செவ்வாய், செப்டம்பர் 02, 2014

சேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி ?. ( சுய புராணம் )

http://files.hostgator.co.in/hostgator213430/image/service.png

விநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில இளைஞர்கள் வீட்டுக்கு வந்தார்கள். தயங்கி தயங்கி மன்றம் ஆரம்பிச்சி நடத்திக்கிட்டு வர்றோம். ஊருக்கு ஏதாவது செய்யலாம்ன்னு பார்த்தா மன்றத்தல சிலர் ஒத்துக்கமாட்டேன்கிறாங்க. உங்க மன்றம் நல்லா நடக்குது. நீங்க தான் ஆரம்பிச்சதா எங்ப்பா சொன்னாரு. எப்படி நடத்தனும், ஊருக்கு எப்படி சேவை செய்யனும், பிரச்சனை பண்றவங்கள எப்படி சமாளிக்கனம்ன்னு சொன்னீங்கன்னா நாங்களும் அப்படியே நடந்துக்குவோம் என்றான்கள்.

எனக்கு பழைய நினைவுகள் மனதில் ஓட தொடங்கியது.

2000ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் எண்ணியே 200 வீடுகள் தான். அதுவும் இரண்டு பகுதியாக இருந்தது. ஊரில் தமிழன் இளைஞர் நற்பனி மன்றம் என்ற ஒன்றுயிருந்தது. 45 வயதுக்கு மேலான எனது தந்தையார் தான் “இளைஞர்“ மன்ற தலைவர், எனது பெரியப்பா மகன் செயலாளர், எதிர்வீட்டு அண்ணன் பொருளாளர். செயலாளர், பொருளாளர், சில உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் 35 வயதை தாண்டியவர்கள். 60 பேர் உறுப்பினர்களாக இருந்த மன்றத்தில் என்னை போன்ற 15 வயது டவுசர் போட்ட பையன்கள் சிலரும் இருந்தோம்.

1998ல் மன்றத்தின் பெயர் பலகை வைத்ததோடு சரி. சில மாதங்கள் கூட்டங்கள் நடந்தது. அதன்பின் அது செயல்படவேயில்லை. 2000 ஏப்ரல் மாதம் கூட்டத்தை கூட்டுங்கள் மன்றத்தை நடத்தலாம் என நான், எங்கள் தெரு நண்பர்கள் இரண்டு பேர் இணைந்து கேட்டபோது அதெல்லாம் முடியாது எனச்சொல்லிவிட்டார்கள் நிர்வாகிகள். செயலாளர் – பொருளாளர் ஓரளவு படித்தவர்கள். அவர்கள் பேச்சை மீற முடியாத நிலை தலைவருக்கு. அப்போது நான் என்ன செய்தாலும் என் தந்தையார் அதை பெரும்பாலும் சின்ன பையன் உனக்கு என்னடா தெரியும் என தவறாக பார்ப்பார். உறவுக்காரர்கள் பேச்சை அதிகம் நம்புவார். சில நேரங்களில் மட்டும் நான் பேசுவதில் நியாயம் உள்ளது என மனதில் பட்டால் எதுவும் கேட்கமாட்டார். மன்றத்தல ஆயிரம் ரூபாய் பணம்மிருக்குயில்ல அதப்பத்தி கணக்கு தாங்க என்றதும் தரவில்லை.

என் தொல்லை அவர்களுக்கு பெரியதாக இருந்தது. 15 வயசு பையன் தானே என என்னை எதிர்க்கவோ, ஊரைவிட்டு ஒதுக்கவோ முடியாது. காரணம், என் தந்தையார் ஊர் நாட்டாமை. ஊரில் பெரிய தலைகட்டு. வெளியுலகம் தெரிந்த ஒழுங்காக படித்து வந்தவன் என்ற மரியாதை. அதோடு, 1999லே போலிஸ் ஜீப்பை தனியாளாக மடக்கி எங்க ஊர்ல சாராயம் விக்கறாங்க என புகார் சொல்லி அதை காலி பண்ண வைத்தேன். காலி பண்ண வந்த போலிஸ்காரர் ஒருவர் என்னை காட்டி கொடுத்துவிட்டு போய்விட்டார். அது பெரும் பிரச்சனையானது. (நான் ரத்தம் கக்கி சாக சூனியம் வைத்தார்கள்.) அந்த பயம் வேறு. அதனால் என்னை பலரால் நேரடியாக எதிர்க்கவோ, என் கேள்விகளை புறக்கணிக்கவோ முடியாது. கடைசியாக பஞ்சாயத்து நடந்தது. டவுசர் போட்ட பசங்களுக்கு நாங்க பதில் சொல்லனும்மா என விரட்டினார்கள். எனக்கோ கோபம் வந்தது. நான் பசங்களோடு சேர்ந்து மன்றம் ஆரம்பிக்கறன். உங்க மன்றத்துக்கு போட்டியா எங்க மன்றம் இருக்கும் என சவால் விட்டுவிட்டு வந்தேன். நான் சொன்னதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து கலைந்தது. படிடான்னா ஊரை எதிர்த்துக்கிட்டு உனக்கு எதுக்கு இந்த வேலை என என் தந்தை திட்ட நான் பாஸ் பண்ணனும் அவ்வளவு தானே. நான் பாஸ் பண்ணுவன் நீங்க கம்முனுயிருங்க என்றதும் திட்டிவிட்டு போய்விட்டார். அவரை பொறுத்தவரை ஊருக்கு கட்டுப்பட வேண்டும்.

மன்றம் தொடங்குவது எப்படி ?, எங்கு பதிவு செய்வது ?, எத்தனை பேர் இருக்க வேண்டும் என்ற எதுவும் தெரியாது. ஆனாலும் சவால்விட்டாச்சி தோற்ககூடாது என்ற வெறி.

பழைய மன்றம் பற்றிய நோட்புக், டாக்மெண்ட்டுகள் எனது தந்தையார் தலைவர் என்பதால் எங்கள் வீட்டில் தான் இருந்தன. அதை எடுத்து படித்தபோது, நேரு யுவகேந்திரா என்ற ஒரு அமைப்பு பதிவு சான்றிதழ் தந்திருந்ததை பார்த்தேன். பெயர் மட்டும் இருந்தது குறித்து எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு சைக்கிளில் புறப்பட்டேன். பலரிடம் கேட்டு அங்கயிங்க என சுத்தவிட்டார்கள். கடைசியில் வேலூர் ரோட்டில் அந்த பெயர் பலகை கண்ணில் பட்டது. தயங்கி தயங்கி உள்ளே சென்றபோது, ஏன் தயங்கவாப்பா என ஒருவர் வரவேற்றார். என்ன விஷயம் ? எந்த ஊர் என கேட்டார் ?. ஊர் பெயரை சொன்னதும். அந்த ஊரா என்றவர் சற்று யோசித்து என் தந்தையார் பெயரை சொல்லி அவரை தெரியுமா என கேட்டார். அவரோட பையன் தான் சார் நான். என்ன விஷயமா வந்துயிருக்க என கேட்டவரிடம். எங்கப்பா தலைவரா இருக்கற மன்றம் சரியா செயல்படல சார். புதுசா மன்றம் ஆரம்பிக்கறது எப்படின்னு கேட்க வந்தன் சார்.

என்ன தம்பீ பண்ற? 10வது பரிச்சை எழுதியிருக்கன் சார்.

படிக்கற வயசுல எதுக்குப்பா இந்த வேலை? இல்ல சார், ஊர்ல திருவிழா நடத்தனா பசங்களோட கருத்த கேட்கவே மாட்டேன்கிறாங்க அதனால தான் என இழுத்ததும்........ உங்க ஊர்ல ஏற்கனவே மன்றம் கவர்மெண்ட்ல பதிவு செய்து வச்சியிருக்காங்க. ஒரு ஊருக்கு ஒரு மன்றம் தான் நாங்க அனுமதிப்போம். அதனால நீ ஆரம்பிக்க முடியாதுப்பா.

வேற வழியே இல்லையா சார் ?. பழைய மன்றம் செயல்படாம இருக்கனும் இல்லன்னா மன்றத்த வருஷா வருஷம் ரினிவல் பண்ணனும். இத செய்யாம இருந்தா புது மன்றம் ஆரம்பிக்கலாம். அத தெரிஞ்சிக்கிட்டு ரூல்ஸ் போர்டுல இருக்கு பாரு படிச்சிட்டு போ என்றார். படித்துவிட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்து திரும்ப நோட்டுகளை எடுத்து பார்த்தால் கடைசி நாலு மாதங்களுக்கு முன்பு வரை மன்ற கூட்டம் நடந்தது போல் தீர்மானங்கள் இருந்தன. என்ன செய்யலாம் என யோசித்தபோது, ரினிவல் செய்யாமல் மன்றம் இருப்பது கண்டுபிடித்தேன்.  சில நாட்கள் பொருத்து சென்று, சார் அவுங்க மன்றத்த ரினிவல் செய்யல என்றதும் ஏற இறங்க பார்த்தவர். 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அப்ளிக்கேஷன் தந்தார். 25 பேர் இருக்கனும். அதல 5 பேர் பெண்கள். பெயர், முகவரி, கையெழுத்து இருக்கனும் என்றார்.

அப்போது தான் மண்டையில் உரைத்தது. இருக்கறது நாம ஒருத்தன் தான். 24 பேரை எப்படி சேர்ப்பது என்ற கவலை. நான் எதை செய்தாலும் எனக்கு ஆதரவு தர இரண்டு நண்பர்கள் உண்டு. அவன்களிடம் பேசியதும், சரிடா ஆரம்பிக்கலாம் என கையெழுத்திட்டார்கள். என் சக வயது, என்னைவிட 4 மற்றும் 7 வயது மூத்தவர்கள் சிலர், பெண்கள் என இணைத்து படிவத்தில் கையெழுத்து வாங்கி ஆளுக்கு 10 ரூபாய் வசூலித்துக்கொண்டு இரண்டு பேர் சென்று தந்ததும் வாங்கி வைத்துக்கொண்டு நாலு நாள் பொருத்து வாங்க அனுப்பிவைத்தார். மன்ற ஆரம்ப பணிகளை கேட்டு பழைய மன்ற நிர்வாகிகள், சில உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசித்தார்கள். நான் என்பது நாங்களாகியிருந்தோம். எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. நம்ம மன்றம் இருக்கும்போது, இன்னோரு மன்றம் ஆரம்பிக்கமாட்டாங்க டவுசர் போட்ட பசங்க ஏதோ விளையாடுதுங்க விடுங்க என அவர்களாகவே ஒரு முடிவு எடுத்துக்கொண்டு கலைந்தார்கள். 

மூன்றாவது நாள் நேரு யுவகேந்திரா அலுவலகம் சென்றதும் 25 ரூபாய் வாங்கிக்கொண்டு சர்டிப்கெட் தந்தார்கள். நீங்க இத ரிஜிஸ்டர் ஆபிஸ்ல பதிவு செய்யனும். அதுக்கு 300 ரூபா செலவாகும்ப்பா. 100 ரூபா தந்தா அதுக்கான டாக்மெண்ட் தர்றன் என்றார். அது வாங்க நான்கு நாள் அலைந்தபின் ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு ஒர்ஜினல் தந்துடனும் எனச்சொல்லி தந்தார். அதை வாங்கி மீண்டும் கையெழுத்து, பணம் என போனபோது ஏமாத்தறியா என சிலர் சண்டை போட்டனர். சொன்னதை ஏற்கவில்லை. சரி கையெழுத்து மட்டும் போடுங்க எனச்சொல்லி அதை வாங்கிக்கொண்டேன். யாருக்கு என்ன பதவி என்பதில் சிக்கல். என்னை விட வயதில் மூத்தவர்கள் பலர். நான் மன்றத்தை தொடங்கினேன் என்பதால் என்னை தலைவராக்கி நீயே மற்றவர்களுக்கு பதவி தா என்றார்கள். துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், நிர்வாக குழுவில் 5 பேர் என படித்தவர்களாக பார்த்து போட்டு நிரப்பி பணத்தை தயார் செய்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் தந்தபோது, உங்க ஊர்ல இன்னோரு மன்றம்மிருக்கே அது இனிமே செயல்படாதுன்னு எழுதி வாங்கி வந்தா தான் பதிவு செய்வோம் என்றார் அங்கிருந்த அதிகாரி.

அந்த மன்றம் செயல்படறதில்ல சார். அதனால தான் நாங்க அதலயிருந்து பிரிஞ்சி வந்து ஆரம்பிக்கறோம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாலு நாள் நான் தொடர்ந்து அந்த அலுவலகத்து அலைய, டீ வாங்கி வந்து தா, கார்பன் பேப்பர் வாங்கி வந்து தா என வேலை வாங்கியவர்கள். பையன் தினமும் வந்து அலையறான் பாவம், அந்த மன்றம் செயல்படல அதனால நாங்க புது மன்றம் ஆரம்பிக்கிறோம் அதை பதிவு செய்து தாங்கன்னு எழுதி கையெழுத்து போட்டு தா என்றார் மனம்மிறங்கிய பதிவு அதிகாரி. அப்படியே எழுதி தந்ததும். 50 ரூபாய் பீஸ் வாங்கியவர். ஒரு வாரம் பொறுத்து வா என்றார். ஒரு வாரம் பொறுத்து போனபோது தயாராக வைத்திருந்த சான்றிதழை எடுத்து தந்தார்.

இரண்டு சர்டிப்கெட்களோடு ஊருக்கு வந்து மன்றம் பதிவாகிடுச்சி என சொன்னபோது கையெழுத்து போட்டவர்களே நம்பவில்லை. பழைய மன்ற நிர்வாகிகள் அதிர்ச்சியாகி முட்டி மோதி பார்த்தார்கள். வேலைக்கு ஆகவில்லை. தொங்கிய முகத்தோடு திரும்பி வந்தார்கள். எங்களாளயே நடத்த முடியல. நீ(ங்க) எப்படி நடத்தறிங்கன்னு பாக்கலாம் என்றார்கள். மன்ற பெயர் பலகை தயார் செய்தோம். நேரு யுவகேந்திரா மாவட்ட அதிகாரி, அவர் மூலமாகவே எக்ஸ்னோரா இந்திரராஜன், முக்கியஸ்தர்களை அழைத்து வந்து மன்ற பலகை திறக்க வைத்து கூட்டம் போட்டோம்.

நேரு யுவகேந்திரா நடத்திய விழாவில் எங்கள் மன்றம் ஏற்பாடு செய்த ஒரு கலைவிழா திருவண்ணாமலை நகரையே கலக்கியது. பிரபலமாக இருந்த ஒரு என்.ஜீ.ஓவுடன் தொடர்பு. மன்றத்தில் நிதி சேமிப்பு ஆரம்பமானது. செயல்பாட்டில் சிறந்த மன்றமாக வளர்ந்தோம். ஆரணி, வந்தவாசிக்கெல்லாம் சென்று மன்றம் தொடங்குவது, நடத்துவது பற்றி ஆலோசனை தரும் அளவுக்கு செயல்பாடு இருந்தது. மன்றத்தின் சார்பில், 100 ஏழை பிள்ளைகளுக்கு இலவச நோட் புத்தகம், மிகவும் ஏழ்மையான 5 பிள்ளைகளுக்கு இலவச சீருடை, சாலை சுத்தம் செய்தல், புதிய ரோடு போடுவது கண்காணிப்பு, யாருக்கு வாக்கு என்பதை தீர்மானிப்பது என மன்றம் செயல்பாடு தீவிரமாக இருந்தது. ஒரு ஊராட்சி மன்ற தலைவரை உருவாக்கியது மன்றம்.

பரவாயில்ல நினைச்சத சாதிச்சிட்டான் என்ற நம்பிக்கை என் தந்தையாருக்கு மன்றம் தொடங்கி அதன்செயல்பாடுகளை பார்த்து ஒரு சில ஆண்டுகளுக்கு பின் என் மீது வந்தது. அவனால யாருக்கும் எந்த தீங்கும் வராது, நேர்மையா இருப்பான் என நம்பி எதற்க்கும் இப்போது வரை தடைபோடுவதில்லை. 

புதியதாக சிலர் போட்டியாக ஊரில் மன்றம் ஆரம்பிக்க முயன்றார்கள். எங்கள் அனுமதியில்லாமல் எங்கள் ஊரில் இன்னோரு மன்றம் தொடங்க அனுமதிக்ககூடாது என நேரு யுவகேந்திராவுக்கு நாங்கள் கட்டுப்பாடு விதிக்கும் அளவுக்கு எங்கள் பணி இருந்தது.  

எனது கல்லூரி படிப்பு, 2002ல் பத்திரிக்கையில் செய்தியாளராக சேர்ந்ததால் மன்றம் தொடங்கிய நான்காவது ஆண்டு 2004ல் தலைவர் பதவியில் இருந்து விலக நினைத்தபோது, நேருயுவகேந்திரா அதிகாரி. நீ போய்ட்டன்னா மன்றம் செயல்படாது என்றார். அதுக்கு வாய்ப்பில்ல சார், நான் இல்லன்னாலும் மன்றம் செயல்படும் அந்தளவுக்கு விதிமுறைகள் இருக்கு. நான் மன்ற வேலைய பார்த்தா என் குடும்பத்த யார் காப்பாத்தறது. அதனால எனக்கு வேலை முக்கியம். அதனால தலைவரா தொடர்வது சாத்தியமல்ல என உறுதியாக கூறிவிட்டு தலைவர் பதவியை மற்றவருக்கு மாற்றி தந்துவிட்டு உறுப்பினராக மாறினேன்.

காலம் ஓடியது…………… 2008ல் எங்கள் கிராமம் மக்கள் தொகையில் வளர்ச்சி அடைந்து இருந்தது. சில இளைஞர்கள் குழுவாகி எங்கள் மன்ற செயல்பாட்டை கண்டு நாங்களும் மன்றம் ஆரம்பிச்சே தீருவோம் என நேரு யுவகேந்திரா சென்றார்கள். பழைய மன்றத்தில் இருந்து அனுமதி கடிதம் வாங்கி வாங்க என அனுப்பினார்கள். அப்போது இருந்த தலைவரிடம் சென்று கேட்க அவர் தர முடியாது என கூற ஊரில் பிரச்சனையானது. பிரச்சனை வேணாம் அவுங்க ஆரம்பிக்கட்டும் கடிதம் தந்துவிடுங்க என நான் சொன்னதும் எங்கள் மன்றத்தில் உள்ள சக உறுப்பினர்க்கு என் மீது கோபம். இரண்டு ஆண்டில் அவுங்க மன்றம் காணாமல் போகும் அதனால அத ஏன் நாம தடுக்க நினைக்கனும் என எடுத்து சொன்னபிறகு அனுமதி தரப்பட்டது. புதியதாக ஊரில் போட்டிக்கு ஒரு மன்றம் உருவானது. நிதி விவகாரத்தில் சண்டை போட்டுக்கொண்டு இரண்டு வருடம் முடிவதற்க்குள்ளே செயல்படாமல் முடங்கியது. இந்த மன்றம் மட்டுமல்ல எங்களைப்போல் செயல்பட வேண்டும்மென எங்களிடம் ஆலோசனை கேட்டு அக்கம் பக்க கிராமங்களில் புதியதாக 10 மன்றங்கள் உருவாகின. ஒன்று கூட தற்போது செயல்பாட்டில் இல்லை. ஆலோசனையை கேட்டவர்கள். அதை செயல்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டனர்.

நாங்கள் மன்றம் தொடங்கிய புதிதில் எப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்பதை யூகித்து அதற்கு ஏற்றாற்போல் அரசின் சட்ட விதிகளோடு, கூடுதலாக புதியதாக சட்டவிதிகளை உருவாக்கி வைத்தேன். நான் தலைவராக இருந்தபோது அதன்படியே நடந்தேன். மன்றத்தின் கூட்டம் நடத்த நான் உட்கார்ந்தால், நான் தலைவர் என்ற எண்ணம் மனதுக்குள் நாற்காலி போட்டு அமர்ந்துக்கொள்ளும். கூட்டம் முடியும் வரை உறவினன், நண்பன் என்ற பாகுபாடு இருக்காது. விதிமுறை படியே கூட்டம் நடக்கும். நான் பொறுப்புகளை மாற்றி தந்துவிட்டு வந்தபின் எனக்கு பின் வந்த தலைவர் (டாஸ்மாக் கருணையால் இறந்துவிட்டார்),  இப்போது மூன்றாவதாக உள்ள தலைவரும் விதிமுறைகளை மதித்தே நடக்கிறார். மதித்து தான் ஆகவேண்டும். மீறினால் அவர் தவறு செய்கிறார் என்பது வெளிப்படையாக தெரியும் அளவுக்கு விதிமுறைகளை புகுத்தி வைத்துள்ளேன். மீற முடியாத, தவிர்க்க முடியாத விதிகள்.

2014 நடக்கிறது. எங்கள் மன்றம் தொடங்கி 14 ஆண்டுகளாகிவிட்டது. இரண்டு வங்கியில் சேமிப்பு கணக்கு. மன்றத்தில் லட்ச கணக்கில் பணம். சுழற்சி முறையில் கடன் என செயல்படுகிறது. கிராம வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட மன்றம் இப்போது பைனான்ஸ் கம்பெனி போல் செயல்படுவதை கண்டு எனக்குள் வருத்தம். நான் தலைவராக இருந்தபோது சேவை செய்ததோடு சரி. அதன்பின் சுத்தமாகயில்லை என்பது தான் வேதனையின் உச்சம். பலமுறை சேவை செய்ய தான் மன்றம் தொடங்கப்பட்டது என எடுத்து சொன்னபோதும் நாங்க தான் நிர்வாகிங்க பார்த்துக்கறோம் என சொல்லிவிட்டார்கள்.

மன்றத்தை உருவாக்க, நடத்த தெரிந்த எனக்கு சேவை செய்பவர்கள் யார், அவர்களை கண்டறிய தெரியாத தற்குறி என அவர்களிடம் எப்படி நான் சொல்வேன். இருந்தும் செய்தியாளன் என்ற வகையில் பல விஷயங்களை உணர்ந்து வருகிறேன். அதன்படி வந்தவன்களிடம், ஊர்ல யார், யார் என்ன படிக்கறாங்க என்றதும் சொன்னான்கள். பசங்க யாரு, யாரை காதலிக்கறாங்க என்றதும் அதுப்பற்றி தயங்கி தயங்கி சொன்னான்கள். ஊர்ல என்ன அடிப்படை பிரச்சனையிருக்கு என கேட்டதும் ஒருத்தன் முகத்தை ஒருத்தன் பார்த்தான்கள். அவன்களிடம் இத என்னைக்கு தெரிஞ்சிக்கறிங்களோ அன்னைக்கு வாங்க சொல்றன் சேவை செய்யறவனை கண்டுபிடிக்கறதப்பத்தி என்றேன். போய்விட்டான்கள். வருவானுங்களான்னு தெரியாது……….

நான் சொன்னதுல ஏதாவது தவறுயிருந்தா சொல்லுங்க ???????????

6 கருத்துகள்:

  1. மன்றம் துவங்குவது எப்படி

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் உங்களுடைய மன்றத்தில் வைத்திருந்த சட்டவிதிகளை எங்களுக்கு சொல்லுங்கள்நாங்களும் மன்றம் தொடங்க உள்ளோம் எங்களுக்கு உங்களுடைய ஆலோசனைகள் தேவை 9061168284

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உங்களுடைய மன்றத்தில் வைத்திருந்த சட்டவிதிகளை எங்களுக்கு சொல்லுங்கள்

      நீக்கு
  3. மன்ற விதிகள் பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. மன்ற விதிகள் பகிர்ந்தால் உபயோகமாக இருக்கு

    பதிலளிநீக்கு