14 ஆண்டுகாலம் தொடர்ந்து தமிழகத்தை எம்.ஜீ.ஆர் ஆண்டபோதுக்கூட திமிறுடன் ஜாம்பவானாக நின்றது திமுக. ஆனால் தற்போது தேர்தல் கூட்டணிக்காக சுள்ளான் கட்சிகளுக்காக ஏங்கி நிற்க்கிறது. காரணம் திமுக தன் பலத்தை இழந்து வருகிறது. இல்லையென மறுத்தாலும் நிதர்சன உண்மை அது தான். இளம் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்க்க எந்த பணியும் செய்யாமல் சூம்பி போய் கிடக்கிறது. காரணம் நான் தான் பெரியவன் என்ற மனோபாவம். நம்மை போல் இங்கு இங்கு வேறு எந்த கட்சியும்மில்லை என்ற அகம்பாவம்.
இந்த எண்ணம் தான் காங்கிரஸ் சாம்ராஜ்யத்தை அழித்தது. இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பேரியக்கம் 1955களில் சங்பரிவார், இடதுசாரி அமைப்புகளை கில்லு கீறையாக நினைத்தது. ஆனால் காலப்போக்கில் காங்கிரஸ் கண்ணை உறுத்தும் நிரந்தர தூசாக மாறிவிட்டது. இடதுசாரி கட்சிகள் தான் இரண்டு முறை மத்தியரசை இயக்கியது. தமிழகத்தில் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது என்றார் காமராஜார். அவர் குறிப்பிட்ட அதே திமுக தான் ஆட்சியில் அமர்ந்து அவரிடம் ஆசி வாங்கியது. இன்றைய காலம் வரை காங்கிரஸ்சை அரியணை ஏற விடாமல் செய்து வருகிறது.
சுதந்திரம் வாங்கி தந்த கட்சி எதனால் அழிந்தது என்றால் காங்கிரஸ் பேரியகத்தின் முதலாளித்தும், தொண்டர்களை கட்சிக்கு வேலை செய்யும் கூலியில்லாத வேலைக்காரர்களாக எண்ணியது, மக்கள் மனதை புரிந்து கொள்ள முடியாதததன் விளைவு ஓட்டை விழுந்த படகானது. இதை புரிந்துக்கொண்டு கட்சி ஆரம்பித்த காலத்தில் திமுக தலைகள், மக்களோடு நெருங்கி பழகி ஏழைகளின் குரலாக ஒலித்தது. காங்கிரஸ் முதலாளித்துவமான கட்சி என குற்றச்சாட்டு, எழைகளின் எதிரி என்ற வசைப்பாடல், பேரியகத்தில் உள்ள ஏதோச்சதிகாரம், வாரிசு அரசியல், பணக்காரர்களின் புகலிடம்மென பட்டி தொட்டியெங்கும் மக்கள் மனதில் உள்ளதை உள்வாங்கி பேசியது திமுக. ஏழைகள், நடுத்தர மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கி திமுகவை ஆட்சி கட்டிலில் அமரவைத்தார்கள். 35 ஆண்டுகாலம் காங்கிரஸ்சை அரியாணை பக்கம் தமிழகத்தில் வரவிடாமல் செய்து வருகிறது திமுக.
காங்கிரஸ் மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை வளரும் காலத்தில் திமுக சொன்னதோ அதே குற்றச்சாட்டுகளை இன்று திமுக மீது வைக்கப்படுகிறது. அன்று காங்கிரஸ் செய்த அதே வேலையை தான் தெரிந்தே இன்று திமுக செய்து வருகிறது.
இன்று தொழிலதிபர்கள் திமுகவை தான் நம்பி உள்ளார்கள். பணக்காரர்கள் எல்லாம் வரிசை கட்டி நின்று திமுகவில் மெம்பராகியுள்ளார்கள். திமுகவை இயக்குபவர்கள் பண முதலாளிகள் தான். சிமெண்ட் விலை உயர்வை தடுக்க முடியாமல் திண்டாடுகிறது. பூரண மது விலக்கு எனச்சொல்லப்பட்டது. காரணம் முதலாளிகளின் ராஜ்யத்தில் திமுக இருப்பதால் தான். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் பணக்காரர்கள் அதிகம் உள்ள கட்சி எது என கணக்கெடுத்தால் திமுகவுக்கு முதலிடம். வாரிசு அரசியல் பற்றி பேசிய திராவிட தலைவர்கள் தங்களது வாரிசுகளை அரசியலில் இறக்கி நோகாமல் நோம்பு கும்பிட வைக்கிறார்கள். தொண்டர்களை எப்படி காங்கிரஸ் கண்டுக்கொள்ளவில்லையோ அதே போல் இன்று திமுக நிர்வாகிகள் உடன் பிறப்புகளை உளுத்தம் பருப்புகளாக்கிவிட்டார்கள்.
எந்த ஏழைகள் திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார்களோ அந்த ஏழைகள் தற்போது திமுகவின் எதிரிகளாகி போனார்கள்;. காரணம், பாமர ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் திண்டாடிக்கொண்டுயிருக்கிறார்கள். உண்ணும் உணவு முதல் குடியிருக்க வீடு கட்டுதல் வரை விலையேற்றம் விலையேற்றம். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்;, ஒரு கிலோ பருப்பு 150 ரூபாய் என விற்கப்படுவது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள உங்களுக்கு சாதாரண பணமாக தெரியலாம். அன்றாடம் கூலி வேலைக்கு போகும் சாமானியனுக்கு அது எட்டாக்கனி.
இதைப்பற்றி கேட்டால் நாங்கள் தான் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தருகிறோமே என சவடால் பேசுகிறிர்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் அதை வாங்கி சாப்பிடுகிறானா சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியது 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தருவதற்க்கல்ல. நீங்கள் சாப்பிடும் அதே அரிசியில் நாங்களும் சாப்பிட வேலை வாய்ப்பை உருவாக்கி தருவீர்கள் என நம்பி தான். ஆனால் பாமரனை பிச்சைக்காரனாக்காமல் விடமாட்டோம் என கங்ஙணம் கட்டிக்கொண்டு அலைகிறிர்கள்.
விவசாயிகளுக்கு இலவச மோட்டார் என்கிறிர்கள். ஆதை எங்கு கொண்டுப்போய் பொருத்துவது, வடமாவட்டங்களில் விலை நிலங்கள் எல்லாம் விற்பனை நிலமாக மாறிவிட்டது, மிச்ச சொந்தயிடங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழில் பேட்டை அமைக்க அரசே வாங்கி தருகிறது, கொங்கு மண்டலம், தஞ்சை மண்டல பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் விடுகிறான். ஒரு மூட்டை சிமெண்ட் செப்டம்பர் மாதம் 170 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது அக்டோபர் மாதம் திடீரென 250க்கு வந்தது. நவம்பரில் 300 ரூபாய் என ஆனது. அவலத்திற்க்கு பிறந்த அவல மக்கள் கூப்பாடு போட்டதும் சிமெண்ட் பெருச்சாலிகளின் கூட்டத்தை கூட்டினிர்கள். 10 ரூபாய் விலை குறைப்பு என்றார்கள். 150 ரூபாய் வரை விலை ஏற்றிவிட்டு 10 குறைத்தார்கள். நீங்களும் இதே விலை குறைந்து விட்டது என அறிக்கை வாசித்தீர்கள். இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இதுவா ஆட்சி நடத்தும் லட்சணம்.
மக்கள் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என நம்பியது அந்தக்காலம், திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜீ.ஆர் கட்சி ஆரம்பித்த போது, அதிமுகவை காளான் கட்சி என எண்ணினார் கருணாநிதி. ஆனால் அக்கட்சி ஆலமரமாக கிளை விட்டு பரவி எம்.ஜீ.ஆர் உயிருடன் இருந்தவரை திமுகவை தமிழகத்தில் அரியணை பக்கம் வரவிடாமல் பார்த்துக்கொண்டார். அரியணையில் இல்லாமல் இருந்தாலும் தொண்டர்களை கட்டுப்பாடக இயக்கத்தில் வைத்திருந்தார் கலைஞர். காரணம் உடன் பிறப்புகளுக்கு முரசொலியில் அவர் எழுதிய கடிதங்களும், அவரின் குரல் வளமும் திமுகவை தாங்கிப்பிடித்தது. மக்களும் திமுகவை ஆதரித்தார்கள். அது அன்றைய கால கட்டம். இன்றைய கால கட்டம் வேறு.
ஈழத்தமிழனை கடைசி நேரத்திலாவது திமுக காப்பாற்றும் என எத்தனையோ தமிழக தமிழர்கள் ஏங்கினார்கள். ஆனால் உண்ணாவிரதம், மனிதசங்கிலி என போராட்டத்தை மழுங்கடித்தீர்கள். ஈழத்தமிழன்க்காக எப்போதும்மில்லாத வகையில் ஜெயலலிதா கண்ணீர் வடித்தார். அதுயெல்லாம் நீலீக்கண்ணீர் என மக்கள் புரிந்து கொண்டதால் தான் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்காளிர்த்தார்கள். நீங்கள் நடத்தியதும் டிராமா என்று தெரியும் இருந்தும் ஏன் வாக்களித்தார்கள் தெரியுமா? ஆட்சிக்கு வந்தபிறகாவது காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தில் தான். ஆனால் திமுக ஈழத்தமிழன் விவகாரத்தில் துரோகம் செய்ததை மக்கள் மனதில் கனலாக எரிந்துக்கொண்டுதான்யிருக்கிறது.
காங்கிரஸ் தலைகளை தோற்கடித்தது போல திமுக தலைகளை அவர்களால் தோற்கடிக்க நீண்ட நேரமாகாது. திமுகவை பற்றி மக்கள் நன்கறிந்ததால் தான் விஜயகாந்த் பின்னாலும், அதிமுக பின்னாலும் ஓடுகிறான். ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட போய் சேருகிறான். திமுகவை நம்பி வராததர்க்கு காரணம், திமுக ஏழைகளை விட்டு வெகு தூரம் தள்ளி போய்விட்டது என்பதால் தான். திமுக தன்னை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் தேய் பிறை நிலை தொடரும்.
DMK base level ie kilaik kazhaga alavil irunthu therthal endraal mattum thondan thevai, yaarayum pottiyaaga valara vidaamal perum pulligale aattayai poduvathu, kandippaai adutha therthalil ethirolikkum! Paavam!intha thalai muraiyodu sari!
பதிலளிநீக்கு