செவ்வாய், டிசம்பர் 13, 2016

வாருங்கள் சின்னம்மா.......... நாளை உங்களுக்கும் இதுதான்..........





 கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவா?. என்ன அநியாயம்மிது என பொதுமக்கள் தான் கொதிக்கிறார்களளே தவிர அதிமுகவின் எந்த எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி, கட்சியின் மா.செக்கள் கொதித்துள்ளார் என கேட்டால் ஒருவரும் கொதிக்கவில்லை, ஏன் முனுமுனுக்க கூடயில்லை. அவர்கள் தான் பொறுப்பில் உள்ளார்கள் என்றால் கட்சியின் அடிமட்ட கிளை கழக உறுப்பினர் கூட எதிர்த்து முனுமுனுக்கவில்லை. 

எப்போதும், தலைமைக்கு எதிராக முனுமுனுக்ககூடாது என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது கட்சி அதிமுக. கட்சியினரை தொண்டர்களாக வைத்திருக்காமல் அடிமையாக வைத்திருக்கும் கட்சி எதுவென்றால் அது அக்கட்சி தான். அடிமைகள் கூட ஒருக்கட்டத்தில் குரல் எழுப்புவார்கள். எம்.ஜி.ஆர் இறந்தபோது அப்படித்தான் குரல் எழுப்பினார்கள். 

அடிமைகள் எப்வோதாவுது கேள்வி கேட்பார்கள், கொத்தடிமைகள் அதுக்கூட கேட்கமாட்டார்கள். அதனால் அடிமைகளை விட கொத்தடிமைகள் தான் சரியென தான் பதவிக்கு வந்ததும் அதிமுகவினரை கொத்தடிமைகளாக உருவாக்கினார்.

அதிமுக உருவானபோது அதிமுக வுக்கு என கொள்கை, கோட்பாடு என ஏதாவுது இருந்ததா எனக்கேட்டால் எந்த ஒரு வெங்காயமும் கிடையாது. கருணாநிதி எதிர்ப்பு, சினிமா பிரபலம் இதை மட்டும்மே வைத்துக்கொண்டு பதவிக்கு வந்த ராமச்சந்திரனுக்கு, பூணுல் கும்பல் சாதி ரீதியாக, மத ரீதியாக பெரும் பலமாக இருந்து அவரை தாங்கி பிடித்து தொடர்ந்து பதவியில் உட்கார வைத்தது. 

கருணாநிதி எதிர்ப்பு என்பது நீண்ட ஆண்டுகளுக்கு எடுபடாது என நினைத்தே கட்சியினரை அடிமையாக வைத்துக்கொள்ள விரும்பினார் எம்.ஜி.ஆர். அதனால் தான் கட்சியினர் ஒவ்வொருவரையும் அவர் படத்தை கைகளில் பச்சைக்குத்திக்கொள்ள வைத்தார். கட்சியினரை காலில் விழத்தான் சொன்னார், இவர்கள் அப்படியே படுத்துவிட்டார்கள். நிர்வாக திறமையற்ற, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ராமச்சந்திரன் தமிழகத்துக்கு என எதையும் செய்யவில்லை. இலவசத்தை ஊக்கு வித்து செருப்பு, பல்பொடி, துணி என தந்து அரசு பணத்தில் வல்லள் பெயர் எடுத்தார். அந்த ராமச்சந்திரன் மறைவின் போது, அந்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தான் மெரினா கடற்கரையில் சமாதி கட்டினார்கள். அதை காட்டியே 28 ஆண்டுகள் அந்தகட்சியின் பொது செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. 

கட்சியினரை எம்.ஜி.ஆர் அடிமையாக நடத்தினார் என்றால், அவர்களை கொத்தடிமையாக மாற்றினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆராவுது தன் பெயரை கையில் பச்சை குத்திக்கொள்ளத்தான் சொன்னார். ஜெயலலிதா, திமுகக்காரன் உட்பட நம் எதிரிகட்சியினரின் நல்லது, கெட்டதுகளில் கூட கலந்துக்கொள்ள கூடாது என வெளிப்டையாக அறிவித்தார். அதை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை, அப்படியே நடந்துக்கொண்டர்கள். மீறி கலந்துக்கொண்டவர்களின் பதவியை பறித்தார் ஜெயலலிதா. 

ஒருவருக்கு பதவி தருவது, பின் பிடுங்குவது, எதற்கு தந்தார்கள், எதனால் பிடுங்கினார்கள் என சம்மந்தப்பட்டவருக்கே தெரியாது. அந்த இடத்தில் எங்கேயோ உள்ள ஒருவனை தூக்கி வந்து பதவியில் உட்காரவைப்பது. இதை பார்க்கும் போது அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிடைக்கிறது என நினைக்கலாம். உண்மையில் இதனை நுணுக்கமாக பார்க்க வேண்டும், அரசியல் தெரிகிறதோ, தெரியவில்லையோ கட்சியின் அடிமட்டத்தில் உள்ள ஒருவருக்கு பதவி தந்தால் அவன் விசுவாச கொத்தடிமையாக இருப்பார், எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார் என்பதாலே அப்படிப்பட்டவர்களுக்கு பதவிகள் தந்தார்கள். இது கட்சியில் மட்டும்மல்ல ஆட்சியிலும் எதிரொலித்தது. யார் அதிகமாக ஜால்ரா அடிப்பது என்பது உயர் அதிகாரிகளுக்குள்ளயே போட்டி ஏற்பட்டதை கடந்த காலங்களில் கண்டோம். கொத்தடிமைகள் அழுதது, காலில் விழுந்தது போன்ற பணிவெல்லாம் எதற்காக பதவிக்காக. 

 அதனால் தான், அம்மா அம்மா என பாடிய வாய்கள் ஜெ அடக்கம் செய்த சுவடு காயும்முன், சின்னம்மாவே எல்லாம் என அவர் போட்டோவை சட்டையின் மேல்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஜெ படத்தை தூக்கி வீசினார்கள். நீங்கள் தான் கட்சியை, எங்களை காப்பாற்ற வேண்டும் என கதற தொடங்கிவிட்டார்கள்.

எல்லாம் எதற்காக ?. 

பதவி, பணத்துக்காக. தங்களிடம் உள்ள பதவியை, பணத்தை, அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள அந்த பதவிக்கு சசிகலாவல்ல, ஜெயா வீட்டு வேலைக்காரர் வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். 

ராமச்சந்திரன் மறைவுக்கு பின், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் என கட்சியினர் புகழ் பாடுவதை ஜெ விரும்பவில்லை என்பது கடந்த கால வரலாறு. எம்.ஜி.ஆர் என்கிற பெயரை தன்னை நிலை நிறுத்தவும், ஓட்டு வாங்கவும் பயன்படுத்திய ஜெ, மற்றப்படி அவரை நிராகரிக்கவே செய்தார். எங்கும் நான், நான், எனது அரசு என பேசியதும், திட்டங்களுக்கு தன் பெயரை வைத்துக்கொண்டது அதற்காக தான். இதனை உணர்ந்தே மாண்புமிகுக்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை எம்.ஜி.ஆர் பெயரைக்கூட சொல்லாமல் ஜெயலலிதா காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தார்கள், கார் டயரை நக்கினார்கள், பறக்கும் விமானத்தை கும்பிட்டார்கள். இத்தனையும் செய்தது பதவிக்காக. அந்த பதவியை வைத்து பணத்தை சம்பாதிக்க, பணம் இருந்தால் எல்லாம்மே நம் வசம் என நம்பினார்கள், செய்தார்கள். 

கட்சியினரிடம்மிருந்து எம்.ஜி.ஆர் புகழை மறைக்கும் வகையில் தான், தான் இறந்தபின் தன் உடலை எம்.ஜி.ஆர் சமாதி அருகே புதைக்க வைத்துவிட்டார் ஜெ. எம்.ஜி.ஆரை காண செல்லும் முன் தன்னை வணங்கி விட்டுத்தான் போக வேண்டும் என்கிற ஜெ வின் விருப்பத்தை சசிகலா நிறைவேற்றியுள்ளார். தனக்கு அரசியல் வாழ்வளித்த எம்.ஜி.ஆரை மறக்க வைக்கலாம் என ஜெ நினைத்தார். ஆனால், கட்சியினர் அவரையே தூக்கி எறிந்துவிட்டார்கள். கட்சியை நடத்துவதில், தொண்டர்களை அடிமைப்படுத்துவதில், கட்சியை வளர்த்ததில் ராமச்சந்திரனை ஜெயலலிதா மிஞ்சினார் என்றால் கட்சி  அடிமைகளின் விசுவாசத்தை பெறுவதில் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் தோற்றுவிட்டார்.

நாளை சசிகலாவுக்கு அடுத்து யார் பதவிக்கு வருகிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அடிமைகளுக்கு விடுதலை முக்கியம்......... கொத்தடிமைகளுக்கு சோறு ( பதவி, பணம் ) தான் முக்கியம்.

1 கருத்து:

  1. மிகவும் நல்ல பதிவு.
    உங்க பதிவை Google இல் பரிந்துரைக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு