வெள்ளி, மே 18, 2012

சுகமான சுமைகள் …………. 26.




உனக்கு மாப்பிளை பாக்கறாங்களாம்மே. 

ம். 

உன்ன விட அதிகபட்சம் 5 வயசு அதிகமா இருக்கறமாதிரி பாத்து செலக்ட் பண்ணு. அப்பத்தான் ஜோடிப்பொருத்தம் இருக்கும், வாழ்க்கை சந்தோஷமா போகும்.

ம் என தலையாட்டிவிட்டு போனால். 

தேர்வுகள் முடிந்தது. ரூம்மை காலி செய்யும் முன் கோயிலில் கவிதாவை பார்த்தேன். முன்னபோல அடிக்கடி சந்திக்க முடியாது. ஊருக்கு போறன். தினமும் போன் பண்றன். நீயும் வீட்டுக்கு போன் பண்ணு. வார வாரம் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வர்றன் எனச்சொல்லி விட்டு ரூம்க்கு வந்தேன். 

அங்கு ரமேஷ், தயா இருவரும் ரூம்க்கு வந்திருந்தனர். அகிலன் பொருள்களை பேக் பண்ணிக்கொண்டு இருந்தான். இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்மேடா என தயா தான் கேட்டான். டேய், எக்ஸாம் முடிஞ்சி இரண்டு நாள் இங்கயே இருந்தாச்சி. இப்பவும் கிளம்பலன்னா அவ்ளோ தான். 

மச்சான் இனிமே நாம அடிக்கடி சந்திக்க முடியாதா என ஏக்கத்தோடு கேட்டான் அகிலன். 

எல்லார் ஊருக்கும் பக்கத்து பக்கத்துல தானே இருக்கு. அதனால விருப்பப்பட்டப்ப சந்திச்சிக்கலாம் என்றான் ஜான். 

சந்திச்சிக்கலாம். ஆனா குரூப்பா சந்திச்சாதாண்டா ஜாலியா இருக்கும் என்றான் அகிலன். 

இப்ப மூடிக்கிட்டு கிளம்புங்கடா. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். வாரம் ஒருத்தன் ஊருக்கு மத்தவங்க போலாம் என்றதும் சூப்பர் ஐடியா மச்சான் என குதித்தான்கள். 

அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வந்துடுங்கடா என்றேன்.

ஒ.கே மச்சான். சரக்கு கிடைக்குமா என தயா தான் கேட்டான். 

மூடிக்கிட்டு வாங்கடா என்றபடியே ரூம்மை காலி செய்து பக்கத்து தெருவில் இருந்த வீட்டு ஓனரிடம் சாவி தந்து நன்றிச்சொல்லிவிட்டு வந்தபோது. 

ஆமாம். உங்காளுங்கக்கிட்ட சொல்லிட்டங்கிளா?.  

அதுங்கள பாத்துட்டு அப்படியே கிளம்பறோம்டா என தயாவும், ரமேஷ்சும் பைக் ஒன்றில் கிளம்பினர். அகிலனை ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டான்ட்டுக்கு அனுப்பிவிட்டு நானும் ஜானும் ப்ரியா வீட்டை நோக்கி பைக்கில் கிளம்பினோம். 

ப்ரியா வீட்டில் அவளது அப்பாவை தவிர அனைவரும் இருந்தனர். ப்ரியா அம்மா வாங்கப்பா என அழைத்தவரிடம், ஊருக்கு போறோம்மா அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தன். 

காலேஜ் முடிஞ்சா ஊருக்கு போயிடனுமா, இரண்டு நாள் இங்க வீட்ல இருந்துட்டு போப்பா. 

நம்ம வீடு தானே அப்பறம்மா வந்து தங்கறன். 

இல்லம்மா, சார்க்கு அங்க ஏதாவது மாமன் பொண்ணு காத்திருக்கும் அதான் காலேஜ் முடிஞ்சதும் ஜாலியா கிளம்பறாரு என கவிதா கிண்டலடித்ததை ப்ரியா ரியாக்ஷன் காட்டாமல் கேட்டுக்கொண்டுயிருந்தாள். 

நீங்க வேற அப்படியெல்லாம் கிடையாது. காலேஜ் முடிஞ்ச பிறகு இங்கயென்ன வேலை அதான் கிளம்பறன். லீவு முடிஞ்சி, ரிசல்ட் வந்ததும் ஏதாவது வேலை தேடனும், இல்லன்னா படிக்கனும். அதுவரைக்குமாவுது வீட்ல இருக்கலாம்மில்ல அதனால தான் கிளம்பறன். 

இவ கிடக்கறா. அத விடுப்பா. 

ப்ரியாவுக்கு மாப்பிளை பாத்தாச்சி. அநேகமா அது முடிஞ்சிடும்னு நினைக்கறன். கல்யாணத்துக்கு சொல்லியனுப்பறோம் வந்துடுப்பா. 

நாங்கயில்லாம கல்யாணம்மா. ஒரு வாரத்துக்கு முந்தியே வந்துடறோம்மா என்றதும் புன்னகைத்தபடியே இருங்கப்பா காபி போட்டு எடுத்து வர்றன் என உள்ளே போனார். 

அப்போது கரண்ட் கட்டாக, உள்ள புழுக்கமா இருக்கும் மாடிக்கு போங்க காபி போட்டு எடுத்து வர்றன் என ப்ரியா அம்மா சொல்ல அனைவரும் மாடிக்கு போனபோது வேப்பமர காற்று சில்லென வீசியது. 

மாடிக்கு வந்ததும் சார், போனதும் எங்களயெல்லாம் மறந்துடுவிங்களா என ப்ரியா தான் கேட்டாள். 

கேட்கறவங்க மறக்காமயிருந்தா போதும். கல்யாணம் வேற ஆகப்போவுது உங்க நினைவுல இருந்து நாங்க மறையாமயிருந்தா போதும் என்றதும் கன்னத்தில் பளார் என அடித்தாள். அதை பார்த்து கவிதாவுக்கு சுல்லென கோபம் வந்தது அவள் கண்களில் தெரிந்தது. 

அந்த நேரம் பார்த்து கவி, வந்து காபி எடுத்தும்போம்மா என்றதும் எங்களைபார்த்தபடியே கீழே இறங்கினால். 

படியிறங்கிய கவிதாவிடம் அப்படியே தண்ணீ எடுத்துவா என்றதும் முறைத்தபடியே சென்றாள். 

இரண்டுத்தயும் அது எப்படி எடுத்து வரும். நானும் போய் வர்றன் என ஜானும் போனான். 

ப்ரியா பக்கம் திரும்பி. நான் கவிதாவ மறந்தாலும் மறப்பன். ஆனா நான் சாகற வரைக்கும் என் நண்பியா என் மனசுல இருந்துக்கிட்டு தான் இருப்ப. உன்னை நினைக்காத நாள் என் இறந்தநாள் தெரிஞ்சிக்க. உனக்கப்பறம் தான் எல்லாமே என்றதும் கண் கலங்கினால். 

ஊருக்கு போனாலும் தினமும் சாயந்தரம் போன் பண்றன். 

எனக்கா? அவளுக்கா?.

கவிதாவ காதலிக்கறத மட்டும் தான் மறைச்சன். சத்தியமா வேற எதையும் மறைக்கல. போன் பண்றது உன்கிட்ட பேசத்தான். 

நம்பிட்டன். 

சத்தியமா.

அவளை வெள்ளிக்கிழமை தோறும் கோயில்ல சந்திக்கறன்னு சொல்லியிருக்கன் என்றதும் அமைதியாக என்னைப்பார்த்தவளிடம், உன்ன பாக்க வரலன்னு நினைக்காத. எப்படியும் கல்யாணம்மாகி போய்டுவ. அதனால தான் என இழுக்கும் போதே. 

காபி ரெடி என ஜான் குரல் கொடுத்தபடியே மேலே வந்தான். பின்னாடியே கவிதாவும் காபி டம்பளர்களோடு வந்தாள். 

கவிதா மேடம், உங்கக்கா என்னையே இந்த அடி அடிக்குதே. உங்கக்காவ கட்டிக்க போறவர் என்ன பாடுபட போறார்னு தெரியல. நீயாவது உன்ன கட்டிக்க போறவற அடிக்காம இரு. 

பாக்கலாம்... பாக்கலாம்........ 

காபி குடித்தபடியே கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினோம். 

ஊருக்கு வந்த இரண்டு பசங்களோடு காலேஜ் பத்தி பேசுவதே வேலையாக இருந்தது. ஒரு வாரம் பொருத்து வீட்டுக்கு அகிலன், தயா, ரமேஷன், ஜான் என வந்திருந்தனர். ஜாலியாக ஓடியது. அடுத்த வாரம் அகிலன் வீட்டுக்கு முடிவு செய்து கிளம்பினார்கள். 

தினமும் போன் செய்யும்போதுயெல்லாம் ப்ரியாவே போனை எடுத்தாள். என் மீதான கோபத்தை மறந்திருப்பது அவள் குரலில் தெரிந்தது. அந்த வாரம் வெள்ளிக்கிழமை கவிதாவை சந்தித்தபோது, முன்னமாதிரியில்ல இப்ப கொஞ்சம் பேசறா என்றாள். 

அகிலன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போனபோது, வீட்ல எங்க லவ் மேட்டரைப்பத்தி சொன்னன். எங்கப்பா தான் குதிச்சாரு. எங்கம்மா தான், ஒரே பையன் ஏதோ ஆசைப்பட்டுட்டான். அவன் என்ன வேற சாதி பொண்ணயா பாத்துயிருக்கான். நம்ம ஜாதி ஜனத்துல தான் பாத்துயிருக்கான். அவன் சொன்ன ஊர்ல நம்ம வடக்கால தெரு காமாட்சியக்கா பொண்ண தந்துயிருக்காங்க. அந்த பொண்ணுக்கிட்ட கேட்டு நல்ல குடும்பமாயிருந்தா அந்த பொண்ணயே பேசி முடிங்கன்னு சொன்னாங்க. எங்கப்பா அப்பவும் அடம்புடிச்சாரு. நான் இரண்டு நாள் சாப்பிடாம அடம் புடிச்சதும் சத்தியா வீட்லயும் போய் பேசிட்டு வந்துட்டாங்கடா. ஜீலையில கல்யாணம் பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டாரு. எங்க தவுட்டு மில்லயும், நிலத்தயும் பாத்துக்கிட்டு இருக்க வேண்டியது தான் ரமேஷ். 

நாயே இவ்ளோ நடந்திருக்கு. ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்மில்ல என தயா கோபப்பட்டான். 

நேர்ல பாக்கும்போது சொல்லலாம்மேன்னு இருந்தன். 

நம்ம கேங்க்ல முதல் ஆளா கல்யாண சாப்பாடு போடப்போறன். நீ எப்படா என தயாவிடம் ஜான் கேட்டான். 

எங்க வீட்ல சொன்னன். வேற ஜாதின்னு ஒத்துக்கல. மீனா வீட்டுக்கு எதுவும் தெரியாது. என்ன பண்றத்துன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கன். 

இந்த பிரச்சனையெதுவும் எனக்கு கிடையாது. எங்கக்கா பொண்ணு மீனாட்சி காத்துக்கிட்டு இருக்கா. வர்ற கார்த்திகையில கல்யாணம் மாப்ள.

அடுத்தடுத்து கல்யாண சாப்பாடு போடறிங்களேடா என ஜான் அன்று வீட்டுக்கு புறப்படும் வரை கலாய்த்தான். 

மறுநாள், ப்ரியாவிடம் பேசியபோது, கல்யாணம் பிக்ஸாகிடுச்சி. வீட்டுக்கு பத்திரிக்கை எடுத்து வர்றன் என்றாள். மூன்று நாளுக்கு பின் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தபோது ப்ரியாவும், தேவியும் ஸ்கூட்டியில் அழைப்பிதழோடு வீட்டுக்கு வந்தார்கள். 

குடும்பத்தோடு வந்துடனும் என்றபடியே அப்பா, அம்மாவிடம் பத்திரிக்கை தந்த ப்ரியாவிடம், பத்திரிக்கையை புரட்டியபடியே மாப்பிளை என்னம்மா பண்றார் என கேட்டார் அப்பா.  

அவர் பெங்களுரூல சாப்ட்வேர் இன்ஜீனியரா இருக்கார். வீட்டுக்கு ஒரே பையன். 

உன் நல்ல மனசுக்கு நீ எங்கப்போனாலும் நல்லாயிருப்ப என அம்மா அவளை வாழ்த்தினார்கள். 

அவன் ரூம்ல இருங்க காபி எடுத்துவர்றன் என்றபடியே அம்மா அடுப்பங்கறைக்கு போனார்.  

மாடியில் இருந்த எனது அறைக்கு இருவரும் வந்தனர். டேபிள் மேல் ப்ரியாவின் திருமண அழைப்பிதழ் இருப்பதை கண்டு இருவர் முகத்திலுமே குழப்பம். 

நேத்து தான் பத்திரிக்கையே கைக்கு வந்தது. இன்னைக்கு தான் தர ஆரம்பிச்சோம் அதுக்குள்ள உனக்குயெப்படி, யார் தந்தது, என அழைப்பிதழை காட்டி கேட்டாள் ப்ரியா. 

இங்கப்பாரு. நீ என்னோட ஸ்பெஷல் ப்ரண்ட். உலகத்தல நீ ரொம்ப முக்கியம். நீ இந்த உலகத்தல எந்த பகுதிக்கு போனாலும் உன்னை நான் பாலோ பண்ணிக்கிட்டு தான் இருப்பன். உனக்காக நான் எதையும் செய்வன். 

அதிருக்கட்டும். இத யார் தந்தது?. கவிதா வந்தாளா?. 

இல்ல. ப்ரண்ட் ஒருத்தர் தந்தாரு. 

அதான் யாரு?. 

சொன்னா தெரியாது விடு என்றதும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானால். கல்யாணத்துக்கு வந்துடு எனச்சொல்லிவிட்டு கிளம்பினார்கள். 

கல்யாண வீடு கலை கட்டியிருந்தது. உறவுக்காரர்கள் எல்லோரும் வந்திருந்தனர். மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் இருந்தனர். தடபுடலாய் கல்யாணம் ப்ரியாவுக்கு தேவிதான் தோழிகளுள் ஒருத்தியாய் இருந்தாள். ப்ரியாவுடன் இருந்த மூன்று, நான்கு பெண்கள் மாடர்ன் ட்ரஸ்சில் கண்ணெ பறிக்கும் அழகில் இருந்தார்கள். ஆனாலும் ப்ரியாவுக்கு பயந்து ஒதுங்கியே இருக்க வேண்டியதாய் இருந்தது. அடிக்கடி கவிதா, என் பக்கம் வந்து அவளுங்கக்கிட்ட ஜொல் விட்ட அவ்ளோ தான் என மிரட்டிவிட்டு போனால். 

ஜான், சந்தர்பம் கிடைக்கும் போதுயெல்லாம் தேவியோடு காணாமல் போனான். கல்யாணத்துக்கு எங்களுடன் படித்த நண்பர்கள் பலர் வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் தயா, அகிலன், ரமேஷ் உட்பட பலரும் புறப்பட்டுயிருந்தனர். மண்டபத்தை விட்டு வீட்டுக்கு வந்ததும் ப்ரியா அம்மா தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் என்னையும், ஜானையும் ப்ரியாவோட ப்ரண்ட்ஸ் என அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 

அப்படித்தான், மாப்பிளையிடமும் என்னை அறிமுகப்படுத்தினார்கள். குல்யாணத்தலயே பாத்தனே. ஏதோ அவுங்களுக்கே கல்யாணம் மாதிரி நிறைய வேலை செய்தாங்க. நண்பர்கள்ன்னா இப்படி இருக்கனும் என்றவர். நீங்க வீட்டுக்கு வரனும். அது உங்க வீடு மாதிரி என்றார். 

பரவாயில்ல சார். 

திருமணம் முடிந்து ப்ரியா பெங்களுர் புறப்பட்டபோது, தனியா சந்திக்கனும் என கேட்க தேவி வீட்டில் சந்தித்தபோது, கண் கலங்கினால். அப்பா அம்மாவ நீ தான் பாத்துக்கனும். அடிக்கடி வீட்டுக்கு போய் அவுங்கள பாத்துட்டு போ. நான் உன்னத்தான் நம்பறன்.

ம். நான் பாத்துக்கறன் என கண்ணீரோடு சரியென்றேன். 

தினமும் ப்ரியாவிடம் பேசிய நான் தற்போது பேச முடியாமல் இருப்பது ஏதோ சூன்யமாக இருந்தது. கவிதாவிடம் கேட்டபோது நல்லாயிருக்கா என்றாள். 

ப்ரியாவுக்கு திருமணம் முடிந்து மூன்று வாரம் முடிந்திருக்கும் ஒருநாள் மதியம் வீட்டில் இருந்த போன் மணியடித்தது. எடுத்தபோது, எதிர் முனையில் ப்ரியா தான். 

எப்படி இருக்கிங்க?. 

நல்லாயிருக்கன். 

நீ எப்படி இருக்க?

ம். நல்லாயிருக்கன்.

சார் எப்படி இருக்கார்?. 

அவர்கிட்டயே பேசு என்றபடி போனை தர. எதிர் முனையில் ஹலோ ராஜ் எப்படி இருக்கிங்க. 

நல்லா இருக்கன் சார்;. நீங்க எப்படி இருக்கிங்க?. 

நல்லாயிருக்கன். மேடம் உங்களப்பத்தி நிறைய சொன்னாங்க. பொறாமையா இருக்கு. 

எதுக்கு சார். 

உங்க நட்பை நினைச்சி தான். 

அமைதியாக இருந்ததும். காலேஜ் தான் முடிஞ்சி லீவ்ல தானே இருக்கிங்க. வீட்டுக்கு வாங்க. 

பரவாயில்ல சார். 

அட. என்ன சொல்லுவோம்மோன்னு பயப்படாதிங்க. உங்க வீடு மாதிரி. அதேமாதிரி நீங்க எப்ப வேணும்னாலும் போன் பண்ணலாம் என்றவர் தன் மொபைல் எண்ணையும் தந்தவர் ப்ரியாக்கிட்ட பேசுங்க என போனை தந்தார். 

போன் பண்ணு என வீட்டில் இருப்பவர்கள் பற்றி நலம் விசாரித்தவர் முடிஞ்சா ஊருக்கு வந்துட்டு போ. 

நான் பெங்களுர் இதுவரைக்கும் வந்ததுயில்ல. முடிஞ்சா வர்றதுக்கு பாக்கறன் எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

காலேஜ் ரிசல்ட் வந்திருந்தது. பஸ்ட் கிரேடில் பாஸ் செய்திருந்தேன். ஜானும் அப்படியே. அகிலன், ரமேஷ்சும் பாஸ் செய்திருந்தனர். தயா மட்டும் ஒரே ஒரு அரியர் வைத்திருந்தான். 

மற்ற மூவரும் இனி படிக்கல என்றான்கள். எனக்கோ மனதில் படிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தது. ஜான் தான் மச்சான் கரஸ்பான்ட்ல படிக்கலாம். இப்பவே ஏதாவது கம்பெனியில வேலைக்கு ஜாயின் பண்ணிடலாம்டா. எங்கப்பா அவருக்கு தெரிஞ்ச கம்பெனியில அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலைக்கு சேர்த்துவிடறன்னு சொல்லியிருக்காரு. நீ ஊன்னு சொன்னன்னா உனக்கும் சேர்த்து கேட்க சொல்றன்டா. 

எங்கப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்றன்டா?. 

வீட்டுக்கு வந்து அவரிடம் பாஸ் பண்ணதை சொல்லி ஜான் சொன்னது பற்றி கேட்டதும் உனக்கு எது இஸ்டம்மோ அதையே செய்ப்பா என்றார். 

ஜான் வீட்டுக்கு போன் செய்தபோது, அவன் அப்பா தான் எடுத்தார். ப்பா நான் ராஜா பேசறன். 

சொல்லுப்பா எப்படி இருக்கற. 

நல்லாயிருக்கன்ப்பா. 

பாஸ் பண்ணிட்டன்னு சொன்னான். என்ன பண்ணப்போற. 

ஜான்க்கு பாத்தமாதிரி எனக்கும் ஏதாவது வேலையிருந்தா பாருங்கப்பா. 

ரெண்டு பேரும் வேலை பாக்கறதும் ஒன்னா பாக்கறதுன்னு முடிவுப்பண்ணியாச்சா……… ம். நான் பாத்துட்டு சொல்றன்ப்பா. 

தேங்ஸ்ப்பா எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

போனை வைத்துவிட்டு மாடியில் உள்ள ரூம்மை நோக்கி நடந்தபோது போன் மணியடித்தது. 

போனை எடுத்தபோது, நான் தான் பேசறன் என்றபோதே அது கவிதா என கண்டுபிடித்திருந்தேன். 

ஹேய்……. எப்படியிருக்கற. 

நல்லாயிருக்கன். அம்மா உங்கக்கிட்ட பேசனும் போன் பண்ணுன்னாங்க. அதான் பண்ணன்.

என்னத்துக்கு. 

இரு அம்மாக்கிட்டயே தர்றன் கேளு. 

…………………..

என்னப்பா எப்படி இருக்கற. 

நல்லாயிருக்கம்மா. 

ஒன்னும்மில்லப்பா, ப்ரியாவ பாக்க அடுத்த வாரம் பெங்களுர் போகலாம்ன்னு முடிவுப்பண்ணோம். ப்ரியாத்தான் உன்னயும் அழைச்சி வரச்சொன்னா. 

வர்றியாப்பா. 

திடீரென்று கேட்டதும் என்னசொல்வது என தெரியாமல். தட்டு தடுமாறி இல்லம்மா. நெல் அறுக்கற வேலை இருக்குன்னு அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதனால அவரை கேட்டு பாத்துட்டு தான் வரனும். கேட்டு சொல்றம்மா. 

நிலம்ன்னு இருந்தா எல்லா நாளும் வேலை இருக்கத்தான் செய்யும். அதனால கேட்டுக்கிட்டு வரப்பாருப்பா. நாளைக்கு போன் பண்றன் என்னன்னு சொல்லுப்பா. 

சரிம்மா என போனை வைத்துவிட்டேன். 

போலாமா, வேணாமா என மனம் குழம்ப ஆரம்பித்தது. நண்பன்னா ஒரு லிமிட் இருக்கு. புதுசா கல்யாணம்மாகியிருக்கு. நாம போய் அவுங்க மாமனார்-மாமியார் ஏதாவது நெனைச்சிக்கிட்டா அது நல்லா இருக்காது. அதனால நாளைக்கு போன் பண்ணா வரலன்னு சொல்லிட வேண்டியதுதான் என முடிவு எடுத்தபோது மீண்டும் போன் மணி அடித்தது. 

எடுத்து ஹலோ என்றதும், உன் மனசுல பெரிய இவருன்னு நினைப்பா என கோபத்தில் எதிர் முனையில் வந்த வார்த்தைகளை கேட்டதும் கவிதா என்பது புரிந்தது. 

ஊருக்கு போய்ட்டு வரலாம்ப்பான்னு அம்மா கேட்டதுக்கு அப்பாக்கிட்ட கேட்டு சொல்றன்னு பெருசா பில்டப் தந்து சொல்லியிருக்க. 

வேற என்ன சொல்றது. 

மூஞ்சப்பாரு. ஒருவாரம் ஜாலியா உன்னோட இருக்கலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கன். அதனால ஒழுங்கு மரியாதையா நாளைக்கு அம்மா போன் பண்றப்ப ஊருக்கு வர்றன்னு சொல்ற. இல்லன்னா அவ்ளோ தான். 

ஏய். 

நாமயென்ன டூரா போறோம். உடனே கிளம்பி வர்றதுக்கு. போறது உங்க அக்கா வீட்டுக்கு. அங்கயிருக்கவங்க யார் இவன்னு கேட்டா என்ன சொல்றதாம். அதனால நான் வரல. 

அதெல்லாம் அங்கப்போய் பாத்துக்கலாம். 

இல்ல சரிவராது. 

நீ வர்ற அவ்ளோ தான் என போனை டொக்கென வைத்துவிட்டாள். 

இவ வேற என யோசித்தபடியே உட்கார்ந்திருந்தேன். 

எந்த கோட்டைய புடிக்கபோற என அம்மா கேட்டபடி வெளியே இருந்து சமையல் கட்டுக்கு போனார். பின்னாடியே போய் ப்ரியா அவுங்கம்மா போன் பண்ணாங்க. ப்ரியாவ பாக்க ஊருக்கு போறாங்களாம். நீயும் வாப்பான்னு கூப்படறாங்க. 

சும்மாதானே இருக்கற பெங்களுர நீயும் பாத்ததுயில்ல போய்ட்டு தான் வாயேன்டா. 

இல்லம்மா. ப்ரியா மாமனார் வீட்ல ஏதாவது நினைச்சிக்கிட்டா. 

அவுங்கள கல்யாணத்தல பாத்தனே. எனக்கென்னவோ நல்லவங்களா தான் தெரிஞ்சாங்க. எதுவும் சொல்லமாட்டாங்கன்னு நினைக்கறன். 

அப்படின்னா அப்பாக்கிட்ட சொல்லி ஒரு இரண்டாயிரம் பணம் வாங்கித்தா. 

இங்கயிருக்கற பெங்களுர்க்கு எதுக்குடா இரண்டாயிரம். 

ஒரு வாரம் இருக்கபோறாங்களாம். என் கைல காசுயிருந்தா தானே மரியாதை. 

நீ சொல்றது சரிதான். ஆனா அப்பாவ கேட்ட அவ்ளோ தரமாட்டாரே. 

நீ கடனா வாங்கித்தா. நான் வேலைக்கு போனதும் சம்பளம் வாங்கித்தந்துடறன். 

வேலைக்கே போகல அதுக்குள்ள சம்பளத்த பத்தி பேசற. எல்லாம் கொழுப்புடா.

அப்போது அப்பா மதிய சாப்பாட்டுக்கு உள்ளே வர. அம்மாவிடம் சைகை மூலமாக காசு கேளும்மா எனச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன். 

என்னடீ நீயும் உம்புள்ளயும் ஏதோ பேசிக்கிட்டுயிருந்திங்க. நான் வந்ததும் ஏதோ சொல்லிட்டு போறான். என்னவாம் உன்புள்ளக்கி. 

ஊருக்கு போறானாம். காசு இரண்டாயிரம் வேணும்ன்னு கேட்கறான். 

ஏங்க. 

அதான் அவன் கூட படிச்ச பொண்ணு. இப்ப கல்யாணத்துக்கு கூட போயிருந்தமே. அந்த பொண்ணு பெங்களுர்ல இருக்காம். அந்த பொண்ணோட அப்பா அம்மா பாக்க போறாங்களாம். இவனையும் கூப்டுயிருக்காங்க. போய்ட்டு வர்றன்னு சொல்றான். 

படிச்சிட்டு வேலைக்கு போகாம. ஊர் சுத்த போறானா?. 

இப்ப தானே காலேஜ் முடிஞ்சது. கொஞ்ச நாள் சும்மாயிருக்கட்டும். வேலைக்கு போறப்ப போவான். நீங்க சும்மா அவனை திட்டாதிங்க. 

அவனை ஏதாவது சொன்னா உனக்கு தான் வாய் நீளுது என்றவர் சாப்பிட்டு விட்டு எழுந்தவரை பார்த்து, அவன் கேட்டா என்ன சொல்றது. 
அவனை வீட்ல இருக்கச்சொல்லு. காசுயெல்லாம் தரமுடியாது. 

எம்புள்ள எங்கயாவது நாலு இடத்துக்கு போய் வரட்டும்ன்னா உங்களுக்கு புடிக்காதே. ஓத்த புள்ளய பெத்து வச்சியிருக்கு. அவனை எப்பவாவுது சந்தோஷமா இருக்க விடறிங்களா?. ஊர்ல போய் பாருங்க. அவன் வயசு பசங்க என்னன்ன பண்ணுதுங்கன்னு. என் புள்ள என்ன குடிக்கவா காசு கேட்கறான். என் இப்படி இருக்கிங்க என விசும்ப.

இப்ப எதுக்குடீ சினுங்கற. 

உங்கள கல்யாணம் பண்ணதுக்கு அழுவத்தான் முடியும் வேற என்னத்த பண்றத்து. எல்லாம் என் தலைவிதி. 

ஏய் சும்மாயிருடீ எனச்சொல்லிவிட்டு வராண்டாவுக்கு வந்தவர் என்னை பார்த்தவர் நின்றார். 

தொடரும்……………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக