சனி, மே 26, 2012

எண்ணெய் விலை உயர்வு காரணமென்ன?.




இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயை தாண்டி விடும். சர்வ தேச சந்தையை இந்தியாவில் திறந்தபின் வாகன கொள்முதல் இந்தியாவில் அதிகமாகிவிட்டது. இதனால் டூவீலர், கார் போன்ற வாகனங்கள் இந்தியாவில் பெருக்க தொடங்கியுள்ளன. 

இந்தியாவில் ஒரு வீட்டுக்கு மூன்று டூவீலர் என்பது சர்வசாதாரணம். தற்போது நடுத்தர குடும்பவாசிகள் கார் இருந்தால் தான் மரியாதை என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். இவர்களின் மன ஓட்டத்தை அறிந்தே குறைந்த விலை கார்கள் இப்போது சந்தைக்கு வந்துள்ளன. இப்படி வாகன பெருக்கத்தால், பெட்ரோல், டீசல் தேவை அதிகமாகிவிட்டது. வளைகுடா நாடுகளில் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனை தான் நமது அரசாங்கமும், பன்னாட்டு முதலாளிகளும் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

மக்கள் வாகனங்களை வாங்கி அழகு பார்க்கபோவதில்லை. ஓட்டித்தான் ஆகவேண்டும். வாகனம் ஓட வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் போட்டுத்தான் ஆக வேண்டும். இதனை யோசித்தே நாம் என்ன விலை சொன்னாலும் வாங்குவான் மங்குனி மக்கள் என்பதை உணர்ந்தே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே போகின்றன எண்ணெய் நிறுவனங்கள். 

பெட்ரோல் விலையை ஏத்த போகிறார்களாம் என்ற அறிவிப்பு வந்ததும் பங்க் வாசலில் க்யூ கட்டி நின்று டேங்க்கை நிரப்பிக்கொண்டு பறக்கும் என்றுமே தெருவுக்கு வந்து நமது எதிர்ப்பை காட்டுவதில்லை. இதனால் அரசாங்கம் தாறுமாறாக விலையேற்றத்தை அனுமதிக்கிறது. 

குற்றம் நம்மிடமே உள்ளது, பெட்ரோல் விலை உயரும் போதுயெல்லாம் எதிர்கட்சிகள் பந்த் செய்கின்றன. மக்களையும் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றன. மக்களாகிய நாம் அதை கண்டுக்கொள்கிறோமா என்றால் இல்லை. இல்லவேயில்லை. அதனால் தான், அரசை ஆள்பவர்கள் மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டார்கள் என உணர்ந்தே விலையேற்றம் என்ற ஆயுதத்தால் அடிக்கிறான். நாமும் வாங்கிக்கொண்டுயிருக்கிறோம். 

இந்த விலையேற்றத்துக்கு பின்னால் அமெரிக்காவின் பொருளாதார விளையாட்டும் உள்ளது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயரும் போதுயெல்லாம் உலக நாடுகளில் பொருட்களின் விலை உயரும். குறிப்பாக கச்சாபொருட்களின் விலை. குடந்த வாரத்தில் 55 ரூபாயாக இருந்த டாலார் மதிப்பு 56 ரூபாயாக ஏறியதும் நம் நாட்டில் உடனடியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது என்ற காரணமும் கூறப்பட்டது. 

எங்கோ இடி இடிக்க இங்கு மழை பெய்ய காரணமென்ன?. சர்வதேச சந்தையில் நாம் டாலரை தந்தே இந்தியா பொருட்களை கொள்முதல் செய்கிறது. இந்தியா மட்டுமல்ல 99 சதவித நாடுகள் ஏற்றுமதி - இறக்குமதிக்கு டாலரைத்தான் தருகின்றன. இதனால் அமெரிக்க ஒன்றியத்தின் பொருளாதாரம் விழுந்தாலும் எழுந்துவிடுகிறது. டாலர் மதிப்பு ஏற ஏற இந்தியாவில் விலையேறத்தான் செய்யும். இதனை தடுக்க ஒரே வழி சீனா முன்மொழியும் வழி. 

சர்வதேச சந்தையில் ஏற்றுமதி இறக்குமதிக்கு டாலருக்கு பதில் தங்கத்தை கொண்டு வியாபாரம் செய்யலாம். இல்லையென்றால் உலக நாடுகளுக்கு என பொதுவான ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வரலாம் என்கிறது. இது சாத்தியமானால் ஒரளவு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும். ஆனால் இதனை நம் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள். காரணம், அமெரிக்க விசுவாசம். பண வெறி. 

அதனால் மக்கள் எழுச்சி பெற்று அரசாங்கத்துக்கும், இதுபோன்ற மோசடிக்கு எதிராக போராடாத வரை எண்ணெய் விலை மட்டுமல்ல எல்லா விலையும் ஏறும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.  

வெள்ளி, மே 18, 2012

சுகமான சுமைகள் …………. 26.




உனக்கு மாப்பிளை பாக்கறாங்களாம்மே. 

ம். 

உன்ன விட அதிகபட்சம் 5 வயசு அதிகமா இருக்கறமாதிரி பாத்து செலக்ட் பண்ணு. அப்பத்தான் ஜோடிப்பொருத்தம் இருக்கும், வாழ்க்கை சந்தோஷமா போகும்.

ம் என தலையாட்டிவிட்டு போனால். 

தேர்வுகள் முடிந்தது. ரூம்மை காலி செய்யும் முன் கோயிலில் கவிதாவை பார்த்தேன். முன்னபோல அடிக்கடி சந்திக்க முடியாது. ஊருக்கு போறன். தினமும் போன் பண்றன். நீயும் வீட்டுக்கு போன் பண்ணு. வார வாரம் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வர்றன் எனச்சொல்லி விட்டு ரூம்க்கு வந்தேன். 

அங்கு ரமேஷ், தயா இருவரும் ரூம்க்கு வந்திருந்தனர். அகிலன் பொருள்களை பேக் பண்ணிக்கொண்டு இருந்தான். இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்மேடா என தயா தான் கேட்டான். டேய், எக்ஸாம் முடிஞ்சி இரண்டு நாள் இங்கயே இருந்தாச்சி. இப்பவும் கிளம்பலன்னா அவ்ளோ தான். 

மச்சான் இனிமே நாம அடிக்கடி சந்திக்க முடியாதா என ஏக்கத்தோடு கேட்டான் அகிலன். 

எல்லார் ஊருக்கும் பக்கத்து பக்கத்துல தானே இருக்கு. அதனால விருப்பப்பட்டப்ப சந்திச்சிக்கலாம் என்றான் ஜான். 

சந்திச்சிக்கலாம். ஆனா குரூப்பா சந்திச்சாதாண்டா ஜாலியா இருக்கும் என்றான் அகிலன். 

இப்ப மூடிக்கிட்டு கிளம்புங்கடா. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். வாரம் ஒருத்தன் ஊருக்கு மத்தவங்க போலாம் என்றதும் சூப்பர் ஐடியா மச்சான் என குதித்தான்கள். 

அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வந்துடுங்கடா என்றேன்.

ஒ.கே மச்சான். சரக்கு கிடைக்குமா என தயா தான் கேட்டான். 

மூடிக்கிட்டு வாங்கடா என்றபடியே ரூம்மை காலி செய்து பக்கத்து தெருவில் இருந்த வீட்டு ஓனரிடம் சாவி தந்து நன்றிச்சொல்லிவிட்டு வந்தபோது. 

ஆமாம். உங்காளுங்கக்கிட்ட சொல்லிட்டங்கிளா?.  

அதுங்கள பாத்துட்டு அப்படியே கிளம்பறோம்டா என தயாவும், ரமேஷ்சும் பைக் ஒன்றில் கிளம்பினர். அகிலனை ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டான்ட்டுக்கு அனுப்பிவிட்டு நானும் ஜானும் ப்ரியா வீட்டை நோக்கி பைக்கில் கிளம்பினோம். 

ப்ரியா வீட்டில் அவளது அப்பாவை தவிர அனைவரும் இருந்தனர். ப்ரியா அம்மா வாங்கப்பா என அழைத்தவரிடம், ஊருக்கு போறோம்மா அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தன். 

காலேஜ் முடிஞ்சா ஊருக்கு போயிடனுமா, இரண்டு நாள் இங்க வீட்ல இருந்துட்டு போப்பா. 

நம்ம வீடு தானே அப்பறம்மா வந்து தங்கறன். 

இல்லம்மா, சார்க்கு அங்க ஏதாவது மாமன் பொண்ணு காத்திருக்கும் அதான் காலேஜ் முடிஞ்சதும் ஜாலியா கிளம்பறாரு என கவிதா கிண்டலடித்ததை ப்ரியா ரியாக்ஷன் காட்டாமல் கேட்டுக்கொண்டுயிருந்தாள். 

நீங்க வேற அப்படியெல்லாம் கிடையாது. காலேஜ் முடிஞ்ச பிறகு இங்கயென்ன வேலை அதான் கிளம்பறன். லீவு முடிஞ்சி, ரிசல்ட் வந்ததும் ஏதாவது வேலை தேடனும், இல்லன்னா படிக்கனும். அதுவரைக்குமாவுது வீட்ல இருக்கலாம்மில்ல அதனால தான் கிளம்பறன். 

இவ கிடக்கறா. அத விடுப்பா. 

ப்ரியாவுக்கு மாப்பிளை பாத்தாச்சி. அநேகமா அது முடிஞ்சிடும்னு நினைக்கறன். கல்யாணத்துக்கு சொல்லியனுப்பறோம் வந்துடுப்பா. 

நாங்கயில்லாம கல்யாணம்மா. ஒரு வாரத்துக்கு முந்தியே வந்துடறோம்மா என்றதும் புன்னகைத்தபடியே இருங்கப்பா காபி போட்டு எடுத்து வர்றன் என உள்ளே போனார். 

அப்போது கரண்ட் கட்டாக, உள்ள புழுக்கமா இருக்கும் மாடிக்கு போங்க காபி போட்டு எடுத்து வர்றன் என ப்ரியா அம்மா சொல்ல அனைவரும் மாடிக்கு போனபோது வேப்பமர காற்று சில்லென வீசியது. 

