ஞாயிறு, ஜூன் 16, 2013

விலைவாசி உயர்வு. ஆபத்தை நோக்கி எதிர்காலம்.விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஆண்டுகள் மாற மாற விலைவாசி உயர்வு இருக்கத்தான் செய்யும். ஆனால் கடந்த ஐந்து விலைவாசி உயர்வு என்பது ஜெட் வேகத்தில் இருக்கிறது.

டீசல் விலையேற்றினால், வாகனங்களின் வாடகை உயர்கின்றன, வாகனங்களின் வாடகை உயர்ந்தால் பொருட்கள் விலைகள் உயர்கின்றன. ஒவ்வொன்றும் சங்கிலி தொடர் போல. ஒரு பொருள் உயர்ந்தால் அதனை சார்ந்த மற்ற பொருட்களின் விலையும் உயரும் என்பது இயற்கை. தற்போது உணவு பொருட்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

மளிகை பொருட்கள் முதல் காய்கறிகள் வரை உயர்ந்துக்கொண்டே வருகின்றன. ஏழை மக்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களும் இனி காய்கறிகளை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து வருகின்றன. வருங்காலத்தில் சோற்றில் தண்ணீர் ஊற்றித்தான் சாப்பிடவேண்டும் போல் இருக்கும் என நினைத்தால் அதற்கும் ஆப்பு வரும் போல. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 45 இந்த ஆண்டின் இறுதியில் 100 ரூபாயை நெறுங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த உயர்வு என்பது இனி குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எதனால் இந்த விலை உயர்வு ???????????????.

நீர் பிரச்சனை.


தமிழகம் கீழ்நிலப்பகுதி. தமிழகத்தை சுற்றியுள்ள கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்றவை மேல்நிலப்பகுதி. நமக்கு தேவையான நீர் மேல் நிலப்பகுதிகளில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் இந்த மாநிலங்கள் நமக்கான நீரை தர மறுக்கின்றன. அவர்கள் மீதும் குற்றமில்லை. நியாயமான காரணம் மழையில்லை. மனிதன் இயற்கையை அழிக்க தொடங்கியதால் மழை பொய்த்து போனது. பெய்யும் குறைந்தளவு மழை தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. அதோடு கீழ்நில பகுதிகளுக்கு நீர் அனுப்பும் பாதைகள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. மற்றொருபுறம் அரசியல் செய்யப்படுவதால் நீர் திறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் கேள்விக்குறியாக உள்ளது.

கீழ்நில பகுதிகளில் அணைகள் பலயிருந்தாலும் அதற்கு தேவையான நீர் வராத அளவுக்கு நீர் வழி பாதைகள் அடைக்கப்பட்டு வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும், அரசாங்க கட்டிடங்களாகவும் உருவமாறிவிட்டன. சராசரி மழையளவு குறைந்ததால் விவசாயிகள் தண்ணீர்க்காக நிலத்தடி நீரை உறிஞ்ச தொடங்கினர். பற்றாக்குறை தொடங்கியது.

தொழில்துறை முன்னோக்கி, விவசாயம் பின்னோக்கி.

இந்தியாவின் அடிப்படையே விவசாயத்தை நம்பி தான். 70 சதவிதம் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளார்கள். ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் விவசாயத்துக்கு முன்னுரிமை தரவேயில்லை. சுதந்திரம் அடைந்தது முதல் தொழில்துறையை தான் கட்டிக்கொண்டு தொங்குகின்றனர். நேரு முதல் மன்மோகன்வரை தொழில்துறைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை திட்டமிட்டே அழித்தது அரசாங்கம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை பார்த்தும் கொள்கையை மாற்றவில்லை மேலை நாட்டு அடிமைகள்.

தொழில்துறையை விவசாயத்தோடு இணைத்தார்கள். புதிய புதிய இயந்திரங்களின் வருகை விவசாயத்தை முன்னேற்றவில்லை. விவசாயத்தை அழிக்கவே செய்தது. தொழில்துறையின் வளர்ச்சி விலை நிலங்களை வாகனம் மற்றும் உதிரி பாக, இரும்பு பொருட்கள் தொழிற்சாலைகளாக, வணிக வளாகங்களாக மாறின. தொழிற் பேட்டைகள் அதிகரிப்பால் குண்டு குழியுமான சாலைகள் இருவழிப்பாதை, நான்கு வழிப்பாதை, தங்கநாற்கர சாலை என மேம்படுத்தப்பட்டன. இதனால் சாலையோர விளை நிலங்கள் எல்லாம் விலை மனைகளாக உருமாறின.

இதனால் ரியல் எஸ்டேட் தொழில் வேகவேகமாக வளர்ச்சியடைந்தன. சாலையோற நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக உருமாறியதால் இங்கு பயிர் செய்யப்பட்ட நிலக்கடலை, கரும்பு, சோளம், கம்பு போன்ற பயிர்கள் எல்லாம் நன்றாக விளையும் நிலத்துக்கு மாற்றப்பட்டன. அங்கு ஏற்கனவே விலைந்த நெல், பணப்பயிர்கள் எல்லாம் குறைத்துக்கொள்ளப்பட்டன.

கேலி செய்யப்படும் விவசாயம். 

தொழில்துறை முன்னேற்றம், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி, படிப்பு போன்றவை விவசாயத்தை ஏதோ கேவலமான தொழிலாக சித்தரிக்க வைத்துவிட்டது. ஒரு பெரும் நகரத்தில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ சேர்ந்து படித்தால் அவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் உள்ளது. நான் ஒரு விவசாயி என்றால் அவனை கேவமான ஜந்துவாக பார்க்கின்றனர் அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினரும். ஒரு சாதாரண மெக்கனிக்குக்கு இருக்கும் மரியாதை கூட விவசாயிக்கு கிடைப்பதிலை என்பதே நிஜம்.

இதுமட்டுமல்ல உழவன் கடினமாக உழைத்து மனிதனுக்கு தேவையான உணவு பொருட்களை உருவாக்கினால் அந்த பொருளுக்கான விலையை அவன் வைப்பதில்லை. இடைத்தரர்கள் தான் விலை வைக்கின்றனர். இது வேறு எந்த தொழிலிலும் கிடையாது. இதனால் விவசாயியும் தனது மகன் இந்த தொழிலுக்கே வரக்கூடாது என முடிவு செய்தே வளர்க்கப்படுகிறான். இதனால் விவசாயம் குறைந்தே வருகிறது.


வேலை உறுதி திட்டம்.

விவசாயம் செய்வது குறைந்து வந்த நிலையில் தான் அரசாங்கம் ஏழைகளை உயர்த்த, நிரந்தர வருமானத்தை உறுதி செய்கிறோம் என வேலைக்கு உணவு திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு பின் பெயர் மாற்றம் செய்து வேலை உறுதி திட்டம் என ஒன்றை கொண்டு வந்தது. அந்த திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு நூறு நாளைக்கு வேலை. கூலி 100 ரூபாய் என்றதும் மக்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு இந்த வேலைக்கு சென்றனர்.

இங்கு வேலையே செய்யாமல் கூலி வாங்கிக்கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் சோம்பேறிகாளாக மாறினர். இதனால் விவசாயம் படுத்துக்கொண்டது. கொஞ்ச நஞ்ச விவசாயிகள் விவசாயம் செய்யாமல் விட தொடங்கினர். தங்களிடம்மிருந்த பொன் விளையும் பூமிகளை ரியல் எஸ்டேட் தரகர்களிடம் விற்றனர்.

அரசாங்கம் தரும் பொய் கணக்குகள்.


2000ல் ஒரு விவசாயி 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதே விவசாயி 2005ல் 4 ஏக்கர் நிலத்தில் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதே விவசாயி 2013ல் 2 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் சம்பாதிக்கிறார். இது உண்மையா பொய்யா என கேட்டால் என்ன சொல்வீர்கள். பொய் என்று தானே சொல்வீர்கள். ஆனால் அரசாங்கம் இதனை உண்மை என்கிறது. அவர்கள் தரும் புள்ளி விவர கணக்குகளும் அப்படித்தான் உள்ளன.

இப்படி நம்முன் அரசாங்கம் திறந்த டாஸ்மாக், இலவச அரிசி, விலையில்லா பொருட்கள் என பல பிரச்சனைகள் இருந்தாலும் நம்மிடம், பேராசை, பொறாமை, சீக்கிரம் பணக்காரனாக வேண்டும், உழைக்காமலே பணம் வரவேண்டும் என்ற எண்ணம் மேல்தட்டு மக்கள் முதல் உழைக்கும் மக்கள் வரை வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சோம்பேறிகளை அதிகமாக்கியுள்ளது. கிராமங்களில் இது அதிகமாகியுள்ளது. இவைகள் மாறினால் தான் நம்மால் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் வருங்காலம் என்பது அனைத்து தரப்பினருக்கும் வேதனை தரக்கூடியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக