வெள்ளி, ஜனவரி 04, 2013

அரசும் - மாஃபியா கும்பலும். வெல்லப்போவது யார்?

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிப்பரப்பை அரசே நடத்தும் என கடந்த திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு பின் கைவிடப்பட்டது. ஜெ ஆட்சிக்கு வந்தப்பின் முதலில் அரசு கேபிள் மூலம் கனெக்ஷன் வழங்க உத்தரவிட்டார். அரசாங்கம் மக்களுக்கு கனெக்ஷன் தர வேண்டும்மே. கவலையே படவில்லை எஸ்.சி.வி, ஹாத்வே போன்ற பெரும் நிறுவனங்கள் நடத்தி வந்த லிங்க் அலுவலகங்களை ஆக்ரமித்துக்கொண்டது அரசு. அதாவது கரையான் புத்துக்குள் பாம்பு புகுந்தது போல. சிறு சிறு ஆப்ரேட்டர்கள் அரசு வசம் மிரட்டி இழுக்கப்பட்டார்கள்.

ஓத்த ரூபாய் செலவில்லாமல் தங்கள் பணியை தொடங்கியது அரசாங்கம். அதிமுக பொது செயலாளரான முதல்வர் ஜெவின், ஜெயா குரூப் சேனல்கள் கேபிளில் முதல் இடத்தை பிரச்சனையில்லாமல் ஒளிப்பரப்ப தொடங்கினார்கள். அதற்கடுத்த இடங்களை எந்த சேனல் இடம் பெற வேண்டும் என எண்ணுகிறார்களோ அந்த சேனல் கேபிள் அதிகாரிகளுக்கு கோடிகளில் பணம் தர வேண்டும். சன் டிவி முதல் சாதாரண உள்ளுர் சேனல் வரை கோடிகளில் தொடங்கி லட்சங்கள் தந்து இடம் வாங்கி ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

இன்று எப்படி அதிகாரிகள் பணம் வாங்குகிறார்களோ அதேபோல் முன்பு சன் நிர்வாகம் அதாவது கலாநிதி, தயாநிதி நிர்வாகத்தில் இருந்த சுமங்கலி கேபிள் நெட் ஓர்க் பணம் வாங்கியது. கலாநிதி, தயாநிதி செய்த அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற சேர்மன் மற்றும் அதன் அதிகாரிகள் இன்று செய்து வருகிறார்கள்.

அதோடு, கொஞ்சம் உச்சமாக டெங்கு இல்லை என செய்தித்தாள்கள், சாட்டிலைட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டால் அரசாங்கம் லோக்கல் சேனல்கள் மூலம் வதந்தி என செய்தி பரப்புகிறார்கள், அதோடு எதிர்ப்பு செய்திகளை வெளியிடும் சேனல்களின் ஒளிப்பரப்பை நிறுத்தி விடுகின்றனர். அரசை பகைத்துக்கொண்டால் ஒழித்துவிடுவோம் என்பதை மறைமுகமாக எச்சரிக்கிறது அரசு. இதே பணியை முன்பு சன் குரூப்பின் சுமங்கலி செய்தது. தலைமை தான் மாறியுள்ளது. செய்கை ஒன்றே.

தனி நபர் செய்தால் அவர்களை கட்டுப்படுத்த வழிமுறை உண்டு. அரசாங்கம் செய்தால்?.

இதனை உணர்ந்து தான் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சுருக்கமாக ட்ராய்யிடம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அரசாங்கம் கேபிள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டதற்க்கு, மத்திய மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசு–தனியார் கூட்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் தொலைக்காட்சி நடத்தக்கூடாது. காரணம், அவர்கள் ஆளும்கட்சியாக இருக்கும் போது செய்தி இரட்டடிப்பு முதல் ஒளிப்பரப்பை தடுப்பது வரை அதிகாரம் செய்வார்கள் அதனால் அரசாங்கம் சேனல் நடத்த, கேபிள் நடத்த அனுமதி தரக்கூடாது என்பது ஆணையத்தின் விதி எனக்கூறிவிட்டது. உச்சநீதிமன்றமும் ஒரு உத்தரவில் அரசு இலாகாக்கள் மீடியாக்கள் நடத்தக்கூடாது. மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் போய்விடும் எனச்சொல்லியுள்ளது.

இதனை எதிர்க்கிறது ஜெ அரசு. ட்ராய் மற்றும் உச்சநீதி மன்ற பரிந்துரைகள் தமிழகத்தை மையமாக கொண்டு கூறப்பட்டதல்ல. இந்த உத்தரவு ஒட்டு மொத்த இந்தியாவுக்கும்மே பொருந்தும். இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சன் குரூப்பை எதிர்க்க அரச அதிகாரத்துக்கு துணை போகக்கூடாது போனால் இதை விட அதிகமாக நம் சுதந்திரத்தை இழக்க வேண்டும்.

அரசாங்கம் நடத்தவில்லை என்றால் மீண்டும் மீடியா மாஃபியாவாக வலம் வரும் சன் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என்பவர்களே நிச்சயம் அப்படித்தான் போகும். உங்கள் வாதத்தை இல்லை என மறுக்கவில்லை. அதை தடுக்க மாற்று வழிகளை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு அரசு முடிவை ஆதரிக்க கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக