மஞ்சு எழுந்திரிம்மா என சரளா காபி டம்பளருடன் அறைக்குள் வந்து தன் ஒரே மகளை எழுப்பிக்கொண்டு இருந்தார்.
தூக்க கலக்கத்திலேயே என்னம்மா ?.
ஆறு மணியாச்சி எழுந்திருடா.
எங்கம்மா போகப்போறன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறன்.
இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க செல்லம்.
அதை கேட்டதும் தூக்கம் கலைந்து மஞ்சுவின் மனம் தவிக்க ஆரம்பித்தது. முதல் முறையா பொண்ணு பாக்க வர்றாங்க. பக்கத்து வீட்டு அக்காவ புடிக்கலன்னு மாப்பிள்ள சொன்னதைப்போல என்னை சொல்லக்கூடாது கடவுளே என மனதில் வேண்டிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவள் கையில் காபி டம்பளரை தந்த சரளா சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு அந்த மஞ்சள் கலர் புடவைய கட்டிக்கடா.
என்னம்மா திடீர்ன்னு புடவை கட்டச்சொல்ற. நான் தான் இதுவரைக்கும் புடவை கட்டனதுயில்லன்னு உனக்கு தெரியும்மில்ல.
உனக்கு புடவை கட்ட தெரியலன்னு பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு தெரிஞ்சதுன்னா அசிங்கமாயிடும். எதிர்த்த வீட்டு கவிதாவ வரச்சொல்றன் அவ வந்து உன்னை ரெடிப்பண்ணுவா எனச்சொல்லிவிட்டு வெளியே போனார். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி காபி குடித்துவிட்டு பாத்ரூம் சென்ற மஞ்சுவுக்கு குளிக்கும் போது மார்கழி மாத குளிர்ந்த நீரும் சுடு நீர் போல் இருந்தது. குளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில் அமர்ந்திருந்த கவிதா எவ்ளோ நேரம்டீ குளிப்ப?.
பயமாயிருக்கு அண்ணி.
என்ன பயம்.
பொண்ணு பாக்க வர்றவங்களுக்கு என்ன புடிக்கும்மில்ல.
என்னடீ கேள்வியிது.
சொல்லுங்க அண்ணீ.
உனக்கென்னடீ. நல்ல கலரா அழகா கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற. எல்லாம்மே அளவா ஜம்முனு இருக்கு.
ச்சீ……..
என்னடீ ச்சீ. ஏரியா பசங்க உன்ன பாத்து ஜொள்ளு விடறானுங்க. அதவிட முக்கியம் நீ பி.எஸ்.சி பீ.எட் படிச்சியிருக்கற உன்ன கொத்திம்போவ நான் நீன்னு போட்டி போடுவானுங்க. நீ என்னடீன்னா புடிக்குமான்னு கேள்வி கேட்கற.
அதில்ல பக்கத்து வீட்லயிருக்கற மலர் அக்காவ பொண்ணு பாக்க வர்றவங்கயெல்லாம் வேணாம் வேணாம்ன்னிட்டு போறாங்க என்னையும் அப்படி சொல்லிட்டா?.
அவள பாக்க வர்றவங்க நகை அதிகமா கேட்கறாங்க. அத அவுங்களாள போட முடியல அதனால இழுத்தும் போவுது. உனக்கென்ன அழகிருக்கு, படிப்பிருக்கு. அதோட உங்கப்பா ஹெட்மாஸ்டர். வசதியா இருக்கிங்க. அப்பறம்மென்ன வர்றவனுக்கு உன்ன புடிக்கும் சும்மா ரெடியாகு எனச்சொல்ல மஞ்சு அவசர அவசரமாக பாவடை, ஜாக்கெட் அணிந்துக்கொண்டு நின்றாள். கவிதா அவளுக்கு அழகாக புடவை கட்டிவிடவும் வெளியே ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது,
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கம்மா என மஞ்சுவின் அப்பா சோமசுந்தரம் குரல் தந்துவிட்டு வாசலுக்கு சென்றார். சரளாவும் வெளியே வந்து வாங்க வாங்க என புன்னகையிடன் அழைத்து வந்து சோபாவில் உட்காரவைத்தார்கள். இவர் தான் மாப்பிள்ளை. பேரு குமரன். இது அவரோட அப்பா மோகன், அது அவுங்க அம்மா என புரோக்கர் மணி அறிமுகப்படுத்தியவர் மஞ்சுவின் அப்பாவையும், அம்மாவையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகப்படுத்தினார்.
காபி எடுத்துவாம்மா என தன் மனைவியிடம் மெல்லிய குரலில் சோமசுந்தரம் சொல்ல மஞ்சு மனதில் பயத்தோடும், வெட்கத்தோடு காபி டம்பளர்களை எடுத்துக்கொண்டு அன்ன நடையோடு வந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு தரும்போது அடிக்கண்ணால் மாப்பிள்ளையை ஒரு பார்வை பார்த்தால். மனதில் ஒரு குறுகுறுப்பு. எல்லோருக்கும் வணக்கம் வைத்தாள். இரண்டு பேரும் வெட்கப்படாம பாத்துக்குங்க கட்டிக்கிட்டு வாழ போறவங்க நீங்க தான் என புரோக்கர் மணி சொன்னதும் குமரன் மெல்ல அவளை பார்த்தான். அதிகம் உயரமும் இல்லாமல், மொத்தென்று இல்லாமல் அம்சமாக இருந்தாள் மஞ்சு.
பையன் சாப்ட்வேர் இன்ஜினியர் மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கறாரு. கம்பெனியிலயிருந்து வெளிநாடு அனுப்புவாங்க. அப்ப பையன் சம்பளம் டபுள் மடங்காகிடும் என்ற மணி, பையனோட அப்பா முன்சிபால்டியில ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருக்காரு. ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு கல்யாணமாகி பெங்களுரூல இருக்கு எனச்சொன்னவர் சற்று இடைவெளி விட்டு இரண்டு குடும்பத்தாரும் சரின்னா ஜாதக பொருத்தம் பாக்கலாம் என்றார். தனது மகளின் ஜாதகத்தை தந்த சோமசுந்தரம் நீங்க பையன் ஜாதகத்தை தாங்க எங்க குடும்ப ஜோசியர்க்கிட்ட கேட்டுட்டு சொல்றோம் என வாங்கிக்கொண்டார்.
மாப்பிள்ளை வீட்டார் போனதும் மஞ்சுவிடம் மாப்பிள்ளைய பாத்தியா உனக்கு புடிச்சியிருக்கா என சரளா பலமுறை கேட்டும் நீயும் அப்பாவும் பாத்து ஓ.கே சொன்னா எனக்கும் ஓ.கே ம்மா என்றாள். மழுப்பாம சொல்லுடீ என கவிதா கேட்டும் கடைசி வரை பதில் சொல்லவேயில்லை. அன்றைய இரவு மஞ்சுவுக்கு தூக்கம் போனது. அழகா தான் இருந்தான் என அவள் மனம் குளிற தொடங்கியது. அப்படியே தூங்கி போனால். அடுத்த இரண்டாவது நாள் ஜாதகம் பொருந்தமில்லைமின்னு ஜோசியர் சொன்னாரு என மனைவியிடம் சோமசுந்தரம் சொன்னது அறைக்குள் இருந்த மஞ்சுவின் காதில் விழுந்தபோது அவளின் மனம் வெறுமையானது.
ஜாதகம் பொருந்தி வரலயாம் அண்ணி.
கல்யாணம்ன்னா அப்படித்தாண்டீ. ஜாகதம் பொருந்தி வந்தாத்தான் அதுக்கப்பறம் பேச ஆரம்பிப்பாங்க என்றாள் கவிதா.
கட்டிலில் படுத்துயிருந்த மஞ்சுவின் விம்மி புடைத்திருந்த அவளின் உடல் பாகத்தை ஒரு கை தீண்டீயது. அவளின் இடுப்பில் விளையாடியது அந்த கை கூச்சத்தில் நெளிந்த இடுப்பிலிருந்து மேல் நோக்கி அந்த கை செல்ல சடாரென முழித்துக்கொண்டாள். வெட்கத்தில் அவளின் முகத்தில் ஒரு நாணல். மீண்டும் படுத்தபோது உடல் சூட்டில் உறக்கம் வரவில்லை. தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டுகிடந்தாள். காலை அறையை விட்டு எழுந்து வெளியே வந்தவள் அம்மா இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாயந்தரம் கவிதா அண்ணியோட நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடறன்ம்மா.
இன்னைக்கு சாயந்தரம் உன்ன பொண்ணு பாக்க வர்றாங்கடா. நீ கோயிலுக்கு போனா லேட்டாகிடும் அடுத்தவாரம் போய்க்கடாம்மா.
மஞ்சுவின் மனதில் மீண்டும் ஒரு குறுகுறுப்பு. காமாட்சி தாயே இப்பவாவுது ஜாதகம் பொருந்தி வரனும் என வேண்டிக்கொண்டால். எதிர்பார்த்தப்படி சாயந்தரம் பெண் பார்க்க ஒரு கூட்டம் வந்திருந்தது. பையன் பேரு சரவணன் என புரோக்கர் மணி அறிமுகப்படுத்த காபி டம்பளர்களுடன் வந்த மஞ்சு மாப்பிள்ளையை பார்த்தவளின் மனதில் முன்ன பார்த்தவனை விட இவன் சுமார் தான் என மனம் கணக்கிட்டது. ஜாதகம் பொருத்தம் வந்தா தாங்க அடுத்து பேச முடியும் என சோமசுந்தரம் சொன்னதும் மாப்பிள்ளையுடன் வந்திருந்தவர் நாங்க ஜாதகம் பாத்துட்டோம் 12 பொருத்ததுல 9 பொருத்தம் வருது. எங்களுக்கு பொண்ணு புடிச்சியிருக்கு. நீங்க ஜாதகம் பாத்துட்டு மணிக்கிட்ட சொல்லிவிடுங்க நாங்க கிளம்பறோம் என கிளம்பினார்கள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் அப்பா ஜாதகம் பாக்கறன்னு சொன்னாரு. என்னாச்சி மாப்பிள்ளை வீட்டார்க்கிட்ட என்ன சொன்னாருன்னு தெரியலயே என மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டது. என்னடீயாச்சி என கவிதா கேட்டபோது தெரியல அண்ணீ.
செவ்வாய்கிழமை மஞ்சுவும், கவிதாவும் கோயிலை சுத்தி வந்தவர்கள் பிரகாரத்தில் அமரும் போது ஜாதகம் பொருந்தி வந்துச்சாம் ஆனா பையன் குடும்பம் வசதியா இல்லை. என் பொண்ண நான் செல்லம்மா வளர்த்துயிருக்கன். அங்க போய் கஸ்டப்படக்கூடாதுன்னு சொல்லி உங்கப்பா வேணாம்ன்னிட்டாருன்னு சொன்னதா உங்கம்மா சொன்னாங்க என கவிதா சொன்னதை மஞ்சு அமைதியாக கேட்டுக்கொண்டாலும் அவள் முகம் சோகத்தில் இருப்பதை பார்த்து ஏய் இதுக்கெல்லாம் கவலைப்படாதடீ. கல்யாணம் தள்ளி தள்ளி போகுதுன்னா நல்ல புருஷன் அமைவான்னு அர்த்தம்.
அத விடுங்க அண்ணி என சோகமாக சொல்ல கவிதா தன் மாமியார் பற்றி புகார் சொல்ல ஆரம்பித்தாள்.
அதற்கடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு போலிஸ்கார மாப்பிள்ளையும், மாலை லெக்சரர் மாப்பிள்ளையும் வந்தார்கள். இப்படி வாரத்தில் இரண்டு, மூன்று முறை துணிக்கடையில் பொம்மைக்கு துணி மாத்தி மாத்தி கொண்டு வந்து நிறுத்தி வைப்பது போல மஞ்சுவுக்கு புடவையை கட்டி காபி டம்பளரை கையில் தந்து அனுப்புவதும் பெண் பார்க்க வந்தவர்கள் முன்னால் உட்காருவதும் இவன் தான் மாப்பிள்ளை என அறிமுகப்படுத்தும் போது மரக்கட்டையாக அமர்ந்திருந்தாள். பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ராசியில்லாதவன்னு முத்திரை குத்தப்போறாங்க என மனம் புழுங்கி இரவில் தன் அறையில் வெளியே கேட்க முடியாத சத்தத்தில் அழ தொடங்கியிருந்தாள்.
அண்ணீ அண்ணீ என கவிதாவை சுற்றி வரும் மஞ்சு இப்போதுயெல்லாம் கவிதாவிடமும் சரியாக பேசுவதில்லை. இது கவிதாவுக்கும் புரிந்தேயிருந்தது. நல்ல குடும்பம்மா, மாப்பிள்ளையோட கூட பொறந்தவங்க இல்லாம, வசதியா, அழகா, கவர்மெண்ட் வேலையில இருக்கனம்ன்னு ஒருத்தன்கிட்டயே இவ்வளவும் பாத்தா எப்படி கிடைக்கும். இது இவுங்களுக்கு புரியமாட்டேன்குது. பாவம் அவ என மனதில் நினைத்துக்கொண்டாள் கவிதா.
அன்றும் அப்படித்தான், மஞ்சுவின் வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது. மாப்பிள்ளை அருண் சிகப்பாகயில்லை என்றாலும் மாநிறமாக அழகாக இருந்தான். மஞ்சு காபி எடுத்துவாம்மா என்றதும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் காபி தட்டை எடுத்து வந்தாள். பொண்ண நல்லா பாத்துக்குங்க தம்பி. அப்பறம் சரியா பாக்கலன்னு சொல்லக்கூடாது என உடன் வந்த ஒரு பெருசு சொல்ல அருண் அப்போதும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் தன் முன் நீட்டிய காபி டம்பளரை எடுக்கும் போது ஒரு முறை பார்த்தான். அந்தப்பெண் தன்னை பார்த்தாளா பார்க்கவில்லையா என்பதை அந்த முகத்தில் அருணால் அறிய முடியவில்லை.
நீயும் பாத்துக்கம்மா என்றதும் வெறுப்பில் இருந்த மஞ்சு கையில் வைத்திருந்த காபி தட்டை எதிரில் இருந்த கண்ணாடி டீப்பா மேல் டமால் என போட சூடான காபி எல்லோர் மீதும் பட்டு தெரிக்க எல்லோரும் அதிர்ச்சியுடன் சடாரென எழுந்திருக்க மஞ்சு கண்ணீருடன் அப்படியே ரூம்க்குள் ஓடிப்போய் கதவை சாத்திவிட்டாள். புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்ல வேண்டியதுதானே எதுக்கு பைத்தியம் மாதிரி நடந்துக்குது என பேசியபடி கிளம்பி சென்றனர் பெண் பார்க்க வந்தவர்கள்.
அதிர்ச்சியான சோமசுந்தரமும், சரளாவும் மஞ்சுவின் அறைக்குள் சென்று என்னாச்சி என கெஞ்சி, கொஞ்சி கேட்டும் எதுவும் பதில் சொல்லவில்லை உம்மென மூடி வைத்திருந்த ஜன்னலையே பார்த்துக்கொண்டுயிருந்தாள். பயந்துப்போய் குடும்ப டாக்டர் மிருதளாவிடம் அழைத்து சென்றனர். மஞ்சுவை செக் பண்ணியவர் உடம்புக்கு ஒன்னும்மில்ல. அவ மனசுல ஏதோ பாரம்மிருக்கு. நான் கேட்டன் எதுவும் சொல்லல. சைக்காடிஸ்ட் டாக்டர் அட்ரஸ் தர்றன் அவுங்களைப்போய் பாருங்க. இதுக்கு அவுங்க ட்ரீட்மெண்ட் தர்றது தான் பெஸ்ட்.
என்ன டாக்டர் என் பொண்ணு மெண்டல்ன்னு சொல்றிங்களா என லேசான கோபத்தோடு சோமு கேட்க நான் அப்படி சொல்லல. இது மனசு சம்மந்தப்பட்டது. மருந்து மாத்திரையால குணப்படுத்த முடியாது. சைக்காடிஸ்ட்ன்னா ஏன் பயப்படறிங்க. பயப்படமா போங்க. நான் விஷயத்த சொல்லிடறன் நீங்க போய் பாருங்க என அட்ரஸ் தந்தார். மனநல மருத்துவர் டாக்டர் புனிதாவை சந்தித்தனர். நீங்க வெளியில இருங்க என சோமுவையும், சரளாவையும் வெளியே அனுப்பிவிட்டு மஞ்சுவுடன் பேச தொடங்கினார்.
உன் வயசு பொண்ணுங்க எல்லாம் ஜாலியா இருக்கும்போது நீ மட்டும் ஏன் டல்லா இருக்கற ?.
எனக்கு யாரையும் புடிக்கல மேடம்.
அதனால தான் கோயில்ல ஆடுகளுக்கு மஞ்சத்தண்ணி தெளிக்கற மாதிரி பொண்ணு பாக்க வந்தவங்க மேல நீ தண்ணி தெளிச்சியா?.
அதை கேட்டு லேசாக சிரித்த மஞ்சு. அவுங்க மேல கோபம்மில்ல. எங்கப்பா மேல தான் கோபம். அத அவர் மேல காட்ட முடியல. அதனால தான் அவுங்க மேல காட்ட வேண்டியதா போச்சி.
அப்பா மேல அப்படியென்ன கோபம் ?.
பொண்ணு பாக்க இதுவரை அப்பா இருபது மாப்பிளைங்கள வரவச்சிட்டாரு. சும்மா எங்கிட்ட புடிச்சியிருக்கான்னு கேட்கறாரு. ஆனா அவர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காறான்னு தான் பாக்கறாரு. ஓவ்வொரு முறை இவர் தான் மாப்பிள்ளை இவர் தான் மாப்பிள்ளைன்னு சொல்லும் போது எனக்கு கூசுது. நிறைய மாப்பிள்ளை வந்துட்டு வந்துட்டு போறதால நானும் பக்கத்து வீட்டு அக்கா மாதிரி ராசியில்லாதவளோன்னு நினைக்க தோணுது. கோயிலுக்கு, மார்க்கெட் போகும்போது தெரிஞ்சவங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்களே என்ன ஆச்சின்னு கேட்கும் போது பதில் சொல்ல முடியல. அப்பாவுக்கு பிடிச்சா அம்மாவுக்கு புடிக்கல, அம்மாவுக்கு புடிச்சா அப்பாவுக்கு புடிக்கல. இரண்டு பேருக்கும் புடிச்சா ஜாதகம் சரியில்ல, பையன் வீட்ல வசதி குறைவு, சம்பளம் குறைவா வாங்கறான்னு ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்கறாங்க. அந்த கோபத்தல தான் அப்படி நடந்துக்கிட்டன் என்றவள் ரொம்ப செல்லமா வளக்கறன்னு வெளியில நண்பர்கள உருவாக்கிக்க கூட விடல. மனசுல இருக்கறத பகிர்ந்துக்கற அளவுக்கு கூட நெருக்கமான நண்பர்கள் இல்லாம போய்ட்டாங்க என கண்ணீர் விட.
அழுது முடிக்கட்டும் என காத்திருந்த டாக்டர் புனிதா அழுகை சத்தம் குறைந்ததும், மஞ்சு உன்ன மாதிரி தான் இன்னைக்கு நிறைய பொண்ணுங்க மனசுல பாரத்தோட இருக்காங்க. அப்பா அம்மா சொன்னா கட்டிக்கறன்னு சொல்லதா. வாழப்போறது அவுங்கயில்ல, நீ தான் வாழப்போற. பொண்ணு பாக்க வர்றங்கக்கிட்ட உங்க அப்பா அம்மா பேசறத விட நீ பேசு இரண்டு பேருக்கும் ஒத்துப்போனா மட்டும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு. கல்யாணம் பண்ணிக்க பணம் முக்கியம்மில்ல. வாழ்க்கைக்கு முக்கிய தேவை புரிதல் தான். அடுத்த முறை பொண்ணு பாக்க யார் வந்தாலும் தெளிவா இரு. வாழ்க்கைங்கறது இப்பத்தான் தொடங்குது. அவுங்க அப்படி சொல்லுவாங்க, இவுங்க இப்படி சொல்லுவாங்கன்னு நினைச்சி கவலைப்படாத. நீங்க உங்களுக்காக வாழப்போறிங்க. அதனால ஒரு பிரச்சனை வந்தா தைரியமா எதிர்க்கொள்ளனும். அப்பத்தான் இந்த உலகத்தல வாழ முடியும். படிச்சியிருக்க எதையும் யோசிச்சி முற்போக்கா சிந்திச்சிப்பாரு. அப்பா அம்மா சொல்றத அப்படியே ஏத்துக்காத. அதுக்காக அவுங்க சொல்றத உதாசினமும் படுத்தாத. நீ பேசலன்னா யாருக்கும் எதுவும் தெரியாது. பேசு அப்பத்தான் உன் மனசுல இருக்கறது தெரியும்.
பேச விடமாட்டேங்கிறாங்களே?.
உடனே பேசவிடுவாங்களா. பெண்கள அடக்கி வச்சியிருக்கற சமூகத்தல உடனே பேசவிட்டுடுவாங்களா என்ன?. பேச முயற்சி செய். வுhழ்க்கை வாழப்போறது நீ தான் அதனால நீ தான் முடிவு எடுக்கனும் என்றபோது மஞ்சுவின் மனதில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது. அது முகத்தில் தெரிந்ததும் மஞ்சுவின் அப்பாவையும் அம்மாவையும் உள்ளே அழைத்தார்.
என்ன டாக்டர் பிரச்சனை ?.
நீங்க தான் பிரச்சனை. பொண்ணு மேல ரொம்ப பாசம் வச்சியிருக்கிங்க. அது எல்லா பெற்றோர்களும் செய்யறதுதான். ஆனா நீங்க உங்க பொண்ணு வாழ்க்கைய பத்தி அளவுக்கு அதிகமா பயப்படறிங்க. உங்க மேல அவுங்க வச்சியிருக்கற மரியாதைய, பாசத்த நீங்க தவற பயன்படுத்தறிங்க. வாரத்துக்கு இரண்டு, மூனு பேரை அழைச்சி வந்து இவர் தான் மாப்பிள்ளைன்னு அறிமுகப்படுத்தினா எப்படிங்க ஒரு பொண்ணால சகிச்சிக்க முடியும். உங்க பொண்ணு மனசுல என்னயிருக்குன்னு பாருங்க. அவுங்க தான் வாழப்போறவங்க. அவுங்க முடிவு எடுக்கட்டும். நீங்களா ஒரு முடிவு எடுத்து இதுதான் சரியா இருக்கும்ன்னு நம்பாதிங்க. ஜாதகம், பொருத்தம் பாக்கறிங்க அது உங்களோட நம்பிக்கை. இது மாடர்ன் உலகம் இங்க இன்னமும் ஜாதகம் சொல்றத உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்காதிங்க. பல தம்பதிங்க வாழ்க்கையில ஜாதகம் பொய்ய போயிருக்கு. அதனால உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கனும்ன்னா மாப்பிள்ளைய தேர்ந்து எடுக்கறதல உங்க பொண்ணோட பங்கு அதிகமா இருக்கட்டும். அதுதான் அவுங்க வாழ்க்கைக்கு நல்லது என சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது சோமுவின் மனம் சின்ன புள்ள அதுக்கு என்ன தெரியும் என பேசியது. மஞ்சுவின் மனம் தெளிவாக இருந்தது.
தெளிவான, ஆசாகான, உளவியல் கருத்துக்களைச் சிறுகதையாக்கிவிட்டீர்கள்! பல பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயன்படும்!
பதிலளிநீக்கு