செவ்வாய், டிசம்பர் 06, 2016

தயக்கத்தை உடை......... தலைநிமிர்....... பகுதி 2



டந்த வார பகுதியில் பகுதி - 1 கீழ்க்கண்ட கேள்விகளோடு அந்த கட்டுரையை முடித்திருந்தேன்.

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?, பொறியியல் படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை சந்திப்பதற்கான காரணம் என்ன?, படித்த இளைஞர்களை எதை வைத்து நகரம் –கிராமம் என பிரிக்கிறார்கள்?. கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி ?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?. இந்த கேள்விக்கான பதிலை பார்த்துவிடுவோம்..........

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?,

புற்றீசல் போல் இன்று கிராமத்துக்கு கிராமம் கல்லூரிகள் பெருகிவிட்டன. பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதற்கும் இறங்கு முகம் என்றதும் இப்போது, கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. நகரம் – கிராமம் என நீக்கமற நிறைந்துள்ள கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, நகர்ப்புறத்தில் உள்ள இளைஞர்கள் மேற்படிப்புக்கு எது சிறந்தது என விசாரித்து போய் சேர்க்கிறார்கள், சேர்க்கப்படுகிறார்கள். அதற்கு பல வாய்ப்புகள் அவர்கள் முன்வுள்ளது. கிராமப்புறத்திலோ, நமக்கு பக்கத்திலேயே காலேஜ் வந்துடுச்சி என அங்கே சேர்க்கப்படுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் இயல்பிலேயே இருக்கும் உஷார் தன்மை அவர்களை கல்லூரிகளில் அதிகம் கற்க வைக்கிறது. கிராமப்புற மாணவர்களிடம் இருக்கும் நம்பகத்தன்மை அவர்களை கல்லூரியில் எது கற்று தந்தாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறது. வாத்தியார் பொய் சொல்லமாட்டார் என கிராமப்புறங்களில் ஓர் நம்பிக்கை. நகர்ப்புற கல்லூரிகள், தங்களது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை திறமையானவர்களை கண்டறிந்து தேர்வு செய்கிறது, கிராமப்புறத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கல்லூரிகள் திறமை குறைந்தவர்களை வைத்து பாடம் நடத்துகிறது.

இங்குயிருந்து தான் அதிகரிக்கிறது கிராமப்புற இளைஞர்களின் தயக்கம். இயல்பிலேயே தயக்கத்தோடு கல்லூரிக்கு வருபவனிடம் தயக்கத்தை, பயத்தை உடைக்கும் இடமாக கல்லூரிகள் இருப்பதில்லை. இங்கும் அவனை அழுத்தியே வைத்திருப்பது. அவன் படித்து முடித்ததும் வேலைக்கு எனச்செல்லும் போது அந்த தயக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை ஏன் சந்திக்கிறார்கள் ?,

பெரும் நிறுவனத்தின் நேர்காணல்க்கு ஒரு நகர்ப்புற இளைஞனும், கிராமப்புற இளைஞனும் செல்லும்போது, நகர்ப்புற இளைஞனின் நடை, நுனி நாக்கு ஆங்கிலம் போன்றவற்றை கவனிக்கும் கிராமப்புற இளைஞன் நிலை குலைந்து போகிறான். நகர்ப்புற இளைஞனை காணும்போதே இவுங்களோட நாம எங்க போட்டிப்போடறது என மனதுக்குள் போராட தொடங்கிவிடுகிறார்கள். அந்த போராட்டம் தரும் பதட்டம் நேர்காணல் நடத்துபவரின் முன் வெளிப்பட்டுவிடுகிறது. இதுதான் அவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. பெரும் நிறுவனங்களில் முண்டாசுப்பட்டி போன்ற கிராமங்களில் இருந்து படித்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போகுவதன் காரணம். அதோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், எனக்கு அ, ஆ கற்றவன் தான் வேண்டும். அது கற்காதவனை நான் ஏன் எடுக்க வேண்டும் என நினைக்கிறது.

படித்த இளைஞர்களை எதை வைத்து இவன் நகரம் – அவன் கிராமம் என பிரிக்கிறார்கள்?.

நடை, உடை, பேச்சு தான் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவுக்குள் பேன்ட் – சண்டை நுழைந்து, இன்று தமிழகத்தில் வேட்டி அணிந்தால் கிறுக்கனாக பார்க்கும் நிலை தான் இருக்கிறது. 2 நூற்றாண்டாக நாம் பேன்ட்-சட்டை அணிந்தாலும் நகர்ப்புறவாசிகள் அணியும் அந்த பேன்ட் சட்டைக்கும், கிராமப்புற பின்னணியில் வாழ்பவர்கள் போடும் பேன்ட் – சட்டைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. பேன்ட் – சட்டை போட்டால் செருப்போ, சூவோ போடவேண்டும் என தெரியாத பாமர மக்கள் அதிகம் உள்ளது கிராமப்புறத்தில் தான். அப்படிப்பட்ட கிராமப்புற பின்னணியை கொண்டவர் கல்லூரிக்குள் நுழைந்தாலும், மேற்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு மெட்ரோ நகரங்களுக்குள் நுழைந்தாலும் அவனது ஆடை நேர்த்தி அவனை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

அதற்கடுத்து ஒருவருடைய பேச்சு. என்னதான் பெரிய படிப்பு படித்தாலும் நகர்புற இளைஞர்களின் மொழி உச்சரிப்புக்கும், கிராமப்புற இளைஞர்கள் மொழி உச்சரிப்புக்கும் பலமடங்கு வித்தியாசம் உண்டு. இதுதான் நகர்ப்புறம் – கிராமப்புறம் என அடையாளப்படுத்துகின்றன.
 

கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?.

பயம், தயக்கம் என்பது நகரம் – கிராமம் என இருதரப்புக்கும் இருக்கும். நகர்ப்புற இளையோர்கள் அதை அணுகுவதற்கு சிறு வயதில் இருந்தே, பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் வழியாக பழகிக்கொள்கிறார்கள். அந்த வாய்ப்பு கிராமப்புற இளையோர்களுக்கு குறைவு. முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போல, கிராமப்புற இளைஞன் இப்போதுதான் மேலே வருகிறான். எங்கே தவறு நடந்துவிடும்மோ என்ற பயத்திலேயே பயணம் செய்கிறான். நகர்ப்புற இளைஞன் தவறு நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என செயல்படுகிறான் அவ்வளவு தான்.

தவறு என்பது திருத்தமுடியாததல்ல, தவறு செய்தால் தான் கற்றுக்கொள்ள முடியும். இதை கிராமப்புற இளையோர் அறிந்துக்கொண்டாலே வெகுவேகமாக நகர்ப்புற இளைஞர்களோடு போட்டிபோட முடியும்.

நகர்ப்புற இளைஞர்கள் சறுக்கினால் சோர்ந்துபோய்விடுவார்கள். கிராமப்புற இளைஞன் சறுக்கினால் கவலைப்படமாட்டான். அதற்கு உதாரணம் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ளது அந்த குக்கிராமம். 34 வயதான அந்த இளைஞனை 5 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். கல்லூரிக்கு சென்றும் சரியாக படிப்பு வரவில்லையென படிப்பை விட்டுவிட்டு பெங்களுருக்கு கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றார். வேலை கத்துக்கொண்டுவந்தபோது, ஒரு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு அங்கிருந்து பைக்கில் வந்துக்கொண்டு இருந்தார். இரவு பயணம் ஊருக்கு மிக அருகில் வரும்போது எதிரே வந்த ஒரு லாரி மோதிவிட்டு போய்விட்டது. உடலெல்லாம் காயம், அதோடு அவரது இடது கால் முட்டிக்கு மேல் கட்டாகி துண்டாகி கீழே விழுந்தது. வலியால் கத்தி கூச்சல் போட்டும் இரவு நேரம் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. அந்த வலியிலும், இரவில் தனது கால் கட்டானதை தேடி எடுத்து தன் அருகே வைத்துக்கொண்டார். கீழே விழுந்த தனது செல்போனை தேடி எடுத்து ஊரில் உள்ள குடும்பத்தார்க்கு போன் செய்து வரச்சொல்ல அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் நீண்ட நேரமானதால் காலை ஒன்று சேர்க்க முடியவில்லை. 6 மாதத்துக்கு மேலானது அவரது உடல் சீராக. ஒத்த காலை வைத்துக்கொண்டு என்ன செய்வது, உறவினர்கள் ஒதுக்கினார்கள் கலங்கவில்லை. ஒற்றைக்காலோடு மீண்டும் பெங்களுரூ பயணம், ஒற்றை காலோடு வேலை செய்ய கற்றுக்கொண்டார். வேலை, வேலை.......... ஊரில் வீடு கட்டினார். ஒரு தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார், தம்பியை படிக்கவைத்தார். இவரின் தன்னம்பிக்கையை பார்த்து பட்டதாரி பெண் காதலிக்க, ஒருகால்யில்லையே என தயங்கியவரை விடாப்பிடியாக காதலிக்க வைத்து திருமணம் செய்துக்கொண்டார். இதுதான் கிராமப்புற இளைஞனின் தன்னம்பிக்கை. மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள் கிராமப்புற இளைஞர்கள். அவர்களால் சாதிக்க முடியும். அதற்கு ஊக்கசக்தி தான் தேவை.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கற்றோர் ஊக்குவித்தால் போதும் பெரும் சாதனைகளை செய்வார்கள் கிராமப்புற இளையோர்களும்.

'ஆணவம்' மறைந்தது. நிம்மதியாக உறங்குகள்...




தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ந்தேதி மறைந்தார். சர்வாதிகரிகளை மிஞ்சிய சர்வாதிகாரி ஜெ மறைந்தார் என எழுதலாம் என நினைத்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம். இறந்தவர்களை பற்றி தூற்றக்கூடாது என்பது தமிழக மரபு. அதனால் அதிகமாக எழுதவில்லை. அதற்காக அவரை புனிதராக்குவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் இப்போதுள்ள முதலமைச்சர்களில், இதற்கு முன்பு இருந்தவர்கள், இனி முதலமைச்சராக இருக்கபோகிறவர்கள் ஜெ போல் ஆணவமாக இருந்ததுயில்லை. 

அவர் மீதான நீதிமன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தையே தன் காலுக்கு கீழ் வைத்திருந்தவர். நீதியை நிலைநாட்டக்கூட ஜெயாவை எதிர்க்க முடியாமல் முனுககூட முடியாதவர்களாக தான் இருந்தார்கள் பல நீதிமான்கள். நீதிமன்றம் என்பது அதிகாரம் இருந்தால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தலாம் என இந்திய அரசியல்வாதிகளுக்கு காட்டியவர். 

சட்டங்களை, விதிகளை துச்சம்மென தூக்கி எறிந்தார். எதிர்கேள்வி வரும்போதுயெல்லாம் என்னை கையை பிடித்து இழுத்தார், சேலையை உருவினார், நான் பெண் என்பதால் எதிர்க்கிறார்கள் என பதில் தந்து எதிர் குரல்களை அடைத்தார். 

தன் அதிகாரத்தை பயன்படுத்தி பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்குகளாக பாய்ச்சினார், ஆள் வைத்து அடித்தார், ஆசிட் வீசினார். 

சட்டமன்றத்தை நாடக கொட்டையாக மாற்றியவர். அங்கு அவர் மட்டும்மே எல்லா வேடங்களையும் ஏற்றிருந்தார். சட்டமன்ற விதிகளை தன் ரோமமாக நினைத்தவர். அவர் செய்த சட்டவிதி சிதைவுகளை சரிச்செய்ய இன்னும் பலப்பல ஆண்டுகள் ஆகும்.  

உயர் அதிகாரிகளை பந்தாடுவதாக இருக்கட்டும், அதிகாரத்தில் உள்ள ஆண்களை காலில் விழவைப்பதாக இருக்கட்டும், ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் சாலை பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாகட்டும், எஸ்மா, டெஸ்மா மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலையை விட்டு துரத்துவதாகட்டும், அவர்களை கைது செய்வது போன்ற முட்டாள்தனமான முரட்டு தனத்தை தைரியம் என பாராட்டி புலங்காகிதம் அடைவதே அவரின் விசுவாசிகளின் வேலை. 

எம்.ஜி.ஆர்க்கு பின் கட்சியில் தனக்கு நம்பகமானவர்களை அவர் உருவாக்கவில்லை. அதற்கு பதில் அடிமைகளை உருவாக்கினார். அந்த அடிமைகளை ஏவல் நாயாக பயன்படுத்தினார். அவர்களையே உயர்த்தி வைத்தார். இந்த அடிமை முறை தமிழகத்தில் அதிமுகவை பார்த்து அனைத்து கட்சிகளுக்கும் பரவியது. இந்த அரசியல் அடிமைத்தனம் போக இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை. 

அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், அதை பாதுகாக்கலாம், அதை வைத்து யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என இளைய தலைமுறைக்கு கற்று தந்தவர். இப்படி ஒரு சமூகத்தை தன் சுயநலத்துக்காக ஜோக்கராக்கியவர் இன்று மரணம் அடைந்திருக்கிறார்.
அவரின் மரணத்திலும் ஏகப்பட்ட மர்மங்கள். இதை அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஏன் இப்போது முதல்வராக வீற்றிருக்கும் பன்னீர்செல்வம், 31 அமைச்சர்கள் உட்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. எதனால் அவருக்கு மரணம் வந்தது என்பது கட்சியினருக்கோ, பொதுமக்களுக்கோ தெரியவில்லை. இது எத்தனை பெரிய அநியாயம். யாரும் இதுப்பற்றி கேள்வி எழுப்பவில்லை. அதற்கு பதில் அவரை புனிதராக்கும் பணியை தான் செவ்வனே செய்கிறார்கள். 

மறைந்தபின் அவரை புகழக்கூடாதா என கேட்கிறார்கள். நல்லதை புகழட்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், தனிப்பட்ட முறையிலும் அவரால் பயன்பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள் புகழ்கிறார்கள். அந்த கருத்துக்களை நிச்சயம் வரவேற்கிறேன். எனக்கு கூட தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் ஜெவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர் நமக்கு நம்பகமானவர் என தெரிந்தால் அவர்களை எப்போதும், எங்கும் அவர் கைவிட்டதில்லை, உதவிக்கு பதில் உதவி செய்து தன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்வார். அதற்காக அவரது ஆணவ ஆட்சியை, அதிகார திமிறை விமர்சிக்காமல் இருப்பது என்பது இன்னும் பல தலைவர்களை நாம் அந்த தன்மையில் உருவாக்கவே வைக்கும், அது தமிழகத்தை சவக்குழியில் தள்ளிவிடும், ஜாக்கிரதை.   

புதன், நவம்பர் 09, 2016

தயக்கத்தை உடை………… தலைநிமிர்…………………..




23 வயது இளைஞன் அவன், பி.எஸ்.சி கம்பயூட்டர் சைன்ஸ் படித்துள்ளான். சில மாதங்களுக்கு முன்பு, அண்ணே வேலை தேடறன் சரியா கிடைக்கல. உங்களுக்கு நிறையப்பேரை தெரியும், ஏதாவது ஒருயிடத்தல சொல்லி எனக்கொரு வேலை வாங்கி தாங்கண்ணே என வந்து நின்றான். 

நானும் சிலயிடங்களில் வேலைக்கு சொல்ல என் படிப்புக்கு ஏத்த வேலையில்லண்ணா, நல்ல வேலையா பார்த்து சொல்லுங்கண்ணா என்றான். சரியென மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மருந்து விற்பனை நிறுவனத்தில் நண்பர்கள் வேலை செய்ய அவர்கள் மூலமாக விற்பனை பிரதிநிதி வேலைக்கான நேர்காணல்க்கு அனுப்பிவைத்தேன். 80 சதவிதம் வேலை உறுதி, 22 ஆயிரம் சம்பளம் எனச்சொல்ல அதற்கான நேர்காணல்க்கு அவனை அனுப்பிவைத்தேன். போன வேகத்தில் சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பி வந்தான். கம்மி சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை இங்கயே சொல்லுங்கண்ணா என்றான். என்னடா என கேட்டும் சரியான பதில்யில்லை.

நேர்காணல் நடத்தியவர் உடன் பணிபுரிந்த எனது நண்பரிடம் விவகாரத்தை கேட்டபோது, ஒரு கேள்வி கேட்கறோம், பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லனும், அதவிட்டுட்டு தயங்கி தயங்கி, தலையை கீழ தொங்கப்போட்டுக்கிட்டு நிக்கறான், சரியாவே பேச வரல, இப்படிப்பட்டவன் எப்படி டாக்டர்கள்கிட்ட பேசி கம்பெனி பொருட்களை சிபாரிசு பண்ண வைப்பான், அதான் போடான்னு சொல்லிட்டன் என்றுள்ளான். 

இது அந்த இளைஞனின் தவறல்ல. கிராமபுற சூழ்நிலையில் பிறந்து, படித்துவிட்டு வரும் 99 சதவித இளைஞர்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு தான் கல்லூரி படிப்பை முடிக்கிறார்கள். கீழ்நிலை கல்வி மாணவர்கள் மட்டும்மல்ல உயர்கல்வி படித்து முடிக்கும் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். நகர் புறத்தில் பயிலும் பிள்ளைகள் பரவாயில்லை, தயக்கத்தை அதிகமாகவே உடைத்துள்ளார்கள்.
எதனால் உள்ளுரிலேயே வேலை கேட்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டு, அவனிடம் பேச தொடங்கியபோது தான் கவனித்தேன். அவன் என்னிடம்மே அவ்வளவு பயத்தோடும், தயக்கத்தோடும் பேசினான்.
தம்பீ, தயங்காதே. என்ன பார்த்து எதுக்கு பயப்படற, தயங்கி தயங்கி பேசற, முதல்ல சேர் நுனியில உட்கார்றதுக்கு பதிலா நல்லா உட்கார். நீ என்ன கடனா வாங்க வந்துயிருக்கற. படிச்சியிருக்கற. வேலை ஏதாவுது இருந்தா சொல்லிவிடச்சொல்ற அவ்வளவு தானே இதுக்கு எதுக்கு தயங்கிக்கிட்டு என்றதும், இல்லண்ணா நீங்க பெரிய ஆளுங்களோட பழங்கறிங்க, அதான். 

நான் தொழில் நிமித்தமா பலதரப்பட்டவங்களோட பழகறன், அவ்வளவு தான். அதுக்கு நீ எதுக்கு பயந்து பயந்து பேசற, எங்கிட்ட எதுக்கு தயங்கனும் என கேட்டதும் அமைதியாக இருந்தான்.

உனக்கிருக்கற தயக்கம், இப்ப வரைக்கும் எனக்கும் உண்டு. நீ வந்து என்கிட்ட நிக்கற. 15 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு என்ன படிக்கனும்ன்னு கூட தெரியாது, வழிகாட்ட ஆள்கிடையாது. எதைப்பார்த்தாலும் பயம். அப்படியிருந்தவன் தான். இந்த பயம் தொடர்ச்சியா இருந்தா நம்மை முடக்கிடும். பயத்தை, தயக்கத்தை முதல்ல விட்டுடு. பயமும், தயக்கமும் இருந்தா சாதிக்க முடியாது, தெளிவான முடிவு எடுக்க முடியாது. பயத்தோட வேலை செய்யறப்ப வேலையை நடக்காது. அப்படிப்பட்ட இளைஞர்களை எந்த நிறுவனமும் விரும்பாது. 

நீ நேர்காணல்க்கு போறப்ப நேர்காணல் நடத்தறவரை நேர்கொண்ட பார்வையா பார்த்து பேசு. அவுங்க கேள்வி கேட்டதும் நீ சொல்றதை தயக்கமில்லாம சொல்லு. உனக்கு தெரியாததை தெரியாது, ஆனா தெரிசிக்குவன்னு சொல்லு. இங்க யாரும் பிறக்கும் போதே எல்லாம் கத்துக்கிட்டு வந்தவங்கயில்ல. அதுக்காக மக்கு சாம்பிராணியா போய் நிக்காத. பொது அறிவ வளர்த்துக்க. தினமும் செய்தித்தாள்களை படி. நீ நேர்காணல்க்கு போகும் நிறுவனத்தைப்பத்தி, அந்த நிறுவனத்தின் பணிகளைப்பத்தி கொஞ்சமாவுது தெரிஞ்சிக்க. ஒரு வேலைய முழு ஈடுப்பாட்டோட செய்தா தான் அதில் வெற்றி பெற முடியும். விருப்பம்மில்லாம வேலை செய்தா அந்த நிறுவனத்துக்கும் இழப்பு, உன் வாழ்க்கைக்கும் இழப்பு. 

டவுன்ல இருக்கற பசங்களோட போட்டி போட முடியலண்ணா ?. 

நகரத்தில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து வந்தவங்கயில்ல. அவுங்க தாத்தா கிராமத்தில் ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், பையனை படிக்க வச்சார். அந்த பையன் நகரத்துக்கு வேலைக்கு வந்தான். அந்த பையன் தன் மகனை நகரத்தில் படிக்க வச்சான். அதனால் அவனுக்கு பறந்துப்பட்ட உலகத்தை தெரிஞ்சி வச்சிக்கறான், தயக்கத்தோட நிக்காம, தைரியமா எதையும் எதிர்கொள்றான். 

உன் தாத்தா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தார், உங்கப்பா ஏர் ஓட்டிக்கிட்டு இருந்தாலும், உன்ன படிக்கவச்சியிருக்கார். என்ன அந்த நகர வாழ்க்கை வாழும் தந்தையைப்போல உன் தந்தை கிடையாது. அதனால உனக்கு பறந்துப்பட்ட உலகம் அறிய முடியாம போச்சி. அவ்வளவு தான். அதுக்காக அவனோட எந்த விதத்திலும் நீ குறைந்தவனில்லை. 

அவன் படிச்ச அதே படிப்பதான் நீயும் படிச்சியிருக்கற. அவன் படிக்கறப்பயிருந்து தன்னோட தகுதிகளை வளர்த்துக்கிட்டான், அதுக்கான வாய்ப்புகள் இருந்தது. உனக்கில்ல, அவ்வளவுதான். இப்ப கத்துக்க. மோதிப்பார். மோதாமலே என்னால முடியாதுன்னு சொல்லாத. அத சோம்பேறி சொல்றது. 

நீ தைரியமா சவால்களை எதிர்க்கொள், அதற்கு தகுந்தார்போல் உன்னை தயார் படுத்திக்க என்ன உதவி வேணும்ன்னாலும் கேளு செய்யறன் என்றேன். கேட்டுக்கொண்டு போனவன் அதன்பின் வரவில்லை. அடுத்த சில நாட்களில் அவன் ஊரில் இல்லை. அவனை நானும் மறந்துபோயிருந்தேன். 

இரண்டு மாதத்துக்கு பின் இப்போது இனிப்பு பாக்ஸ்சோடு வந்து சந்தித்து வேலைக்கு சேர்ந்துட்டன், முதல் மாத சம்பளம் வாங்கனன், நீங்க சொன்னமாதிரி என்னை மாத்திக்கிட்டன், வேலை கிடைச்சிடுச்சி. அதான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தன் என்றான். 

வாழ்த்துக்கள்டா………… நகர வாழ்க்கைக்கு போற கிராமத்தை மறந்துடாத என்றேன். யோசித்தபடியே சென்றான்.