வியாழன், ஜூலை 21, 2016

கபாலி மட்டும்மல்ல எல்லாம்மே வியாபாரத்துக்கு........



அதிகாரபலம், பண பலம், சினிமா பிரபலங்களுக்கு ஒரு நீதி, சாமான்யனுக்கு ஒரு நீதி என இந்தியாவில் இருவேறு நீதிகள் தான் இங்கு கிடைக்கும் என சொல்லாமல் சொல்லி தன் கொள்கையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது நீதித்துறை. நீதித்துறையை கேள்வி கேட்டால் சட்டம் பாயும் என்கிறார்கள். இருந்தாலும் மனதில் உள்ள குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக கொண்டாடப்படும் ரஜினி யின் கபாலி திரைப்படம் ஜீலை 22ந்தேதி வெளியாகவுள்ளது. 100 கோடிக்கு மேல் வருமானம் பார்த்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இறங்கி அடிக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், நடிகர் ரஜினியும். 

ஒரு மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி ஒரு பானையை உருவாக்கும் போது அதை லாபத்தோடு விற்க முயல்வான். அது இயல்பு. அதே மண்பாண்ட வியாபாரி அதேபோன்று ஒரு பானையை உருவாக்கும் போதே, இந்த பானையில் தண்ணீர் ஊற்றாமலே தண்ணீர் அலம்பும் சத்தம் கேட்கும், இந்த காலி பானையில் உங்கள் முகத்தை பார்க்க முடியும் என மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளி நம்பும்படி சொன்னால் அந்த பானை மீது ஒரு ஈர்ப்பு உருவாகிவிடும். 

கேட்பவன் தனது பகுத்தறிவு கொண்டு அப்படி தெரியும்மா ?, சத்தம் வருமா என சிந்தித்தால் அதன் மீது ஈர்ப்பு வராது. சிந்திக்க விடாமல் பானையில் தண்ணீர் ஊற்றினால் பெட்ரோல் கிடைக்கும், தண்ணீர் தங்கமாக மாறும் என தினம் தினம் புரூடா விட்டு சிந்திக்க விடாமல் செய்வது ஒரு வித தந்திரம். இதன் மூலம் பானை மீதான எதிர்பார்ப்பு எகிரும். அந்த பானையை வாங்க நான், நீ என போட்டிப்போடுவார்கள். அதைத்தான் கபாலி டீம் தினம் தினம் செய்தது, செய்கிறது. 

இணையத்தில் சிந்தனையாளர்கள் எழுதியாதுபோல கபாலி வெளியாகும் நாளன்று பொதுவிடுமுறை விட வேண்டும் என கபாலி தயாரிப்பாளர் தாணு கோரிக்கை வைக்காதது தான் குறை. ஒருவேளை அந்த கோரிக்கையை வைத்திருந்தால் ஜெ அரசாங்கம் பரிசீலித்திருக்கும். ஏன் எனில் படத்தை அவருக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் ஜாஸ் சினிமா தான் தமிழகத்தில் வெளியிடுகிறது. ஒருவேளை அரசாங்கம் பொதுவிடுமுறை விடவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தால் நிச்சயம் பொதுவிடுமுறையென்ன தடையில்லா மின்சாரமும் திரையரங்களுக்கு கிடைத்திருக்கும் போல.

இதை சொல்லக்காரணம். கபாலி திரைப்படம் இணையத்தில் திருட்டு தனமாக வெளியிட்டுவிடுவார்கள் அதனால் சினிமா திரைப்படங்கள் சம்மந்தமான இணையதளங்களை முடக்க வேண்டும்மென 167 இணைய முகவரிகள் அடங்கிய பட்டியலை சென்னை உயர்நீதிமன்றத்திடம் கடந்த வாரம் தந்து முறையிட, அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு முடக்க உத்தரவிட்டுள்ளது. அதே நீதிமன்றத்தில், அதே நீதிபதியிடம், கபாலி திரைப்படத்துக்காக அதிக கட்டணம் திரையரங்குகள் வசூலிக்கின்றன என தனிநபர் ஒருவர் ஆதாரத்தோடு பொது நலவழக்கு தாக்கல் செய்ய, ரசிகர் விருப்பப்பட்டு அதிக விலை தருகிறார் அதனால் அதை தடுக்க முடியாது என வழக்கை முடித்துவைத்துள்ளார். 

இப்படி ஒரு திரைப்படத்துக்காக வித்தியாசமான தீர்ப்பை தந்தது பெரும் அதிர்ச்சியாகவுள்ளது. அதுமட்டும்மல்ல, கபாலி சம்மந்தமான வழக்கை விசாரிக்க எத்தனை வேகம். ஜெட் வேகத்தில் தீர்ப்பும் வந்துள்ளது. ஒரு சமானியன் வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தால் அதன் வழக்கறிஞர்களிடம் எத்தனை கேள்வி, எத்தனை ஆவணம் கேட்டு, அதை பதிவு செய்ய எவ்வளவு தாமதம் செய்கிறார்கள். இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யாமல் வரிசையில் உள்ளது என்கிறார்கள் வழக்கறிஞர் நண்பர்கள். அப்படியிருக்க இந்த வழக்கு எப்படி முன்னிலைக்கு வந்தது என தெரியவில்லை.

நீதிமன்றம் என்பது சமான்யனின் நம்பிக்கையை உடைப்பதாக இருக்ககூடாது. அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஆனால், இங்கு நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கை வரும் அளவுக்கே சமீபத்திய நடவடிக்கைகள் உள்ளன.

கோடி கோடியாய் பணம் போட்ட தயாரிப்பாளர் தன் பொருளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அவரது பொறுப்பு. ரஜினி படம் என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்பு தரவேண்டும், பொதுமக்கள் ஒத்தைழைப்பு வழங்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம். இந்த படத்தால் பொதுமக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா அல்லது அரசாங்கத்துக்கு தான் நன்மையுள்ளதா ?.


அரசுக்கு வரி கட்டுகிறேன் என்பார்கள். இன்றும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களிலேயே டிக்கட் கட்டணம் 5 ரூபாய் என பிரிண்ட் செய்து தருகிறார்கள். பார்க்கிங் கட்டணம்மே சென்னை போன்ற நகரங்களில் 50 ரூபாய். அப்படியிருக்க டிக்கட் விலை 5 ரூபாய் என்றால் பைத்தியக்காரன் கூட சிரிப்பான். டிக்கட் கட்டணம் அதிகம் என்ற வழக்கு வந்தபோது, பார்க்கிங் கட்டணம், திரைப்பட டிக்கட் கட்டணம், திரையரங்கில் உணவு பொருட்கள் மீதான விலை போன்றவை அரசு நிர்ணயித்த படி வாங்க வேண்டும் என உத்தரவிட்டுயிருக்க வேண்டும். அப்படி எந்த உத்தரவையும் இந்த நீதிமன்றம் இடவில்லை, ஏன் சின்னதாக ஒரு கேள்விக்கூட எழுப்பவில்லை. 

திரையரங்குகளில் டிக்கட் விலை அதிகமாக விற்பதும், பார்க்கிங் கொள்ளை, திண்பண்ட கடைகளில் கொள்ளையடிப்பது நீதிபதிகளுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். 

கபாலி தயாரிப்பாளர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த நீதிமன்றம், பொதுமக்களில் ஒருவராக இருந்து வழக்கு தொடுத்தவரின் கோரிக்கையில் அதுவும் அடங்கியிருந்தது. அதனால் அந்த கோரிக்கைகளில் கொஞ்சமாவுது பார்த்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம். ஒருவேளை திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற புனித கருத்து மட்டும் தான் சட்டப்புத்தகத்தில் இருந்ததா என்ன ?.

கபாலி என்கிற திரைப்படம் மட்டும்மல்ல இங்கு எல்லாம்மே வியாபாரமாக்கப்பட்டு விட்டது நீதியும் அதற்கு விதிவிலக்கல்ல போல………..

புதன், ஜூன் 29, 2016

கொலைநகரான தலைநகரம். – திசை திருப்பிய ரிட்டயர்டு நடிகர்.




தமிழகம் கொலை கலமாக மாறியுள்ளது. அதுவும் தலைநகரான சென்னையே தினம் ஒரு கொலை என சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் முதல்வராகவுள்ள ஜெ இருக்கிறார். எல்லாத்துக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்மா என கேட்கலாம். தேவையில்லை தான். இந்த விஷயத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஏன் எனில் அவர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் முதல்வரே வைத்துள்ளார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அவர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எங்கேயோ நடந்த தனிமனித கொலைக்கு முதல்வர் முக்கியத்துவம் தர வேண்டும்மா என கேட்கலாம் ?.
எங்கோ ஒருயிடத்தில் உட்கார்ந்து யாரோ ஒருவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு போவதை காவல்துறையால் தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். கொலை நடந்தபின் கொலை செய்தவர்களை பிடிக்க வேண்டும்மல்லவா. அதை செய்யவில்லையே அதனால் தான் கேள்வி கேட்கப்படுகிறது.
இந்த கொலை மட்டும்மல்ல 90 சதவித கொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை. அதிலும் 99 சதவித கொலைகள் கூலிப்படைகள் செய்தவை. அப்படியாயின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தானே அர்த்தம். இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். இதைத்தான் ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் கேட்கிறார்கள். இதற்கு எந்த எதிர்வினையும் ஆள்வோர் தரப்பில் இருந்து இந்த நிமிடம் வரை வரவில்லை.
ஆனால், பிலால்மாலிக் என்ற இஸ்லாமியன் செய்தான், இதை எந்த திராவிட பொறுக்கிகளும் கேட்கவில்லை, இந்த பெண் தலித் என்றால் குதித்துயிருப்பார்கள் என யாரோ எழுதி முகநூலில் பதவிட்டதை இந்த கருத்து எனக்கு உகந்தது அதனால் பதிவிடுகிறேன் என பழைய நகைச்சுவை நாடக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அதை மறுபதிவிட அப்படியே விவகாரம் திசை மாறிவிட்டது. விவகாரம் இப்போது ஒய்.ஜி.மகேந்திரனோடு சுருங்கிவிட்டது.
தமிழகத்தில் என் உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?, உங்கள் நிர்வாக லட்சணம் இதுதானா?, இதற்காகவா பதிவிக்கு வந்தீர்கள், பாதுகாப்பற்ற நாட்டில் வாழ்கிறோம்மோ, எங்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என ஆள்வோரை கேள்வி கேட்டு பதிலோ, நடவடிக்கையோ எடுக்க வைக்க வேண்டிய நேரத்தில் ரிட்டயர்டு கழுதை பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் இணைய போராளிகள்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் நிர்வாக புலி என்கிற பிம்பத்தையும், தைரியலட்சுமி என்கிற ஜிகினா பேப்பரை கிழிக்காமல் பார்த்துக்கொள்ள பெரும் படையே இங்கு வேலை செய்கிறது. ஜெயலலிதா மீதோ, அவர் தரப்பு மீதோ ஏதாவது குற்றம் குறையென பேச தொடங்கினால் அதை அழகாக திசை திருப்புகிறார்கள். 

கடந்த காலங்களில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை தரப்பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு விதிமுறைகளை மீறி உச்சநீதிமன்றம் பிணை தந்தபோது, பெரும் சர்ச்சை உருவானபோது அதை திசை மாற்றியது ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற 20 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு. அப்படியே விவகாரம் திசை மாறியது.
ஜெவின் தோழி சசிகலா குடும்பம், 1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜாஸ் சினிமாஸ் தமிழக திரையரங்கை வாங்கியுள்ளது என பரபரப்பானபோது, சிம்பு வீன் பீப் சாங்க் விவகாரத்தை திசை திருப்பியது.
தேர்தல் நேரத்தில் 750 கோடி கண்டெய்னரில் சிக்கியபோது, அது ஜெயலலிதாவின் பணம் என தமிழகம் முதல் டெல்லி வரை பரபரத்தபோது, இரண்டு தொகுதிகளின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு விவகாரம் திசை திருப்பப்பட்டது. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, கச்சத்தீவு பிரச்சனை கிளப்பி குழாயடி சண்டையாக்கப்பட்டு மறைக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்டதை போல அதிமுக அரசு மீது குறிப்பாக முதல்வராக ஜெ வாய் திறந்து பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற இக்கட்டான நிலை வரும்போதுயெல்லாம் திசை திருப்புவது என்பது வாடிக்கையே.
இப்படி தலைநகரம்மோ கொலை நகரமாய் மாறிவிட்டது என அனைத்து தரப்பினரும் அலற அதற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியை முதல்வராகவுள்ள ஜெயலலிதாவுக்கு உருவாக அதிலிருந்து அனைவரையும் ஒய்.ஜி.மகேந்திரன் திசை திருப்பியிருக்கிறார்.
இப்படி ஒரு விவகாரத்தை திசை திருப்ப மற்றொரு ஒன்னுக்கும் ஒதவாத சப்பை மேட்டரை பூதாகரமாக்குவது ஆள்வோர்க்கும், ஆள்வோர் காலை நக்கி பிழைப்போர்க்கு கை வந்த கலை. அது சுபமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்............

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

ஜெவின் ஆணவபுத்தி............


ஜெ வின் பிரச்சார மேடை அமைப்பை பிரபலமான கருத்து கந்தசாமிகள் ( அரசியல்விமர்சகர்கள், சமூகநீதி பேசுபவர்கள், மனித உரிமை போராளிகள், நடுநிலை தவறாத தமிழக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் ) யாராவது விமர்சிப்பார்கள், கருத்து சொல்வார்கள் என நானும் பார்த்து பார்த்து ஏங்கியதே மிச்சம். காத்திருந்தது போதும் நாமளாவது மனதில் உள்ளதை சொல்லிவிடுவோம் என்பதாலே இந்த கட்டுரை.......

ஒவ்வொரு முறையும் தேர்தல் களம் சில கட்சிகளுக்கு வித்தியாசப்படுத்தி காட்டிக்கொண்டே வருகிறது. ஒருக்காலத்தில் ஆட்சிக்கட்டில் அமர்ந்திருக்கும் போதே ஏழை மக்களை பார்த்தால் ஓடிப்போய் கட்டிப்பிடித்து போட்டோ பிடித்து பப்ளிசிட்டி தேடிய அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்தார் நடிகர் எம்.ஜி.ஆர். அதன்பின் அந்த கட்சியை வழிநடத்தும் ஜெ தான் இப்போது மேடையில் தன் கட்சி நிர்வாகிகளையே அருகில் உட்கார வைக்காமல் ஓரு ஸ்டெப் கீழே இறக்கி உட்கார வைத்துள்ளார்.

இளம் வயதில் சாதி தெரியாது, 40 வயதுக்கு பின் சாதி பாசம் வரும், 50 வயதுக்கு பின் சாதிவெறியாக அது மாறிவிடும் என கிராமத்தில் சொல்வார்கள். அது நிகழ்காலத்தில் நாம் கண்டு வரும் நிஜம். ( இப்போது 15 வயதிலேயே சாதி வெறியை ஊட்டுகிறார்கள் ). ஜெ வுக்கு சாதி வெறி உச்சத்தில் உள்ளது. மக்கள் முன் அது இல்லாதது போல் காட்டுகிறார்.

கடந்த காலங்களில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, கட்சியினருடன் சரிசமமாக தான் மேடையில் உட்கார்ந்திருந்தார். ஏன் மிகவும் கொடுங்கோல் ஆட்சியை நடத்திய 91-96 காலக்கட்டத்தில் கூட தனது அடிமைக்கூட்டத்தை மேடையில் உட்கார வைத்து படம் காட்டினார். அதன்பிறகான காலக்கட்டத்தில் தன் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை மேடையில் கொஞ்சம் தள்ளி உட்காரவைத்தார், பின்பு அந்த இடைவெளி அதிகரித்து அதிகரித்து இப்போது 2016 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒருபடி இறக்கி கீழே உட்கார வைத்துள்ளார்.

இது ஆணவபுத்தி மட்டும்மல்ல, குறிப்பிட்ட சாதிக்கே உள்ள ஆணவம். இதைத்தான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சமாக ஜெயலலிதா காட்டியுள்ளார். கடந்த காலத்திலும் மக்கள் உட்பட அனைவரும் என் காலுக்கு கீழே என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிரூபித்து வருகிறார் ஜெ.

கீழ்சாதிக்காரன் என ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு வரவைத்து நீயும், நானும் சமம் தான் என சொல்ல வைத்த பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் இப்படியொரு அசிங்கம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் சுயமரியாதை இழந்து வாடலாம் என்பதை அரசியல்வாதிகள் அதிலும் அதிமுகவினர் மக்களுக்கு காட்டுகிறார்கள். 

ஜெவின் அடிமைகள் தான் அப்படி உள்ளார்கள் என்றால், அவர்கள் தரும் 200 ரூபாய் பணத்துக்காகவும், ஒரு குவாட்டர்க்காக 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயிலில் மக்களும் உட்காருகிறார்கள். ஒத்த தலைவியை சுற்றி 9 ஏசிகள் ஓட, இந்த நாட்டின் எஜமானர்கள் எனச்சொல்லப்படும் மக்கள் வெளியில் காய்கிறார்கள். இந்த அநியாயம் வேறு எந்த மாநிலத்திலும் நிச்சயம் நடந்ததில்லை, இனி நடக்கவும் நடக்காது.

ஆனால் இதற்கும் தமிழ் சமூகத்தில் வக்காலத்து வாங்கவும் பலர் நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு உள்ளார்கள் பல அடிமைகள். அந்த பொம்பளை அப்படித்தான்பா என சகஜமாக புறம்தள்ளிவிட்டு அவரை புனிதராக்க முயல்கிறார்கள். இதையே ஒரு கருணாநிதியோ, ராமதாஸ்சோ செய்திருந்தால் இந்த அடிமை புத்தியுள்ளவர்கள் சும்மா விட்டுயிருப்பார்களா ?.