மாடிக்கு வந்ததும் சார், போனதும் எங்களயெல்லாம் மறந்துடுவிங்களா என ப்ரியா தான் கேட்டாள். 

கேட்கறவங்க மறக்காமயிருந்தா போதும். கல்யாணம் வேற ஆகப்போவுது உங்க நினைவுல இருந்து நாங்க மறையாமயிருந்தா போதும் என்றதும் கன்னத்தில் பளார் என அடித்தாள். அதை பார்த்து கவிதாவுக்கு சுல்லென கோபம் வந்தது அவள் கண்களில் தெரிந்தது. 

அந்த நேரம் பார்த்து கவி, வந்து காபி எடுத்தும்போம்மா என்றதும் எங்களைபார்த்தபடியே கீழே இறங்கினால். 

படியிறங்கிய கவிதாவிடம் அப்படியே தண்ணீ எடுத்துவா என்றதும் முறைத்தபடியே சென்றாள். 

இரண்டுத்தயும் அது எப்படி எடுத்து வரும். நானும் போய் வர்றன் என ஜானும் போனான். 

ப்ரியா பக்கம் திரும்பி. நான் கவிதாவ மறந்தாலும் மறப்பன். ஆனா நான் சாகற வரைக்கும் என் நண்பியா என் மனசுல இருந்துக்கிட்டு தான் இருப்ப. உன்னை நினைக்காத நாள் என் இறந்தநாள் தெரிஞ்சிக்க. உனக்கப்பறம் தான் எல்லாமே என்றதும் கண் கலங்கினால். 

ஊருக்கு போனாலும் தினமும் சாயந்தரம் போன் பண்றன். 

எனக்கா? அவளுக்கா?.

கவிதாவ காதலிக்கறத மட்டும் தான் மறைச்சன். சத்தியமா வேற எதையும் மறைக்கல. போன் பண்றது உன்கிட்ட பேசத்தான். 

நம்பிட்டன். 

சத்தியமா.

அவளை வெள்ளிக்கிழமை தோறும் கோயில்ல சந்திக்கறன்னு சொல்லியிருக்கன் என்றதும் அமைதியாக என்னைப்பார்த்தவளிடம், உன்ன பாக்க வரலன்னு நினைக்காத. எப்படியும் கல்யாணம்மாகி போய்டுவ. அதனால தான் என இழுக்கும் போதே. 

காபி ரெடி என ஜான் குரல் கொடுத்தபடியே மேலே வந்தான். பின்னாடியே கவிதாவும் காபி டம்பளர்களோடு வந்தாள். 

கவிதா மேடம், உங்கக்கா என்னையே இந்த அடி அடிக்குதே. உங்கக்காவ கட்டிக்க போறவர் என்ன பாடுபட போறார்னு தெரியல. நீயாவது உன்ன கட்டிக்க போறவற அடிக்காம இரு. 

பாக்கலாம்... பாக்கலாம்........ 

காபி குடித்தபடியே கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பினோம். 

ஊருக்கு வந்த இரண்டு பசங்களோடு காலேஜ் பத்தி பேசுவதே வேலையாக இருந்தது. ஒரு வாரம் பொருத்து வீட்டுக்கு அகிலன், தயா, ரமேஷன், ஜான் என வந்திருந்தனர். ஜாலியாக ஓடியது. அடுத்த வாரம் அகிலன் வீட்டுக்கு முடிவு செய்து கிளம்பினார்கள். 

தினமும் போன் செய்யும்போதுயெல்லாம் ப்ரியாவே போனை எடுத்தாள். என் மீதான கோபத்தை மறந்திருப்பது அவள் குரலில் தெரிந்தது. அந்த வாரம் வெள்ளிக்கிழமை கவிதாவை சந்தித்தபோது, முன்னமாதிரியில்ல இப்ப கொஞ்சம் பேசறா என்றாள். 

அகிலன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போனபோது, வீட்ல எங்க லவ் மேட்டரைப்பத்தி சொன்னன். எங்கப்பா தான் குதிச்சாரு. எங்கம்மா தான், ஒரே பையன் ஏதோ ஆசைப்பட்டுட்டான். அவன் என்ன வேற சாதி பொண்ணயா பாத்துயிருக்கான். நம்ம ஜாதி ஜனத்துல தான் பாத்துயிருக்கான். அவன் சொன்ன ஊர்ல நம்ம வடக்கால தெரு காமாட்சியக்கா பொண்ண தந்துயிருக்காங்க. அந்த பொண்ணுக்கிட்ட கேட்டு நல்ல குடும்பமாயிருந்தா அந்த பொண்ணயே பேசி முடிங்கன்னு சொன்னாங்க. எங்கப்பா அப்பவும் அடம்புடிச்சாரு. நான் இரண்டு நாள் சாப்பிடாம அடம் புடிச்சதும் சத்தியா வீட்லயும் போய் பேசிட்டு வந்துட்டாங்கடா. ஜீலையில கல்யாணம் பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டாரு. எங்க தவுட்டு மில்லயும், நிலத்தயும் பாத்துக்கிட்டு இருக்க வேண்டியது தான் ரமேஷ். 

நாயே இவ்ளோ நடந்திருக்கு. ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்மில்ல என தயா கோபப்பட்டான். 

நேர்ல பாக்கும்போது சொல்லலாம்மேன்னு இருந்தன். 

நம்ம கேங்க்ல முதல் ஆளா கல்யாண சாப்பாடு போடப்போறன். நீ எப்படா என தயாவிடம் ஜான் கேட்டான். 

எங்க வீட்ல சொன்னன். வேற ஜாதின்னு ஒத்துக்கல. மீனா வீட்டுக்கு எதுவும் தெரியாது. என்ன பண்றத்துன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கன். 

இந்த பிரச்சனையெதுவும் எனக்கு கிடையாது. எங்கக்கா பொண்ணு மீனாட்சி காத்துக்கிட்டு இருக்கா. வர்ற கார்த்திகையில கல்யாணம் மாப்ள.

அடுத்தடுத்து கல்யாண சாப்பாடு போடறிங்களேடா என ஜான் அன்று வீட்டுக்கு புறப்படும் வரை கலாய்த்தான். 

மறுநாள், ப்ரியாவிடம் பேசியபோது, கல்யாணம் பிக்ஸாகிடுச்சி. வீட்டுக்கு பத்திரிக்கை எடுத்து வர்றன் என்றாள். மூன்று நாளுக்கு பின் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தபோது ப்ரியாவும், தேவியும் ஸ்கூட்டியில் அழைப்பிதழோடு வீட்டுக்கு வந்தார்கள். 

குடும்பத்தோடு வந்துடனும் என்றபடியே அப்பா, அம்மாவிடம் பத்திரிக்கை தந்த ப்ரியாவிடம், பத்திரிக்கையை புரட்டியபடியே மாப்பிளை என்னம்மா பண்றார் என கேட்டார் அப்பா.  

அவர் பெங்களுரூல சாப்ட்வேர் இன்ஜீனியரா இருக்கார். வீட்டுக்கு ஒரே பையன். 

உன் நல்ல மனசுக்கு நீ எங்கப்போனாலும் நல்லாயிருப்ப என அம்மா அவளை வாழ்த்தினார்கள். 

அவன் ரூம்ல இருங்க காபி எடுத்துவர்றன் என்றபடியே அம்மா அடுப்பங்கறைக்கு போனார்.  

மாடியில் இருந்த எனது அறைக்கு இருவரும் வந்தனர். டேபிள் மேல் ப்ரியாவின் திருமண அழைப்பிதழ் இருப்பதை கண்டு இருவர் முகத்திலுமே குழப்பம். 

நேத்து தான் பத்திரிக்கையே கைக்கு வந்தது. இன்னைக்கு தான் தர ஆரம்பிச்சோம் அதுக்குள்ள உனக்குயெப்படி, யார் தந்தது, என அழைப்பிதழை காட்டி கேட்டாள் ப்ரியா. 

இங்கப்பாரு. நீ என்னோட ஸ்பெஷல் ப்ரண்ட். உலகத்தல நீ ரொம்ப முக்கியம். நீ இந்த உலகத்தல எந்த பகுதிக்கு போனாலும் உன்னை நான் பாலோ பண்ணிக்கிட்டு தான் இருப்பன். உனக்காக நான் எதையும் செய்வன். 

அதிருக்கட்டும். இத யார் தந்தது?. கவிதா வந்தாளா?. 

இல்ல. ப்ரண்ட் ஒருத்தர் தந்தாரு. 

அதான் யாரு?. 

சொன்னா தெரியாது விடு என்றதும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானால். கல்யாணத்துக்கு வந்துடு எனச்சொல்லிவிட்டு கிளம்பினார்கள். 

கல்யாண வீடு கலை கட்டியிருந்தது. உறவுக்காரர்கள் எல்லோரும் வந்திருந்தனர். மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் இருந்தனர். தடபுடலாய் கல்யாணம் ப்ரியாவுக்கு தேவிதான் தோழிகளுள் ஒருத்தியாய் இருந்தாள். ப்ரியாவுடன் இருந்த மூன்று, நான்கு பெண்கள் மாடர்ன் ட்ரஸ்சில் கண்ணெ பறிக்கும் அழகில் இருந்தார்கள். ஆனாலும் ப்ரியாவுக்கு பயந்து ஒதுங்கியே இருக்க வேண்டியதாய் இருந்தது. அடிக்கடி கவிதா, என் பக்கம் வந்து அவளுங்கக்கிட்ட ஜொல் விட்ட அவ்ளோ தான் என மிரட்டிவிட்டு போனால். 

ஜான், சந்தர்பம் கிடைக்கும் போதுயெல்லாம் தேவியோடு காணாமல் போனான். கல்யாணத்துக்கு எங்களுடன் படித்த நண்பர்கள் பலர் வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும் தயா, அகிலன், ரமேஷ் உட்பட பலரும் புறப்பட்டுயிருந்தனர். மண்டபத்தை விட்டு வீட்டுக்கு வந்ததும் ப்ரியா அம்மா தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் என்னையும், ஜானையும் ப்ரியாவோட ப்ரண்ட்ஸ் என அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 

அப்படித்தான், மாப்பிளையிடமும் என்னை அறிமுகப்படுத்தினார்கள். குல்யாணத்தலயே பாத்தனே. ஏதோ அவுங்களுக்கே கல்யாணம் மாதிரி நிறைய வேலை செய்தாங்க. நண்பர்கள்ன்னா இப்படி இருக்கனும் என்றவர். நீங்க வீட்டுக்கு வரனும். அது உங்க வீடு மாதிரி என்றார். 

பரவாயில்ல சார். 

திருமணம் முடிந்து ப்ரியா பெங்களுர் புறப்பட்டபோது, தனியா சந்திக்கனும் என கேட்க தேவி வீட்டில் சந்தித்தபோது, கண் கலங்கினால். அப்பா அம்மாவ நீ தான் பாத்துக்கனும். அடிக்கடி வீட்டுக்கு போய் அவுங்கள பாத்துட்டு போ. நான் உன்னத்தான் நம்பறன்.

ம். நான் பாத்துக்கறன் என கண்ணீரோடு சரியென்றேன். 

தினமும் ப்ரியாவிடம் பேசிய நான் தற்போது பேச முடியாமல் இருப்பது ஏதோ சூன்யமாக இருந்தது. கவிதாவிடம் கேட்டபோது நல்லாயிருக்கா என்றாள். 

ப்ரியாவுக்கு திருமணம் முடிந்து மூன்று வாரம் முடிந்திருக்கும் ஒருநாள் மதியம் வீட்டில் இருந்த போன் மணியடித்தது. எடுத்தபோது, எதிர் முனையில் ப்ரியா தான். 

எப்படி இருக்கிங்க?. 

நல்லாயிருக்கன். 

நீ எப்படி இருக்க?

ம். நல்லாயிருக்கன்.

சார் எப்படி இருக்கார்?. 

அவர்கிட்டயே பேசு என்றபடி போனை தர. எதிர் முனையில் ஹலோ ராஜ் எப்படி இருக்கிங்க. 

நல்லா இருக்கன் சார்;. நீங்க எப்படி இருக்கிங்க?. 

நல்லாயிருக்கன். மேடம் உங்களப்பத்தி நிறைய சொன்னாங்க. பொறாமையா இருக்கு. 

எதுக்கு சார். 

உங்க நட்பை நினைச்சி தான். 

அமைதியாக இருந்ததும். காலேஜ் தான் முடிஞ்சி லீவ்ல தானே இருக்கிங்க. வீட்டுக்கு வாங்க. 

பரவாயில்ல சார். 

அட. என்ன சொல்லுவோம்மோன்னு பயப்படாதிங்க. உங்க வீடு மாதிரி. அதேமாதிரி நீங்க எப்ப வேணும்னாலும் போன் பண்ணலாம் என்றவர் தன் மொபைல் எண்ணையும் தந்தவர் ப்ரியாக்கிட்ட பேசுங்க என போனை தந்தார். 

போன் பண்ணு என வீட்டில் இருப்பவர்கள் பற்றி நலம் விசாரித்தவர் முடிஞ்சா ஊருக்கு வந்துட்டு போ. 

நான் பெங்களுர் இதுவரைக்கும் வந்ததுயில்ல. முடிஞ்சா வர்றதுக்கு பாக்கறன் எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

காலேஜ் ரிசல்ட் வந்திருந்தது. பஸ்ட் கிரேடில் பாஸ் செய்திருந்தேன். ஜானும் அப்படியே. அகிலன், ரமேஷ்சும் பாஸ் செய்திருந்தனர். தயா மட்டும் ஒரே ஒரு அரியர் வைத்திருந்தான். 

மற்ற மூவரும் இனி படிக்கல என்றான்கள். எனக்கோ மனதில் படிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தது. ஜான் தான் மச்சான் கரஸ்பான்ட்ல படிக்கலாம். இப்பவே ஏதாவது கம்பெனியில வேலைக்கு ஜாயின் பண்ணிடலாம்டா. எங்கப்பா அவருக்கு தெரிஞ்ச கம்பெனியில அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலைக்கு சேர்த்துவிடறன்னு சொல்லியிருக்காரு. நீ ஊன்னு சொன்னன்னா உனக்கும் சேர்த்து கேட்க சொல்றன்டா. 

எங்கப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்றன்டா?. 

வீட்டுக்கு வந்து அவரிடம் பாஸ் பண்ணதை சொல்லி ஜான் சொன்னது பற்றி கேட்டதும் உனக்கு எது இஸ்டம்மோ அதையே செய்ப்பா என்றார். 

ஜான் வீட்டுக்கு போன் செய்தபோது, அவன் அப்பா தான் எடுத்தார். ப்பா நான் ராஜா பேசறன். 

சொல்லுப்பா எப்படி இருக்கற. 

நல்லாயிருக்கன்ப்பா. 

பாஸ் பண்ணிட்டன்னு சொன்னான். என்ன பண்ணப்போற. 

ஜான்க்கு பாத்தமாதிரி எனக்கும் ஏதாவது வேலையிருந்தா பாருங்கப்பா. 

ரெண்டு பேரும் வேலை பாக்கறதும் ஒன்னா பாக்கறதுன்னு முடிவுப்பண்ணியாச்சா……… ம். நான் பாத்துட்டு சொல்றன்ப்பா. 

தேங்ஸ்ப்பா எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

போனை வைத்துவிட்டு மாடியில் உள்ள ரூம்மை நோக்கி நடந்தபோது போன் மணியடித்தது. 

போனை எடுத்தபோது, நான் தான் பேசறன் என்றபோதே அது கவிதா என கண்டுபிடித்திருந்தேன். 

ஹேய்……. எப்படியிருக்கற. 

நல்லாயிருக்கன். அம்மா உங்கக்கிட்ட பேசனும் போன் பண்ணுன்னாங்க. அதான் பண்ணன்.

என்னத்துக்கு. 

இரு அம்மாக்கிட்டயே தர்றன் கேளு. 

…………………..

என்னப்பா எப்படி இருக்கற. 

நல்லாயிருக்கம்மா. 

ஒன்னும்மில்லப்பா, ப்ரியாவ பாக்க அடுத்த வாரம் பெங்களுர் போகலாம்ன்னு முடிவுப்பண்ணோம். ப்ரியாத்தான் உன்னயும் அழைச்சி வரச்சொன்னா. 

வர்றியாப்பா. 

திடீரென்று கேட்டதும் என்னசொல்வது என தெரியாமல். தட்டு தடுமாறி இல்லம்மா. நெல் அறுக்கற வேலை இருக்குன்னு அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதனால அவரை கேட்டு பாத்துட்டு தான் வரனும். கேட்டு சொல்றம்மா. 

நிலம்ன்னு இருந்தா எல்லா நாளும் வேலை இருக்கத்தான் செய்யும். அதனால கேட்டுக்கிட்டு வரப்பாருப்பா. நாளைக்கு போன் பண்றன் என்னன்னு சொல்லுப்பா. 

சரிம்மா என போனை வைத்துவிட்டேன். 

போலாமா, வேணாமா என மனம் குழம்ப ஆரம்பித்தது. நண்பன்னா ஒரு லிமிட் இருக்கு. புதுசா கல்யாணம்மாகியிருக்கு. நாம போய் அவுங்க மாமனார்-மாமியார் ஏதாவது நெனைச்சிக்கிட்டா அது நல்லா இருக்காது. அதனால நாளைக்கு போன் பண்ணா வரலன்னு சொல்லிட வேண்டியதுதான் என முடிவு எடுத்தபோது மீண்டும் போன் மணி அடித்தது. 

எடுத்து ஹலோ என்றதும், உன் மனசுல பெரிய இவருன்னு நினைப்பா என கோபத்தில் எதிர் முனையில் வந்த வார்த்தைகளை கேட்டதும் கவிதா என்பது புரிந்தது. 

ஊருக்கு போய்ட்டு வரலாம்ப்பான்னு அம்மா கேட்டதுக்கு அப்பாக்கிட்ட கேட்டு சொல்றன்னு பெருசா பில்டப் தந்து சொல்லியிருக்க. 

வேற என்ன சொல்றது. 

மூஞ்சப்பாரு. ஒருவாரம் ஜாலியா உன்னோட இருக்கலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கன். அதனால ஒழுங்கு மரியாதையா நாளைக்கு அம்மா போன் பண்றப்ப ஊருக்கு வர்றன்னு சொல்ற. இல்லன்னா அவ்ளோ தான். 

ஏய். 

நாமயென்ன டூரா போறோம். உடனே கிளம்பி வர்றதுக்கு. போறது உங்க அக்கா வீட்டுக்கு. அங்கயிருக்கவங்க யார் இவன்னு கேட்டா என்ன சொல்றதாம். அதனால நான் வரல. 

அதெல்லாம் அங்கப்போய் பாத்துக்கலாம். 

இல்ல சரிவராது. 

நீ வர்ற அவ்ளோ தான் என போனை டொக்கென வைத்துவிட்டாள். 

இவ வேற என யோசித்தபடியே உட்கார்ந்திருந்தேன். 

எந்த கோட்டைய புடிக்கபோற என அம்மா கேட்டபடி வெளியே இருந்து சமையல் கட்டுக்கு போனார். பின்னாடியே போய் ப்ரியா அவுங்கம்மா போன் பண்ணாங்க. ப்ரியாவ பாக்க ஊருக்கு போறாங்களாம். நீயும் வாப்பான்னு கூப்படறாங்க. 

சும்மாதானே இருக்கற பெங்களுர நீயும் பாத்ததுயில்ல போய்ட்டு தான் வாயேன்டா. 

இல்லம்மா. ப்ரியா மாமனார் வீட்ல ஏதாவது நினைச்சிக்கிட்டா. 

அவுங்கள கல்யாணத்தல பாத்தனே. எனக்கென்னவோ நல்லவங்களா தான் தெரிஞ்சாங்க. எதுவும் சொல்லமாட்டாங்கன்னு நினைக்கறன். 

அப்படின்னா அப்பாக்கிட்ட சொல்லி ஒரு இரண்டாயிரம் பணம் வாங்கித்தா. 

இங்கயிருக்கற பெங்களுர்க்கு எதுக்குடா இரண்டாயிரம். 

ஒரு வாரம் இருக்கபோறாங்களாம். என் கைல காசுயிருந்தா தானே மரியாதை. 

நீ சொல்றது சரிதான். ஆனா அப்பாவ கேட்ட அவ்ளோ தரமாட்டாரே. 

நீ கடனா வாங்கித்தா. நான் வேலைக்கு போனதும் சம்பளம் வாங்கித்தந்துடறன். 

வேலைக்கே போகல அதுக்குள்ள சம்பளத்த பத்தி பேசற. எல்லாம் கொழுப்புடா.

அப்போது அப்பா மதிய சாப்பாட்டுக்கு உள்ளே வர. அம்மாவிடம் சைகை மூலமாக காசு கேளும்மா எனச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன். 

என்னடீ நீயும் உம்புள்ளயும் ஏதோ பேசிக்கிட்டுயிருந்திங்க. நான் வந்ததும் ஏதோ சொல்லிட்டு போறான். என்னவாம் உன்புள்ளக்கி. 

ஊருக்கு போறானாம். காசு இரண்டாயிரம் வேணும்ன்னு கேட்கறான். 

ஏங்க. 

அதான் அவன் கூட படிச்ச பொண்ணு. இப்ப கல்யாணத்துக்கு கூட போயிருந்தமே. அந்த பொண்ணு பெங்களுர்ல இருக்காம். அந்த பொண்ணோட அப்பா அம்மா பாக்க போறாங்களாம். இவனையும் கூப்டுயிருக்காங்க. போய்ட்டு வர்றன்னு சொல்றான். 

படிச்சிட்டு வேலைக்கு போகாம. ஊர் சுத்த போறானா?. 

இப்ப தானே காலேஜ் முடிஞ்சது. கொஞ்ச நாள் சும்மாயிருக்கட்டும். வேலைக்கு போறப்ப போவான். நீங்க சும்மா அவனை திட்டாதிங்க. 

அவனை ஏதாவது சொன்னா உனக்கு தான் வாய் நீளுது என்றவர் சாப்பிட்டு விட்டு எழுந்தவரை பார்த்து, அவன் கேட்டா என்ன சொல்றது. 
அவனை வீட்ல இருக்கச்சொல்லு. காசுயெல்லாம் தரமுடியாது. 

எம்புள்ள எங்கயாவது நாலு இடத்துக்கு போய் வரட்டும்ன்னா உங்களுக்கு புடிக்காதே. ஓத்த புள்ளய பெத்து வச்சியிருக்கு. அவனை எப்பவாவுது சந்தோஷமா இருக்க விடறிங்களா?. ஊர்ல போய் பாருங்க. அவன் வயசு பசங்க என்னன்ன பண்ணுதுங்கன்னு. என் புள்ள என்ன குடிக்கவா காசு கேட்கறான். என் இப்படி இருக்கிங்க என விசும்ப.

இப்ப எதுக்குடீ சினுங்கற. 

உங்கள கல்யாணம் பண்ணதுக்கு அழுவத்தான் முடியும் வேற என்னத்த பண்றத்து. எல்லாம் என் தலைவிதி. 

ஏய் சும்மாயிருடீ எனச்சொல்லிவிட்டு வராண்டாவுக்கு வந்தவர் என்னை பார்த்தவர் நின்றார். 

தொடரும்……………

திங்கள், மே 14, 2012

மமதையில் முதல்வர் மம்தா.


மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சியை கீழிறக்கி அரியாணை ஏறியுள்ளார் மம்தாபானர்ஜி. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து 20 ஆண்டுகளுக்கு முன் தனிக்கட்சி தொடங்கி படிப்படியாக மாநிலத்தில் கட்சியை வளர்ந்து ஆட்சியை பிடித்து சில மாதங்கள் முடிந்துவிட்டது. ஆட்சிக்கு வரும் முன்னர் அவரைப்போல யாரு மச்சான் என மீடியாக்கள், அரசியல் விமர்சகர்கள், இடதுசாரிகளை பிடிக்காதவர்கள் மம்தாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் ஆளும் கம்யூனிஸ்ட்டுகள் தான் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக மாவோய்ஸ்ட்டுகள் போராட்ட களத்திற்க்கு வந்தபோது, அவர்களோடு கைகோர்த்தார் மம்தா. அதையும் தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டனர்.

மம்தா ஆட்சிக்கு வந்தார். நல்லது செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் செயல்பாடுகள் கேலிக்குரியதாக மாறியுள்ளன.

மம்தா ஆட்சிக்கு வர உதவிய மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்கள் மம்தா ஆதரவோடு ரகசியமாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நாட்டை துண்டாட நினைக்கற மாவோக்களை சுட்டது தவறில்லை என்றார்கள் தேசியவாதிகளும், மீடியாக்களும். கொல்கத்தாவில் ஒரு மருத்துவமனை தீ பிடித்தபோது, ஓடிப்போய் சம்பவயிடத்தில் நின்றார். ஆஹா இவரல்லவா முதல்வர் என பாராட்டினார்கள்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவில் கிளை பரப்ப முயன்றபோது, மம்தா எதிர்த்து நின்றார். பலே பலே என பாராட்டினார்கள். இரயில்வே கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டபோது, தன் கட்சியின் ரயில்வே அமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்து அவரை பதவியில் இருந்து இறக்கினார். இவரல்லவோ மக்கள் தலைவி என கொண்டாடினார்கள்.

யார் யார் முதல்வர் மம்தாவை கொண்டாடினார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது எதிர்த்து நின்று கூப்பாடு போடுகிறார்கள்.

மாநிலத்தில் பால்விலை உட்பட சில அத்தியாவாசிய பொருட்களின் விலையை உயர்த்தியவுடன் அய்யோ என குதிக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஏடுகளை தவிர வேறு எதையும் நூலகங்கள் வாங்கக்கூடாது என முதல்வர் மம்தா அறிவித்தபோது அரண்டு விட்டார்கள் மீடியா முதலாளிகள். கம்யூனிஸ்ட்டு ஒருவரின் குடும்பத்தோடு திரிணாமுல் தொண்டர்கள் யாரும் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் நமது எதிரிகள் என பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

கனவில் முதல்வர் மம்தாவை எதிர்த்தால் கூட இனி சிறையில் மிச்ச சொச்ச நாளை கழிக்க வேண்டி வரும் என்பதை கார்டூன் போட்ட ஒரு பேராசிரியரை கைது செய்து காட்டியுள்ளது அரசு.

இப்போது, தவறு என தெரிந்தும் முன்பு ஆதரித்தவர்கள் தற்போது அவர்களது அடிமடிக்கே ஆபத்து என்றதும் மம்தாவை எதிர்க்க களமிறங்கிவிட்டார்கள்.

முதல்வர் மம்தா மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் உள்ள பல மாநிலங்களில் பெண்கள் தலைமை பொறுப்புக்கு வரும்போது, தங்களது நிழலை கூட மறந்து தன் போக்கில் நடந்துக்கொள்கிறார்கள். அதுக்காக ஆண் அரசியல்வாதிகள் யோக்கியவான்கள், சரியானவர்கள் என்பதல்ல அர்த்தம்.

மூன்றாவது முறை தமிழகத்தின் முதல்வராக அமர்ந்துள்ள ஜெ, தமிழகத்தில் ஆடாத ஆட்டமா?.

91-95ல் முதல்வர் பதவியை கொண்டு ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்தார். அதிகார துஸ்பிரயோகம். 2001 – 2006ல், அமைச்சர்கள் வயது வித்தியாசம்மில்லாமல் பதவிக்காக சாஸ்டாங்கமாக காலில் விழ வைத்தார். தவறான முடிவுகள் எடுத்தார். அதிகார ஆட்டம் உச்சத்துக்கு போனது. இதே 2011ல் மீண்டும் அதே ஆணவத்தோடு ஆட்டம் போடுகிறார்.

உத்தரபிரதேச முன்னால் முதல்வர் மாயாவதி, கடந்த 5 ஆண்டில் அவர் செய்த தில்லாலங்கடிகள் சொல்லி மலாது. ஆதிகாரிகள் முதல் தன் கட்சியினர் வரை அனைவரையும் அதட்டி உருட்டினார்கள். கோடிகளில் யானை சிலை, தன் சிலைகளை மாநிலத்தில் நிறுவி விளையாட்டு காட்டினார்.

இராஜஸ்தான் முன்னால் முதல்வர் வசுந்தரே, தன் இன மக்களையும், தன் மத மக்களை தவிர அவர் மற்றவர்களை படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தன் உடலை நம்பிய அளவுக்கு தன் சகாக்களை நம்பவில்லை அவர். டெல்லி முதல்வர் ஷீலாதிட்ஷீத்தும் அப்படியே. இருந்தும் ஒரளவுக்கு மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்கிறார். செயல்படுத்துகிறார்.

இப்படி இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களை ஆண்ட, ஆளும் பெண் தலைவிகள், மற்றவர்களை நம்பாமல் பல தவறான முடிவுகளை எடுத்து தங்களது வளர்ச்சிக்கு தாங்களே முட்டுக்கட்டை போட்டுக்கொள்கிறார்கள். தங்கள் அருகில் உள்ள ஆண் அதிகாரிகள், சக அமைச்சரவை சகாக்களை கூட நம்ப மறுக்கிறார்கள்.

பெண்கள் மற்றவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம் தான். அதற்காக அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்ககூடாது, பேசக்கூடாது. அரசியல், அதிகாரத்தில் இருக்கும்போது மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் தவறுகள் என்ன செய்துள்ளோம் என்பதை அறியமுடியும். மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இதை கேட்கத்தான் ஆள்யில்லை.

(என்னப்பா இவன் சோனியாகாந்தி பற்றி கட்டுரையில குறிப்பிடலேயேன்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது, அந்த மானம் கெட்ட கட்சியைப்பத்தி எதுக்கு பேசனும்ன்னு தான் குறிப்பிடல சகாக்களே).