன் பிரபுவும் சேர்ந்து பயில ஆரம்பித்தோம்.

சில வாரங்களுக்கு பின் பேருந்தில் பள்ளிக்கு பயணமாகவேண்டி வந்தது. அவளுடன் போக விரும்பாமல் அரசு பேருந்தை விட்டுவிட்டு பின்னால் வந்த தனியார் பேருந்தில் பயணமானேன். மறுநாளும் அதையே செய்தேன். அதற்கடுத்த நாள் தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. அரசு பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை. கூட்டம் அதிகம் என்பதால் கம்பியை பிடித்து தொங்கியபடியே சென்றேன். ஒரு நிறுத்தத்திற்க்கு பிறகு. உள்ள வாங்க ஏன் தொங்கறிங்க என திருவாய் மலர்ந்தால். நம்மக்கிட்டயா சொல்றா என நம்ப முடியாமல் ஆச்சர்யமாய் பார்த்தேன். தலை குனிந்து கொண்டாள்.

நம்மக்கிட்ட பேசறாலே என்ற சந்தோஷத்தில் விடுமுறை நாட்களில் நண்பனின் தையலகமே கதியென கிடந்தேன். காரணம் அங்கிருந்து பார்த்தால் அவளுடைய வீடும், அவர்கள் வைத்துள்ள சிறு கடையும் தெரியும். அவளும் என்னை பார்க்க விரும்பி நிற்பால். என்னுடைய சைக்கிள் பெல் சத்தம் கேட்டால் வீட்டுக்குள்யிருந்து ஓடிவந்து சிரிப்பாள்.

விடுமுறையில் எனக்காக வீட்டு பாடங்களை எழுதி தந்தாள், கையெழுத்து மாறியதற்க்காக அடிவாங்கினேன் பொருளாதார ஆசிரியர் மணியிடம். நீங்க நல்லா படிச்சதுக்கப்பறம் தான் மத்ததுயெல்லாம் என்றால். (வெளிப்படையாக காதலிப்பது). எனக்காக காத்திருப்பாள். காலம் மாறியது. அரசல் புரசலாக ஊருக்குள் காதல் விவகாரம் பரவ ஆரம்பித்தது. எனக்கே தெரியாமல் உறவுகளின் விசாரணை தொடர்ந்தது.

11 ஆம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமானது. அவள் 9 ஆம் வகுப்பு என்பதால் இருவருக்கும் மதியம் 2 மணிக்கு தான் தேர்வு ஆரம்பமாகும். மதிய நேரத்தில் வெய்யில் அதிகம் என்பதால் சைக்கிளை துறந்து பேருந்தில் செல்ல முடிவு செய்தேன். மதியம் 1 மணிக்கு புறப்பட்டால் பள்ளிக்கு போய்விட முடியும் என்பதால் கணக்கு போட்டு கிளம்பினேன். அவளும் கண்கு போட்டு கிளம்பினால். பேருந்து நிறுத்ததிற்க்கு எதிரில் அவள் வீடு என்பதால் அவளின் தாயார் எங்களை கவனிக்க ஆரம்பித்திருந்தார்.

எங்களுக்குள் நடந்த ஒன்றிரண்டு வார்த்தைக்கு இப்படி தடை விழுந்தது. மதிய நேரம் அரசு பேருந்து தாமதமாக தான் வரும். அந்த நேரத்தில் படிக்க பேருந்து நிறுத்தத்தில் உட்காருவோம். அவள் உட்காரும்போது நான் பேருந்து வருகிறதா என பார்ப்பேன், நான் உட்காரும்போது அவள் பார்ப்பாள். திடீரென பேருந்து வந்தாள். சில சமயம் தொண்டை கணைப்பேன், சில நேரங்களில் கண்ணால் சைகை செய்வேன். இதை கற்று தந்தவளே அவள் தான். மற்றவர்களுக்கு தெரியாமல் இது நடக்கும். யாரும்மில்லாத நேரத்தில் வாங்க பஸ் வந்துடுச்சி என்பால் சன்னமான குரலில். அதில் தான் எத்தனை இனிமை, எவ்வளவு காதல்.

இவளின் அக்கா வேறு ஒரு பையனை காதலிக்கறாள். அதுவும் சாதி மாறி காதலிக்கறாள் என்றவுடன் அவளின் தாய்மாமனுடன் அவசர கோலத்தில் திருமணம் நடைபெற்றது. முதலிரவில் மாமனுடன் சேர மறுத்தவள் சில மாதங்களில் காதலனுடன் பறந்து போய்விட்டாள். இதனால் மனம் ஓடிந்து போன அவளின் தந்தை இறக்க முயல காப்பாற்றப்பட்டார். அரசு ஊழியர், ஊரில் ஓரளவு பணக்காரராக வலம் வந்தவர் பெண் ஏற்படுத்திய இந்த கலங்கத்தால் மனம் நொந்து போய் நடை பிணமானார்.

இன்னோரு காதலையோ, எங்களது காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவமோ அவர்களிடம்மில்லை என்பதை என்னால் கால போக்கில் உணர்ந்து கொள்ள முடிந்தது. கல்லூரி காலம், பணிச்சூழ்நிலை என் காதலை மறு ஆய்வு செய்ய வைத்தது.

என் காதல் என்னால் மறைந்து வைக்க நினைத்தது அப்போது தான். அவளுடன் இருந்த சில சில வார்த்தைகள் தான் எங்களுடனான காதலை எங்களுக்குள் வளர்த்து விட்டது. அந்த வார்த்தைகளை துண்டித்துக்கொள்ள வைத்தேன்.

பெண்களுக்கு ஒரு இயற்கையிலேயே ஒரு குணம் உண்டு. ஆண் நண்பன், காதலன் தன்னை தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் பேசினால் அவளுக்குள் ஒரு மென்மையான கோபம் உண்டாகும். அது தொடர்ந்தால் பெரியதாகிவிடும். என்னிடம் செல்பேசி, தொலைபேசி இல்லாத நேரம், அவளின் கடை தொலைபேசியில் பேசிக்கொள்ள செல்லும்போது அவளுள் ஒரு கோபத்தை உருவாக்கி என் மேல் வெறுப்பை உருவாக்க தொடங்கினேன்.

நினைத்தது நடந்தது. அறியா பருவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்குள் முளைத்த காதல், என்னால் மெல்ல பிடுங்கி எறியப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் அவளுக்கு என் மீதான காதல் திரும்பி வந்ததை அறிய முடிந்தது. காலங்கள் பழையவற்றை அவளுள் மறக்க வைத்திருந்தது. என்னிடம் பேச முயன்றால் பிடி கொடுக்காமல் நழுவினேன். அவள் நினைத்தாள் நான் தலைகணம் பிடித்தவன், சம்பாதிக்கும் திமீர், தன்னை ஏமாற்றிவிட்டான் என நினைத்துக்கொண்டிருப்பாள். அவள் என்னைப்பற்றி எந்தளவுக்கு கேவலமாக நினைத்தாலோ அது அப்படியே தொடரட்டும் என விட்டுவிட்டேன். இது அவளுக்கு நான் தந்த கல்யாணபரிசு. அது அவளின் சந்தோஷ வாழ்க்கைக்கு உறுதுணையாகயிருக்கும்.







நான் நினைத்திருந்தால் என் காதல் வெற்றி பெற்றிருக்கும், ஒரு குடும்பத்தின் நிம்மதி, சந்தோஷம், மானம் ஆகியவற்றை பறித்து பஞ்சு மெத்தையாக போட்டு அதன் மேல் என் காதல் திருமணம் நடைபெற விரும்பவில்லை அதனாலயே அவளை விட்டு விலகினேன்.

ஆனால் என்னுள் இருந்த அந்த காதலின் நினைவுகள் என்னை விட்டு விலகவில்லை. என் இதயத்தின் ஓரத்தில் உள்ளது. பசுமையாக ஏன் எனில் எங்களுடையது தொடாத, தொட்டுக்கொள்ள விரும்பாத பாலக காதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக