மாலை நேரம் மயக்கும் மல்லிகள் வாசனையோடு திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் விற்பனையாகிகொண்டிருந்தது. பணியின் காரணமாக வெளியூர் சென்று விட்டு சோர்வோடு வந்த அரசு பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சார் பஸ் கிளம்ப 20 நிமிஷமாகும் என்றார். பரவாயில்லண்ணே எனச்சொல்லிவிட்டு பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்தேன். மல்லியின் வாசைனயில் கண் உறக்கத்தை நோக்கி பயணமாகிக்கொண்டிருந்தது. அழுக்கான வார்த்தைகளை சந்தோஷமாக பேசியபடி மாணவர்கள் குழவொன்று பேருந்தில் வந்து ஏறியது. பார்க்கும் போதே தெரிந்தது தொழிற்பிரிவு மாணவர்கள் என்பது.
பயங்கரமாக ரவுசு செய்துக்கொண்டிருந்த மாணவனை பார்த்து மற்றொரு மாணவன் டேய் மச்சான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது உன் ஆளுக்கிட்ட இன்னைக்கி உன் லவ்வ சொல்ற.
இல்ல மச்சான் பயமாயிருக்குடா. …………
சாகடிச்சிடுவன் ஒழுங்கா சொல்லு.
எப்படிடா சொல்றது?
மயிரு ஏதாவது கிப்ட் வாங்கி தந்து சொல்லு என்றான்.
இல்ல மச்சான் பயமாயிருக்குடா. …………
சாகடிச்சிடுவன் ஒழுங்கா சொல்லு.
எப்படிடா சொல்றது?
மயிரு ஏதாவது கிப்ட் வாங்கி தந்து சொல்லு என்றான்.
அதேநேரம் பள்ளி மாணவிகள் கூட்டம் ஒன்று வந்து பேருந்தை ஆக்ரமித்தது. அவர்களின் வலையல் சத்தமும், சிரிப்பொலி சத்தமும் தான் அந்த பேருந்தில் அதிகமாகயிருந்தது. அதில் எந்த பெண் இவனின் காதல் இளவரசி என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என் மனதில் தோன்றி ஜெட் வேகத்தில் பயணமாகிக்கொண்டிருந்தது. காரணம் பையன் 15 ஆண்டுக்கு முன் வடிவேல் தோற்றத்தில் இருந்தான். பேருந்தில் வந்து ஏறிய மாணவிகளோ தேவயாணி கலரில் தேவதையாய் இருந்தார்கள்.
பேருந்து கிளம்ப 10 நிமிடம் இருந்தது. பேருந்தை விட்டு காதல் இளவரசனோடு ஐடியா தந்த ஐடியா மன்னனும் ஓடினார்கள். மாணவிகளில் சிலர் மாணவர்கள் சிலரோடு அலவலாவி கொண்டுயிருந்தார்கள்.
ஓடியவன்கள் வந்துவிடுவான்களா என மனம் ஏங்கி கொண்டுயிருந்தது. பேருந்து நடத்துனர் வந்து டிக்கெட் தந்துக்கொண்டிருந்தார். என் மனம் வேகமாக துடித்துக்கொண்டிருந்தது. பேருந்து கிளம்ப இரண்டு நிமிடம் இருக்கும் போது வந்து விட்டான்கள். கையில் கிப்ட் பாக்ஸ்சோடு வந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த அவனது நண்பர்கள் அதை கண்டு கீழே இறங்கி விட்டார்கள். மச்சான் தந்துடுடா என தட்டிக்கொடுத்தார்கள் (தேர்வு நேரத்தல இப்படி பண்றானுங்களான்னு தெரியாது). அவன் தயங்கி தயங்கி ஜன்னல் ஓரத்தில் ஷாலினி போல் அமர்ந்திருந்த அந்த பள்ளி மாணவியிடம் மெல்லிய குரலில் இந்த என நீட்டினான்.
என்னது இது?
சும்மா வாங்கி பாரு.
வாங்கிக்கொண்டாள். என்னயிருக்கு?
வீட்லபோய் பாரு.
வீட்ல என்னண்ணு கேட்பாங்க?
பர்த்டே கிப்ட் ப்ரண்ட் வாங்கி தந்தாங்கன்னு சொல்லு.
எனக்கு போன மாசமே பொறந்த நாள் போயிடுச்சி.
சைலண்டாகயிருந்தான்.
இது எதுக்குன்னு சொல்லு? இல்ல திருப்பி வாங்கிக்க?
அவன் சைலண்டாகயிருந்தான். இத வாங்கறியா இல்ல கீழ போடவா என கேட்டதும் பையன் அழும் நிலைக்கு போய்விட்டான். பரிச்சையில் பெயிலாகி போனது போல் ஆனது அவனது முகம். அதே நேரம் பேருந்து புறப்பட இதை 5 அடி தொலைவில் நின்று கவனித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பேருந்து கிளம்பியதும் ஏறினார்கள். இவன் மட்டும் ஏறாமல் நின்றான். டேய் ஏறுடா ஏறுடா என அவனது நண்பர்கள் கத்த அவன் அப்படியே நின்றான். கீழே இறங்கிய அவனது நண்பர்கள் டேய் இதோட பஸ் நைட் 8 மணிக்கு தான். ஒழுங்கா ஏறு என இழுத்து வந்து பஸ் ஏற்றினார்கள். அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கீழே குனிந்துக்கொண்டான். பேருந்து பெரியார் சிலை, பைபாஸ் என பயணமானது. திருவள்ளுவர் சிலை வரும் வரை அவன் தன்னை பார்ப்பான் என அந்த பெண் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்தது. அவனோ லெமுரியா கண்டத்து கல்யாண பெண் போல குனிந்த தலை நிமிரவில்லை.
திருவள்ளுவர் சிலை தாண்டியபோது அந்த பெண் அவன் தந்த அந்த கிப்ட்டை பிரித்து அதன் காகிதங்களை வெளியே எறிந்தாள். அந்த பெண்ணின் மனது போல என்ன கிப்ட் என தெரிந்துக்கொள்ளும் ஆவல் என்னை தொற்றிக்கொள்ள சீட்டை விட்டு மெல்ல எழுந்து எட்டி பார்த்தேன். (ஏண்டா இந்த பொழப்பு என திட்டுவது காதில் விழுகிறது) உள்ளே அழகான இளம் ஜோடி ரொமான்ஸ் மூடில் காதல் பேசியபடி கை கோர்த்து நின்றுக்கொண்டிருந்த மெழுகு சிற்பம். அதை பார்த்துவிட்டு அந்த பெண் அவனை பார்த்தது அவன் இன்னமும் லெமுரியா கண்டத்தில் இருந்தான். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையின் கீற்றுகள்.
ஒரு வலைவில் பேருந்து நின்றது. முன்னே நிற்க்கும் பேருந்து போனால் தான் இந்த பேருந்து போகும் என்ற நிலை. லேசான மழை தூறல். இருக்கையில் அமர்ந்திருந்த காதல் இளவரசன் பேருந்தை விட்டு கீழே இறங்கி விட்டான். அவனது நண்பர்களும் கீழே இறங்கி டீ கடையை பார்த்து மச்சான் ஒரு டீ சொல்லு சாப்பிடலாம் என லந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வைலண்டாக பேசிக்கொண்டிருந்த காதல் இளவரசன் இப்போது சைலண்டாகயிருந்தான்.
மழை தூரலின் வேகம் மிதமாக விழுந்தது. நனைந்தபடி நின்ற காதல் இளவரசனை இளவரசி பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவன் இன்னமும் சோக கீதம் இசைத்துக்கொண்டிருந்தான். பேருந்து புறப்பட்டது. கீழே நின்றிருந்தவர்கள் ஓடிவந்து ஏறினார்கள். காதல் இளவரசன் என் அருகில் வந்து நின்றான். அதை கவனிக்காத இளவரசி பேருந்தின் முன் பகுதி, பின் பகுதி என தேடினாள். இதை இளவரசன் கவனிக்கவேயில்லை. கடைசியில் இருந்த இவனை பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சந்தோஷ மின்னல். இவனை பார்க்க தலைவன் இப்போதுதான் அப்பெண்ணை பார்த்தான். கண்ணும் கண்ணும் மோதியது. கண்கள் காதல் மொழி பேசியது. அவள் கண்ணாலே இவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு வரச்சொல்ல தலைவன் தன் இருக்கையை நோக்கி போனான். அங்கே வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். இவன் அப்பெண்மணியை எழுப்ப மனம்மில்லாமல் நின்றான். காதல் இளவரசி அந்த பெண்ணை பார்த்து அக்கா இதுக்கு முன்னாடி அவர் தான் இங்க உட்கார்ந்துயிருந்தாரு. கீழ இறங்கனதும் நீங்க உட்கார்ந்துட்டிங்க எழுந்திருங்க என்றதும் யார் அவனை எழுந்திருக்க சொன்னது என எதிர் கேள்வி கேட்டார். இளவரசி கோபமாகி நீ எழுந்திருக்கறியா? இல்லையா என சத்தம் போட்டார்.
அடுத்து என்ன என ஆவலோடு காத்திருந்த என் எண்ணத்துக்கு வில்லனாக வந்தார் நடத்துனர்.
டிக்கட்.... டிக்கட் என குரல் கொடுத்தவர். இளவரசனை பார்த்து டிக்கட் என்றார். ஸ்கடூடன்ட் சார் என்றான். அப்ப பாஸ் இருக்குமே எடு. அது பேக் லயிருக்கு. பேக் பின்னாடியிருக்கு என்றான். ( என் அருகில் இருந்த ஒருவரிடம் இருந்தது.) அறிவில்ல பஸ்ல ஏறும் போதே அத எடுத்து பாக்கெட்ல வைக்கறதில்லயா என எகிறினார். இதை கேட்ட அந்த பெண் தனது இருக்கையை விட்டு எழுந்து விட்டாள். நாங்க தினமும் இந்த பஸ்ல தான் வர்றோம் இன்னைக்கி மட்டும் என்ன புதுசா பாஸ் கேட்டு திட்டறிங்க. அவர் தான் பாஸ் பேக் ல இருக்குன்னாருயில்ல. அப்பறம் எதுக்கு திட்டற. இந்த கூட்டத்தல அத எப்படி எடுக்க முடியும். ஸ்டூடன்ட்ன்னதும் கேவலமா பேசறிங்க. என்ன நினைச்சிக்கிட்டுயிருக்கிங்க என சவுண்ட் விட பேருந்தே இதே வேடிக்கை பார்த்தது. இளவரசன் அரண்டு போய் அதை பார்த்துக்கொண்டிருந்தான். இந்த காசு அவருக்கு டிக்கட் குடு என 10 ரூபாய் நோட்டை நீட்ட நடத்துனர் நான் புதுசும்மா தெரியாம கேட்டுட்டன் என்னை மன்னிச்சிடும்மா .... மன்னிச்சிடும்மா.. என மன்னிப்பு கேட்டதும் தான் சாந்தமாகி அமர்ந்தாள் இளவரசி.
இளவரசனின் நண்பர்கள் மச்சான் மச்சான் என கத்த அவன் முகத்தில் ஒரே புன்னகை தான் போங்க. இதை கண்ட அப்பெண் ஒரு சிரிப்பு தலையை குனித்து சிரித்தவள் கூச்சல் போட்ட பையன்களை பார்த்து முறைக்க சைலண்டானான்கள். பின் தன் இருக்கையில் இருந்து எழுந்து குழந்தையுடன் இருந்த ஒரு பெண்மணியை அழைத்து உட்கார வைத்துவிட்டு இளவரசன் அருகே வந்து நின்றாள். தலைவன் முகத்தில் 10000 வாட்ஸ் லைட் போல் பிரகாசம். காதல் வந்தால் முகங்கள் கூட பேசும் என்பதை அன்று தான் கண்டேன். கண் அசைவில்லாமல் புன்னகையுடன் பேசினார்கள். சில நிமிடங்களில் அந்த பெண் சிரிக்க மெல்ல கிசு கிசுப்பாக காதல் பயணம் ஆரம்பமானது அவர்களிடையே.
அதுக்கப்பறம் நிச்சயமா என்ன பேசறாங்கன்னு நான் கேட்கல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக