மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக ராசா இருந்தபோது செல்போன் சேவை தர முயன்ற பல புதிய நிறுவனங்களுக்கு அனுமதி தந்தார். இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றைகளை ஒதுக்கினார். அதனை ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா போன்ற பெரு நிறுவன முதலாளிகள் ஏற்றுக்கொள்ளாமல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி தரக்கூடாது என லாபி செய்து மிரட்டினர்.
நிறைய கம்பெனிகள் இருந்தால் போட்டி வியாபாரத்தில் பேசும் கட்டணம் குறையும் என முடிவு செய்து பெரு முதலாளிகளின் மிரட்டல்களை மீறி புதிய நிறுவனங்களுக்கு அனுமதிகளை தந்தார். அப்படி தந்ததன் மூலம் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் லாபமடைந்தனர். மறுப்பதற்கில்லை. தேன் எடுத்தவர்கள் புறங்கையை நக்காமல் இருக்க முடியாது. ஆனாலும் 2ஜீ ஏலம் மூலம் அரசாங்கத்துக்கு நிரந்தரமாக வருவாய் வருவதைப்போல ஏற்பாடு செய்தார் ராசா.
அதையெல்லாம் திட்டமிட்டு மறைத்து 20 ஆயிரம் கோடி நட்டம் என பேச ஆரம்பித்து கடைசியில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி நஷ்டம் என பி.ஜே.பி தலைவர்கள் மறைமுகமாக ‘எழுதி’ தந்ததை தணிக்கை துறை அறிவித்தது. இதன் பின்னணியில் காங்கிரஸ்சும் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இந்தியாவின் மாபெரும் ஊழல் என எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. திராவிடத்தை பிடிக்காத தேசிய மற்றும் உள்ளுர் மீடியாக்கள் பெருமுதலாளிகள், அதிகாரவர்க்கம் சொன்னதை நம்பி மாபெரும் ஊழல் என எம்பி எம்பி குதித்தன.
ராசா அமைச்சர் பதவியை துறந்தார். மீடியா, பத்திரிக்கைள் எழுதிய தீர்ப்பை காப்பி எடுத்து வைத்துக்கொண்டு விசாரணையை நடத்துகிறார்கள். உச்சநீதிமன்றமும் ‘சிலரை’ மட்டுமே குறிவைத்து 2ஜீ வழக்கை விசாரணை செய்தன - செய்கின்றன.
சிறைக்குள் இருந்தபோதும், சிறையில் இருந்து வெளியே வந்தபோதும். நான் மக்கள் நலனுக்காக செயல்படுத்தியதை விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு கவலையில்லை நான் குற்றமற்றவன் என்பதை நிருபிப்பேன் உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும் என்றார் ராசா.
உச்சநீதிமன்றம் ராசா தந்தா நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தது. புதிய ஏலம் விடச்சொன்னது. டேப்பாசிட் மற்றும் அலைவரிசை கட்டணத்தை உயர்த்த சொன்னது. விலையை உயர்த்தி ஏலம் விடப்பட்டது. ஏலமும் எடுத்துள்ளார்கள். எடுத்தவர்கள் பெரு நிறுவனங்களை சார்ந்தவர்கள். அப்படி எடுத்தவர்கள் தற்போது தங்களது விளையாட்டை தொடங்கியுள்ளார்கள்.
பாரதி மிட்டலின் ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் செல்போன் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஒரு நிமிட கட்டணம் 2 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சில நிறுவனங்கள் 1.40 உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இதுவே எங்களுக்கு நட்டம் தான் எனச்சொல்லி வருகிறது. அவர்கள் சொல்வதை பார்க்கும்போது கட்டணம் இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளதாக அறிய முடிகிறது.
இப்போது ஊழல், நஷ்டம் என கூப்பாடு போட்ட மீடியாக்கள் எல்லா ஓட்டைகளையும் முடிக்கொண்டனவே எதனால். அன்று ராசா சொன்னது இன்று நடக்கிறதே இதையேன் கேட்க யாரும்மில்லை. கேட்கமாட்டார்கள். காரணம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தொடங்கிவிட்டார்கள்.
செல்போன் வாடிக்கையாளர்களே கவலைப்படாதீர்கள். இனி டீசல் விலையை உயர்த்தினால் காய்கறி விலை உயர்வதைப்போல இனி செல்போன் கட்டணமும் உயரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக