புதன், ஜூன் 19, 2013

மோடி….. தத்தளிக்கும் பி.ஜே.பி என்ற கப்பல்.



தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாரதிய ஜனதா கட்சி. அதன் பிரதான கூட்டாளி ஐக்கிய ஐனதா தளம். கூட்டணியின் ஒருங்கிணைப்பார் ஐக்கிய ஐனதா தளம் கட்சி தலைவர் சரத்யாதவ். இந்த இரு கட்சிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகால கூட்டணி பந்தம் இருந்து வந்தது. கடந்த வாரம் ஐக்கிய ஐனதா தளம் கூட்டணியில் இருந்து வெளியேறி 17 ஆண்டுகால கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பீகாரில் இரண்டு கட்சிகளும் தான் கூட்டணியாக ஆட்சி அமைத்திருந்தன. கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பி.ஜே.பியின் 11 அமைச்சர்களை நீக்க கவர்னரிடம் கடிதம் தந்துள்ளார். கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்கச்சொல்ல 19ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நான்கு பேரின் ஆதரவோடு நிதிஷ் பெரும்பான்மையை நிருபித்துவிட்டார். காங்கிரஸ் துணை நின்று தன் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தன் ஆதரவை தந்துள்ளது.

17 ஆண்டு கால கூட்டணியை உடைத்துக்கொண்டு போக காரணம் நரேந்திரமோடி என குற்றம்சாட்டுகிறது ஜனதா தளம். 2014 நாடாளமன்ற தேர்தலை நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டது பி.ஜே.பி. கூட்டணி கட்சிகளுக்கும் சொன்னது. இதற்கு ஐக்கிய ஐனதா தளம் கடும் எதிர்ப்பு காட்டியதோடு கூட்டணியில் இருந்து விலகுவோம் என எச்சரித்தது. ஆர்.எஸ்.எஸ்., வீ.எச்.பி போன்ற பரிவார அமைப்புகள் நரேந்திரமோடி தான் என்பதில் உறுதியாக இருந்தன.

ஐக்கிய ஜனதா தளம் சிறுபான்மையின வாக்குகளால் தான் இரண்டாவது முறையாக பீகாரில் வெற்றி பெற்றுள்ளது. மோடி பிரதமர் என பிரச்சாரம் செய்தால் எம்.பி தேர்தலில் தோல்வி தான் வரும் என எண்ணுகிறார் நித்திஷ். அதனால் மோடியை எதிர்க்கிறார். இது வாக்கு பயமே தவிர மோடியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம்மில்லை. மோடி சிறந்த நிர்வாகி பிரதமராக அனைத்து தகுதிகளும் உள்ளது என கோத்ரா கலவரத்துக்கு பின் திருவாய் மலர்ந்தவர் தான் நித்திஷ்.

இதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது காங்கிரஸ். மோடியை முன்னிலைப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி தேர்தலை சந்தித்தால் வெற்றி என்பது எட்டாக்கனி என்பது காங்கிரஸ் எடுத்த சர்வேயில் வந்த தகவல். அதனால் பி.ஜே.பி தலைமையில் வலிமையான கூட்டணி அமையால் ஒரு புறம் சதுரங்க ஆட்டத்தை தொடங்கியது காங்கிரஸ். மற்றொரு புறம் மோடி இந்துத்துவாவாதி, சிறுபான்மை மக்கள் இந்தியாவில் வாழவே முடியாது என்ற பிரச்சாரத்தை செய்ய தொடங்கியது. இருந்தும் காங்கிரஸ் மீதான ‘அனைத்து மட்ட எதிர்ப்புகள்’ மோடிக்கு ஆதரவாக வேலை செய்கின்றன. மோடிக்கு உட்கட்சியிலும் எதிர்ப்புகள் இருப்பதை கண்டன. மோடியை முன்னிறுத்தும் காவி தலைமையும் இவைகளை உன்னிப்பாக கவனித்தன.

மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தால் தானே பிரச்சனை என கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சி கோவாவில் நடத்திய நிர்வாக குழு கூட்டத்திற்க்கு பின் நாடாளமன்ற பிரச்சாரக்குழு தலைவராக மோடியை அறிவித்தது. எதிர்பார்த்த படியே பிரச்சனைகள் வந்தன. முதலில் பிரதமர் கனவில் இருந்த முன்னால் துணை பிரதமர் அத்வானி எதிர்ப்பு காட்டி தன் பதவிகளை ராஜினாமா செய்தார். ஆர்.எஸ்.எஸ் முதல் பல்வேறு பரிவாரா அமைப்புகள் சமாதானம் பேசி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்து ஒய்ந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு போய்விட்டது.

கூட்டணியை முறித்துக்கொள்ளும் முன் காங்கிரஸ்சோடு மறைமுக பேச்சை துவங்கியிருந்தது ஐக்கிய ஜனதா தளம். பீகார்க்கு சிறப்பு நிதி தந்து கூட்டணிக்கு கை குலுக்கிய காங்கிரஸ் பி.ஜே.பி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் காங்கிரஸ் ஆதரவு தரும் என நம்பிக்கை தந்தது. பி.ஜே.பியை விட காங்கிரஸ் தான் சேப் என தாவ நேரம் பார்த்தது ஜனதா தளம். மோடி நியமன அறிவிப்பு வெளியே வந்ததும் அதையே காரணம் காட்டி கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. ஜனதா தளம் பற்றி பி.ஜே.பி கவலைப்படவில்லை. மோடி விவகாரத்தில் இனி பேச ஒன்றும்மில்லை என உறுதியாக சொல்லிவிட்டது.

9 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் விலையேற்றம், ஊழல் போன்றவற்றால் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளது. மக்கள் மனதில் கோபமாக உள்ளது. இதனை பி.ஜே.பி போன்ற எதிர்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு வலிமை பெறக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஓவ்வொரு மாநிலத்திலும் வலிமையாக உள்ள கட்சிகளை பி.ஜே.பி தலைமையில் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்கிறது. என்னுடன் கூட்டணிக்கு வா அல்லது தனித்து நில் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. அதோடு, மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக பணியாற்றுகிறது.


மூண்றாவது அணி அமைக்கும் முயற்சியில், சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங், ஜெ போன்றோர் உள்ளனர். இதன் மூலம் அதிருப்தி வாக்குகள் மூன்றாவது அணிக்கு செல்லும் இதனால் தான் சுலபமாக வெற்றி பெற்று  விடலாம் என எண்ணுகிறது. பி.ஜே.பி இதனை புரிந்துக்கொள்ளாமல் மோடி என்கிற மாய மந்திரமே போதும் என எண்ணுகிறது. காங்கிரஸ்க்கு எதிர்ப்பாக வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் உள்கட்சி பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

கப்பலுக்கு கேப்டன் இல்லையென்றால் தான் சிக்கல். ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்பு ஒரு கப்பல் தத்தளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக