ஞாயிறு, ஜூன் 16, 2013

விலைவாசி உயர்வு. ஆபத்தை நோக்கி எதிர்காலம்.



விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஆண்டுகள் மாற மாற விலைவாசி உயர்வு இருக்கத்தான் செய்யும். ஆனால் கடந்த ஐந்து விலைவாசி உயர்வு என்பது ஜெட் வேகத்தில் இருக்கிறது.

டீசல் விலையேற்றினால், வாகனங்களின் வாடகை உயர்கின்றன, வாகனங்களின் வாடகை உயர்ந்தால் பொருட்கள் விலைகள் உயர்கின்றன. ஒவ்வொன்றும் சங்கிலி தொடர் போல. ஒரு பொருள் உயர்ந்தால் அதனை சார்ந்த மற்ற பொருட்களின் விலையும் உயரும் என்பது இயற்கை. தற்போது உணவு பொருட்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

மளிகை பொருட்கள் முதல் காய்கறிகள் வரை உயர்ந்துக்கொண்டே வருகின்றன. ஏழை மக்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களும் இனி காய்கறிகளை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து வருகின்றன. வருங்காலத்தில் சோற்றில் தண்ணீர் ஊற்றித்தான் சாப்பிடவேண்டும் போல் இருக்கும் என நினைத்தால் அதற்கும் ஆப்பு வரும் போல. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 45 இந்த ஆண்டின் இறுதியில் 100 ரூபாயை நெறுங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த உயர்வு என்பது இனி குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எதனால் இந்த விலை உயர்வு ???????????????.

நீர் பிரச்சனை.


தமிழகம் கீழ்நிலப்பகுதி. தமிழகத்தை சுற்றியுள்ள கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்றவை மேல்நிலப்பகுதி. நமக்கு தேவையான நீர் மேல் நிலப்பகுதிகளில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் இந்த மாநிலங்கள் நமக்கான நீரை தர மறுக்கின்றன. அவர்கள் மீதும் குற்றமில்லை. நியாயமான காரணம் மழையில்லை. மனிதன் இயற்கையை அழிக்க தொடங்கியதால் மழை பொய்த்து போனது. பெய்யும் குறைந்தளவு மழை தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. அதோடு கீழ்நில பகுதிகளுக்கு நீர் அனுப்பும் பாதைகள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்றன. மற்றொருபுறம் அரசியல் செய்யப்படுவதால் நீர் திறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் கேள்விக்குறியாக உள்ளது.

கீழ்நில பகுதிகளில் அணைகள் பலயிருந்தாலும் அதற்கு தேவையான நீர் வராத அளவுக்கு நீர் வழி பாதைகள் அடைக்கப்பட்டு வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும், அரசாங்க கட்டிடங்களாகவும் உருவமாறிவிட்டன. சராசரி மழையளவு குறைந்ததால் விவசாயிகள் தண்ணீர்க்காக நிலத்தடி நீரை உறிஞ்ச தொடங்கினர். பற்றாக்குறை தொடங்கியது.

தொழில்துறை முன்னோக்கி, விவசாயம் பின்னோக்கி.

இந்தியாவின் அடிப்படையே விவசாயத்தை நம்பி தான். 70 சதவிதம் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளார்கள். ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் விவசாயத்துக்கு முன்னுரிமை தரவேயில்லை. சுதந்திரம் அடைந்தது முதல் தொழில்துறையை தான் கட்டிக்கொண்டு தொங்குகின்றனர். நேரு முதல் மன்மோகன்வரை தொழில்துறைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை திட்டமிட்டே அழித்தது அரசாங்கம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை பார்த்தும் கொள்கையை மாற்றவில்லை மேலை நாட்டு அடிமைகள்.

தொழில்துறையை விவசாயத்தோடு இணைத்தார்கள். புதிய புதிய இயந்திரங்களின் வருகை விவசாயத்தை முன்னேற்றவில்லை. விவசாயத்தை அழிக்கவே செய்தது. தொழில்துறையின் வளர்ச்சி விலை நிலங்களை வாகனம் மற்றும் உதிரி பாக, இரும்பு பொருட்கள் தொழிற்சாலைகளாக, வணிக வளாகங்களாக மாறின. தொழிற் பேட்டைகள் அதிகரிப்பால் குண்டு குழியுமான சாலைகள் இருவழிப்பாதை, நான்கு வழிப்பாதை, தங்கநாற்கர சாலை என மேம்படுத்தப்பட்டன. இதனால் சாலையோர விளை நிலங்கள் எல்லாம் விலை மனைகளாக உருமாறின.

இதனால் ரியல் எஸ்டேட் தொழில் வேகவேகமாக வளர்ச்சியடைந்தன. சாலையோற நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக உருமாறியதால் இங்கு பயிர் செய்யப்பட்ட நிலக்கடலை, கரும்பு, சோளம், கம்பு போன்ற பயிர்கள் எல்லாம் நன்றாக விளையும் நிலத்துக்கு மாற்றப்பட்டன. அங்கு ஏற்கனவே விலைந்த நெல், பணப்பயிர்கள் எல்லாம் குறைத்துக்கொள்ளப்பட்டன.

கேலி செய்யப்படும் விவசாயம். 

தொழில்துறை முன்னேற்றம், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி, படிப்பு போன்றவை விவசாயத்தை ஏதோ கேவலமான தொழிலாக சித்தரிக்க வைத்துவிட்டது. ஒரு பெரும் நகரத்தில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ சேர்ந்து படித்தால் அவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை தான் உள்ளது. நான் ஒரு விவசாயி என்றால் அவனை கேவமான ஜந்துவாக பார்க்கின்றனர் அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினரும். ஒரு சாதாரண மெக்கனிக்குக்கு இருக்கும் மரியாதை கூட விவசாயிக்கு கிடைப்பதிலை என்பதே நிஜம்.

இதுமட்டுமல்ல உழவன் கடினமாக உழைத்து மனிதனுக்கு தேவையான உணவு பொருட்களை உருவாக்கினால் அந்த பொருளுக்கான விலையை அவன் வைப்பதில்லை. இடைத்தரர்கள் தான் விலை வைக்கின்றனர். இது வேறு எந்த தொழிலிலும் கிடையாது. இதனால் விவசாயியும் தனது மகன் இந்த தொழிலுக்கே வரக்கூடாது என முடிவு செய்தே வளர்க்கப்படுகிறான். இதனால் விவசாயம் குறைந்தே வருகிறது.


வேலை உறுதி திட்டம்.

விவசாயம் செய்வது குறைந்து வந்த நிலையில் தான் அரசாங்கம் ஏழைகளை உயர்த்த, நிரந்தர வருமானத்தை உறுதி செய்கிறோம் என வேலைக்கு உணவு திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு பின் பெயர் மாற்றம் செய்து வேலை உறுதி திட்டம் என ஒன்றை கொண்டு வந்தது. அந்த திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு நூறு நாளைக்கு வேலை. கூலி 100 ரூபாய் என்றதும் மக்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு இந்த வேலைக்கு சென்றனர்.

இங்கு வேலையே செய்யாமல் கூலி வாங்கிக்கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் சோம்பேறிகாளாக மாறினர். இதனால் விவசாயம் படுத்துக்கொண்டது. கொஞ்ச நஞ்ச விவசாயிகள் விவசாயம் செய்யாமல் விட தொடங்கினர். தங்களிடம்மிருந்த பொன் விளையும் பூமிகளை ரியல் எஸ்டேட் தரகர்களிடம் விற்றனர்.

அரசாங்கம் தரும் பொய் கணக்குகள்.


2000ல் ஒரு விவசாயி 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதே விவசாயி 2005ல் 4 ஏக்கர் நிலத்தில் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதே விவசாயி 2013ல் 2 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் சம்பாதிக்கிறார். இது உண்மையா பொய்யா என கேட்டால் என்ன சொல்வீர்கள். பொய் என்று தானே சொல்வீர்கள். ஆனால் அரசாங்கம் இதனை உண்மை என்கிறது. அவர்கள் தரும் புள்ளி விவர கணக்குகளும் அப்படித்தான் உள்ளன.

இப்படி நம்முன் அரசாங்கம் திறந்த டாஸ்மாக், இலவச அரிசி, விலையில்லா பொருட்கள் என பல பிரச்சனைகள் இருந்தாலும் நம்மிடம், பேராசை, பொறாமை, சீக்கிரம் பணக்காரனாக வேண்டும், உழைக்காமலே பணம் வரவேண்டும் என்ற எண்ணம் மேல்தட்டு மக்கள் முதல் உழைக்கும் மக்கள் வரை வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சோம்பேறிகளை அதிகமாக்கியுள்ளது. கிராமங்களில் இது அதிகமாகியுள்ளது. இவைகள் மாறினால் தான் நம்மால் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் வருங்காலம் என்பது அனைத்து தரப்பினருக்கும் வேதனை தரக்கூடியதாக இருக்கும்.

திங்கள், ஜூன் 03, 2013

கலைஞர் - 90 வயது இளைஞர்.



ஏசி அறையில் உட்கார்ந்துக்கொண்டு ஃபைல் புரட்டுபவர்களே மாலையானதும் அப்பாடா எவ்வளவு வேலை என அலுத்துக்கொள்கிறார்கள். தினமும் விடியற்காலை எழுந்து யோகா செய்துவிட்டு, அன்றைய தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்தும் வாசித்துவிட்டு அதுப்பற்றி பேச வேண்டும் என்றால் அந்த காலை நேரத்திலேயே சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசிவிட்டு சி.ஐ.டி காலணி வீட்டில் இருந்து கோபாலபுரம் வந்து உணவு உண்டுவிட்டு அறிவாலயம் சென்று கட்சி நிகழ்வுகள், சந்திப்புகள், உலக அரங்கில், இந்திய அளவில், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி தன் கருத்தை செய்தியாளர்களிடம் பதிவு செய்துவிட்டு மதிய உணவுக்கு பின் முரசொலி வழியாக உடன்பிறப்புகளுக்கு கட்டுரை எழுதிவிட்டு மீண்டும் இல்லம் திரும்பி, உறங்க செல்லும் போது இரவு 11 மணியை தாண்டிவிடுகிறது. இதில் எத்தனை எத்தனை பணிகள். ஆட்சியில் இருக்கும் போது இதைவிட கூடுதல் பணிகள். ஆனால் எப்போதும், எதற்காகவும் சோர்ந்ததில்லை. அவரது உடலுக்கு வேண்டுமானால் வயது 90 ஆகியிருக்கலாம். ஆனால் அவர் மனம் என்றும் 16 தான். அத்தனை சுறுசுறுப்பு. தேனீயே இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனச்சொன்னால் மிகையாகாது.

இந்த உழைப்பு இன்று நேற்றல்ல அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே தொடங்கியுள்ளது. 14 வயதில் கையெழுத்து பிரதி நடத்தியது முதல் அவரது சுறுசுறுப்பு தொடங்குகிறது. பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, சினிமாக்காரர், அரசியல்வாதி, குடும்பதலைவர், ஆட்சியாளர் என பல பரிமாணங்கள் அவரிடம் உண்டு. பலரும் சொல்வதைப்போல அவர் அரசியல்வாதியாக இல்லாமல் சினிமாக்காரராக மட்டும் இருந்திருந்தால் அவரது கதை, திரைக்கதை, வசனத்துக்கு நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளை வாங்கியிருப்பார். இலக்கியவாதியாக மட்டும் இருந்திருந்தால் இந்தியாவின் மிக முக்கிய இலக்கியவாதியாக இருந்திருப்பார். அவர் அரசியல்வாதியாக இருப்பதால் அவரின் சாதனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அரசியலிலும், ஆட்சி நிர்வாகத்திலும் இவரைப்போன்று ஒரு அரசியல்வாதி இனி இந்த தமிழ் மண்ணில் பிறக்க முடியாது. அரசியல் வாழ்க்கைக்கு வந்தபோது திராவிடர் கழகத்திலாகட்டும், திராவிட முன்னேற்ற கழகத்திலாகட்டும் அந்த காலத்து சாதி அரசியலில் இவரை விட மேல்சாதியினர் என அழைத்துக்கொண்டு பலர் கோலோச்சினர். அவர்கள் மத்தியில் தன்னை உழைப்பால் வளர்த்துக்கொண்டவர் கலைஞர். ஜனநாயக பூர்வமான விவாதத்துக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எங்கும் கலைஞர் தடையாக இருந்ததில்லை என்பதே வரலாறு. இவரைப்போல் நிச்சயம் சோதனைகளை சந்தித்த அரசியல்வாதிகள் யாரும்மில்லை. சோதனைகள் என்னும் கடலில் நீந்தி சாதனைகள் படைத்தவர் இவர். இவருடைய சாணக்கிய தனம் இல்லாமல் போயிருந்தால் திமுக அழிக்கப்பட்டுயிருக்கும்.

இந்திய அரசியலில் விமர்சனங்களை அதிகம் எதிர்க்கொண்டவர் யார் என்றால் அது கலைஞர் தான். கருணாநிதியின் தலைக்கு கோடி ரூபாய் பரிசு அறிவித்த வடநாட்டு சாமியரையும் பொருட்படுத்தவில்லை, நடிகை குஷ்புவுடன் இணைத்து எழுதிய கட்டுரையையும் அவர் பொருட்படுத்தவில்லை. தரம் தாழ்ந்த மாற்று விமர்சனத்துக்கும் அவர் பேனா மட்டும்மே பதில் சொல்லும். இதை இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியிடமும் காண முடியாது. விமர்சித்தவர்கள் பிரச்சனை என வந்தாலும் தயங்காமல் உதவுபவர் கலைஞர்.

விஞ்ஞான வளர்ச்சியில் ஃபேஸ்புக்கில் உலவும் கலைஞரை படுமட்டமாக விமர்சனம் செய்தார்கள். மற்ற கட்சி தலைவர்கள் போல் அவர்கள் மீது புகார் தரவில்லை. அபத்தமான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு நியாயமான கேள்விகளுக்கு பதில் மட்டுமே இன்றளவும் தந்து வருகிறார்.

47 வயதில் திமுக தலைவர் என்ற பதவியில் அமர்ந்தவர் 90 வயது வரை அந்த பதவியில் வீற்றுள்ளார். 1952ல் தனது 37வது வயதில் சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர் 12வது முறையாக தோல்வியே காணாமல் வெற்றியை மட்டுமே சுகித்து கொண்டு இருக்கிறார். ஐந்து முறை முதலமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளார். 2006 தேர்தலுக்கு பின் பின்னரவில் அதிகாரத்தில் இருந்த ஜெ போட்ட உத்தராவல், கலைஞர் கைது செய்யப்பட்டபோது இந்தியாவே அதிர்ந்தது. அப்போது மைய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்திருந்தது. அதிமுக ஆட்சியை கலைக்க பி.ஜே.பி தலைமையிலான மைய அரசு முடிவு செய்தது. அப்போது எதிர்கட்சி தலைவியாக இருந்த சோனியாவும் ஒப்புக்கொண்டார். மாநில ஆட்சியை மைய அரசு தன் அதிகாரத்தை கொண்டு கலைப்பதை எதிர்ப்பது எங்கள் கட்சியின் கொள்கை. கொள்கையை விட்டு தரமுடியாது அதனால் ஆட்சி கலைப்புக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என கொள்கைக்காக எதிர்கட்சியான ஜெ ஆட்சியை கலைக்காமல் தடுத்தவர் கலைஞர். அவரை, கட்சியின் தலைவர்களை, தன் மகளை அடித்த, கொச்சைப்படுத்திய அதிகாரிகளை மன்னித்தவர் கலைஞர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தி கலைஞர் தான். எமர்ஜென்சிக்கு பின் தோல்வியில் துவண்டு கிடந்த இந்திராவை நோக்கி, நேருவின் மகளே வா நிலையான ஆட்சி தா என இந்திராவுடன் கூட்டணி வைத்தவர், ஜனதா என்ற அமைப்பு உருவாகி ஆட்சியில் உட்கார காரணமானவர். வாஜ்பாய் பிரதமராகவும், சரிந்து கிடந்த காங்கிரஸ்சை ஆட்சியதிகாரத்தில் உட்கார வைத்தவர் கலைஞர். பிரதீபாபட்டீல், பிரணாப் என இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்.

2ஜீ ஊழல், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நடத்திய கொள்ளை போன்ற பல காரணிகளால் ஆட்சியதிகாரத்தை திமுக இழந்து இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கூட இல்லாமல் இருந்தாலும் 2014 நாடாளமன்ற தேர்தலில் திமுக எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் என மில்லியன் டாலர் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கிறது பல மாநில கட்சிகள். காரணம், பாராளமன்ற தேர்தலில் இவர் எங்கு இருக்கிறாறோ அந்த பக்கம் தான் வெற்றி காற்று வீசும் என்பது வரலாறு. நம்பகமான அரசியல் தலைவர். பாதியில் ஆட்சியை கவிழ்க்கமாட்டார்.

மதவாத கட்சியான பி.ஜே.பியோடு கூட்டணி வைத்தாலும் அதை நியாயப்படுத்துவதில் வல்லவர். துரோக கட்சியான காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமன் செய்பவர் கலைஞர் ஒருவர் தான். அவரை தவிர வேறு யாராலும் அதை செய்ய முடியாது.

சோதனைகள் இன்று பல திமுகவை கூ+ழ்ந்து ஆட்சி, அதிகாரம் கொண்டு மிரட்டினாலும் எத்தனை பெரும் சக்தியையும் எதிர்க்கும் ‘வல்லமை’ கலைஞரிடம் மட்டுமே உள்ளது. அந்த வல்லமை அவரது உழைப்பு. இந்த 90வது பிறந்தநாளிலும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்வார் ஏன் எனில் அவர் கலைஞர்.

சனி, ஜூன் 01, 2013

அன்பே அழகானது. – தொடர் கதை. பகுதி – 2.



டாடி ….

டாடி ……….

என்னடா ?

ஃபைக் ஓட்டனா காது கேட்காதா டாடி?

எத்தனை முறை சொல்லியிருக்கன் அப்பான்னு கூப்டுன்னு.

ஸாரி.

சரி எதுக்கு கூப்ட்ட.

எங்க போறோம் ?

என்னடா கேள்வியிது. ஆறாவது சேர்ந்துயிருக்க புது ஸ்கூல் அதனால உனக்கு யூனிபார்ம் எடுக்க போறோம்.

அது தெரியும். கிளம்பும்போது என்ன சொன்னிங்க.

என்ன சொன்னன்?

ஐஸ்கிரிம் சாப்பிட்டுட்டு அப்பறம்மா டிரஸ் எடுக்கலாம்ன்னு சொன்னிங்கயில்ல.

ஆமாம் அதுக்குயென்ன இப்போ.

முதல்ல ஐஸ்கிரிம் பார்லர் அதுக்கப்பறம் டிரஸ்.

நீ ஓழுங்கா ஐஸ்கிரிம் சாப்பிடமாட்ட. டிரஸ் மேலப்படும். அப்படியே துணிக்கடைக்கு போன அசிங்கமா இருக்கும். அதனால போகும் போது வாங்கிதர்றன் வீட்ல வந்து சாப்பிடு.

வீட்ல வந்து சாப்பிடறன். ஆனா இப்ப வாங்கித்தா.

டிரஸ் எடுக்க போறப்ப அத வேற கைல எடுத்துக்கிட்டு போகனும்டா.

டிரஸ் எடுத்ததுக்கப்பறம் காசுயில்ல, சளி புடிக்கும்ன்னு சொல்லுவீங்க.

அதெல்லாம் சொல்லமாட்டன்டா.

உங்களப்பத்தி எனக்கு தெரியும்.

கேடிடா நீ.

நான் உன் பையன்ப்பா என்றவனிடம் வேறு எதுவும் பேசாமல் ஃபைக்கை ஐஸ்கிரிம் பார்லர் முன் நிறுத்தியதும் நீ வெளியில இருப்ப நான் வாங்கி வந்துடறன் என 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிய ரஞ்சித் நான்கு ஐஸ்கிரிம் கப்புகளை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவதை மதன் பார்த்தான்.

அருகே வந்த ரஞ்சித்திடம் மீதி பணத்த எங்கிட்ட தாடா.

உங்;கிட்ட காசுயில்லாதப்ப தர்றன் என்றபடியே வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

உனக்கு வர்ற வர்ற கொழுப்பு அதிகமாயிடுச்சிடா.

அதுக்குத்தான் சாப்பாட்டுல ஆயில் குறைக்கச்சொல்றன்.

அவன் நக்கலடிப்பதை கேட்டு டேய் பேசாம வா என்றதுக்கு ம் என்றான்.

குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அலுவலகத்தில் சொன்னப்படி அவர்கள் குறிப்பிட்ட துணிக்கடைக்கு சென்று மூன்று செட் யூனிபார்ம், டை, சூ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர இரவு 8 மணியானது. கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்ததும் டேய் தோசை சுடறன் சாப்பிட்டுட்டு அதுக்கப்பறம் ஓரே ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடு. மீதிய நாளைக்கு சாப்பிடுவ.

நோ டாடி. இப்ப டூ, டுமாரோ டூ.

நைட்ல சாப்பிட்டா சளி பிடிக்கும் காலையில சாப்பிடுடா.

காலையில சாப்ட்டா கோல்டாகாதா?.

ஆகாது.

ஏன்?.

கேள்வி கேட்காம அத கொண்டு வந்து பிரிட்ஜ்ல வை.

பிரிட்ஜ்ஜை திறந்து அதை வைத்தபடியே நான் தூங்கனதுக்கப்பறம் நீ எடுத்து சாப்பிடமாட்டயில்ல.

நீ அதிகமா என்னை நக்கல் அடிக்கறடா எனச்சொன்னதை அலட்சியவன்.

தோசைக்கு சக்கரை வச்சி தாப்பா.

ம் என்றதும் ஹாலுக்கு சென்று டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். ஆதித்யா, போகோ, நிக் என மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னால் தோசை தட்டை வைத்ததும் ரிமோட்டை தொடைக்கு கீழே வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான். நானும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன். எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை தந்தான். நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வரும்வரை டிவி முன்பே உட்கார்ந்து இருந்தவனிடம் டைம்மாகிடுச்சி ரஞ்சித் படுக்கலாம்.

இன்னும் கொஞ்ச நேரம்ப்பா.

ர்pப்பீட்டட் புரோகிராம்டா நாளைக்கும் போடுவான் வா என்றதும் டிவியை ஆப் செய்துவிட்டு பெட்ரூம்க்குள் நுழைந்தான். நான் கதவை லாக் செய்துவிட்டு பெட்ரூம்க்கு வர அவன் கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.

ஸ்கூல் எப்பப்பா ஓப்பன்.

இன்னும் இரண்டு நாள் இருக்கு.

தினமும் நீ அழைச்சிம்போய் விடுவியாப்பா.

காலையில ஆட்டோவுல போய்டு. ஈவ்னிங் நான் வந்து உன்னை அழைச்சி வர்றன்.

காலையில உன்னோட பைக்லயே வர்றன்ப்பா.

எனக்கு ஆபிஸ் பத்து மணிக்குடா. உனக்கு ஸ்கூல் 8:30 மணிக்கு ஸ்டார்ட்டாகிடும். அதனால நீ காலையில ஆட்டோவுல போய்டு. மதியம் லஞ்ச்ச பாக்ஸ்ல எடுத்தும் போய்டு. தாத்தா பாட்டி ஊர்லயிருந்து வந்ததுக்கப்பறம் பாட்டி தினமும் மதியம் லஞ்ச் எடுத்துவருவாங்க.

போப்பா தாத்தாவும் - பாட்டியும் வந்துடுவாங்கன்னு நீயும் தான் சொல்ற. அவுங்க வரவே மாட்டேன்கிறாங்க.

வருவாங்கடா செல்லம் இப்ப நீ தூங்கு என்றதும் அவன் சோகமாக கண்ணை மூடிக்கொண்டான். அவன் தூங்குவது உறுதியானதும் கட்டில் டிராயரை சத்தம் வராமல் திறந்தேன். அதில் லேமினேஷன் செய்யப்பட்ட போட்டோவில் ஜோடியாக நானும் என் மனைவியும் சிரித்துக்கொண்டு இருந்ததை பார்த்ததும் மனம் பாரமானது.

தொடரும்……………