ஞாயிறு, டிசம்பர் 25, 2011

காதல் காற்றில் கரையட்டும்.




நானும் தான் காதலித்தேன். காதல் என்ன கத்தரிக்காயா கேட்டவுடன் கிடைத்துவிட. காலங்கள் தான் என் காதலை உன்னை ஏற்க வைத்தது. காதல் வந்தபின் மனதை மயக்கும் உன் பார்வையென்ன காது குளிரும் பேச்சென்ன. நாம் பேசிய காதல் வார்த்தைகளை அடுக்கியிருந்தால் வானத்தை தொட்டிருக்கும். 

எத்தனை எத்தனை நாட்கள் உன் கை கோர்த்து நடந்திருப்பேன். என் தோள் சாய்ந்து நீ உடன் வரும்போது வானம்மே என் காலடியின் கீழ் இருந்தது. என்னை காணும் போதெல்லாம் நீ ப+வாய் மலர்ந்திருப்பாய்.  உன்னை காணவரவில்லை என்றால் அந்த கோடைகால சூரியனுக்கே அக்னியை கடன் தருவாய். 

உன் பாதங்களில் நான் கோலமிட்டபோது என் முதுகில் வரிப்போட்டவள்; நீ. ஆனால் உன் இதழ்க்கு நான் ஒத்தடம் தந்தபோது காந்தமாய் ஒட்டினாய். 

பிரிவுக்கே பிரியாவிடை தருவோம் என்றாய். எத்தனை வேகமாய் என்னை விட்டு பிரிந்துவிட்டாய். காதல் நினைவுகளை காற்றில் கரைத்துவிடு காலமெல்லாம் அது தென்றலாக வீசட்டும். 

புதன், டிசம்பர் 21, 2011

பணமிருந்தால் எதையும் செய்யலாம்…………


இளம் சாமியார் நித்தியானந்தாவை தமிழகம் மறக்க முடியாது. நான் சன்னியாசி, முற்றும் துறந்தவன் என பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தபோது 2 ஆண்டுக்கு முன் வெளியான வீடியோ அவனது உண்மை சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பசி கொண்ட புலி புள்ளிமான் மேல் பாய்வதை போன்று பஞ்சுமெத்தையின் மீதிருந்த நடிகை ரஞ்சிதா மீத பாய்ந்தான் நித்தியானந்தா. ஆஹா இவனல்லவே முற்றிலும் துறந்த சன்னியாசி என எண்ண வைத்தது அந்த காட்சிகள்.

அவர் சாமி, எங்களை கடவுளாக்க வந்தவர் அவர் தவறு செய்திருக்கமாட்டார் என்றார்கள் அவரது பக்த சிஷ்யைகள்-சிஷ்யர்கள். முகத்தில் அடித்தார் போல் அந்த வீடியோ பதிவு உண்மை என்று கூறியது மத்தியரசின் தடவியல்துறை. அதுமட்டுமல்ல தவறு நடந்துள்ளது எனக்கூறி கர்நாடகா காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையை விட்டு ஜாமினில் வெளியே வந்தான் நித்தியானந்தா. எப்போதும் போல் ஆஸ்ரமத்தில் யாகம், பிரசங்கம் என ஆரம்பித்துள்ளான். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்க்கு தான் தான் காரணம், என் சக்தியே காரணம் என வீரபிரதாபம் பேசி வருகிறான். இன்று அவனது பேச்சு எல்லை மீறிப்போய்க்கொண்டுயிருக்கிறது.

பணம்மட்டுமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்க்கு இன்று அடையாளமாக திகழ்கிறான் நித்தியானந்தா. வீடியோ பதிவு வெளிவந்த பின் அவனது வருமானம், பக்தர்கள் கூட்டம் முற்றிலும் குறைந்துப்போய் தள்ளாடும் அவன். அவமானப்பட்டு, துகிலுறியப்பட்ட தன் உடம்பை பணம் கொண்டே மறைக்க பார்க்கிறான்.  பணத்தை வாரி இறைத்து தனது விழாக்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களை தனது பக்தர்கள் என அடையாளம் காட்டுகிறான்.

தமிழக எதிர்கட்சி அரசியல் தலைவருக்கு தருவதை விட அதிகமாக பாதுகாப்பு தந்து விழுந்து விழுந்து அவனை கவனிக்கிறார்கள் காவல்துறையினர். இந்து மதத்தின் காவலன் என தன்னை அழைத்துக்கொள்பவன், சமீபமாக தனது சாதியை சார்ந்தவர்களை அதிகம் நம்பி அவர்களை ஒரு அமைப்பாக திரட்ட முயல்கிறான். நான் தவறே செய்யவில்லை என வீரபிரதாபம் பேசுகிறான்.

பணத்தை கொண்டு சில மீடியா, அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினரை விலைக்கு வாங்கிய நித்தியானந்தம் நீதிமன்றத்தையும் வாங்க முடியுமா என பார்க்கிறான். அவன் பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம் மறைக்கலாம். மக்களின் மனதில் உள்ளதை மட்டும் எதைக்கொண்டும் மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.

திங்கள், டிசம்பர் 19, 2011

இரண்டாவது தேனிலவு முடிந்துள்ளது.




ஒரு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். சினிமா நடிகையாக இருந்து எம்.ஜி.ஆரின் படங்களில் நாயகியாக இருந்தவர் படிப்படியாக குடும்பத்தில் பின் வாசல் நாயகியாக வலம் வரத்தொடங்கினார். அப்போது அம்மு எ ஜெயலலிதாவுக்கு சினிமா கேசட் தரும் ஒரு பெண்ணாக 1983ல் சசிகலா அறிமுகமானார். ஆந்த பழக்கம் நட்பாக மாறியது. காலப்போக்கில் ஜெ இருக்கும் இடத்தில் சசிகலா இருப்பார். நிழல் போல் இருந்தார் சசிகலா. அவரில்லாமல் இவர் இருக்கமாட்டார். இவரில்லாமல் அம்மையாரும் இருக்கமாட்டார். 

முதல் முறையாக 1991ல் ஜெயலலிதா முதல்வாரன போது அவரது நட்பு மூலம் மன்னார்குடி வகையறா ஆடிய ஆட்டம். இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்து பிள்ளையானார். கோலாகல திருமணம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வழக்கு, சிறை என ஜெ தள்ளாடியபோது, தோழிகளுக்குள் மோதல் அதாவது 1997ல் சசிகலா அன் கோ, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட எல்லா இடத்திலிருந்தும் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவித்தார் ஜெ. 14 ஆண்டுகள் தேனிலவு இருவருக்குள்ளும் முடிந்தது. 


இனி இவர்களின் நட்பு அவ்வளவு தான் என பேசிவந்த நிலையில், சில வாரங்களில் சசிகலா போயஸ் தோட்டம் வந்தார். இருவரும் மீண்டும் ‘நட்பு’ பாராட்டினார்கள். 2001ல் ஆரியணை ஏறினார் அம்மையார். உயிர் தோழிகள் ஒன்றாகவே வலம் வந்தனர். சசிகலாவின் வீடு எதுவென்றால் அது போயஸ் கார்டன் முகவரி தான். இந்த முறை சுதாகரனை தவிர மற்ற அனைவரும் கார்டன் முதல் கோட்டை வரை அதிகார மையமாக வலம் வந்தனர். 

2006ல் மீண்டும் எதிர்கட்சி வரிசை. தோழிகளுக்குள் பிரிவே கிடையாது. ஒய்வு எடுக்க அம்மையார் குளிர் பிரதேசம் சென்றாலும் உடன் சசிகலா இருப்பார். 2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ முதல்வராக உள்ளார். ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களாகவே இருவருக்கும் சண்டை என தகவல்கள் பறந்தன. கணவன் - மனைவிக்குள் வரும் சண்டை வருவது போல் தான் இவர்களது சண்டை. காலை சண்டை வந்தால் மனதை மயக்கும் மாலை நேரத்தில் இவர்கள் சண்டை காணாமல் போய்யிருக்கும் என்பதால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. சில தினங்களுக்கு முன் பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் போய்விட்டு வந்த சசிகலா போயஸ் கார்டன் வராமல் அரசு விடுதியில் தங்கிக்கொண்டார். அப்போதும் சாதாரணமாக பார்க்கப்பட்டது. 


கடைசியில் இதே இன்று (19.12.2011) மீண்டும் சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன், வெங்கடேஷ் உட்பட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சியினர் யாரும் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அறிக்கை விட்டுள்ளார் ஜெ. 

நீக்கத்துக்கு காரணம், பெங்களுரூவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெ நிச்சயம் தண்டனை பெருவார். சிறை செல்வார். அப்போது நம்மில் யார் முதல்வர் பதவி ஏற்பது என தங்களுக்கு வேண்டப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா, நடராஜன் போன்றோர் என ஜெ ஆதரவு பத்திரிக்கைகள் தகவல் பரப்பி வருகின்றன. 

எப்போதுமே மேலிடத்து தகவல்கள் வெளியே வரும்போது 30 சதவிதம் உண்மையும், 70 சதவிதம் பொய்யும் கலந்திருக்கும். அது தான் இந்த விவகாரத்திலும். காரணம், என்னவோ இதற்க்கு முன்பு வரை ஜெ மட்டுமே கட்சியையும், ஆட்சியையும் நடத்தினார் என்பது போல் உள்ளது. அதிமுகவில் ஒ.செ பதவி முதல் மா.செ பதவி வரை தீர்மானிப்பது சகோதரி தான். அதேபோல், யாருக்கு சீட் தரலாம் என முடிவு செய்வது கார்டனில் பணியாற்றும் சசியின் உறவினர்கள் தான். 

எம்.எல்.ஏ சீட், மா.செ பதவி, அமைச்சர் பதவி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது சசிகலா தான். பணம் கொடுக்கல், வாங்கல் உட்பட எல்லாவற்றையும் தீர்மானிப்பது இவர்கள் தான். அவர்கள் சொல்வதை தான் இதுவரை ஜெ செய்து வந்தார். அதோடு 83 முதல் இன்றைய தேதி வரை ஜெ வின் அத்தனை விவகாரங்களையும் கவனித்து வந்தது மன்னார்குடி வகையறாக்கள் தான். 


அதிகாரிகள்;, அமைச்சர்கள்;, கட்சிக்காரர்களை வழிநடத்தியது சசிகலா குரூப். ஜெ தன்னுடைய ரத்த உறவுகளை சந்திக்க வேண்டும் என்றாலும் சசிகலா ஒ.கே சொன்னால் தான் சந்திக்க முடியும். ஜெவும் சசி சொல்றத கேளுங்க என அதிகாரிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை உத்தரவிட்டுயிருந்தார். ஆட்சியை நடத்தியவர்களே மன்னார்குடி வகையறாக்கள் தான். அப்படியிருக்க நாற்காலிக்கு ஆசைப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களின் பலம் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 

இந்த பிரிவுக்கு பின்னால் ஏதோ ஒரு விவகாரம் ஒளிந்திருக்கிறது. அது பெங்களுரூ சொத்து குவிப்பு வழக்கா அ ஜாத கோளாறா என்பது காலம் நிச்சயம் மக்களுக்கு பதில் சொல்லும். 

ஒரு முக்கிய விஷயம். ஜெ-சசி நண்பர்களாகி 14 ஆண்டுகள் பொருத்து ஜெ-சசி பிரிந்தனர். இது முதல் பிரிவு. பின் இருவரும் சேர்ந்தனர். இரண்டாவது முறை தற்போது பிரிந்துள்ளனர். இந்த இரண்டாவது பிரிவும் 14வது ஆண்டில் நடந்துள்ளது. அதோடு நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆஹா என்ன பொருத்தம்.