புதன், பிப்ரவரி 08, 2012

சட்டமன்றமும்....... வீடியோவும்........


சட்டமன்றத்தில் ஆளும்கட்சி - எதிர்கட்சி நடந்திய வார்த்தை மோதல், அதன்பின் வெளியே ஏட்டிக்கு போட்டி வார்த்தை யுத்தத்தில் விஜயகாந்த் ஒரு நியாயமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அது பெரும்பாலும் விவாதிக்காமலே போய்விட்டது.

அதாவது நான் சட்டமன்றத்தில் நாக்கை கடித்தேன், கையை ஆட்டி எச்சரித்தேன் என்பதையே திரும்ப திரும்ப ஒளிப்பரப்புகிறார்கள். ஆனால் ஆளும்கட்சியினர் பேசியதை திட்டமிட்டே எடிட் செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய விஜயகாந்த், நாடாளமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவையில் நடைபெறும் கூட்டத்தினை லைவ்வாக ஒளிப்பரப்புவது போல தமிழக சட்டமன்ற கூட்டத்தை லைவ்வாக தூர்தர்ஷன் ஒளிப்பரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நியாயமான கோரிக்கை.

இன்று தமிழகத்தில் கட்சிக்கு ஒரு சேனல், நாளிதழ் உருவாகி விட்டது. கட்சி தொடங்கும் முன் சேனலும், செய்தித்தாளும் தொடங்க திட்டம் தீட்டி விடுகிறார்கள். அதன்பின்பே கட்சி தொடங்குகிறார்கள். அதில் தங்களது கட்சிக்கு வேண்டப்பட்ட செய்திகளையே வெளியிடுகிறார்கள். ஒரு பொது செய்தியில் கூட மக்கள் பார்வைக்கு விவகாரத்தை முழுமையாக கொண்டும் போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்மில்லாமல். தங்களது மன நலன், சாதி நலன், கூட்டணி நலன், அரசியல் நலன் சார்ந்தே செய்திகளை வெளியிடுகிறார்கள். இது தான் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான ஊடகங்களின் நிலையாக உள்ளது.

சட்டமன்ற நிகழ்வை கூட அப்படித்தான் காட்டினார்கள். விஜயகாந்த் எழுந்து விரல் நீட்டி மிரட்டுவது, காக்கை கடிப்பது போன்ற வீடியோ பதிவே மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பப்பட்டது. ஆனால் எதனால் அவர் அப்படி நடந்துக்கொண்டார். விஜயகாந்த் ‘மிரட்டுவத’ற்க்கு முன் அமைச்சர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ஆளும்கட்சி தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பவில்லை, எதிர்கட்சி தொலைக்காட்சிகளும் காட்டவில்லை. காரணம், அந்த வீடியோ எதுவும் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி எடுத்ததில்லை என்பதே எதார்த்த நிலை.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை தமிழ்நாடு திரைபட பயிற்சி கல்லூரியின் மாணவர்கள் எடுப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக அவர்கள் பதிவு செய்து அதனை அதிகாரிகளிடம் தருவார்கள். அதில் ஆளும்கட்சி சேனல் ஒளிப்பரப்ப வேண்டிய கிளிப்பிங்ஸ், எதிர்கட்சி சேனல்கள் ஒளிப்பரப்ப வேண்டிய கிளிப்பிங்ஸ், கூட்டணி கட்சிகள் ஒளிப்பரப்ப வேண்டிய கிளிப்பிங் என வகை வகையாய் தயார் செய்யப்பட்டு அந்த சி.டிக்கள் அரசின் ஊடகத்துறை வாயிலாக சேனல்களுக்கும், செய்திதாள்களுக்கும் அனுப்பப்படும்.

இதனால் ஆளும்கட்சி என்ன நினைக்கிறதோ அதுதான் செய்தியாக மக்கள் மன்றத்துக்கு வருகிறது. இதனால் சட்டமன்றத்தின் உள்ளே என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.

இதை மாற்ற ஒரேவழி விஜயகாந்த் கேட்பதை போல, நேரடி ஒளிப்பரப்பு இருக்கட்டும். இதன் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட எம்.ல்.ஏகள் சட்டமன்றத்தில் மக்களுக்காக பேசுகிறார்களா?, தொகுதி பிரச்சனை பற்றி உண்மையை பேசுகிறார்களா?, பக்கத்தில் கதையடித்துக்கொண்டு இருக்கிறார்களா?, தூங்குகிறார்களா? இல்லை சட்டமன்றத்துக்கே வராமல் கடுக்காய் தருகிறார்களா? என்பதை மக்கள் நேரடியாக அறிந்துக்கொள்ள முடியும்.

அதோடு, சட்டமன்றத்தில் அடித்துக்கொண்டால் யார் முதலில் அடித்தது, அதிகம் அடிவாங்கியது யார்?, கையால் அடித்துக்கொண்டார்களா? இல்லை உருட்டு கட்டை, சைக்கிள் செயின் கொண்டும்போய் மோதிக்கொண்டார்களா என்பதை நாம் நேரடி ஒளிப்பரப்பில் கண்டு மக்களே ஒரு முடிவு எடுக்கலாம்.

ஆனால் அதை செய்யத்தான் தயங்குகிறார்கள்.


கர்நாடகாவில் சட்டமன்ற நிகழ்வுகளை தனியார் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பும் நிலை உள்ளது. பிப்ரவரி 7ந்தேதி சட்டமன்றத்தில் விவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த பி.ஜே.பியின் கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவாதி விவாதத்தை கவனிக்காமல் தன் கையில் இருந்த செல்போன் மூலம் மும்மரமாக எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் செல்போனிலேயே கவனமாக இருந்துள்ளார். அந்த செல்போனை அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பட்டீல், சுற்றுச்சூழல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமர் ஆகியோர் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

விவாதத்தை கவனிக்காமல் தங்களது செல்போன்களை சீரியசாக பார்த்துக்கொண்டு இருந்ததை மாடத்தில் மேலிருந்து கவனித்த தனியார் சேனல் நிருபர் ஒருவர் அப்படி என்னத்த பாக்கறாங்க என தனது வீடியோ கேமரா வழியாக சூம் செய்தபோது செல்போன் மூலம் ஒரு வெப்சைட்டில் இருந்து ஒரு வீடியோவை டவுன்லோட் செய்துள்ளனர். அந்த வீடியோவில் கறுப்பு புடவை அணிந்த பெண்மணி தனது உடைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்க……………. அந்த வீடியோ, இன்னோரு வீடியோ என 15 நிமிடம் மூன்று அமைச்சர்களும் அதை கண்டு ரசித்துள்ளனர். இதனை அப்படியே ரெக்கார்ட் செய்துக்கொண்டது அந்த கேமரா. அப்பறம்மென்ன  இரவு எக்ஸ்குளுசிவ் செய்தியாக ஒளிப்பரப்பானது. இதனை கண்டு கர்நாடகாவே அதிர 8ந்தேதி பி.ஜே.பி தலைமை அந்த அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தது.

அங்கு ஒரு நியாயமான செய்தி சேனல் இருந்து மக்கள் மன்றத்திற்க்கு அமைச்சர்களின் யோக்கியதையை கொண்டு வந்துள்ளது. அது தமிழகத்தில் இல்லை என்பதால் தான் நேரடி ஒளிப்பரப்பை தமிழக மக்கள் நீண்ட நாட்களாக கேட்கிறார்கள். விஜயகாந்த் அதை வழிமொழிந்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் சவால் விடுகிறார்கள். நேரடி ஒளிப்பரப்பு கொண்டு வர தமிழக கட்சிகளே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவே உங்களுக்கு தைரியம் உள்ளதா?.

1 கருத்து: