கடந்த சில மாதங்களாக ஸ்பெக்ட்ராம் பிரச்சனை, திமுக-காங்கிரஸ் சீட் நாடகம், ஜெ-விஜயகாந்த் முறுக்கல், ரவுடிஸம், குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு………. போன்றவற்றை பற்றி இணைய தளங்களிலும், செய்திதாள்களிலும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இது தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என ஆருடம் வேறு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணரவைத்துவிட்டார்கள் மக்கள். கடந்த 10 தினங்களில் குறைந்தது 800 கி.மீ தூரம் 1200 சொச்சம் கிராமங்களை சுத்தி வந்திருப்பேன். அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள், இணைய தளங்களில் எழுதுபவர்கள் மக்களிடம்மிருந்து எந்தளவுக்கு அந்நியப்பட்டு போய்வுள்ளார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
நான் சுற்றிய கிராமங்களில் ஸ்பெக்ட்ராம் பற்றி பேச ஆள்யில்லை. கிராமங்களில் வாழும் மக்களில் 20 சதவிதமானவர்களுக்கே ஸ்பெக்ட்ராம் பற்றி தெரிகிறது. அதை விடக்கொடுமை நகரங்களில் ஸ்பெக்ட்ராம் என்றால் என்ன என கேட்பவர்கள் 60 சதவிதமானவர்கள். ஊழல் என சொல்வதைக்கூட மக்கள் தற்போது எப்படி பார்க்கிறார்கள் என்றால் நாம ஓட்டுக்கு காசு வாங்கறோம். நமக்கு செலவு பண்ண பணத்த திருப்பி எடுக்க ஊழல் பண்றாங்க. இதுக்கு காரணம் நாம தான். ஓட்டுக்கு பணம் வாங்காம நல்லவன் யாருன்னு பாத்து ஓட்டு போட்டுயிருந்தா அவன் ஜெயிச்சி நல்லது செய்துயிருப்பான். ஆனா ஒட்டுக்கு காசு வாங்கறதால செலவு பண்ணவன் பணத்த வட்டியோட திருப்பியெடுக்க தப்பான வழியில சம்பாதிக்கறான். நாம காசு வாங்காமயிருந்தா அவுங்களை கேள்வி கேட்கலாம், நாம காசு வாங்கறோம் அதனால அதப்பத்தி பேசறது தப்பு என்கிறார்கள் 70 சதவிதம் பேர்.
காலம் மாற மாற விலைவாசி ஏறத்தான் செய்யும். விலைவாசி ஏற ஏற ஒருத்தருடைய சம்பளமும், கூலியும் ஏறுவது, ஏத்துவதுப்பத்தி யாரும் பேசமாட்டேன்கிறாங்களே. அதலயும் சிமெண்ட், கம்பி, செங்கல் மாதிரியான பொருட்கள் விலை ஏறனத தாங்க ஏத்துக்க முடியல. ஒரு லிட்டர் பெட்ரோல் மேல 1 ரூபா அரசாங்கம் ஏத்தனா, ஒரு லோடு மணல் மேல ஆயிரம் ரூபாய் ஏத்தறாங்க. இது தாங்க அநியாயம். ஒரு பகுதியில் விலைவாசி உயர்வை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றொரு புறத்தில் எதிர் கருத்தை கொண்டு உள்ளனர்.
டிவி, கேஸ் அடுப்பு, காப்பீட்டு திட்டத்தை பாராட்டும் மக்கள் தற்போது இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை வாரி வழங்குவதாக சொல்வதை தான் ரசிக்கவில்லை. கிராமம் முதல் நகரங்கள் வரை இலவசத்தை 85 சதவிதம் மக்கள் விரும்பவில்லை. மற்றவர்கள் ஏதோ இவுங்க வீட்டு பணத்தலயிருந்து தர்ற மாதிரி இலவசம், இலவசம்ங்கறாங்க. அது நாங்க கட்டற வரி பணம்ங்க. இத எப்படி இவுங்க இலவசம்ன்னு சொல்லலாம் என விபரமாகவே பேசினார்கள்.
அரசியல்வாதிகளிடம் நம்பகத்தன்மையை அதிகளவு மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சாதி கட்சிகள், அமைப்புகளுக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. தொகுதிக்கு சம்மந்தமேயில்லாத வெளியூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவித்தால் காலப்போக்கில் மக்களே அவர்களை அடித்து துரத்தும் அளவுக்கு கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அரசியலில் அராஜக போர்வழிகளை ரசிக்கவில்லை என 100 சதவித மக்களின் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேசிய கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். காங்கிரஸ்சாகட்டும், பாஜக வாகட்டும் அது அந்நிய கட்சிகள் என்கின்றனர். மனம் நொந்த விஷயம் இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி பெரும்பாலான மக்கள் கோப கருத்துக்களை வெளியிட்டனர். அது தேர்தலில் எதிரொலிக்குமா என்றால் இல்லை என்பதே அவர்களின் பதிலாக உள்ளது. அதற்கான காரணம் தேடியபோது, ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யற கட்சின்னா அது திமுக, அதுக்கடுத்து மதிமுக.
ஆனா மத்தியில ஆட்சியில இருந்த காங்கிரஸ் சோனியாகாந்தி புருஷன கொன்னவங்கள பழிவாங்க முடிவு செய்து குண்டு போட்டு மொத்த ஜனத்தயும் அழிச்சது. திமுக கேள்வி கேட்டுயிருந்தா திமுக ஆட்சிய கலைச்சியிருக்கும். இதுக்கு பயந்து கருணாநிதி, மக்களை ஏமாத்த உண்ணாவிரதம் நாடகம் ஆடனாரு. வைகோ போராடியிருக்கனும், அதிமுக கூட்டணியில இருந்துக்கிட்டு குரல் கொடுத்தது எடுபடல. இப்பயில்ல எப்பவுமே புலிங்க விஷயத்தல ஜெயலலிதா நம்பகமான ஆள்யில்லைங்க என்கிறார்கள் 70 சதவிதமானோர்.
அதைவிட நம்ப முடியாத விஷயம், ஈழ விவகாரத்தில் இன்னமும் திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது. கருணாநிதி ஈழ விவகாரத்தால உறுதியான முடிவு எடுக்கனும். அவருக்கு பின்னாடி அந்த மக்களுக்கு யாரும் குரல் கொடுக்க மாட்டாங்க. அந்த மக்களுக்கு நல்லது நடக்கனம்ன்னா கருணாநிதியால மட்டும் தான் முடியும். அத செய்தாருன்னா ஈழ துரோகின்னு அவர சொல்றது குறையும் என டீக்கடை பெஞ்ச்சுகளில் பல கிராமங்களில் நாம் சந்தித்த நடுத்தர வயதினர் வெளிப்படையாக கூறினர்.
விஜயகாந்த் மீது கடந்த காலங்களில் இருந்ததை போல பெண்களிடம் ஈர்ப்புயில்லை. ஆனால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலம் மக்களுக்காக போராடியிருந்தால் ஆட்சியை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துயிருக்க முடியும். கூட்டணி சேர்ந்தது, குடிகாரர் என்ற இமேஜ் அவரை காலி செய்து விட்டது. கிராம புறமாகட்டும், நகர் புறத்தில் செய்தி தாள்கள், தொலைக்காட்சிகளை நம்பும் போக்கு குறைந்து வருகிறது. டிவி சேனல்களில் நடுநிலையான, பரபரப்பான செய்தி சேனல்க்கான இடம் காலியாக உள்ளது. அப்படி ஒரு சேனல் தொடங்கப்பட்டால் முதல் இடத்திற்க்கு வெகு விரைவில் வருவதற்க்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இப்படி பல சுவாரஸ்யமான, நம்ப முடியாத விஷயங்கள் காண முடிந்தது. உட்கார்ந்தயிடத்தில் இணையத்தை மேய்ந்துவிட்டு எழுதுபவர்களுக்கும் மக்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது.
க்ளௌட் நய்ன், ரெட் ஜெயண்ட்.
பதிலளிநீக்குTamil typing needs improvement!