திங்கள், அக்டோபர் 31, 2011

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்………..


இந்தியாவில் உள்ள சாணக்கிய அரசியல்வாதி கலைஞர் ஒருவர் தான் என்றால் மிகையில்லை. இதை உணர்ந்து தான் ஒருமுறை அறிஞர் அண்ணா கழக மேடையில், திமுகவை காப்பாற்ற கருணாநிதி உள்ளார் என்றார். அவர் கூறியது 100 சதவிதம் உண்மை. 50 ஆண்டுகாலத்தில் திமுக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது. பல சோதனையான காலக்கட்டம் திமுக அழிந்தே விட்டது பலரும் முடிவு செய்த நிலையில் பினிக்ஸ் பறவையாக பலமுறை அழிவில் இருந்து கழகத்தை காத்த சாணக்கியர் கலைஞர்.

திமுக தோன்றிய காலத்தில் இந்தியாவில் பல கட்சிகள் தோன்றியது, ஆண்டது, அழிந்தது, தோன்றிய வேகத்திலேயே அழிந்ததும் உண்டு. ஆனால் திமுக மட்டும் சேதராங்களோடு தப்பியது. அதற்க்கு காரணம் கலைஞர், கழகத்தின் கொள்கைகள், அதன் தொண்டர்கள். கழகத்திற்காக தொண்டர்கள் புயல் போல் புறப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று பம்முகிறான் காரணம்மென்ன?.

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திராவிட பற்றாளர்களை, விசுவாச கழக தொண்டர்களை புறக்கணித்தனர். பணம் உள்ளவனுக்கே பதவி என்ற நிலையை கழகத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். தொண்டர் பலம், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை. கடந்த 20 ஆண்டுகளத்தில் கழகம் போட்டியிட்ட தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலை நோக்கினால், சில இரண்டாம் கட்ட தலைவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு பின் தங்களது பிள்ளைகளுக்கு, இளவல்களுக்கு சீட் வாங்கி தந்து சட்டமன்றத்துக்கும், பாராளமன்றத்துக்கும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தின் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறார்கள். கட்சி பதவிகளிலும் இதே நிலை தான்.

திமுகவில் உழைப்பவனுக்கு பதவியில்லை. பதவியில் இருப்பவனுக்கு பிள்ளையாய் பிறந்தால் பதவி என்ற நிலை. திமுகவில் இருந்து ஓடியவர்களால் உருவான அதிமுகவை பாருங்கள், டீ கடை நடத்திய பன்னீர்செல்வம் முதலமைச்சராகிறார். மாடு மேய்த்தவர் எம்.எல்.ஏவாகிறார். இன்று சட்டமன்றத்தில் உள்ள பல எம்.எல்.ஏக்கள் ஏழைகள். மாநகர மேயர்களாக, நகரமன்ற தலைவர்களாக உள்ளவர்கள் அந்த பதவிகளுக்கு புது முகங்கள். அவர்களுக்கு சீட் தந்து ஜெயிக்க வைத்து அந்த கட்சி தலைமை அழகு பார்க்கிறது. இதை பார்த்து அதிமுகவுக்கு போனால் என்றாவது ஒருநாள் பதவி நிச்சயம், உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என எண்ணுகிறான் அங்கு போகிறார்கள். கட்சி பதவியாவது கிடைக்கிறது.


திமுகவில்?. எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. மழைக்காக ஒதுங்கியவன் வீடே எனக்கு சொந்தம் என்பதை போல கலைஞரின் வாரிசுகள் என்ற அடைமொழியோடு பதவிக்கு வருவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சிக்காக ஸ்டாலின் உழைத்தார், உழைக்கிறார். அவருக்கு பதவிகள் தருவது நியாயம். ஆனால் கட்சிக்காக உழைக்காத அழகிரி, கனிமொழி, தயாநிதிக்கு எதற்காக பதவிகள். ஸ்டாலின்க்கு அமைச்சர் பதவி தந்ததும், மூத்த மகன் அழகிரி பதவியில்லாமல் இருந்தால் மதிக்கமாட்டார்கள் என்று தென் மண்டல அமைப்பாளர் பதவியை உருவாக்கி தந்ததோடு, மத்திய அமைச்சராக்கப்பட்டார். மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு பதவி தந்தோமே என துணைவியானரின் மகளுக்கு எம்.பி பதவி தரப்பட்டது. கழகத்தின் தூண் என வர்ணிக்கப்பட்ட முரசொலிமாறன் இறந்ததும் அவரது பிள்ளையான தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி.

இந்த மூவரும் கட்சி வளர்ச்சிக்காக எப்போதாவது பாடுபட்டார்களா?, பிரச்சனைக்குரிய சமயத்தில் கட்சியை தாங்கி பிடித்தார்களா?, கட்சிக்காக சிறை சென்றவர்களா?, கட்சிக்காக அடி உதை பட்டவர்களா? ஏதற்காக இவர்களுக்கு பதவி திமுகவில் பதவி வாங்க இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. பிரச்சனை என்றதும் ஒடிஒலிந்துக்கொண்ட அழகிரி, கட்சிக்கு துரோகம் செய்த தயாநிதியை கட்சி தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இவர்களை விட தடியடிப்பட்டு, சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து கட்சிக்காக கொள்கைக்கா இன்றும் உழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சீட் தந்திருந்தால் கழகம் இக்கட்டான நிலையை சந்தித்திருக்காது. ஆனால் எதையும் கலைஞர் செய்யவில்லை.

திமுகவின் இளைஞர் அணி அமைப்பாளராக இன்னும் ஸ்டாலினே கோலோச்சுகிறார். கட்சியின் பொறுளாளர் என்ற பதவி தந்ததும் இளைஞர் அணி பதவியை வேறு ஒரு இளைஞரிடம் தந்துயிருக்க வேண்டாமா?. மகளிரணி, மாணவரணி, தொண்டரணி செயல்படுகிறதா என்பது பூத கண்ணாடி வைத்து தேட வேண்டிய நிலையில் உள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள அந்த அணியினரிடம் ஒரு உத்வேகம் தரப்படுகிறதா என்றால் அதுவும்மில்லை. புதியவர்கள் கட்சியில் சேர்ந்து கட்சியின் பொறுப்புகளுக்க வர நினைப்பவர்களுக்கு அணிகளிலாவது பதவி தரப்படுகிறதா என்றால் அதிலும் சீட் புக்கிங் நடக்கிறது.

இதையெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மாற்று கட்சியிலிருந்து பணத்தை, சொத்தை காப்பாற்றிக்கொள்ள கழகமே கோயில் என ஓடிவருபவர்களுக்கு பதவிகள் தருவதில், சீட்கள் தருவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்போ கட்சிக்காக உழைப்பவன் முட்டாளா?. இப்படியிருந்தால் கழகத்தில் எந்த ஒரு விசுவாச தொண்டனும் சேரமாட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கலைஞரே, முதலில் கட்சியில், குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதன்பின் அணி அணியாக இளையோர்களை சேர்க்க வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுங்கள்.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் வெறிக்கு கடாபி பலி.


 
42 ஆண்டுகள் லிபியாவின் தலைவராக விளங்கியவர் மும்மர் முஹம்மது அபு மின்யர்ல் கடாபி. சுருக்கமாக கடாபி. 1942 ஜீன் மாதம் அபுதாபியில் பிறந்தவர். இராயல் லிபியன் மிலிட்டரி அகடாமியில் சேர்ந்தார். கேணல் பதவி என உயர்ந்தார். பின் நாட்டின் மோசமான நிலையை கண்டு புரட்சி படையில் சேர்ந்தார். லிபியா புரட்சி படையின் பேரவை பொது செயலாளராக இருந்தார். 1969ல் லிபியாவில் இராணுவ புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தவர் கடாபி.
 
எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்று லிபியா. இதன் எண்ணெய் வளம் மூலம்  வந்த பெரும்பங்கு வருமானத்தை கடாபி அவரது உறவு வட்டாரத்தை பெரும் செல்வந்தர்களாக்கியது. அதோடு நாட்டை கடாபி பொருளாதாரத்தில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவசமாக வீட்டு வசதி போன்றவற்றை மக்களுக்கு தந்தார். அதோடு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி தந்தார். தண்ணீர் வசதி அதிகளவில் ஏற்படுத்தி தந்தார். இவையெல்லாம் வெளிநாட்டு கடன்யில்லாமல் செய்து தந்தார். அதோடு கல்வி வளர்ச்சி 10 சதவித்திலிருந்து 90 சதவிதமாக உயர்த்தினார், அதோடு லிபியாவில் மனிதனின் சாராசரி ஆயுள் 55 வயது என்பதிலிருந்து 70வயதாக்கினார்.
 
அதோடு ஆப்ரிக்க ஒன்றியத்துக்குள் ஏற்படும் பல போர்களுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எதிர்த்து நிற்க்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை ஓடிச்சென்று உதவினார். மற்ற நாடுகளில் போராடும் புரட்சி படை, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி, ஆயுத உதவியும் செய்தார். இதனால் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளானார். லிபியா கடன் வாங்கினால் அதை கொண்டு அடக்கலாம் என நினைத்த மேற்கத்திய நாடுகளுக்கு லிபியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை.
 
இதனை உணர்ந்து ஆயுதங்கள் சேகரிப்பும், இரசாயன ஆயுதம்ங்களை தயாரித்து வைப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டினார். இதனால் அதிர்ச்சியான மேற்கத்திய நாடுகள் லிபியாவை தனிமைப்படுத்தி தொடங்கின. 1980ல் லிபியாவை ஐ.நா அமைப்பு மூலம் ஒதுக்கப்பட்ட நாடாக அறிவித்தது. இதனால் பொருளாதாரத்தில் சறுக்கல் தொடங்கியது.


 
இதனால் கடாபிக்கு எதிர்ப்புகள் உருவாயின மற்றும் உருவாக்கப்பட்டன. இதனால் மாற்று கருத்துக்கள் உடையவர்களை சிறையில் தள்ளினார், தீவிரமாக இருப்பவர்களை கொல்ல உத்தரவிட்டார் கடாபி. வெளிநாடுகளுக்கு தப்பி போனவர்களையும் கொள்ள உத்தரவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் கேட்ட லிபியர்களை கொண்டு ஒரு படை உருவாக்கினார்கள்.
 
இதனால் ஆபத்தை உணர்ந்து மேற்க்கத்திய நாடுகளுடன் சமாதானம் பேசினார் கடாபி. உங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றது மேற்கத்தய நாடுகள். அவர்களின் வாக்குறுதிகளை நம்பி போர் ஆயுதங்கள், இராசாய ஆயுதங்களை ஒப்படைத்தார். ஆனாலும் மேற்கத்திய நாடுகள் லிபியாவுக்குள் புரட்சி படைகளை உருவாக்கி புரட்சி படைகளுக்கு தேவையான ஆயுதங்களை வாரி வாரி வழங்கியது.
 
2011 பிப்ரவரி முதல் லிபியாவில் புரட்சி படைகளுக்கும் லிபிய அரசின் படைகளுக்கும் மோதல் தொடங்கியது. லிபியாவின் கிழக்கு பகுதிகள் வறுமையில் இருந்தன. அந்த மக்கள் புரட்சி படையோடு கைகோர்த்தனர். ஐ.நா மூலம் வான் பரப்பில் லிபியா அரசின் விமானங்கள் பறக்கதடை, இண்டர்போல் தேடல், பன்னாட்டு நீதிமன்ற விசாரணை, நோட்டோ படைகளின் எதிர்ப்பு போன்றவற்றால் கடாபி திணறினார். அவரது படையிலும் சலசலப்பு எழுந்தது. கடாபிக்கு எதிரான தேசிய இடைக்கால பேரவை என்ற புரட்சிகர அமைப்பினை ஐ.நாவில் பிரதிநியாக உட்கார வைத்தது மேற்கத்திய நாடுகள்.

 
40 ஆண்டுகளுக்கு முன் புரட்சிவாதியாக நாட்டுக்காக ஓடினார். தற்போது தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதிபர் கடாபி ஓடினார். அக்டோபர் 20ந்தேதி கழிவு நீர் குழாய்யில் பதுங்கியிருந்த கடாபியை பிடித்தது புரட்சி படை. மார்பில், முகத்தில், உடலில் காயத்தோடு இருந்தவரை புரட்சி படையினர் அடித்தே கொன்றார்கள். அந்த இறுதி நிமிடம் அவருக்கு மட்டுமல்ல அந்த காட்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் கொடுமையாக இருந்தது.
 
எத்தனை தவறுகள் செய்துயிருப்பின் அவர் ஒரு நாட்டின் அதிபராக 4 சகாப்தங்களாக இருந்தவர். நாட்டின் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டவர், மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் நாட்டை விட்டு ஓடும் நிலை. அவருக்கான சிறிய மரியாதை கூட செய்ய அந்த நாடுகள் தவறிவிட்டன. ஏன் லிபியாவின் புதிய தலைமையும் செய்ய தவறி அவரின் கொலையை போரில் இறந்துவிட்டார் என்றது. வரலாற்றில் மறுக்க முடியாத, மன்னிக்க முடியாத நிகழ்வது. மனித உரிமை நாடுகள் இதுவரை வாய்திறக்கவில்லை.
 
மனித உயிர்களின் ரத்தத்தை குடித்த இலங்கை அதிபர் இராஜபக்சே இதை கண்டித்து அறிவித்துள்ளார். 

என்ன கொடுமை சார் இது. ………

துரத்தும் நீதிமன்றம்.


 
1991-1996ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ, நான் மாதம் ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார். 96ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஜெ மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டது. வருவமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்கள். அதன்பின் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெ. சொத்து குவிப்பு வழக்கை ஊத்தி மூட என்னன்னவோ செய்தார். இதனால் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றம் சென்று தமிழகத்தில் இவ்வழக்கு சரியாக நடக்காது அதனால் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டார்.
 
இதனால் கர்நாடகா மாநிலம் பெங்களுரூக்கு வழக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கு 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கு ஆவணங்கள் மொழி பெயர்க்க வேண்டும், ஆங்கிலம் தவறாக உள்ளது, எழுத்துபிழை உள்ளது, ஆங்கில மொழி பெயர்ப்பு சரியில்லை தமிழில் வேண்டும், தலைவலிக்குது, கால்வலி, தேர்தல் பணி, பாதுகாப்புயில்லை என வித்தியாசம் வித்தியாசமாக காரணங்கள் சொல்லி இந்த 13 ஆண்டுகளில் 110 வாய்தாக்களை வாங்கினார்.
 
தற்போது வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. ஜெ வந்து ஆஜராகி வாக்குமூலம் தந்துவிட்டால் வழக்கு இறுதி கட்டதுக்கு வந்துவிடும். ஆனால் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாய்தா வாங்குவேனே தவிர நீதிமன்றத்தில் ஆஜராகவே மாட்டேன் என்ற முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்திற்க்கு இந்த பிரச்சனை போனது, பொதுவாழ்வில் உள்ள நீங்கள் ஓடிப்போய் ஒளியக்கூடாது, பாதுகாப்பு சரியாக செய்யப்பட்டுள்ளது இனிமேல் போகாமல் இழுத்தடிப்பது நல்லதல்ல என கண்டித்தது உச்சநீதி மன்றம்.
 
இதனால், கடந்த அக்டோபர் 20, 21ந்தேதிகளில் பெங்களுரூ பார்ப்பர அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுயிருந்த தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜினா முன் ஆஜரானார். வழக்குக்காக ஜெ சென்றது தனிப்பட்ட விவகாரம். இதில் தேசிய கொடி போட்ட காரில். அதுவும் ஏதோ கட்சி மாநாட்டுக்கு போவது போல் விமான நிலையத்தில் இருந்து 36 கார்களில் ஊர்வலமாக நீதிமன்றத்துக்கு வந்தார். இவருக்கு 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
 
இவ்வளவு பெரிய பாதுகாப்பு எதற்க்கு?.
 
என்னை கொல்ல விடுதலைப்புலிகள் சதி செய்துள்ளார்கள் எனக்கூறியே உயர் பாதுகாப்பை பெற்றார். இன்று விடுதலைபுலிகளின் நம்பகமானவன் எனக்கூறிக்கொள்ளும் சீமான் அம்மாவின் செல்லப்பிள்ளை. அப்படியிருக்க புலிகள் எப்படி அவரை கொல்வார்கள். அதைவிடுவோம், இத்தனை பாதுகாப்பில் தடல் புடலாக வந்தவரைப்பற்றி பத்திரிக்கைகள் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் இருந்த தனது உறவினரை அரசின் சைரன் காரில் சென்று பார்த்தார் அதிகார மீறல் என குதித்த ஏடுகள், மீடியாக்கள் ஜெவின் இந்த பயணம் பற்றி வாய்திறக்கவில்லை.
 
ஒரு நடுநிலை நாளிதழ் என பீற்றிக்கொள்ளும் ஒரு பத்திரிக்கை தனது செய்தியில், நீதிமன்ற அறை 20க்கு 20 அளவு. அங்கு மின்விசிறி மட்டுமேயிருந்தது. குளிர்சாதன வசதியில்லாததால் அனைவரும் கஸ்டப்பட்டனர் என எழுதியிருந்தது. ஏதோ தமிழகத்தில் நீதிமன்றங்கள் எல்லாம் ஏசி வசதி செய்யப்பட்டு கார்ப்பரேட் அலுவலகம் போல் செயல்படுவதைப்போலவும் பெங்களுர்ரூ நீதிமன்றம் வேண்டும்மென்றே ஏசி வசதி செய்யவில்லை என்பதை போல செய்தி வெளியிட்டது.
 
விசாரணைக்கு அழைத்த ஜெ வை அழைத்த நீதிபதி, ஜெவுக்கு நாற்காலி தந்து உட்கார வைத்தார். சசிகலா, இளவரசி, பாஸ்கரன் ஆகியோரை கூண்டில் உட்கார வைத்து கேள்விகளை ஆரம்பித்தார். முதல் நாள் 380 கேள்விகள், தொடர்ந்து இரண்டாவது நாளும் கேள்விகள் என திணற திணற கேள்விகளை கேட்ட நீதிபதி ஜெ தந்த பதிலை பதிவு செய்தார். மீண்டும் வரும் 8ந்தேதி ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டு அனுப்பிவைத்தார்.

இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்கமறுக்கின்றன பல தேசிய, பிராந்திய மீடியாக்களுக்கும், ஏடுகளுக்கும். காரணம், பயத்தால் நடுங்குவது பாதியென்றால், மீதி சாதி பாசம். அதனாலயே வாய் திறக்க மறுக்கின்றன. ஊழலின் உருவமாக உலாவந்து தேச மக்களையும், நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் இவர் சிறந்த நிர்வாகியாம்?, இவர் மற்றவர்களை பார்த்து ஊழல்வாதிகள் என அறிக்கை விடுகிறார்.
 
மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினால் அது தன் மேல் தான் விழும் என்பதை மறந்துவிடுகிறார்கள் அரசியல்வாதிகள். ஆதனால் தான் ஒருவர் மாற்றி ஒருவர் ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
 
யார் தான் இவர்களை திருத்துவதோ?.