செவ்வாய், அக்டோபர் 25, 2011

துரத்தும் நீதிமன்றம்.


 
1991-1996ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ, நான் மாதம் ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார். 96ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஜெ மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டது. வருவமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்கள். அதன்பின் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் ஜெ. சொத்து குவிப்பு வழக்கை ஊத்தி மூட என்னன்னவோ செய்தார். இதனால் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றம் சென்று தமிழகத்தில் இவ்வழக்கு சரியாக நடக்காது அதனால் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டார்.
 
இதனால் கர்நாடகா மாநிலம் பெங்களுரூக்கு வழக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கு 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கு ஆவணங்கள் மொழி பெயர்க்க வேண்டும், ஆங்கிலம் தவறாக உள்ளது, எழுத்துபிழை உள்ளது, ஆங்கில மொழி பெயர்ப்பு சரியில்லை தமிழில் வேண்டும், தலைவலிக்குது, கால்வலி, தேர்தல் பணி, பாதுகாப்புயில்லை என வித்தியாசம் வித்தியாசமாக காரணங்கள் சொல்லி இந்த 13 ஆண்டுகளில் 110 வாய்தாக்களை வாங்கினார்.
 
தற்போது வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. ஜெ வந்து ஆஜராகி வாக்குமூலம் தந்துவிட்டால் வழக்கு இறுதி கட்டதுக்கு வந்துவிடும். ஆனால் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாய்தா வாங்குவேனே தவிர நீதிமன்றத்தில் ஆஜராகவே மாட்டேன் என்ற முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்திற்க்கு இந்த பிரச்சனை போனது, பொதுவாழ்வில் உள்ள நீங்கள் ஓடிப்போய் ஒளியக்கூடாது, பாதுகாப்பு சரியாக செய்யப்பட்டுள்ளது இனிமேல் போகாமல் இழுத்தடிப்பது நல்லதல்ல என கண்டித்தது உச்சநீதி மன்றம்.
 
இதனால், கடந்த அக்டோபர் 20, 21ந்தேதிகளில் பெங்களுரூ பார்ப்பர அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுயிருந்த தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜினா முன் ஆஜரானார். வழக்குக்காக ஜெ சென்றது தனிப்பட்ட விவகாரம். இதில் தேசிய கொடி போட்ட காரில். அதுவும் ஏதோ கட்சி மாநாட்டுக்கு போவது போல் விமான நிலையத்தில் இருந்து 36 கார்களில் ஊர்வலமாக நீதிமன்றத்துக்கு வந்தார். இவருக்கு 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
 
இவ்வளவு பெரிய பாதுகாப்பு எதற்க்கு?.
 
என்னை கொல்ல விடுதலைப்புலிகள் சதி செய்துள்ளார்கள் எனக்கூறியே உயர் பாதுகாப்பை பெற்றார். இன்று விடுதலைபுலிகளின் நம்பகமானவன் எனக்கூறிக்கொள்ளும் சீமான் அம்மாவின் செல்லப்பிள்ளை. அப்படியிருக்க புலிகள் எப்படி அவரை கொல்வார்கள். அதைவிடுவோம், இத்தனை பாதுகாப்பில் தடல் புடலாக வந்தவரைப்பற்றி பத்திரிக்கைகள் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் இருந்த தனது உறவினரை அரசின் சைரன் காரில் சென்று பார்த்தார் அதிகார மீறல் என குதித்த ஏடுகள், மீடியாக்கள் ஜெவின் இந்த பயணம் பற்றி வாய்திறக்கவில்லை.
 
ஒரு நடுநிலை நாளிதழ் என பீற்றிக்கொள்ளும் ஒரு பத்திரிக்கை தனது செய்தியில், நீதிமன்ற அறை 20க்கு 20 அளவு. அங்கு மின்விசிறி மட்டுமேயிருந்தது. குளிர்சாதன வசதியில்லாததால் அனைவரும் கஸ்டப்பட்டனர் என எழுதியிருந்தது. ஏதோ தமிழகத்தில் நீதிமன்றங்கள் எல்லாம் ஏசி வசதி செய்யப்பட்டு கார்ப்பரேட் அலுவலகம் போல் செயல்படுவதைப்போலவும் பெங்களுர்ரூ நீதிமன்றம் வேண்டும்மென்றே ஏசி வசதி செய்யவில்லை என்பதை போல செய்தி வெளியிட்டது.
 
விசாரணைக்கு அழைத்த ஜெ வை அழைத்த நீதிபதி, ஜெவுக்கு நாற்காலி தந்து உட்கார வைத்தார். சசிகலா, இளவரசி, பாஸ்கரன் ஆகியோரை கூண்டில் உட்கார வைத்து கேள்விகளை ஆரம்பித்தார். முதல் நாள் 380 கேள்விகள், தொடர்ந்து இரண்டாவது நாளும் கேள்விகள் என திணற திணற கேள்விகளை கேட்ட நீதிபதி ஜெ தந்த பதிலை பதிவு செய்தார். மீண்டும் வரும் 8ந்தேதி ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டு அனுப்பிவைத்தார்.

இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்கமறுக்கின்றன பல தேசிய, பிராந்திய மீடியாக்களுக்கும், ஏடுகளுக்கும். காரணம், பயத்தால் நடுங்குவது பாதியென்றால், மீதி சாதி பாசம். அதனாலயே வாய் திறக்க மறுக்கின்றன. ஊழலின் உருவமாக உலாவந்து தேச மக்களையும், நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் இவர் சிறந்த நிர்வாகியாம்?, இவர் மற்றவர்களை பார்த்து ஊழல்வாதிகள் என அறிக்கை விடுகிறார்.
 
மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினால் அது தன் மேல் தான் விழும் என்பதை மறந்துவிடுகிறார்கள் அரசியல்வாதிகள். ஆதனால் தான் ஒருவர் மாற்றி ஒருவர் ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
 
யார் தான் இவர்களை திருத்துவதோ?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக