மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் ராஜேந்திரன் நியூசிலாந்தில் உள்ள ஜீரிச் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர். 5 முறை இளம் விஞ்ஞானி விருது பெற்றவர். உலகில் உள்ள முதல் 100 விஞ்ஞானிகளுள் இவரும் ஒருவர் என பட்டியலிடப்பட்டுள்ளார். உலகத்தில் மோசமான வியாதியென மருத்துவர்களால் குறிப்பிடப்படும் ‘அல்சைமர்’ என்ற நோய் எப்படி உருவாகிறது என கண்டுபிடித்தவர், அதற்கான மருந்தும் கண்டுபிடித்துள்ளார்.
பிரபல மருத்துவ பத்திரிகைகளான நேட்சர், சைன்ஸ் நியூரோன் போன்றவற்றில் வெளியாகும் விஞ்ஞானிகளின் கட்டுரைகள் இவரின் ஒப்புதல் பெற்றால் தான் அச்சுக்கு போகும்.
சமீபத்தில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் 3 தினங்கள் நடந்த நானோ டெக்னாலஜி 2010 சர்வதேச கருத்தரங்கிற்கு வந்திருந்தவரை இரவு நேரத்தில் சந்தித்தபோது, இளமை வேகத்தோடு, சமுக, கிராம மாணவர்கள் மீதான உண்மையான அக்கறையுடன் பேசினார். அவருடன் பேசியபோது 35 வயதாகும் அவர் இன்னமும் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை என்பது தெரிந்தது.
தொடர்ந்து அவருடன் உரையாடியதிலிருந்து...
? :விஞ்ஞானியாவதற்கான விதை எங்கு, எப்போது உங்கள் மனதில் விதைக்கப்பட்டது?
லாரன்ஸ் : சென்னை தாம்பரம் மறைமலையடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பி.எஸ்.சி பயோகெமிஸ்ட்ரி காஞ்சிபுரம் சங்கரா காலேஜ்லயும், எம்.எஸ்.சி மூலக்கூறு உயிரியல் சென்னை பல்கலைக் கழகத்தில் முடிச்சிட்டு பெங்களூரில் இருக்கிற இந்தியன் இன்ஸ்டியூடியுட் ஆப் சைன்ஸ் கழகத்தில பயோ-பிசிக்ஸ் சேர்ந்தேன். அங்க தான் முதன் முதலா ஆய்வுல ஈடுபட்டேன். முதல் ஆய்வு, நம்மோட உடம்புல பல விதமான வியாதிகள் வருவதற்கு காரணம் உடம்புலயிருக்கிற புரோட்டின். இது எப்படி காரணம் ஆகுதுன்னு கண்டுபிடிச்சேன். அது எனக்கு பெரிய ஊக்கத்தை தந்தது.
2000ல இஸ்ரேல் சென்றேன். அங்கு ஆராய்ச்சி செய்வது எப்படிங்கிற அடிப்படை பயிற்சிய கத்துக்கிட்டன். அங்கயிருக்கும் போது கேன்சர் நோய் ஏற்படுவது எப்படி, அந்நோய் உடலில் பரவுவது எதனாலங்கிற ஆய்வுல ஈடுபட்டேன். அதோட டாக்டர் பட்டம் பெற முயற்சி செய்தேன். ஜெர்மனியில அதுக்கான வாய்ப்பு கிடைச்சது. 2001ல ஜெர்மனி போய் கான்சடன்சி யுனிவர்சிட்டியில சேர்ந்தேன்.
அங்க என்னோட புராஜெக்ட், நம்மலோட உடம்புல உயிரணுக்கள் எந்த நேரமும் அலார்ட்டா இருக்கிறது எப்படிங்கிறத கண்டுபிடிச்சேன். என் ஆய்வ பாராட்டி 2 வருடத்துக்குள்ளயே டாக்டர் பட்டம் வாங்கினேன்.
? : நீங்கள் மருந்து கண்டுபிடித்ததாக அறியப்படும் ‘அல்சைமர்’ வியாதியைப் பற்றி சொல்லுங்க ?
லாரன்ஸ் : டாக்டர் பட்டம் வாங்கினதுக்கப்பறம் பாதியில விட்ட கேன்சர் நோய் பற்றிய ஆய்வ திரும்ப செய்தேன். கேன்சர் நோய் ஒரு இடத்திலயிருந்து மற்றொருயிடத்துக்கு பரவுவது எப்படிங்கிற ஆய்வுல, அதுக்கெல்லாம் காரணம் நம் உடம்புலயிருக்கிற கொழுப்பு தான்னு கண்டுபிடிச்சேன்.
அந்தக் கொழுப்பு நம் உடம்புல அதிகமாகும் போது கேன்சர் வியாதி பரவுது. அதேமாதிரிதான் ‘அல்சைமர்’ நோய் ஏற்படுதுங்கிறத கண்டுபிடிச்சேன். 65 வயதுக்கு மேல இந்த நோய் அதிகமான நபர்களுக்கு வரும். அதோட மூளையில, உடம்புலயிருக்கிற கண்ணுக்கு தெரியாது நூல் போன்ற அளவுல இருக்கிற எலும்புகள் செயல் இழக்க அதாவது இறக்க ஆரம்பிக்கும் போது ஞாபக சக்திகள் குறைய ஆரம்பிக்கும். இந்த நோயின் தாக்கம் மேற்கத்திய நாடுகள்ல அதிகம். அமெரிக்காவுல மட்டும் 55 லட்சத்துக்கும் அதிகமான முதியவர்களுக்கு இந்நோய் இருக்கு.
இந்நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் கிடையாது. ஆனா தடுப்பு மருந்துகள், தடுப்புக்கான வழிமுறைகள் நிறையயிருக்கு.
? : இந்தியாவில் இந்நோயின் பாதிப்பு எந்த அளவில் இருக்கிறது?
லாரன்ஸ் :இந்தியாவுல எவ்வளவு நபர்களுக்கு இருக்குங்கிறது தெரியல. ஏன்னா நம்ம நாட்ல சைக்காலிட்டிஸ்ட்டுகிட்ட போறதுன்னா ஏதோ எமன்கிட்ட போறமாதிரி ஃபீல் பண்றாங்க. அதனால யாரும் போறதில்ல. அதனால அந்நோய் பற்றி சரியான புள்ளிவிபரம் இந்தியாவில் இல்லை.
ஆனால் இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் இந்தியாவில் இந்நோயின் தாக்கம் அதிகமாகயிருக்கும். அதுவும் மாணவர்களுக்கு இந்நோய் அதிமாகயிருக்கும். காரணம் இங்கு உணவு முதல் எல்லாவற்றிலும் மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதுதான்.
? : இந்நோய் இந்தியாவில் வராமல் தடுக்க வழி என்ன?
லாரன்ஸ் : நாம், நம் வாழ்க்கை முறையை வாழ்ந்தாலே போதும், பல நோய்கள் நம்மை அண்டாது. இந்நோய் தடுக்க உடம்புல கொழுப்பு ஏறாம பாத்துக்கனும், டயட்லயிருக்கனும், மஞ்சள் பொருட்கள உணவுல சேர்த்துக்கனும், கறிதுகள் சாப்பிடனும், க்ரீன் டீ, ரெட் ஒயின் சாப்பிட்டா இந்நோய் வராம தடுக்க முடியும்.
? : இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கிறதற்கான முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறது?
லாரன்ஸ் : சில மருந்துகள் உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அது தற்போது ஆய்விலயிருக்கு. நான் கண்டுபிடித்த மருந்தும் ஆய்வுலயிருக்கு. ஆனா அந்த மருந்துகள் வெளியில வர இன்னும் 20 ஆண்டுகள் ஆகும்.
? : ஆராய்ச்சியில் உங்களுடைய அடுத்த திட்டம் என்ன?
லாரன்ஸ் : திட்டம் போட்டு செய்யுறது இல்லைங்க ஆராய்ச்சி. இப்ப செய்யுற ஆராய்ச்சியோட தொடர்ந்து செய்யும் மற்றொரு பணி என்னன்னா, தமிழ்நாட்டுல ஆதிகாலத்தில சித்தர்கள் நீண்ட காலம் வாழ்ந்துயிருக்காங்க. அவுங்க எப்படி உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் வாழ்ந்தாங்கன்னு, அதப்பற்றி புத்தகங்கள படிச்சப்ப சில மூலிகைகள் பற்றிய பெயர்கள் அதிலயிருந்தது.
அதப்பத்தி இங்குள்ள நண்பர்கள் மூலமா பேசி சித்தர் பாடல்கள், அவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், புத்தகங்களை தேடிப்பிடித்து அதுக்கான மூலிகைகள் என்னென்ன?, அன்றைய காலகட்டத்தில நோய்கள் குணமாக தரப்பட்ட மூலிகைகள் எதுயெதுன்னு தேடிப்பிடிச்சி கலெக்ட் பண்ணி எனக்கு அனுப்பி வைக்கிறாங்க. அத நான் இங்க ஆய்வு செய்து மருந்து கண்டுபிடிக்க அத வச்சி ஆய்வு பண்ணிக்கிட்டுயிருக்கேன்.
? : ரைஸ்.ரூரல் என்று ஒரு அமைப்பு நடத்துகிறீர்களே அது எதற்காக?
லாரன்ஸ் : நான் உலகத்தின் பல நாடுகளுக்கு போய் கருத்தரங்குகள்ல கலந்துக்கொள்ளும் போது அங்க நம் இந்தியாவை சேர்ந்த பலரை சந்திக்கிறன். அவுங்க எல்லாருமே சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி, கோவைன்னு முக்கிய நகரங்களை சேர்ந்தவங்களாதான் இருக்காங்களே தவிர பொள்ளாச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை பகுதி கிராமத்தை சேர்ந்தவங்க யாரும்மில்லைங்கிறது தெரிஞ்சது.
யேல் பல்கலைகழகத்துல ஒரு கருத்தரங்குல பேசினேன். அப்ப அங்க ஒரு ஆராய்ச்சி மாணவன், நான் பேசின டாபிக்லயிருந்து சில கேள்விகள் கேட்டார். அவருக்கு விளக்கினேன்.
2 ஆண்டுக்கு முன்பு உத்திரமேரூர்ல ஒரு காலேஜ் விழாவுக்கு வந்திருந்தேன். அங்க யேல் பல்கலை கழகத்தில பேசின அதே டாபிக்க பேசினேன். ஓரு மாணவன் கேள்வி கேட்டான். அவன் கேட்ட கேள்வியும், யேல் பல்கலைக் கழகத்தல அந்த ஆராய்ச்சி மாணவன் கேட்ட கேள்வியும் ஒண்ணு. ஆக யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல நம் கிராமத்து மாணவர்கள்.
திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லாம் இருக்கிறது. ஆனா, அவர்களுக்கு சரியாக வழிகாட்டதான் யாருமில்லை. நகர மாணவனுக்கு வழிகாட்ட பலர் இருக்காங்க. கிராமத்து மாணவர்களுக்கு யாருமில்லை. அதன் விளைவாகதான் ரைஸ் ரூரல் என்கிற இணையதள அமைப்பை 2 ஆண்டுக்கு முன்ன ஆரம்பிச்சேன்.
இதில என்னைப்போல பல நாடுகளைச் சேர்ந்த ஒத்த கருத்துடைய 20 விஞ்ஞானிகள் இருக்காங்க. ஒரு மாணவன் தனக்கு தெரியாதைப்பற்றி மெயில் செய்தா, நானோ மற்ற விஞ்ஞானிகளோ பதில் சொல்லுவோம். தினமும் 200 மெயில் வருது. யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்ங்கிற மாதிரி விவாத தளமா உருவாக்கி வச்சியிருக்கேன். இதன் மூலமா கிராமத்து மாணவர்கள முன்னேற்றம் செய்யனும் அதுக்காக தான் இந்த அமைப்பு.
? : இவ்வமைப்பு தொடங்கி 2 ஆண்டுகளில் இதற்கான வரவேற்ப்பு எப்படி உள்ளது?.
லாரன்ஸ் : பல மாணவர்கள் மெயில் அனுப்பிக்கிட்டுயிருக்காங்க. பிரச்சனை என்னன்னா நம் மாணவர்களுக்கு ‘சீவி’ங்கிற பயோடேட்டா தயாரிக்கிறது கூட எப்படின்னு தெரியல. இந்தியாவுலயிருந்து வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பற ‘சீவி’ எப்படியிருக்குன்னா ஜாதி, மதம், அப்பா, பிறந்த தேதின்னுயிருக்கு. வெளிநாட்டு அமைப்புகளுக்கு இது தேவையில்ல. சம்மந்தப்பட்டவங்களோட திறமை, படிப்பு தான் அவுங்களுக்கு தேவை. அதப்பத்தி தெளிவு படுத்தியிருக்கோம்.
சமீபத்தில் அமைப்பு சார்பா, 5 கட்ட தேர்வுகள் இணையம் வழியா நடத்தினதுல கிராம சூழ்நிலையில் வளர்ந்து படித்துவரும் 5 மாணவர்கள், 3 பேராசிரியர்கள் உட்பட 8 பேர் வெற்றி பெற்றாங்க. அவர்களுக்கு அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இன்னும் சில தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொள்வது எப்படி என்கிற பயிற்சிய இலவசமா வழங்க முயற்சி எடுத்து வர்றேன்.
? : கருத்தரங்கிற்கு வந்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நீங்கள் வைத்த கோரிக்கை என்ன?
லாரன்ஸ் : அமைப்பின் மெயிலுக்கு தினமும் குறைந்தது 200 மெயிலுங்க வருது. ஆராய்ச்சி பணியில இருக்கிற என்னால தொடர்ந்து கேள்விக்கு பதில் தர முடியல. எங்கிட்ட பொருளாதார வசதியில்லை. நான் வாங்குற சம்பளத்துல 2 பேரை வேலைக்கு அமர்த்த முடியும் இது பத்தாது.
அதனால தான் அரசாங்கம் இத எடுத்து நடத்த ஆரம்பிச்சா அதுக்கான தகவல்கள நான் மற்ற விஞ்ஞானிகள் மூலமா தருவேன்.கிராமத்து மாணவர்களுக்கு, வெளிநாடுகள்ல உள்ள ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள்ல சேர்ந்து படிக்கிறது போன்ற தகவல்கள இலவசமா சொல்ல முடியும்.
இந்தத் திட்டம் கிராமத்து மக்களிடம் போய் சேரனும். அவுங்க அத பயன்படுத்திக்கனும். அரசாங்கத்தோட இணைந்து செய்தா மக்களிடம் அதிகமா ரீச் ஆகும். தமிழக, இந்திய கிராமத்து இளைஞர்கள் உலகில் கொடிக்கட்டி பறப்பாங்க. அதனாலதான் அதப்பத்தி அமைச்சர்கிட்ட பேசினேன்.
இவ்விதம் நமது கேள்விகளுக்கு எல்லாம் அக்கறை நிறைந்த அறிவியல் கருத்துக்களை பதிலாக அளித்தார் மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் ராஜேந்திரன்.
நேர்காணல் : ராஜ்ப்ரியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக