வியாழன், டிசம்பர் 27, 2012

ஜெவின் ‘நயவஞ்சக நாடகங்கள்’.




கல்யாண வீட்டுக்கு போனா நீ மாப்பிள்ளையா இரு. சாவு வீட்டுக்கு போனா நீ பிணம்மாயிரு என்பார்கள். அதற்கு காரணம் அந்தயிடங்களுக்கு செல்லும்போது மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றி உன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக கிராமத்தில் அப்படி சொல்லுவார்கள். 

தற்போது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தனி விமானத்தில் டெல்லி சென்றார் தமிழக முதல்வாரன ஜெ. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர். 

ஒவ்வொரு மாநில முதல்வரும் தங்கள் மாநில கோரிக்கை பற்றி பத்து நிமிடம் பேச வேண்டும் எனச்சொல்லப்பட்டது. அதன்படி தமிழகத்தின் கோரிக்கையை முதல்வர் வாசிக்கும் போது பத்து நிமிடம் முடிந்ததும் மணி அடிக்கப்பட்டுள்ளது. உடனே கோபமாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் ஜெ, என்னை அவமதித்து விட்டார்கள் என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார். நாட்டின் தலைநகரில் இருந்தப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவர் திட்டம் நிறைவேறிவிட்டது. மாநிலத்தின் கோரிக்கை, நலன் கேள்விக்குறியாக நிற்கிறது. 

அரசாங்கத்தின் நிர்வாகத்தை நன்கறிந்தார். எம்.பியாக ஒருமுறை, தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறை உள்ளார். அதற்கு முன்பு எம்.பியாக இருந்தவர்க்கு அரசாங்கத்தின் நடைமுறை தெரியாததல்ல. அதோடு, மாநாடு பற்றிய டைம் டூ டைம் ரிப்போர்ட்டில் யார் முதலில் பேசுவது, டீ டைம், லஞ்ச் டைம் வரை முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். சமீபத்தில் முதல்வர் ஜெ தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்திலும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. 

புரோட்டாக்கால் என்ற நடைமுறை இருக்க அதை அறிந்தும், அரசாங்க அலுவல்களின் நேர பயன்பாடு அறிந்தும் ஜெ மரியாதை கிடைக்கவில்லை, ஃபெல் அடித்துவிட்டார்கள் என சொல்வது அப்படியிருக்க ஜெயலலிதா எந்த கூட்டத்துக்கு போனாலும் வெளிநடப்பு செய்வதை பொழுது போக்காக வைத்துள்ளார். 

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்சனையில் இரண்டு மாநில முதல்வர்களை சந்தித்து பேசச்சொன்னது. அதன்படி பெங்களுரூவுக்கு சென்றார். ஷெட்டருடன் பேச்சு வார்த்தை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்துவிட்டேன் என வெளியே வந்து அறிவித்தார். (ஷெட்டர் நாங்கள் மரியாதையாக அனுப்பிவைத்தோம் என்றார்). இதே இப்போது தேசிய வளர்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு முன்பும் இப்படி செய்துள்ளார். 

கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைவரின் கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அதோடு, தான் இருக்கும் இடங்களில் தன்னை அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற மனோபாவத்தில் உள்ளார். தான் பேசுவதை அப்படியே கேட்கவேண்டும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அதற்காக எடுத்துக்கொள்ள தனக்கு உரிமை என எண்ணுகிறார். அதன் வெளிப்பாடு தான் இப்படி. இந்த நாடகத்தை தான் அவரது வீரமாக பிரகஸ்கரிக்கிறார்கள். 

அவரின் செயல்பாட்டை நியாயப்படுத்தி மற்றவர்களை குறை சொல்கிறார்கள். முதலில் அவர் சரியாக செயல்படுகிறாறா என மனசாட்சியிடம் கேட்டுவிட்டு பின் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும். 

வெள்ளி, டிசம்பர் 14, 2012

கமல் புகுத்தியுள்ள வியாபார யுக்தி.




தமிழ் சினிமாவில் புதிய யுக்தியை புகுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதாவது, படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் அதே நாளன்று டி.டி.எச் மூலம் ஒளிப்பரப்புவது. இந்தியாவில் முதல் முறையாக என்றுக்கூட சொல்லும் வகையில் இந்த புதிய யுக்தியை செயல்படுத்தியுள்ளார். கமலின் நடிப்பில், இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடப்படும் அதே நாளன்று ஏர்டெல் டி.டி.எச் மூலம் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படத்தை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டி.டி.எச் மூலம் ஒருமுறை பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம். படத்தை காப்பி செய்ய முடியாது. செட்டப் பாக்ஸ்சில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளவும் முடியாத தொழில் நுட்பத்தில் படத்தை திரையிடும் யுக்தி. இதுக்காக பெரும் தொகைக்கு ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் கமல்ஹாசன். இதனைத்தான் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள். சினிமா பார்க்கும் வரும் கூட்டம்மோ மிகக்குறைவு. தற்போதைய இந்த யுக்தியால் திரையரங்குகள் காணாமல் போய் அழிந்து விடும் என எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

திரையரங்கங்கள் அழிக்கபடுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கட்டும். திரையரங்குக்கு மக்களின் வரத்து குறைந்து போனதற்க்கு காரணம் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வராதது மட்டும் காரணமல்ல. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம், இடைவேளையின் போது அங்குள்ள திண்பண்ட அரங்குகளில் விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் அடிக்கப்படும் கொள்ளைகள் போன்றவையே மக்கள் திரையரங்கு பக்கம் வரமுடியாமல் செய்து வைத்துள்ளது. 

கடந்த தீபாவளியன்று திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் இருநூறு ரூபாய் என விற்கப்பட்டது. இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் பத்து ரூபாய், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் ஐஸ்கிரிம் உள்ளே 25 ரூபாய், பன்னிரென்டு ரூபாய் கூல்ட்ரிங்ஸ் இருபது ரூபாய். இப்படி எல்லாம்மே அதிக பட்ச விலை. இங்கே குறிப்பிட்டது வேலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி போன்ற சின்ன நகரங்களில் தான். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரும் நகரங்களில் இதைவிட ரொம்ப அதிகம். அதோடு, தற்போது சிலப்பல சினிமா தியேட்டர்கள் வரும்போது நொறுக்கு தீணிகள் கொண்டு வரக்கூடாது என்ற கண்டிப்பு வேறு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டரில் போய் படம் பார்க்க குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. டிக்கட்டில் பிரிண்ட் செய்துயிருக்கும் கட்டணத்தை விட இருபது மடங்கு அதிகமாக வாங்குகிறார்கள் அரசாங்கத்துக்கு கேளிக்கை வரி, சேவை வரியாக கட்டுவது டிக்கட்டில் குறிப்பிட்டுயிருக்கும் தொகைக்கே. இப்படி அரசாங்கத்தையும், ரசிகர்களை தியேட்டர்காரர்கள் நன்றாக ஏமாற்றி சம்பாதித்து விடுகிறார்கள். 

இதில் பாவப்பட்டவர்கள் படத்தை வெளியிடும் விநியோகஸ்தார்கள், வட்டிக்கு பணத்தை வாங்கி படம் தயாரிக்கும் முதலாளிகள் தான். படம் வெற்றியடைந்தால் மட்டுமே முதலாளிக்கு லாபம். இல்லையேல் நடுத்தெரு நாராயணா தான். இதனை உணர்ந்து தான் தயாரிப்பாளருக்கும் லாபம் தரும் வகையில் இந்த புதிய ஹாலிவுட் யுக்தியை கொண்டு வந்துள்ளார் கமல். 

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து நில நாட்களே ஆனா என சேட்டிலைட் சேனல்கள் இன்று கூவுவதற்க்கு பின்னால் கமலின் வியாபார யுக்தியே காரணம். 

திரைப்படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பின்பு சில ஆண்டுகள் கழித்து டிவியில் ஒளிப்பரப்பிக்கொள்ள சேட்டிலைட் சேனல்களுக்கு உரிமை தந்து விற்க்கும் முறையை கமல் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் புகுத்தினார். ( தற்போது படம் வெளியாகும் முன்பே சேட்டிலைட் சேனல்கள் படத்தின் உரிமையை வாங்கி விடுகின்றன, படம் வந்த சில வாரங்கள் பொறுத்து சேனல்கள் ஒளிப்பரப்புகின்றன ). அப்போதும் இதேபோல் தான் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அந்த முறை தான் இன்று பல தயாரிப்பாளர்களை நஸ்டத்தில் இருந்தும், தற்கொலையில் இருந்தும் காப்பாற்றி வருகின்றன. 

திருட்டு டி.வி.டி பற்றி கமல் தனது கருத்தாக, வளரும் தொழில்நுட்பத்தில் அதை தடுக்க முடியாது. அதனை ஒழிக்க ஆடியே சி.டி, டி.வி.டி வெளியிடுவதைப்போல திரைப்படம் திரையரங்கில் வெளியிட்ட ஒரு வாரம் கடந்து தயாரிப்பாளர்களே அத்திரைப்படத்தை டி.வி.டியாக வெளியிட்டால் திரையரங்குக்கு வர முடியாதவர்கள் டி.வி.டி வாங்கி படத்தை பார்ப்பார்கள். ஒர்ஜினல் டி.வி.டி கிடைக்கும் போது யாரும் திருட்டு டி.வி.டி வாங்கி படம் பார்க்கும் நிலை வராது. இதனால் தயாரிப்பாளர்க்கு வருமானம் வரும். அதோடு எந்தப்படத்தையும் தியேட்டரில் போய் பார்த்தால் தான் படம் பார்த்த தன்மையிருக்கும். டிவிடியில் பார்த்தால் படம் பார்த்த தன்மையிருக்காது. அதனால் ரசிகர்கள், தியேட்டரில் படம் பார்க்க விரும்பும் மக்கள் நிச்சயம் திரையரங்கம் வருவார்கள். இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படாது. இந்த யுக்தியை ஹாலிவுட்டில் பல வருடங்களுக்கு முன்பே புகுத்திவிட்டார்கள் தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டார்கள் நாமும் காலத்திற்க்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். 

அதையேத்தான் இன்றும் கூறுகிறார். வளரும் தொழில் நுட்பத்துக்கு தகுந்தார்போல் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நமக்காக தொழில் நுட்பம் வளராமல் இருக்காது. அதோடு சேர்ந்து நாம் பயணம் செய்யும் வகையில் நம்மையும், தொழிலையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

தற்போது புகுத்தியுள்ள டி.டி.எச் யுக்தி, தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதோடு டி.டி.எச் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு வியாபார போட்டியை உருவாக்கி தந்துள்ளது. இனி ஒரு படம் தொடங்கும் போதே உரிமையை வாங்கிட போட்டி போடுவார்கள் என்பது மட்டும் நிஜம். 

‘முதல் நாளே முதல் ஷோ வீட்டிலேயே அமர்ந்து குடும்பத்தோடு காண எங்கள் நிறுவன டி.டி.எச்யை வாங்குங்கள் என்ற விளம்பரம் வரும் பார்த்துக்கொண்டே இருங்கள். 

செவ்வாய், டிசம்பர் 11, 2012

வெள்ளைரவியும் - வெள்ளைதுரையும்.



மறைந்த சாதி தலைவர் ஒருவரின் ஆண்டு அஞ்சலி விழாவுக்காக பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிகள் பிரபு, பாரதி டீமால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சரண்டரான ரவுடிகள் பிரபு, பாரதி இருவரும் நீதிமன்றம் சென்று வரும் வழியில் தப்பிவிட்டார்கள். வாகன சோதனையின் போது பிடிக்க முயன்றபோது வெட்டவந்தார்கள் தற்காப்புக்காக சுட்டோம் செத்தார்கள் என என்கௌண்டர் செய்யப்பட்டதற்க்கு கதை சொன்னார்கள்.

இந்த என்கௌண்டர் மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனம் செய்ததற்க்கு எஸ்.ஐ கொல்லப்பட்டபோது உங்கள் கண்ணுக்கு மனித உரிமை தெரியவில்லையா?, அவருக்கும் குடும்பம் உள்ளது என்பதை மறந்து விடுகிறீர்களே?, அவரும் மனிதர் தான் என்ற குரல் காவல்துறை தரப்பில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான்காயிரம் மக்கள் இன்பத்தை கெடுக்கும் நான்கு பேரை நான்காயிரம் மக்களின் சந்தோஷத்துக்காக கொல்வது தவறுயில்லை என கருத்து தெரிவிக்கிறார் மானாமதுரை டி.எஸ்.பியும் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கொண்டாடப்படும் வெள்ளைத்துரை. நீங்கள் ஒருவரை கொன்றீர்கள் நாங்கள் இருவரை போட்டு தள்ளியள்ளோம் என சந்தோஷப்படுகிறார்கள் இன்னும் சில காவலர்கள். 

அவர்கள் கேட்பது நியாயம். தான் சார்ந்த ஒரு துறையின் ஒரு எஸ்.ஐ கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தாரை விட அவரது சக துறை ஊழியர்களுக்கு அதிக வருத்தம்மிருக்கும். பாதுகாப்பு தரும் எங்களுக்கே பாதுகாப்புயில்லையே எங்கள் உயிர்க்கு என்ன பாதுகாப்பு என கேட்கிறார்கள் அவர்கள் கேட்பது நியாயம்.

என் கேள்வி, கொலை செய்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்து அவன் செய்த தவறை உணர்த்தாமல் கொலை செய்தான் அதனால் கொன்றோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம். கொலை செய்வதனை கொலை செய்ய காவல்துறை எதற்கு, சட்டம் எதற்க்கு, நீதிமன்றம் எதற்கு?. காவல்துறை மற்ற உள்ளேயும், வெளியேவும் உலாவும் ரவுடிகள் விவகாரத்தில் இப்படித்தான் நடந்துக்கொள்கிறதா?. எத்தனை கொலைக்காரர்கள் தற்போது ஆயுள் தண்டனை கைதிகளாக, தூக்குதண்டனை கைதிகளாக சிறையில் உள்ளார்கள். அதேபோல் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்துயிருக்கலாம்மே ஏன் செய்யவில்லை. செய்யாததற்க்கு காரணம் ?


காவல்துறை தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயலும் யுக்தி. மக்களுக்கும், ரவுடிகளுக்கும் போலிஸ் என்றால் பயம் இருக்க வேண்டும், யாருக்கும் காவல்துறையை எதிர்க்கும் துணிவு வரக்கூடாது என்பதை உணர்த்தவே என்கௌன்டர் என்ற பெயரில் கொலை செய்துள்ளார்கள். இது மக்கள் மத்தியில் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு விதமான பயத்தை உருவாக்கும் செயல். இதனால் ரவுடிகளுக்கு வேண்டுமானால் போலிஸ் மீது பயம் வரலாம். ஆனால் மக்களுக்கு பயத்துக்கு பதில் வெறுப்பு நிச்சயமாக வந்துவிடுகிறது. அவர்களை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையும், காவல்துறையின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தராத நிலையும் பொதுமக்களிடம் இருக்கிறது. 

பொதுமக்களின் நண்பர்கள் எனச்சொல்லிக்கொண்டு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் புரியும் விசுவாசியாய் நடந்துக்கொள்ளும் அனேக காவல்துறையினர் காவல்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி தங்களது உரிமையை பெற்றுக்கொண்டால் பாராட்டலாம். ஆனால் அதற்க்கு நேர் எதிராக என்கௌன்டர் பெயரில் கொலை செய்வது, அதிகார வர்க்கத்தை துணிவில்லாமல் பொதுமக்களை, வியாபாரிகளை, ரவுடிகளை, திருடர்களை மிரட்டி பணம் பறிக்கும் இவர்கள் தாங்கள் செய்த கொலைகளை நியாயப்படுத்த மக்கள், சந்தோஷம் என கதையளக்க தொடங்கியுள்ளார்கள். 

என்கௌண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் வெள்ளைரவி, வீரமணி, மணல்மேடு சங்கர் போன்றவர்கள் பணத்துக்காக கட்டைப்பஞ்சாயத்து, கொலைகள் செய்தனர். அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செய்ததை வெள்ளைதுரை போன்ற சில அதிகாரிகள் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு சட்டத்தின் துணையோடு அதேயே செய்கிறார்கள். இவர்களுக்கு பெயர் காவலர்கள். அவர்களுக்கு பெயர் ரவுடிகள்.

நல்ல சட்டம்.