செவ்வாய், மே 20, 2014

பயில்வான் மோடியும் - பதவிக்கு வர உழைத்த நண்பர்களும்.






இந்தியாவை காக்க வந்த நவயுக நாயகன் என கார்ப்பரேட் கம்பெனிகளால் வர்ணிக்கப்பட்ட ஊதி பெரிதாக்கப்பட்ட பி.ஜே.பியை சேர்ந்த குஜராத்தின் முதல்வர் நரேந்திரமோடியால் குஜராத் வளர்ந்தது என்ற வளர்ச்சி விளம்பரங்கள் பலூனாக உள்ளது. அந்த பலூன்கள் பலமுறை உடைக்கப்பட்டும் கமர்சியல் ஹீரோவாக வடிவமைக்கப்பட்ட மோடியின் புகழ் இந்தியாவின் அனைத்து தர மக்களிடம் போய் சேர்ந்தது. பேரன்லவ்லி விளம்பரம் போல. வெற்றி பெற்றுவிட்டார். இந்தியாவின் பிரதமராக்கப்பட்டுள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளும், ஊடகங்களும் கோயாபல்ஸ் பிரச்சாரத்தில் ஒருவரை உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்துவிட்டது. இனிதான் மோடிக்கு பிரச்சனையே. இரண்டு தரப்புமே தங்களுக்கான தேவை தீர்ந்ததும் தூக்கி எரிந்துவிடும் மாற்று நபரை தேடத்தொடங்கிவிடும். இருக்கட்டும் அதை பிறகு பார்க்கலாம்.

மோடியின் வெற்றிக்கு பின்னால் பல்லாயிரம் கோடி பணம், வர்த்தகம் இருந்தாலும் அவரது வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர்கள் மோடியை செதுக்கியது இந்துத்துவா அமைப்புகள், அரசியல், கார்ப்பரேட் நண்பர்கள். மீடியா.

மோடி ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ப்பு பிள்ளை. ஆர்.எஸ்.எஸ் ?.

இந்தியாவில் நடந்த பிரிட்டிஷாரின் காலணி ஆட்சியை எதிர்த்து சுதந்திரத்துக்காக காங்கிரஸ் போராட தொடங்கியபோது இந்து – முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் என்ற இயக்கத்தில் இருந்தனர். பிரிட்டிஷ் ஏகாதியபத்தியம் மத ரீதியாக மக்களை பிரித்தால் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற திட்டத்தில் சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ்சில் குழப்பத்தை உருவாக்கினர்.

காங்கிரஸ்சில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். தலைமை பொறுப்பில் அவர்கள் தான் இருந்தனர். இவர்கள் பாரதத்தை இந்து தேசமாக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இது தேவையற்ற பிரச்சனை என சில பிராமண தலைவர்கள் சமாதானம் செய்தனர். அதாவது மிதவாத, தீவிர இந்துத்துவாவாதிகள் காங்கிரஸ்சில் இரு பிரிவு இருந்தது. தீவிர இந்துத்துவாவாதிகள் ஆதிக்கம் அதிகரித்தது காங்கிரஸ்சில் பிரச்சனையானது.

1910ல் இந்து மகா சபை ஆரம்பிக்கப்படுகிறது. இந்து தேசியம் என முதலில் பேசியவர்கள் இவர்கள் தான். அதன்பின் தான் முஸ்லிம் தலைவர்கள் தனி நாடு கோரினர். 1925ல் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு கேசவ பலிராம் ஹெட்கேவார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அவர் இறந்ததால் இரண்டாவது தலைவர் கோல்வால்கர். மதுகர் தேவராஸ் மூன்றாவது தலைவர். மராட்டிய பிராமண உள்சாதியான சித்பவன் பிரிவை சார்ந்தவர்கள் தான் இந்த அமைப்புகளை தொடங்கி நடத்தியவர்கள். மராட்டிய மண்ணில் தொடங்கப்பட்டாலும் ஆலமர வேர்களை போல தேசமெங்கும் பரபப்பட்டது இந்த இயக்கங்கள்.

அந்த இயக்கத்தின் ஒரு விழுது தான் நரேந்திரமோடி.

குஜராத்தின் மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் கிராமத்தில் 1950ல் பிறந்தவர் நரேந்திரமோடி. மோடியின் அப்பா தாமோதர்தாஸ் முல்சந்த் இரயில்வே ஸ்டேஷனில் டீ கடை வைத்திருந்தார். மேல்நிலைப்பள்ளி படிப்பு முடிந்து குஜராத் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் பட்ட படிப்பில் சேருவதற்க்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (அகிலபாரத வித்யார்த்தி பரிஷத்) அமைப்பில் இணைந்திருந்தார். அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பு மோடிக்கு தரப்பட்டது. தங்களது டீ கடையில் வேலை பார்த்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மனைவியை துரத்திவிட்டுவிட்டு “தனியாக“ வாழ தொடங்கினார்.

தீவிர ஆர்.எஸ்.எஸ் ஊழியராக மாறியப்பின் பலப்பல போராட்டங்களில் கலந்துக்கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், செயல்திட்டம் முழுவதும் அவர் மூளைக்குள் தற்போது 92 வயதாகும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் எம்.ஜீ.வைத்யா போன்றவர்களால் ஏற்றப்படுகிறது. தீவிர இந்துத்துவாதியாக உருவானபின் தங்களது அரசியல் கிளையான பி.ஜே.பிக்கு அனுப்பி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ். அரசியல் பணி ஆரம்பமாகிறது. பி.ஜே.பியில் சேர்ந்த ஒரு வருடத்தில் குஜராத் மாநிலத்தின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார். அத்வானியின் அதிதீவிர விசுவாசி என்பதால் 1998ல் இமாச்சல்பிரதேசம், சண்டிகர், பஞ்சாப், ஹரியானா என 5 மாநிலங்களுக்கான பொறுப்பாளராகவும், தேசிய செயலாளர் பதவியும் தரப்படுகிறது.

2001 அக்டோபரில் குஜராத்தின் முதல்வராக இருந்த பி.ஜே.பியின் கேசுபாய் பட்டேல் பதவியில் இருந்து துரத்தப்பட்டு அந்த பதவியை மோடிக்கு தருகிறார்கள் வாஜ்பாய், அத்வானி இருவரும். 2002ல் மாபெரும் குஜராத் கலவரம். இஸ்லாமியர்களை தேடித்தடி அழிக்கும் திட்டத்தை தீட்டி  தந்தவர் முதல்வர் நாற்காலியில் இருந்த மோடி. இதில் மோடிக்கு எதிர்ப்பு 60 சதவிதம் என்றால் ஆதரவு 40 சதவிதம். ஆதரவு கரம் நீட்டியவர்களில் முக்கியமானவர்கள் தொழில் சாம்ராஜ்ஜிய சாம்ராட்டுகள். இவர்கள் தான் குஜராத் தொழில்துறைக்கு சிறந்த மாநிலம், மோடியால் வளர்ச்சி பெற்ற மாநிலம் என விளம்பரப்படுத்துகிறார்கள்.

விளம்பரத்துக்கும் நிஜத்துக்கும் சம்மந்தமில்லை. உண்மையோ வேறு மாதிரி உள்ளது. குஜராத்தில் நாளொன்றுக்கு 11 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்கிறது குஜராத் சமூக நலத்துறை. ( மத்தியரசு 37 பிக்ஸ் பண்ணாங்கன்னு நினைக்கறன் )

குஜராத்தில் 70 சதவித வீடுகளுக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் அடிமட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின்வசதி கிடையாது. சரியான சாலை வசதி கிடையாது. குஜராத்தின் பல்லாயிரம் கிராம மக்கள் குடிதண்ணீர்க்காக பல மைல்கள் நடக்கின்றனர்.

பொருளாதாரத்தில், 8 லட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடு குஜராத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியிடுகிறது குஜராத் தொழில்துறை. இந்திய ரிசர்வ் வங்கி  இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீடே 7 ஆயிரம் கோடி டாலர் தாண்டா என்கிறது. 2013 – 2014 அரசின் புள்ளிவிவரப்படி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் குஜராத் ஆறாவதுயிடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஸ்ட்டிரா, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆனால் இவைகள் மறைக்கப்பட்டன. கார்ப்பரேட் கம்பெனிகளால் மறைக்க வைக்கப்பட்டன. 2009ல் குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்ற பின், குஜராத்தில் நடந்த தொழில்துறை மாநாட்டில் உலகின் கோட்டீஸ்வரர்களில் ஒருவரான கார்ப்பரேட் முதலாளி அனில் அம்பானி மோடி பிரதமர்க்கு தகுதியானவர் என குரல் கொடுத்தார். இவருக்கு பின் மிட்டல் அதற்கடுத்து வரிசையில் டாட்டா என லைன் கட்டி கோட்டீஸ்வர கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகள் ஆதரவு தந்தனர். குஜராத்தின் வளர்ச்சி கார்ப்பரேட் முதலாளிகளால் பலூனாக ஊதப்பட்டது. தொழில் தொடங்க இரண்டே நாளில் அனுமதி என்ற முத்தை உதிர்த்தவர் டாட்டா தான். முகேஷ் அம்பானி, மோடியை பிரதமராக்க வேண்டும் என பிட்டை போட்டார். அதற்கடுத்து மகேந்திரா கம்பெனி ஓனர் ஆனந்த்மகேந்திரா. இவர்களை பேச வைத்தது யார் என்றால் அதானி குழும தலைவர் அதானி. இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது மோடி நல்லவர் என சான்றிதழ் தந்தவர். மோடிக்கு ஸ்பான்ஷர் செய்யும் அதிகாரபூர்வ கோட்டீஸ்வரர். இவர் தலைமையில் தான் மற்ற கோட்டீஸ்வரர்கள் மோடியை புரமோட் செய்கிறார்கள்.

மோடியை பிரதமராக முன்னிறுத்தியதும் அவர் முன் குஜராத் கலவரம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கியது.

குஜராத்தின் கோத்ரா சம்பவத்துக்கு மறுநாள் இஸ்லாமியர்கள் மீதான நரோதா பாட்டியாவின் படுகொலையில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் 36 குழந்தைகள். 35 பெண்கள். ஒரு இஸ்லாமிய பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து எரித்தனர். இஸ்லாமிய பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்றனர். அதை முன்னின்று செய்தவர்களில் முக்கியமானவர்கள் மோடி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பாபுஜீ, டாக்டர் மாயா கோத்னானி. அதை திமிறாகவும் பேட்டி தந்தனர்.

அதேபோல் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாவாதிகள் கலவரம் செய்தனர். கலவரத்ததை கட்டுப்படுத்த வேண்டாம், நடக்கட்டும் என முதல்வர் மோடி உத்தரவு போட்டார் என குஜராத் அரசின் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையராக இருந்த சஞ்சிவ் பட்  உறுதியான தகவல்களை தந்தார். அவர் மீது மோடி அரசாங்கம் பொய் வழக்கை போட்டது. சிறை சென்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

கலவரத்தில் ஈடுபட்ட குஜராத்தின் வருவாய்த்துறை இணையமைச்சர் ஹரேன் பாண்டியா. மோடி தான் திட்டங்களை தீட்டி தந்தார் என கலவரம்  அதற்கான திட்டம் உருவாக்கம் பற்றி உள்விவகாரங்களை டெஹல்கா இணைய இதழ்க்கு பேட்டி தந்தார். இவர் மர்மமான முறையில் 2003ல் படுகொலை செய்யப்பட்டார். பாண்டியாவை சுட்டு கொன்றது கொலை கும்பல் தலைவனான சோராபுதின் கும்பலை சேர்ந்த துளசிராம். 2005ல் சோரபுதின் அவன் மனைவி கவுசர் பீவியும் ஐ.பி.எஸ் அதிகாரி வன்சராவால் என்கௌண்டர் செய்யப்பட்டனர். துளசிராம் 2006ல் மர்மமாக கொல்லப்பட்டான். 



நரோதா பாட்டியா வழக்கில் பாபுஜீ சாகும்வரை சிறை. மாயாவுக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். ஆனால் பாண்டியா, செராபுதின் டீம் கொலைகளை குஜராத் சி.ஐ.டி சரியாக விசாணை செய்யவில்லையென குஜராத்தின் முன்னால் டி.ஜி.பி ஸ்ரீகுமார். விவேக்ஸ்ரீவத்ஸவா, ஹிமாண்ஷீீபட், ரஜனீஷ்ராய் போன்ற காவல்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். முன்னால் சி.பி.ஐ இயக்குநர் ராகவன், இந்த கொலை வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அவர் மோடி நல்லவர் என உச்சநீதிமன்றத்தில் சான்றிதழ் தந்தார். இந்த நேர்மையான அதிகாரி விசாரணை பற்றிய அறிக்கையை நீதிமன்றத்துக்கு அளிக்கும் முன் குஜராத் அரசின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார்மேத்தாவின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து 17.10.2010ல் அந்த தகவலை நம்மவூர் பூணுல்வாதிகள் இந்து ராம், ஆடிட்டர் குரூமூர்த்திக்கு வந்துள்ளது. அவர் துக்ளக் சோ வுக்கு தெரிவிக்கிறார். மோடியை நல்லவர் என அறிக்கை தந்த ராகவனை பாராட்டியுள்ளார்கள்.

நர மாமிசம் உண்ட மோடி நல்லவராக்கப்பட்டார் அடுத்துயென்ன அதிகாரபூர்வமாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முயற்சிகள் நடந்தன. மோடிக்கு பிரதமர் பதவியா என எதிர்ப்புகாட்டினார்கள் மோடியின் அரசியல் குரு அத்வானி, சுஷ்மா, ஐஸ்வந்த்சிங், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலாணி, அருண்ஜெட்லி போன்றவர்கள். அவர்கள் டம்மியாக்கப்பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்சின் அதிதீவிர செல்லப்பிள்ளை ராஜ்நாத் சிங் பி.ஜே.பி தலைவராக்கப்பட்டார். மோடியை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருக்க தேவையில்லை. கூட்டணி கட்சிகளும் மோடியை ஏற்றுக்கொண்டால் கூட்டணி இல்லையேல் தேவையில்லை என அதிரடியாக அறிவித்தார். காட்சிகள் கொஞ்சம் மாறின.

பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக இந்துத்துவா கூடாரம் மோடியை அறிவிக்கவைத்தது. ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, மோடிக்கு 272 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற பிரச்சார வாசகத்தை உருவாக்கி தந்தது. 2013 செப்டம்பர் மாதம் ஹரியானாவில் மோடி தொடங்கிய எக்ஸ் ஆர்மி சோல்ஜர்ஸ் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டார். இறுதியாக 2014 மே 10ந்தேதி இறுதிகட்ட பிரச்சாரமாக உ.பியில் அவர் முடித்தார். இந்த இடைப்பட்ட 8 மாதத்தில் 3 லட்சம் கி.மீ பயணம், 437 பொதுக்கூட்டம். 1350 பேரணியில் 3 டி தொழில் நுட்ப உதவியுடன் ஜெராக்ஸ் கலந்துக்கொண்டது. வீடியோ கான்பரன்சிங்கில் டீக்கடைகளில் அரசியல் விமர்சகர்களுடன் விவாதித்தது, மீடியா பேட்டிகள் என 6 ஆயிரம் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளார். மோடி டீ குடிப்பதை டீ கடை பெஞ்ச் ( சாய் பே சர்ச்சா ) என்ற தலைப்பில் நேரடி தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கு நிகழ்சிக்கு செலவிடப்பட்ட தொகை 250 கோடியாம்.

பொருளாதார வாக்குறுதிகளாக 1. 100 புதிய நகரங்களை உருவாக்குவேன், 2. நதிகளை இணைப்பேன், 3. தொழில்நுட்ப வளர்ச்சி, 4 சுற்றுலா, 5. பாரம்பரியம் வளர்ப்பேன். நாடு பொருளாதாரத்தில் வளர வேண்டும் என்பதே என் குறிக்கோள் அதை செய்வேன் என வாக்குறுதி தந்தார்.

ஆர்.எஸ்.எஸ்சின் செயல்திட்டம், மோடியின் உழைப்பு, கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பரம், மீடியாவின் சப்போட் போன்றவை மோடியை  பிரதமர் நாற்காலியில் அமரவைத்தது. இதற்கு பின்னால் பலரின் உழைப்பு இருந்தாலும் சிலர் மிக முக்கியமானவர்கள். அது மோடியின் பிரச்சார படை.

கைலாஷ்நாதன். – குஜராத்தின் முதல்வர் மோடி அலுவலகத்தில் பணியாற்றியவர். மோடியின் விசுவாசி, திறமையான அதிகாரி  என்பதால் இவரை விட மனம்மில்லாமல் ரிட்டையர்டு ஆனவரை தலைமை முதன்மை செயலாளர் என்ற சிறப்பு பதவி தந்து தன்னுடன் வைத்தள்ளார். தமிழர்.

இணைய தளமும், சமூக வளைத்தளமும் தான் நடுத்தர, மேல்தட்டு வர்க்க மக்களிடம் தன்னை கொண்டு போய் சேர்க்கும் என முடிவு செய்து அதற்காக மூன்று தளபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஹிரேன் ஜோஷி, ராஜேஷ்ஜெயின், மகேஷ்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நெட்கோர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையார் ராஜேஷ் ஜெயின் மோடிக்காக பரத்விஜய் என்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்கி 200 ஊழியர்களை வைத்துக்கொண்டு மோடிக்காக பிரச்சாரம் செய்தார். நாட்டில் உள்ள மொத்த தொகுதிகளின் டேட்டாஸ் இந்த நிறுவனத்தின் கம்யூட்டரில் உள்ளது. லிங்க் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கும் தரப்பட்டுள்ளது.

3டி டெக்னாலஜியில் வீடியோக்களை உருவாக்குவது, எதிர்கட்சிகளை கிண்டலடிக்கும் வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவது, பேஸ்புக், டுவிட்டர் உட்பட சமூக வளைத்தளங்களில் மோடிக்கு ஆதரவான கருத்துக்களை உருவாக்குவது இவர்கள் பணி.

அரவிந்த் ஷர்மா – குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் தான் மோடி மீது ஏவப்படும் அம்புகளுக்கு பதில் அம்பு ஏவும் மிஷின். பரத்லால். ஐ.எப்.எஸ் அதிகாரி. கூட்டணி கட்சி அரசியல்வாதிகள், மீடியாக்களை கவனித்துக்கொள்வர், பிரச்சார கூட்டங்களின் மறைமுக தலைவர்.

மோடியின் தளபதி அமித்ஷா. யாரிந்த அமித்ஷா ?.

பழைய மகராஷ்ட்டிரா மாநிலம் பம்பாய்யில் 1964ல் அனில்சந்திரா ஷாவுக்கு மகனாக பிறந்தவர் அமித்ஷா. மார்வாடி குடும்பம். அவரது அப்பா பெரிய தொழிலதிபர். ஆர்.எஸ்.எஸ் அனுதாபி. சின்ன வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்சின் அகில பாரத வித்யாத்ரி பரிஷத் என்கிற இளைஞர் அமைப்பில் தன்னை அமித் ஷா இணைத்துக்கொண்டார். அதன் தலைவராகவும் இருந்தார். உயிர் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர். பங்கு சந்தையில் தற்போது கோலோச்சுகிறார். மனைவி சோனால், மகன் ஜெய்.

அத்வானி குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் எம்.பி வேட்பாளராக நிற்கும் போது பிரச்சார ஊழியராக அத்வானிக்கு நெருக்கமானார். அத்வானி வெற்றி பெற்றதற்க்கு பரிசாக குஜராத் நிதி கழகத்தின் தலைவராக அமித் ஷாவை நியமிக்க வைத்தார். பின் அகமதாபாத் கூட்டுறவு வங்கியின் மாவட்ட சேர்மனாக நியமிக்கப்பட்டார். 2002ல் சார்கேஜீ தொகுதியில் நின்று எம்.எல்.ஏவானார். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ இவர் தான். 2003ல் மோடி அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் மோடியின் வலதுகரமாக மாறினார். இருவரும் அத்வானியின் சிஷ்யர்கள்.

செராபுதீன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்துறை இணை அமைச்சராக இருக்கும் போதே தலைமறைவாகி பதவியை ராஜினாமா செய்தார். பின் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார். சேராபுதின் ஷேக், துளசிபிரஜாபதி கொலை வழக்கு, இஷ்ரத்ஜகான் என்கௌர்ண்டர் வழக்குகளில் இருந்து சி.பி.ஐ விசாணை அறிக்கை இவர் குற்றம்செய்யவில்லை என விடுவிக்கப்படவைக்கப்பட்டார். மோடிக்காக ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்தது இவர் தான்.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் தயாரானதும் அமித் ஷா நாட்டின் பெரிய மாநிலமும், அதிக எம்.பி தொகுதிகள் கொண்ட மாநிலமான உ.பியின் பி.ஜே.பியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் பொறுப்பாளராகவும் அமித் ஷா நியமிக்கப்பட்டார்.

உத்தரபிரதேச தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவி ஆதித்யா நாத்க்கு வழங்கப்பட்டது. யார் ஆதித்யா நாத் ? உ.பியின் கோரக்பூர் நகரத்தின் எம்.பி யோகிஆதித்யா நாத். 1999 முதல் கோரக்பூர் தொகுதியின் பி.ஜே.பி எம்.பி. ஹிந்து யுவா வாகினி என்ற ஒரு அமைப்பை வைத்தள்ளார். முழுக்க முழுக்க இளைஞர்கள் உள்ள அமைப்பு. சேவை முதல் அடிதடி வரை இவ்வமைப்பில் உள்ளவர்களை வைத்து தான் செய்வார். இந்தியா இந்துத்துவா நாடாக வேண்டும் என்ற கனவில் வாழ்பவர். இந்துக்களின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ள முஸ்லீம் கலவரங்களை உருவாக்கி வெற்றி பெற்று தலைவராகவும் ஆகிவிட்டார்.

அமித்ஷா ஆதித்யா நாத் போன்றவர்கள் மூலம் இந்து முஸ்லிம் கலவரங்களை உருவாக்கினார். முசாபர்பாத் கலவரம் இவர்கள் உருவாக்கியது தான். கலவரத்துக்கு பின் இந்துக்களிடம் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற இந்துத்துவா அமைப்புகள் மோடியை பற்றி பிரச்சாரம் செய்தன. மோடியை கதாநாயகனாக சித்தரித்து உ.பிகளில் பிரச்சாரம் செய்தார் அமித்ஷா. மாநிலம் முழுவதும் பயணம் செய்து 80 ஆயிரம் கிராமங்களில் யாதவர், ஜாட் இனத்தவர், தலித், பிராமின்களை சந்தித்தார். மோடியை அவதாரமாக சித்தரித்தார். டெக்னாலஜி படை அவருக்கு கை கொடுத்தது. உ.பியின் இருண்ட பகுதிகள் என வர்ணிக்கப்படும் கிராமப்புறங்களில் மோடியை பிரபலப்படுத்த 450 வித்தியாசமான ரதங்கள் (கார்கள், இருசக்கர வாகனம்)  உருவாக்கினார். அதில் எல்.இ.டி டிவிகள் வழியாக மோடியை கதாநாயகனாக சித்தரிக்கும் வீடியோக்களை ஒளிப்பரப்பினார். குஜராத்தில் பாலும் தேனும் ஓடுகிறது என்றது அந்த வீடியோ.

ராஜ்நாத் சிங், மோடி, அமித் ஷா உட்பட 5 பேர் கொண்ட கமிட்டி தான் வேட்பாளர்களை தேர்வு செய்து உ.பியில் நிறுத்தியது. 80 தொகுதிகளில் 72ல் வெற்றி. மாநில கட்சிகள் வலுவாக உள்ள இந்த மாநிலத்தில் பி.ஜே.பி என்ற கட்சிக்கு இங்கு மாபெரும் வெற்றி கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதை சாத்தியமாக்கியவர் அமித் ஷா. இவரை 2லட்சத்து 91 ஆயிரத்து 490 பேர் முகநூல் பின்தொடர்கிறார்கள். தற்போது குஜராத் மாநில சதுரங்க சங்கத்தின் தலைவர். குஜராத் கிரிக்கெட் அசோசியேஷனின் துணை தலைவராக உள்ள அமித் ஷாவுக்கு பணம் கொழிக்கும் பி.சி.சி.ஐயின் தலைவராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கான காய் நகர்த்தல் தொடங்கிவிட்டது. நண்பருக்கு நிச்சயம் அதை பிரதமர் மோடி செய்து தருவார் என நம்பலாம்.

பிரதமர் நாற்காலியில் அமரும் மோடி முன் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய புரட்சி என மக்கள் நல திட்டங்களும், வேறு சில பெரும் சவால்களும் உள்ளன. அந்த சவால்களை இந்துத்துவா அமைப்புகள், உள்கட்சி, மோடியை பிரதமராக்கிய கார்ப்பரேட் கம்பெனிகள், மீடியாக்கள் உருவாக்கும். நவயுக நாயகராக சித்தரிக்கப்பட்ட மோடி தங்களது வீடுகளில் பாலும், தேனும் ஓட வைக்கபோகிறார் என எண்ணி காத்துள்ளார்கள். என்ன செய்ய போகிறார் மோடி என்பது கேள்விக்குறிதான். 

இருந்தாலும் பிரதமராக அமரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.........

2 கருத்துகள்:

  1. உங்கள் ஆதங்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது. உண்மை மட்டுமே நிலைக்கும் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. BY READING YOUR ARTICLE ONLY, WE UNDERSTAND THE IMPORTANCE OF SONIA.
    WE ARE LUCKY TO HAVE A LEADER LIKE SONIA.

    பதிலளிநீக்கு