தென்ஆப்பிரிக்கா மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் தன் மக்களுக்காக மன்னிப்பு என்ற சொல்லை அன்னியனிடம் உபயோகித்து சுகவாழ்வு வாழாத போராளி நெல்சன் ரோபிசலா மண்டேலா. அதிகார பூர்வமாக 5.12.13ந்தேதி இறந்துள்ளார். ஆனால் மீடியாக்கள் சில தினங்களுக்கு முன்பே அவரை கொன்றுவிட்டது.
தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸீமா தான் தன் நாட்டின் தந்தையை இறந்ததை உலகத்துக்கு அறிவித்தார். அறிவிப்புக்கு பின் உலகத்தில் உள்ள அனைத்து நாட்டின் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வரும் 15ந்தேதி அவரது உடலுக்கு இறுதி மரியாதை அவரது சொந்த கிராமமான குனுவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன, நிற வெறியால் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் தலைவர் மண்டேலா. 1918 ஜீலை 18 ல் டிரான்ஸ்கே நகரில் பிறந்தார். இவரது தந்தை தென்னாப்பிரிக்காவில் வாழும் தெம்பு என்ற இனத்தின் அரசராக இருந்தார். தந்தை மரணத்துக்கு பின் அந்த பதவி அவருக்கு வந்தது. போர்ட்ஹாரோ என்ற பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார். ஆரம்பத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு படைப்பரிவில் சுரங்கம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் மக்களில் 80 சதவிதம் பேர் கறுப்பு நிறத்தை உடைய மக்கள். 20 சதவிதம் வெள்ளை நிறம் உடைய மக்கள். இவர்கள் இருவரும் ஒரே நாட்டை சேர்ந்த பிரஜைகள் தான். ஆனால் நாட்டை ஆண்ட வெள்ளையின மக்கள், கறுப்பின மக்களை அடிமையாக நடத்தினர். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை கிடையாது, நில உரிமை கிடையாது, பேருந்தில் பயணம் செய்ய முடியாது, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும்மென்றால் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். கறுப்பின மக்களுக்கு எந்தவித சலுகைகளும் கிடையாது, அரச அதிகாரம் கிடையாது. இப்படி பல கிடையாதுகள்.
இந்த இனவெறியை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கினார் மண்டேலா. கறுப்பின மக்களுக்காக வழக்கறிஞர் அலுவலகம் அமைத்த முதல் வழக்கறிஞர். 1944ல் தென்னாப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் இளைஞர் லீக் என்ற கட்சியை தொடங்கினார். மண்டேலாவின் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைந்து நாட்டின் விடுதலைக்காக, கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியது.
இதனை தென்னாப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்கள் அரசாங்கம் எதிர்த்தது. முதலில் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்து பின் 6 ஆண்டுகள் பொறுத்து நூற்றுக்கும் அதிகமான அரசியல் போராளிகளை தேச துரோக வழக்கில் கைது செய்தது. 4 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் வழக்கில் இருந்து விடுதலையானார்கள். வெளியே வந்த மண்டேலா மீண்டும் போராட்டத்தை தொடங்க அவர் தலைமை பதவி வகித்த காங்கிரஸ் கட்சியும் தடை செய்யப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்காவின் கொடூரம் என வர்ணிக்கப்படும் ஷார்ப்பி படுகொலை நடந்தேறியது. நாட்டை ஆண்ட அரசாங்கம் விடுதலை வேண்டி போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 70 பேர் பலியானதாக தகவல் வெளியிடப்பட்டது.
அரசுக்கு எதிராக கொரில்லா அமைப்பு ஒன்றை கட்டமைத்து தாக்குதல் நடத்தினார். ஆனால் ஆயுதம் எம்மின மக்களுக்கு விடுதலை பெற்று தராது என்ற கொள்கையில் இருந்தார். நாட்டில் நெருக்கடி, பல நாடுகள் பயங்கரவாத முத்திரை அவர் மீது குத்தியது. பாதுகாப்பு படை அவரை கைது செய்து தேச துரோக வழக்கை பாய்ச்சியது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 46 வயதில் கைதியாக ரப்பன் தீவில் உள்ள தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். வெளியுலகத்தின் எந்த தொடர்பும் அவருக்கு கிடையாது. தாய், மகன் இறந்தபோது கூட அவரை வெளியே விடவில்லை. மனைவி சந்திக்க கூட அனுமதிக்கவில்லை. மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம் என்றது அரசாங்கம். என் இனம் தலைகுனிய நான் விரும்பவில்லை என மன்னிப்பு கேட்க மறுத்தார். உலக நாடுகள் எதிர்ப்பு, பொருளாதார தடை, தூதரக துண்டிப்பு போன்றவற்றால் தென்னாப்பிரிக்கா அரசாங்கம் 27 ஆண்டுகளாக சிறைவாசத்தில் இருந்த மண்டேலாவை அவரது 72வது வயதில் 1990ல் விடுதலை செய்தது. இவரின் விடுதலையை உலகின் முக்கிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடதக்கது.
1993ல் நடந்த முறையான மக்களாட்சி தேர்தல் மூலம் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். 1994 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். இரண்டாவது முறை போட்டியிட சென்னபோது அவர் மறுத்துவிட்டார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த மண்டேலா தனது 95வது வயதில் டிசம்பர் 5ந்தேதி இறந்துள்ளார்.
உலக நாடுகளின் அனைத்து உயர் விருதுகளையும் பெற்றுள்ளார். நூற்றுக்கும் அதிகமான விரதுகளின் பெயர்களில் இந்தியாவின் பாரதரத்னாவும், நோபல் பரிசும் உள்ளது. இவரை வாழ்வை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான குறும்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவரைப்பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பல மொழிகளில் உள்ளன. இங்கிலாந்து பாராளமன்ற வளாகத்தில் நெல்சல் மண்டேலாவுக்கு வெண்கல சிலை வைத்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.
உலக நாட்டாமையான அமெரிக்க தேசம் நெல்சன் மண்டேலாவின் பெயரை 2008 வரை பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்திருந்தது. 2008வரை அவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து வைத்திருந்தது அமெரிக்க தேசம். அதனால் அவர் அதிபராக இருந்தபோது கூட அவரால் அமெரிக்காவுக்கு செல்ல முடியவில்லை.
1990 இலேயே மண்டேலா அமேரிக்கா வந்திருக்கிறார். இது பற்றிய சுட்டி..
பதிலளிநீக்குhttp://abj.matrix.msu.edu/videofull.php?id=29-DF-21