சனி, ஜூலை 07, 2012

சேவைக்கு சினிமாத்துறை எதிர்ப்பு.




ஜீலை 1ந்தேதி முதல் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் சினிமா, தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் அனைவரும் 12.3 சதவிதம் சேவைவரியை கண்டிப்பாக கட்டவேண்டும் என மைய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தான் இந்தியாவின் சினிமா-சின்னத்திரை உலகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

கலைத்துறை மீது சேவை வரி விதிப்பால், தயாரிப்பு செலவு அதிகமாகும், இதனால் சினிமா தொழில் முடங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளார்கள். நடிகர் – நடிகைகள் வாங்கும் சம்பளங்களுக்கு சேவை வரி விதிப்பதால் அவர்களின் உழைப்பை அரசு உறிஞ்சுகிறது என டுடிவிட்டரில் கருத்து கூறியுள்ளார் நடிகை சோனம்கபூர். 

சினிமாத்துறையில் உள்ளவர்கள் மக்களை காக்க வந்த ரட்சகர்களா என்ன சேவை வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க. 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் வாங்கும் ஒரு கூலிக்காரனிடமே சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அப்படியிருக்க பொழுது போக்குக்காக படம் எடுத்து அதனை பார்க்க 100 ரூபாய், 200 ரூபாய்க்கு டிக்கட் விற்கும் சினிமாத்துறையில் உள்ளவர்கள் சேவை வரி கட்டகூடாதா என்ன. 

நடிகர் – நடிகைகளால் இந்தியாவில் ஏதாவது மாற்றம் நடந்துள்ளதா, புரட்சி நடந்துள்ளதா, மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துள்ளதா, லஞ்ச லாவண்யம் குறைந்துள்ளதா, அரசியல்வாதிகள் திருந்தியுள்ளார்களா? என்ன நடந்துள்ளது இவர்களுக்கு சலுகை காட்ட. 

இன்றைய இந்திய கலாச்சாரமும், பண்பாடும் சீரழிந்ததுக்கு காரணம் இந்த பச்சோந்திகள் தான். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்ட கஸ்மாலங்களை நடிப்பு என்ற பெயரில் ஆபாசங்களையும், வன்முறைகளையும் இளைய தலைமுறையினரிடம் விதைத்ததை தவிர இந்த சினிமா உலகம் என்ன செய்துள்ளது. 

அதோடு, படம் எடுத்து ஓசியிலா மக்களுக்கு காட்டுகிறார்கள். 10 ரூபாய்க்கு விற்க வேண்டிய டிக்கட்டை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து அரசாங்கத்தை, பார்வையாளனை ஏமாற்றி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். 


திரையில் தான் ஊழல்களுக்கு எதிராக கொடி பிடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்கள் அந்த பாடத்துக்கு வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை கறுப்பாக தான் வாங்குகிறார்கள். ஊழலை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள் நிஜத்தில் அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை கோடிகளில் ஏமாற்றுகிறார்கள். அதோடு, யார் ஆளும்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா அடித்து தங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளும் பச்சோந்திகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு வேண்டுமாம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை தொடர்ந்து அதிகளவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்த கலைத்துறையினர் தான். 

ஒரே வார்த்தையில் சினிமா உலகத்தை பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் மக்களை சுரண்டி பிழைக்கும் பச்சோந்திகள் இவர்கள். இவர்களுக்கு சேவை வரியில் இருந்து மட்டும் விலக்கு தரவேகூடாது. 

வெள்ளி, ஜூலை 06, 2012

இந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.




இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி ஈழத்தமிழர்களை கொன்றபோது, அதற்கு உதவியாக, ஆயுதங்களை, தார்மீக ஆதரவை வழங்கிய நாடு இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசு. அப்போது, இலங்கை எப்போதும் இந்தியாவை முதுகில் குத்தியே பழக்கம் உடையது. அதனால் இலங்கையை ஆதரிக்காதீர்கள் என தமிழகத்தில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. இந்தியா உதவவில்லை என்றால் சீனா அதிகமாக உதவி செய்யும் அது வருங்காலத்தில் நமக்கு ஆபத்தில் முடியும் என்றார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள். அதனைச்சொல்லி சொல்லியே இலங்கைக்கான உதவிகளை வாரி வழங்கியது, பிற நாடுகள் போர் நிறுத்தத்துக்கு முயன்றபோது இந்தியா தான் தடுப்பனையாக இருந்து அதை தடுத்தது. இவையெல்லாம் புலிகள் மீதான கோபத்தில் செய்தார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் சீனாவின் பிடியில் இலங்கை சிக்கிவிடக்கூடாது என்பதாலே அதிக உதவிகளை செய்தது. 

ஆனால், தமிழக ஈழ ஆதரவாளர்கள் எச்சரித்தது போல தற்போது இலங்கை இந்தியாவின் முதுகில் குத்த தொடங்கிவிட்டது. அதன் வலியை வாய் விட்டு கத்தி சொல்லவும் முடியாமல் தவிக்கிறது. போரின் போது, இந்தியாவுடன் பிண்ணி பினைந்திருந்த இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் போர் முடிந்ததும் இந்தியாவுக்கு கைமாறு செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் முதலீடு செய்ய இந்தியாவை அனுமதித்தது. 

அதன்படி 
1. சம்பூர், காங்கேசன் துறை, வடபகுதி இரயில் பாதை புனரமைப்பு. 
2. காங்கேசன் துறை அபிவிருத்தி திட்டம். 
3. மன்னார் கடல் பகுதியில் கடல் எண்ணெய் எடுக்கும் திட்டம்.
4. திருகோணமலையில் உள்ள எண்ணெய் நிறுத்தை மேம்படுத்தும் திட்டம்.
5. பலாலி விமானநிலையம் புனரமைப்பு போன்றவை இந்தியா இலங்கையில் செயல்படுத்த இலங்கை தந்த அனுமதி. 

அதேநேரம் சீனாவுக்கும் முதலீடுகள் செய்ய அனுமதி தந்தது. 

அதன்படி 
1. அம்பாந்தோட்டத்தில் விமான நிலையம்.
2. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுமானம்.
3. கொழும்பு துறைமுக விரிவாக்கம்.
4. கொழும்பு இரயில்பாதை அமைப்பு. 
5. நுரைச்சோலையில் அனல்மின்நிலையம் கட்டுதல்.
6. மொறகந்த என்னும்மிடத்தில் டேம் கட்ட அனுமதி என சொல்லிக்கொண்டே போகாலம். இப்படி பல பெரிய அனுமதிகளை சீனாவுக்கு இலங்கை தந்துள்ளது. 


தற்போது இந்தியாவுக்கு தந்த காங்கேசன் துறைமுகம் அபிவிருத்திதிட்டம், மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் ஆய்வு திட்டம் திட்டம் போன்றவற்றையும் சீனாவுக்கே தர இலங்கை இராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்கள். இதனால் தான் கடந்தவாரம் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர்மேனன் இலங்கை பயணமானார். இந்தியாவை பகைத்துக்கொள்ளாதீர்கள் என பேசிப்பார்த்தார் ஆனால் இராஜபக்சே சகோதரர்கள் எதற்கும் அசைந்துக்கொடுப்பதாக தெரியவில்லை. சீனாவே உற்ற நண்பன் என்றும் இந்தியாவை இலங்கை மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என எண்ணுகிறது. 


சீனாவை இலங்கையில் அதிகமாக கால் ஊன்றிவிட்டது இது பெரும் ஆபத்து இனி இந்தியா இலங்கையை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முடியாது என்ற உறுதியான முடிவுக்கு தற்போது வந்துள்ள அமெரிக்கா இலங்கையில் நேரடியாக தன் பொருளாதார ரீதியாக தன் முதலீடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கிய வேகத்தில் அமெரிக்காவிடம் பணிந்து போக தொடங்கியுள்ளது இலங்கை. அமெரிக்காவின் ஆசைப்படியே முன்னால் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவை விடுதலை செய்தார் இராஜபக்சே. அதோடு இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட சில திட்டங்களை அமெரிக்காவிடம் தாரை வார்த்துள்ளார். அதைப்பெற்றால் இந்தியாவின் நட்பை இழந்துவிடுவோம்மோ என தயங்கிய அமெரிக்க அரசு தற்போது சீனாவை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் இல்லை என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு ஒதுக்கிய திட்டங்களை இலங்கை கைமாற்றி விட முடிவு செய்ய அதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. 

இலங்கை இந்தியாவை முதுகில் குத்தும் என எச்சரித்ததை கண்டுக்காத இந்திய அரசின் மூகத்தின் மேலேயே இலங்கை ………….. அடித்துள்ளது. இதன் பின்னும் திருந்தவில்லையென்றால் இந்தியாவின் தென் பகுதி பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். 

புதன், ஜூலை 04, 2012

சிறையும்....... வெறுப்பு சித்திரங்களும்……




திமுக தலைவர் கலைஞரே எதிர்பார்க்காத வெற்றி என்று தான் இதனை சொல்ல வேண்டும். அந்தளவுக்கு சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெற வைத்துள்ளார்கள் திமுக தொண்டர்கள். 

போராட்டத்துக்கு வந்தால் கைது செய்து 15 நாள் சிறை வைப்பார்கள் என அரசின் காவல்துறை பத்திரிக்கைகள் மூலம் கிளப்பிவிட்டது. ஜாமீன் கூட கிடையாது என்றார்கள், தமிழக சிறைகளில் இடம்மிள்ளாவிட்டால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றார்கள். உளவுத்துறையினர் கூட எதிர்பார்க்கும் அளவுக்கு கூட்டம் வராது என்றார்கள். மீடியாக்கள் கூட சம்பாத்தவர்கள் தலைவர்கள், சிறைக்கு போகவேண்டியவர்கள் நாங்களா என தொண்டர்களா விரக்தியில் உள்ளார்கள் என ‘படம்’ காட்டினார்கள். சித்திரம் வரைந்தார்கள், கட்டுரை எழுதினார்கள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு மவுனமாக இருந்தார்கள் உடன் பிறப்புகள்.
அந்த மவுனத்துக்கான பதிலை ஜீலை 4ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் வெளிப்படுத்தினார்கள். 8 மணி போராட்டத்துக்கு காலை 7 மணிக்கே தங்களது சொந்த செலவில் தங்களது ஊர்களில் இருந்து பேருந்து மூலம் போராட்டம் நடத்தும் இடத்துக்கு கட்சி கொடியோடு வந்து சேர்ந்தார்கள். கட்சி கொடி கொண்டு வராதவர்கள் நேராக கட்சியின் அலுவலகங்களுக்கு சென்று கொடிகளை வாங்கிக்கொண்டு வந்து போராட்ட களத்தில் நின்றனர். நிர்வாகிகள் தான் 8 மணிக்கு வந்தார்கள். பலயிடங்களில் 9 மணிக்கு மேல் கூட வந்தார்கள். 

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவதை போல தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் ஒரு பிரச்சனைக்கூட செய்யாமல் ஆளும் அரசையும், ஜெ வையும் கண்டித்து கோஷமிட்டபடி கைதானார்கள். கைது செய்தவர்களை ஏற்றி போக கொண்டு வரப்பட்ட பேருந்துகள், போலிஸ் வாகனங்கள் தான் பத்தவில்லை. அந்தளவுக்கு முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை மண்டபங்களில் கொண்டு போய் அடைத்தது போலிஸ். 4ந்தேதி மாலை காவல்துறையே 96 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் காவல்துறை தலைவர் ராமானுஜம். 

சில பத்திரிக்கைகள் மட்டும் 1.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டார்கள், 3 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்ற உண்மை விவரத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. பல டிவிக்கள், செய்தி ஏடுகள் அதிகமானோர், ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டார்கள் என தலைப்பு போட்டு தங்களது வெறுப்பை காட்டியது. 

இருக்காதே பின்னே, கட்சி அழிந்தது, ஒழிந்தது, இனி திமுக அவ்வளவே, கோஷ்டி சண்டை, உலக மகா ஊழல் செய்தவர்கள், குடும்ப கட்சி, தமிழனத்துக்கு துரோகம்  என திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியது முதல் முகாரி பாடியவர்கள் இவர்கள். ஜெ அரசின் அடக்கு முறைக்கு பின்னரும் உடன்பிறப்புகள் சுறுசுறுப்பாக உள்ளதை கண்டு இவர்களுக்கு அரிப்பு. அதனாலயே சிறை நிரப்பும் போராட்டம் முடிந்தபின்னும் அதில் குறை, குற்றம் காண்கிறார்கள். 

திமுகவிற்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கலாம். அது கணவன்-மனைவிக்குள் இருக்கும் சண்டை போல. வரும் போகும். அடுத்தவனால் பிரச்சனை எனும் போது எந்த தொண்டனும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டான் என்பதை உணர்த்தியுள்ளார்கள். 

வெற்றிகரமான போராட்டத்துக்கு பின்னும் திமுகவை இணையதளம், செய்திஏடுகள், மீடியாக்களில் நடுநிலை என்ற பெயரில் விமர்சிக்கும் தோழர்களுக்கு ஒரு கேள்வி, இதுபோன்ற ஒரு போராட்டத்தை வேறு எந்த கட்சியாவது எதிர்கட்சியாக இருக்கும் போது நடத்தும் தைரியம் உண்டா என்ற கேள்வியை கேட்கும் தைரியம் உண்டா?, திமுகவை, அதன் தலைவர்களை, அவர்களின் குடும்பத்தை அநாகரிகமாக சித்திரம் வரையும் ஏடுகளின் ஒவியர்களே, வெளியிடுபவர்களே, ஜெவை பற்றியோ, சசிகலா அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி சித்திரம் வரையும் தைரியம் உண்டா?, கைதுக்கு பயந்து வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெவை பற்றி பதுங்கும் முதல்வர் என்ற தலைப்பு போட்டு செய்தி எழுத தில் உண்டா?, முதல்வரை பற்றி வேண்டாம் அவரது தோழி அ அவரது உறவினர்கள் பற்றி சித்திரம் வரைய அ தில்லான தலைப்பில் செய்தி வெளியிட திரணி இருக்கிறதா?. அது இருப்பவர்கள் மட்டும் திமுகவை விமர்சியுங்கள். நடுநிலை என்ற பெயரில் மற்ற கட்சிகளையும் விமர்சியுங்கள். வஞ்சகத்தையும், வெறுப்பையும் வைத்துக்கொண்டு திமுக மேல் பாய்பவர்கள் நாங்கள் அதிமுகவின் விசிறிகள் என அறிவித்து விடுங்கள். ஏன் நடுநிலை என்ற முகமுடி.