திங்கள், ஜூன் 03, 2013

கலைஞர் - 90 வயது இளைஞர்.ஏசி அறையில் உட்கார்ந்துக்கொண்டு ஃபைல் புரட்டுபவர்களே மாலையானதும் அப்பாடா எவ்வளவு வேலை என அலுத்துக்கொள்கிறார்கள். தினமும் விடியற்காலை எழுந்து யோகா செய்துவிட்டு, அன்றைய தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்தும் வாசித்துவிட்டு அதுப்பற்றி பேச வேண்டும் என்றால் அந்த காலை நேரத்திலேயே சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசிவிட்டு சி.ஐ.டி காலணி வீட்டில் இருந்து கோபாலபுரம் வந்து உணவு உண்டுவிட்டு அறிவாலயம் சென்று கட்சி நிகழ்வுகள், சந்திப்புகள், உலக அரங்கில், இந்திய அளவில், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி தன் கருத்தை செய்தியாளர்களிடம் பதிவு செய்துவிட்டு மதிய உணவுக்கு பின் முரசொலி வழியாக உடன்பிறப்புகளுக்கு கட்டுரை எழுதிவிட்டு மீண்டும் இல்லம் திரும்பி, உறங்க செல்லும் போது இரவு 11 மணியை தாண்டிவிடுகிறது. இதில் எத்தனை எத்தனை பணிகள். ஆட்சியில் இருக்கும் போது இதைவிட கூடுதல் பணிகள். ஆனால் எப்போதும், எதற்காகவும் சோர்ந்ததில்லை. அவரது உடலுக்கு வேண்டுமானால் வயது 90 ஆகியிருக்கலாம். ஆனால் அவர் மனம் என்றும் 16 தான். அத்தனை சுறுசுறுப்பு. தேனீயே இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனச்சொன்னால் மிகையாகாது.

இந்த உழைப்பு இன்று நேற்றல்ல அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே தொடங்கியுள்ளது. 14 வயதில் கையெழுத்து பிரதி நடத்தியது முதல் அவரது சுறுசுறுப்பு தொடங்குகிறது. பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, சினிமாக்காரர், அரசியல்வாதி, குடும்பதலைவர், ஆட்சியாளர் என பல பரிமாணங்கள் அவரிடம் உண்டு. பலரும் சொல்வதைப்போல அவர் அரசியல்வாதியாக இல்லாமல் சினிமாக்காரராக மட்டும் இருந்திருந்தால் அவரது கதை, திரைக்கதை, வசனத்துக்கு நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளை வாங்கியிருப்பார். இலக்கியவாதியாக மட்டும் இருந்திருந்தால் இந்தியாவின் மிக முக்கிய இலக்கியவாதியாக இருந்திருப்பார். அவர் அரசியல்வாதியாக இருப்பதால் அவரின் சாதனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அரசியலிலும், ஆட்சி நிர்வாகத்திலும் இவரைப்போன்று ஒரு அரசியல்வாதி இனி இந்த தமிழ் மண்ணில் பிறக்க முடியாது. அரசியல் வாழ்க்கைக்கு வந்தபோது திராவிடர் கழகத்திலாகட்டும், திராவிட முன்னேற்ற கழகத்திலாகட்டும் அந்த காலத்து சாதி அரசியலில் இவரை விட மேல்சாதியினர் என அழைத்துக்கொண்டு பலர் கோலோச்சினர். அவர்கள் மத்தியில் தன்னை உழைப்பால் வளர்த்துக்கொண்டவர் கலைஞர். ஜனநாயக பூர்வமான விவாதத்துக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எங்கும் கலைஞர் தடையாக இருந்ததில்லை என்பதே வரலாறு. இவரைப்போல் நிச்சயம் சோதனைகளை சந்தித்த அரசியல்வாதிகள் யாரும்மில்லை. சோதனைகள் என்னும் கடலில் நீந்தி சாதனைகள் படைத்தவர் இவர். இவருடைய சாணக்கிய தனம் இல்லாமல் போயிருந்தால் திமுக அழிக்கப்பட்டுயிருக்கும்.

இந்திய அரசியலில் விமர்சனங்களை அதிகம் எதிர்க்கொண்டவர் யார் என்றால் அது கலைஞர் தான். கருணாநிதியின் தலைக்கு கோடி ரூபாய் பரிசு அறிவித்த வடநாட்டு சாமியரையும் பொருட்படுத்தவில்லை, நடிகை குஷ்புவுடன் இணைத்து எழுதிய கட்டுரையையும் அவர் பொருட்படுத்தவில்லை. தரம் தாழ்ந்த மாற்று விமர்சனத்துக்கும் அவர் பேனா மட்டும்மே பதில் சொல்லும். இதை இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியிடமும் காண முடியாது. விமர்சித்தவர்கள் பிரச்சனை என வந்தாலும் தயங்காமல் உதவுபவர் கலைஞர்.

விஞ்ஞான வளர்ச்சியில் ஃபேஸ்புக்கில் உலவும் கலைஞரை படுமட்டமாக விமர்சனம் செய்தார்கள். மற்ற கட்சி தலைவர்கள் போல் அவர்கள் மீது புகார் தரவில்லை. அபத்தமான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு நியாயமான கேள்விகளுக்கு பதில் மட்டுமே இன்றளவும் தந்து வருகிறார்.

47 வயதில் திமுக தலைவர் என்ற பதவியில் அமர்ந்தவர் 90 வயது வரை அந்த பதவியில் வீற்றுள்ளார். 1952ல் தனது 37வது வயதில் சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர் 12வது முறையாக தோல்வியே காணாமல் வெற்றியை மட்டுமே சுகித்து கொண்டு இருக்கிறார். ஐந்து முறை முதலமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளார். 2006 தேர்தலுக்கு பின் பின்னரவில் அதிகாரத்தில் இருந்த ஜெ போட்ட உத்தராவல், கலைஞர் கைது செய்யப்பட்டபோது இந்தியாவே அதிர்ந்தது. அப்போது மைய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்திருந்தது. அதிமுக ஆட்சியை கலைக்க பி.ஜே.பி தலைமையிலான மைய அரசு முடிவு செய்தது. அப்போது எதிர்கட்சி தலைவியாக இருந்த சோனியாவும் ஒப்புக்கொண்டார். மாநில ஆட்சியை மைய அரசு தன் அதிகாரத்தை கொண்டு கலைப்பதை எதிர்ப்பது எங்கள் கட்சியின் கொள்கை. கொள்கையை விட்டு தரமுடியாது அதனால் ஆட்சி கலைப்புக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என கொள்கைக்காக எதிர்கட்சியான ஜெ ஆட்சியை கலைக்காமல் தடுத்தவர் கலைஞர். அவரை, கட்சியின் தலைவர்களை, தன் மகளை அடித்த, கொச்சைப்படுத்திய அதிகாரிகளை மன்னித்தவர் கலைஞர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தி கலைஞர் தான். எமர்ஜென்சிக்கு பின் தோல்வியில் துவண்டு கிடந்த இந்திராவை நோக்கி, நேருவின் மகளே வா நிலையான ஆட்சி தா என இந்திராவுடன் கூட்டணி வைத்தவர், ஜனதா என்ற அமைப்பு உருவாகி ஆட்சியில் உட்கார காரணமானவர். வாஜ்பாய் பிரதமராகவும், சரிந்து கிடந்த காங்கிரஸ்சை ஆட்சியதிகாரத்தில் உட்கார வைத்தவர் கலைஞர். பிரதீபாபட்டீல், பிரணாப் என இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்.

2ஜீ ஊழல், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நடத்திய கொள்ளை போன்ற பல காரணிகளால் ஆட்சியதிகாரத்தை திமுக இழந்து இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கூட இல்லாமல் இருந்தாலும் 2014 நாடாளமன்ற தேர்தலில் திமுக எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் என மில்லியன் டாலர் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கிறது பல மாநில கட்சிகள். காரணம், பாராளமன்ற தேர்தலில் இவர் எங்கு இருக்கிறாறோ அந்த பக்கம் தான் வெற்றி காற்று வீசும் என்பது வரலாறு. நம்பகமான அரசியல் தலைவர். பாதியில் ஆட்சியை கவிழ்க்கமாட்டார்.

மதவாத கட்சியான பி.ஜே.பியோடு கூட்டணி வைத்தாலும் அதை நியாயப்படுத்துவதில் வல்லவர். துரோக கட்சியான காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமன் செய்பவர் கலைஞர் ஒருவர் தான். அவரை தவிர வேறு யாராலும் அதை செய்ய முடியாது.

சோதனைகள் இன்று பல திமுகவை கூ+ழ்ந்து ஆட்சி, அதிகாரம் கொண்டு மிரட்டினாலும் எத்தனை பெரும் சக்தியையும் எதிர்க்கும் ‘வல்லமை’ கலைஞரிடம் மட்டுமே உள்ளது. அந்த வல்லமை அவரது உழைப்பு. இந்த 90வது பிறந்தநாளிலும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்வார் ஏன் எனில் அவர் கலைஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக