வெள்ளி, ஜனவரி 04, 2013

உலகை ஆள்வாரா ஹிலாரி கிளிண்டன்?.



உலக பெண் அரசியல்வாதிகளில் எனக்கு ரொம்ப பிடித்தவர் ஹிலாரிகிளிண்டன்.

மக்களை கவரும் முகம் அவருடையது. அரசியல்வாதி, குடும்ப தலைவி இரண்டிலும் எனக்கு அவரை நிரம்ப பிடிக்கும். அமெரிக்காவின் ஜனாதிபதியாக கிளிண்டன் இருந்தபோது மோனிகாவுடன் செக்ஸ் வைத்துக்கொண்டார் என பரபரப்பு கிளம்பியபோது, ஆமாம் நான் என் மனைவிக்கு துரோகம் இழைத்துவிட்டேன் என பகிரங்கமாக அறிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டவர் கிளிண்டன். அவர் உலகத்துக்கு பயந்ததை விட அவரது மனைவிக்கு தந்த மரியாதையே அதிகம். அந்த குற்றச்சாட்டின் போது தன் கணவருக்கு பக்கபலமாக இருந்தவர் ஹிலாரி. கிளிண்டன் அரசியல் ஓய்வுக்கு பிறகு அரசியலில் அதிகமாக முகம் காட்டினாhர் ஹிலாரி. 

சிக்காக்கோ மாநிலத்தில் 1947ல் பிறந்தவர் ஹிலாரி. படிக்கும் காலத்திலேயே மாணவ தலைவியாக இருந்தவர். 1975ல் கிளிண்டனை மணந்துக்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில் மிக மிக பிரபலமான 100 வழக்கறிஞர்களில் ஹிலாரியும் ஒருவர். சமூக சேவைகளில் அதிகம் ஆர்வம் காட்டி சேவையாற்றி வந்தார்.

உலகின் பல நாடுகளில் கோலோச்சும் வால்மார்ட் நிறுவனத்தின் இயக்குநராக 1990ல் நியமிக்கப்படுகிறார் ஹிலாரி. அந்நிறுவனத்தின் 15 இயக்குநர்களில் ஹிலாரி மட்டுமே பெண் இயக்குநர். பல மாபெரும் நிறுவனங்களின் ஆலோசகர்.

2000த்தில் நியூயார்க் மாநிலத்தின் செனட் சபை உறுப்பினராக ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் சார்பில் முதன்முறையாக நியூயார்க் செனட் சபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரிக் லாஸியோவை சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதே ஹிலாரி 2006 தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எதிரியை தோற்கடித்தார்.

ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பளராக யார் நிற்பது என ஓபாமாவுக்கும் - ஹிலாரிக்கும் இடையே போட்டி நடந்தது. அதில் குறைந்த வித்தியாசத்தில் ஓபாமா முதல் இடத்துக்கு வந்தார். இரண்டாம் இடத்துக்கு வந்த ஹிலாரியை ஓபாமா விரும்பி அழைத்து வெளிவிவகாரத்துறை அமைச்சராக்கினார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மர், ஈராக் உட்பட உலகின் அத்தனை நாடுகளுக்கும் பயணம் மேற்க்கொண்டுள்ளார் ஹிலாரி. அமெரிக்காகாரன் தொட்டதெல்லாம் வெற்றி என்றால் ஹிலாரி போனயிடங்களில் எல்லாம் இரட்டை வெற்றியோடு தான் திரும்புவார். ஒரு வெற்றி நாட்டுக்காக மற்றொரு வெற்றி பெரும் முதலாளிகளுக்காக. ஓராண்டுக்கு முன் தமிழக முதல்வர் ஜெவையும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவையும் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னால் இருந்தது வால்மார்ட் நலன். இந்தியாவில் வால்மார்ட் தன் நிறுவன கிளைகளை இந்திய நகரங்களில் திறக்க முயல அனுமதி கேட்டபோது இந்திய ஒன்றியத்தை ஆளும் மைய அரசு ஜெ, மம்தா இருவரும் எதிர்ப்பார்கள். அவர்களை சரிகட்ட வேண்டியது உங்கள் பணி என்றது.
வால்மார்ட் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக.


ஹிலாரி வந்தார் இருவரையும் அடுத்தடுத்து சந்தித்தார்………… பேசினார்………….. வென்றார். வெற்றியுடனே தன் நாட்டுக்கு திரும்பி சென்றார். அந்தளவுக்கு ராஜதந்திரத்தில்  கில்லாடி. உலக நாடுகளின் தலைவர்களோடு பேசும்போதும் சரி, அவர்களோடு ஒன்றாக நிற்கும் போதும் சரி அவரிடம் ஒரு கம்பீரம் தெரியும்.

அரசுப்பயணமாக இதுவரை 120 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் சென்றதோடு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களில் அதிக தூரம் அதாவது சுமார் 9 லட்சம் மைல்கள் சுற்றுப்பயணம் செய்த அமைச்சர் என்ற பெயரையும் தட்டி சென்றுள்ளார்.

உலக போராளி இயக்கங்கள் பலவற்றுக்கு ஆதரவளிக்கும் கொள்கையுடையவர். இலங்கையின் ஈழத்தமிழர்கள், விடுதலைப்புலிகள் மீது கரிசணையோடு இருந்தவர். நான்காம் கட்ட ஈழப்போர் கொடூரத்தை உலகின் பார்வைக்கு கொண்டு சென்றதில் இவரின் பங்கும் உண்டு.

தற்போது 65 வயதாகும் ஹிலாரி வைரஸ் தாக்கி பாதிப்புக்குள்ளாகி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். நோய் தாக்கத்தில் மயங்கி விழுந்ததன் விளைவு மூளையில் ரத்தம் உறைந்து ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் சீரடைந்து வருகிறது என அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.

அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட ஒபாமாவும் வேறு வெளியுறவுத்துறை அமைச்சரை நியமித்துவிட்டார். அமைச்சர் பதவியில் இருந்து விலகி காரணம் உடல்நிலை மட்டுமல்ல அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க இப்போதே களப்பணியாற்ற முயல்கிறார் என்கிற தகவல் இறக்கை கட்டி பறக்கிறது உலக மீடியாக்களில். அது உண்மையாக இருந்தால் உலகை ஆளப்போகும் வாய்ப்பை அவருக்கு அமெரிக்க மக்கள் வழங்குவார்கள் என நிச்சயம் நம்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக