புதன், செப்டம்பர் 21, 2016

தவறான பாதையில் திமுக.......??????






உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்கவே திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தினோம் என தமிழ்மாநில காங்கிரஸ், கொங்கு ஈஸ்வரப்பன் போன்றோர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்து கருத்து சொல்லும் போது, திமுக மீண்டும் தவறு இழைக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.  

தமிழகத்தில் வாக்குவங்கியுள்ள கட்சிகள் என்றால் அது திமுகவும், அதிமுகவும் தான். ஒட்டுமொத்தமாக 80 சதவித வாக்குகளை இந்த இரண்டு கட்சிகளும்மே வைத்துள்ளன. காங்கிரஸ்க்கு தென்தமிழகத்தில் ஓரளவு செல்வாக்குள்ளது, பாமக, தேமுதிகவுக்கு வடதமிழகத்தில் செல்வாக்குள்ளது. மத்தப்படி எந்த கட்சிக்கும் தமிழகத்தில் நான் அறிந்தவரை செல்வாக்கு கிடையாது. இந்த 20 சதவித வாக்குகளை தான் காங்கிரஸ், பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் பிரித்து வைத்துக்கொண்டு குதிக்கின்றன. 

இவர்களால் தனித்து நின்று ஒரு பேரூராட்சி தலைவர் பதவியைக்கூட பிடிக்க முடியாது என்பதே எதார்த்தம். இதை தெரிந்துக்கொண்டு தான் ஜெ, இந்த கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் ஒதுக்கி டேமேஜ் செய்வார். ஆனால் திமுகவிலோ, வாரி வழங்கிவிடுகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்குவதை முதலில் திமுக நிறுத்த வேண்டும். கட்சிகளின் பலம் அறிந்து சீட் வழங்க வேண்டும். ஒரு சீட்க்கு தகுதியில்லாத கட்சிகளுக்கு 10 சீட் தருவது, 10 சீட்க்கு மட்டும்மே தகுதியுள்ள கட்சிக்கு 50 சீட் வாரி வழங்குவது மக்களிடையே கேலியாக பார்க்கப்படுவதோடு, திமுக பலவீனமான கட்சி என்கிற முத்திரையை மக்கள் குத்துகிறார்கள். 

மக்களின் எண்ணம்மே அடிமட்ட கட்சியினரிடம் எதிரொலிக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்கிற மாயையை 2016 சட்டமன்ற தேர்தலில் உருவாக்காமல் இருந்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. கட்சிக்காரனே சோர்ந்துவிட்டான். ஆனால் அவர்களின் உண்மையான பலம் என்ன என்பது பின்பு வெட்டவெளிச்சமானது.  

திமுகவிடம் தங்களது பலத்தை மீறி சீட் பெறும் கட்சிகள் அதை எதிர்த்து நிற்கும் கட்சிகளிடம் பறிக்கொடுக்கிறார்கள். 

இதுதான் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது. 2016ல் திமுக அதிக இடங்களில் நின்றிருந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்திருக்கும், ஆனால் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது.  மிரட்டி சீட் வாங்கும் கட்சிகளை திமுகவும் ஒதுக்கிவைக்க வேண்டும். தனித்தே திமுக நிற்கலாம்.  அனால் அந்த ரிஸ்க்கை எடுக்க ஏனோ தயங்கிக்கொண்டே இருக்கிறது அன்று முதல் இன்று வரை. 

என்னால் தனித்து தேர்தலை சந்திக்க முடியும் என திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக கூட நிரூபித்துவிட்டது. ஆனால் இன்னமும் திமுகவுக்கு அந்த தைரியம் ஏன் வரவில்லை என்பது ஆச்சர்யமாகவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி என்கிற கூடாரத்தை உருவாக்குவதால் திமுக தன் பலத்தை இழந்தே வந்துயிருக்கிறது. நேரடியாக நான் மக்களை சந்தித்த 7 பொது தேர்தல்களில் பெரும்பான்மையானவரின் கருத்து ஜெ போல தைரியம் வருமா என்பது தான். அந்த பொம்பளை தனிச்சி நிக்குதுய்யா, இவுங்க ஒன்னும்மில்லாத கட்சிக்குயெல்லாம் சீட்ட வாரி வழங்கிட்டு நிக்கறாங்க, அதுக்கு காரணம், பயம் தானே என்றவர்கள் அநேகம் பேர்.

கடந்த தேர்தலில் மூன்றாவது அணி என உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விசிக, தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் லட்டர் பேடு அமைப்புகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. தனித்து நின்ற பாமகவை விட குறைவாகவே இந்த மூன்றாவது அணி வாக்கு வாங்கியது. அப்படியிருக்க செல்லாத இந்த கட்சிகளில் சிலவற்றை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் தர வேண்டியிருக்கும். அதோடு, வரப்போகும் நாடாளமன்ற தேர்தலில் சீட் பெறவே இப்போதே உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி சேருகிறார்கள். ஒன்னும்மில்லாத கட்சிகளை திமுக தன்னோடு இணைத்துக்கொண்டால் திமுகவின் அடிமட்ட தொண்டன் தான் விரக்தியடைவான் என்பதை தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அடுத்த நாடாளமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளும், சட்டமன்ற தேர்தலுக்கு 5 ஆண்டுகளும் முழுமையாகவுள்ளன. இப்போதிலிருந்தே திமுக வலிமை குன்றிய பகுதிகளில் கட்சியை வளர்க்க திட்டமிட வேண்டும். தனது சொந்த நலனுக்காக அதாவது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள, குற்றவழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, சம்பாதிக்க கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை முதலில் களையெடுக்க வேண்டும். கட்சி வெற்றிக்காக பாடுபடுபவர்கள் தான் கட்சிக்கு முக்கியம். பணம் இருப்பவனுக்கு தான் பதவி என்கிற கொள்கையை விட்டுவிட்டு தொண்டர் பலம் உள்ளவனுக்கும், கட்சிக்காக களத்தில் வேலை செய்பவனுக்கும் பதவி வழங்க வேண்டும். 

இளைஞரணி மட்டும்மல்ல கட்சி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற அணிகளை ஊக்குவிக்க வேண்டும். புதுப்புது இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கும் கட்சி பதவி வழங்க வேண்டும், தேர்தல் களத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களை நுழைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு அவர்களை வரவைக்க வேண்டும். அதோடு, கட்சி வரலாறு தெரிந்தவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும், இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு பதவி தர வேண்டும். இணையத்தில் பணியாற்றினால் கட்சி வெற்றி பெரும் என கீபோர்டு வீரர்களை தட்டி வைத்து நீ மட்டும்மல்ல கட்சி நாட்டில் படிக்காத மக்களும் உள்ளார்கள்  என்பதை நிரூபிக்க களத்திலும் பணியாற்ற வைக்க வேண்டும். இதை செய்தாலே அதிமுக போல் திமுகவாலும் தனித்து தேர்தலை சந்திக்க முடியும். 

அதைவிட்டுவிட்டு கூட்டணி சேர்வது என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு என்பதை திமுக தலைமை மறக்ககூடாது.

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

ராம்குமார் நல்லவனா? கெட்டவனா ?.




சென்னையில் படுகொலை செய்யப்பட்ட விப்ரோ நிறுவன பணியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது, மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக அலறியது. சில நாள் இடைவெளிக்கு பின் ஒரு வீடியோ பதிவு என மெல்ல மெல்ல தகவல்களை பரப்பிய காவல்துறை பின்னர் ஒருநாள் இரவு கழுத்தறுப்பட்ட நிலையில் ராம்குமார் என்கிற இளைஞனை காட்டி இவன் தான் கொலைக்காரன். ஒரு தலைக்காதலால் கொலை செய்தான் என்றது. மீடியாக்களும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்தியது, குற்றவாளி எனச்சொல்லி தீர்ப்பு எழுதியது. 

தமிழக மீடியாக்களுக்கு புலனாய்வு என்பது அத்துப்போய் பலகாலமாகிவிட்டது. காவல்துறை சொல்வதை எந்த காலத்திலும் அப்படியே நம்பக்கூடாது என்கிற பாடத்தை கூட படிக்காமல் வந்ததோடு மைக்கை தூக்கிக்கொண்டு காவல்துறை சொல்வதை தாங்கள் கண்டுபிடித்தது போல் ஒப்பிக்கிறார்கள்.

ராம்குமார் எதனால் கழுத்தை அறுத்துக்கொண்டான் என்கிற கேள்வியை எழுப்பவேயில்லை. அவன் தான் கொலைக்காரன் என்பதற்கான வலுவான காரணத்தை இதுவரை காவல்துறை தரப்பில் சொல்லவேயில்லை. அதுப்பற்றி எந்த மீடியாவும் கேள்வி எழுப்பவில்லை. அவசர அவசரமாக இந்த வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை இருந்தது, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வரான ஜெவும் அதற்கு உதவியாக இருந்தார்.
ராம்குமார் சிறைக்குள் போனதும் இப்போது மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துக்கொண்டான் என்கிறது சிறைத்துறை. இதை பாமரன் கூட நம்பவில்லை. இதற்கு நிச்சயமாக முறையான விசாரணை வேண்டும். கொலைகார அரசாங்கத்திடம் அதை கேட்பது முட்டாள்தனம்.

ராம்குமார் தவறு செய்திருந்தால், அதை நிறுபிக்க வேண்டியது காவல்துறை கடமை, தண்டனை தருவது நீதித்துறை கடமை. ஆனால் ராம்குமார்க்கு காவல்துறையே தண்டனை தந்து நீதிபரிபாலனை விவகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த தண்டனை வழியாக தெரிவது என்னவென்றால் ராம்குமார் இறந்துவிட்டான் இந்த வழக்கு முடிந்தது, இனி யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது என்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மக்களுக்கு விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. அதிகாரவர்க்கத்துக்கு இந்த கேள்விக்கான பதில்கள் தெரியும். அதை எந்த காலத்திலும் யாரும் பதில் சொல்லப்போவதில்லை. ஏன் எனில் பேய்கள் அரசாள்கின்றன.

புதன், ஆகஸ்ட் 24, 2016

ஒலிம்பிக் பதக்கம்- நாம் வெட்கப்பட வேண்டும்……



2016 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலபதக்கம் வாங்கிய சாக்ஷி மாலிக்குக்கும், இறகு பந்து விளையாட்டில் வெள்ளி பதக்கம் வாங்கிய சிந்துவுக்கும் வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவல்ல. பதக்கம் வாங்கினார்கள் என்றதும் கொண்டாடி தீர்க்கும் இந்தியர்களுக்கான பதிவு.
2016 ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள 120 கோடி இந்தியர்களின் சார்பில் மல்யுத்தம், இறகுபந்து ஒட்டப்பந்தயம், நீச்சல், ஜிம்னாஸ்டிக் போன்ற பல விளையாட்டுகளில் கலந்துக்கொள்ள 118 வீரர்கள் பிரேசில் சென்றனர். ஆகஸ்ட் 5ந்தேதி தொடங்கிய போட்டியில் இந்தியா பதக்கம் வாங்கியதா எனக்கேட்டால் கிரவுண்ட்க்கு போகும்போதே அவுட்டாகி வந்துவிடுகிறார்கள் நமது வீரர்கள்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். விளையாடாமலே தோல்வியை சந்திக்கும் நாடு எதுவென்றால் அது இந்தியா தான். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்குகிறது இந்தியா. அந்த தொகையில் இருந்து ஒரு சதவிதத்தை ஒதுக்கி முருகேசன் பாத்திரகடையில் பதக்கங்களை வாங்கியிருந்தால் கூட வீட்டுக்கு நாலு தங்க பதக்கங்களை தந்துயிருக்கலாம். அப்படி தந்துயிருந்தால் வெள்ளி பதக்கம் வாங்கியதையும், வெண்கலப்பதக்கம் வாங்கியதை நினைத்து நாடே கொண்டாடி கொண்டுயிருக்காது.

இரண்டு பதக்கம் வாங்கியதை நினைத்து ஆஹா, ஓஹோ என கொண்டாடி தீர்க்கும்  இந்தியர்கள், நம்மை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடான அமெரிக்கா 120க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது. நம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட சீனா கூட பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நம்மை விட குறைந்த மக்கள் தொகை நாடும் அதிக பதக்கம் வாங்குகிறது, நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் அதிகமாக பதக்கம் வாங்கிறது நாமே அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பதக்க பட்டியலில் 64 இடத்தில் இருந்த்தை நினைத்து நாம் முதலில் நாம் வெட்கப்பட வேண்டும்.

இது ஏதோ இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும்மல்ல ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கிய காலத்தில் இருந்தே இதுதான் நடக்கிறது. பதக்க பட்டியலில் இந்தியாவின் பெயரை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டியதாக இருக்கிறது.

எங்கே இதன் வீழ்ச்சி என்றால், வீரர்கள் தேர்விலேயே தோல்வியை சந்தித்து விடுகிறது. திறமையான வீரன் மேலே வரமுடிவதில்லை. காரணம், அவன் மேல்சாதிக்காரனாக இருப்பதில்லை. திறமையானவனாக இருந்தாலும் கீழ்சாதிக்காரன் கீழே கிடக்கவேண்டும், திறமையில்லாத மேல்சாதி தற்குறிகள் எல்லாம் மேலே வரவேண்டும் என நினைத்து வீரர்களை தேர்வு செய்வதால் தொடக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது தோல்வி.

அதுமட்டும்மல்ல, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் தரப்படுவதில்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவென கல்லூரியில் படிப்பவனிடம்மே கேட்டுப்பாருங்கள் கிரிக்கெட் என்பான். இது அவர்கள் மீது மட்டும் குற்றம்மல்ல. ஊடகம், சமூகமும், அரசு மீது தான் குற்றம்சாட்ட வேண்டும்.  

கிரிக்கெட் விளையாட்டுக்கு பக்கம் பக்கமாய் செய்தி போடும் செய்தித்தாள்கள், நேரடி ஒளிப்பரப்பு செய்யும் தொலைக்காட்சிகள் மற்ற விளையாட்டுக்களை கண்டுக்கொள்வதில்லை. மக்கள் பார்க்கும் விளையாட்டுக்கு மட்டும்மே நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் எனச்சொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு வரி சலுகை, பொருள் சலுகை, இடச்சலுகை என வாரி வழங்கும் இந்திய ஒன்றிய அரசுகளும் அவைகளை நோக்கும் சமூகமும் கிரிக்கெட் மீது பைத்தியமாய் திரிகிறார்கள். விளையாடும் போது தேசப்பற்று வேறு பொங்கி வழிகிறது. கிரிக்கெட்க்கு இந்த சமூகமும், அரசும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் முக்கியத்தவத்தில் 10 சதவிதம் மற்ற விளையாட்டுகளுக்கு தந்தால் போதும் கோப்பை வெல்லவில்லை என்றாலும் இத்தனை விளையாட்டுகள் உள்ளது என்பதாவுது மக்களுக்கு தெரியும்.

இத்தனை விளையாட்டில் கலந்துக்கொண்ட நமது வீரர்கள் ஒரு தங்க பதக்கம் கூட வாங்காமல் வருகிறார்களே, திறமையற்ற அவர்களை ஏன் அனுப்பினீர்கள் என மக்களாவுது அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்களா என்றால் கிடையாது. நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்கிறார்கள். பதக்க பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் இந்த நாடு அடுத்த ஆண்டு பதக்க பட்டியலில் பெயர் வரவில்லை என்றால் அந்த நாட்டு விளையாட்டு துறை அமைச்சரின் பதவி பறிக்கப்படும். அது சர்வாதிகார நாடாக இருந்தாலும், ஜனநாயாக நாடாக இருந்தாலும் இதுதான் நடக்கும். ஏன் எனில் அங்குயெல்லாம் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள். இங்கு மக்கள் மட்டும்மல்ல நாட்டின் நான்காவுது தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியாவும் நவ துவாரங்களை மூடிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பதக்கம் வாங்கியவர்களுக்கு அரசாங்கம் தரும் பண மதிப்பையும், பொருள் மதிப்பையும் பக்கம்பக்கம்மாய் எழுதியும், மணிக்கணக்கில் ஒளிப்பரப்பியும் சந்தோஷப்படுத்துகிறார்கள். விளையாட்டு வீர்ர்களை ஊக்குவிக்கவே இப்படி பணமும், பொருளும், பதவியும் தருகிறோம் என்பார்கள் அதிகார வர்க்கத்தினர். உண்மை அதுவல்ல, மக்களை திசை திருப்பவே அப்படி செய்கிறார்கள். தங்களை நோக்கி மக்கள் வெகுண்டெழுந்து கேள்வி கேட்க்க்கூடாது என்பதற்காகவே திசை திருப்புகிறார்கள். இதற்கு மீடியா உலகமும் துணை போகிறது.  

இதுப்பற்றி ஆட்டு மந்தையான மக்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. விளையாடும் வீரர்களை பார்த்து முஷ்டியை மடக்கி, பல்லை கடித்துக்கொண்டு ஜெயிக்கனும் ஜெய்ஹிந்த் என கத்திவிட்டு நகர்ந்துவிடுவதே வேலையாக இருக்கிறது.


ஒலிம்பிக்கில் சாதனை புரிய வேண்டும் என்கிற வேட்கை வீரர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இருக்கவேண்டும். இல்லையேல் நாளை ஒலிம்பிக்கில் விளையாட போவதே சாதனையாக பார்க்கப்படும்.