செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

எபோலா வைரஸ் தாக்க வருது ஜாக்கிரதை.




எபோலா வைரஸ் உலகத்தை இப்போது இந்த வைரஸ் தான் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

மேற்குலக நாடுகள் தங்கள் நாட்டுக்குள் இந்த நோய் பரவாமல் தடுக்க மருத்துவ ஆராய்ச்சி மைய அதிகாரிகளை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. விமானம், கப்பல் வழியாக வரும் மேற்கு ஆப்பிரிக்கர்கள் மற்றும் அங்கு போய் வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரையும் பரிசோதனை செய்தபின்பே அனுமதிக்கிறது.

இதுப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா, “உலகில் எங்கு புதிதாக நோய் தோன்றினாலும் அதைப் பற்றிய விவரங்களை அறிய அமெரிக்காவில் உள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட முக்கியமான சர்வதேச அமைப்புகளை தொடர்பு கொள்ளும். இந்தப் புதிய வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டுக்கு 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வரவிருக்கிறார்கள். எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகளை பரிசோதனைக்கு உட்டுபத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வருபவர்களில் யாருக்கேனும் இந்த வைரஸ் நோய்த்தொற்று இருந்தால் அவர்கள் அமெரிக்காவை விட்டு உடனே திருப்பியனுப்ப படுவார்கள். நோய்த்தொற்று இல்லாதவர்களை மாநாடு முடியும் வரை அவ்வப் போது பரிசோதனைக்கு உட்படுத் துவோம்.  இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அதை கட்டுப்படுத்த உதவிகள் செய்வோம் எனக்கூறியுள்ளார். 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் அடுத்த சில மாதங்களில் எபோலா வைரஸ் தாக்குதலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என உலக சுகாதார நிறுவம் எச்சரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் இதுவரை 700  பேர்க்கு மேல் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

எபோலா வைரஸ் மனித உடலுக்கு எப்படி வருகிறது ?.

எபோலா வைரஸ்சில் 5 வகைகள் உள்ளன. இந்த வைரஸ்கள் நோய் தாக்கப்பட்டு இறந்த விலங்கின் ரத்தம் மூலமாக பரவுகிறது. அதோடு வவ்வால், மான், குரங்குகள் திண்ற பழங்களை நாம் உண்ணும்போது அதில் அதன் ரத்தம் கலந்திருந்தால் அதன் வழியாக இந்நோய் பரவுகிறது. 

நோய் தாக்கி இறந்த விலங்குகளை அறுக்கும்போது, அதை அப்புறப்படுத்தும் போது பாதுகாப்பு உடைகளை அணிந்து அதன்பின்பே அப்பணியை செய்ய வேண்டும். இல்லையேல் அதன் உடலில் உள்ள திசுக்கள் வழியாகவும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்த நோய் தாக்கிய ஆண்கள் தன் பெண் துணையோடு உடல் உறவு வைத்துக்கொண்டால் உடலில் கலக்கும் விந்து அணு வழியாகவும் இந்த நோய் பரவுகிறது.
காற்றின் வழியாக பரவுவது கிடையாது. 


இந்த நோயை கண்டறிவது எப்படி ?.

எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் வரும். பின்னர் தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, ரத்தத்துடன் கூடிய வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். நோய் தாக்கம் அதிகரிக்கும் போது கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். உச்சகட்டமாக காது, மூக்கு, வாய் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் இருந்தும், மற்ற துவாரங்கள் வழியாக கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
 
இந்த வைரஸ்சை அழிப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக குணப்படுத்த முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே இதனை தடுக்க முடியும். இந்த வைரஸ் உடலில் இருந்து எப்போது முழுமையாக நீங்கும் என்பதை கணித்துக் கூற முடியாது. ஒரு சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கும்.
 
1967-ல் காங்கோவில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அப்போது 1,587 பேர் உயிரிழந்தனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.
 
மனிதர்களுக்கு நோய் தாக்கினால் அவர்களை தனிமையில் பாதுகாப்பான மருத்துவ அறையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். ( நான் ஈ படத்தில் நானி ஒரு சின்ன கொசு கூட அறைக்குள் வர முடியாதபடி பாதுகாப்பு சாதனம் அமைத்திருப்பாரே அப்படி ). மருத்துவர்களும் பாதுகாப்பு உடை அணிந்து தான் மருத்துவம் செய்வார்கள்.

ஆப்பிரிக்கா நாடுகளில் தான் இந்த நோய் அதிகமாக பரவுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்ட 1977 முதல் இன்றுவரை ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. இதைவிட அதிகமாக இருக்கும் என்பதே எதார்த்தம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

ஒட்டுகேட்பு. – அமுக்கப்பட்ட ரகசியம். ஏன் ? எதனால் ?




நிதின்கட்காரி. மத்திய அமைச்சரவையில் உள்ள மிக முக்கிய மூத்த அமைச்சர். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். இதுமட்டும் தானா என்றால் இல்லை. பி.ஜே.பியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்க்கு நம்பகமான விசுவாசி. முன்னால் பி.ஜே.பி தலைவர். இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். கார்ப்பரேட் லாபி இவருடையது.

இவரது படுக்கை அறையில் இருந்து தான் ஓட்டு கேட்பு கருவியை கண்டறிந்துள்ளார்கள். இவரோ வதந்தி என்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ்யும், இது சும்மா லுலுல்லாய்யீ என்றார். பிரதமர் மோடியோ மவுனசாமியாராக இருக்கிறார். 

கட்காரி வீட்டில் உளவு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாள், சுஷ்மாசுவராஜ், நிதியமைச்சர் அருண்ஜெட்லி வீட்டிலும் கண்காணிப்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாக இப்போது ஓட்டமொத்த மத்திய அமைச்சர்களும், இந்தியாவை ஆளும் பி.ஜே.பியும் மவுன விரதம் இருக்க தொடங்கிவிட்டார்கள்.

ஆல் இன் ஆல் அழகுராஜா சு.சாமி மட்டும், இது காங்கிரஸ் கட்சியின் சதி என்றார். காங்கிரஸ்சும், பிற எதிர்கட்சிகள் பாராளமன்றத்தில், ஓட்டு கேட்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை யார் செய்தது என்பதை தீர விசாரிக்க வேண்டும் என குரல் எழுப்புகிறது. கடந்த காலத்தில் இதே காங்கிரஸ் ஆட்சியின் போது, இன்று ஜனாதிபதியாக உள்ள பிரணாப்முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது அலுவலகத்தில் இருந்து ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அப்போது காங்கிரஸ் இல்லை என மழுப்பியது.

கடந்த கால விவகாரமும் சரி, இப்போதைய விவகாரமும் சரி இரண்டு நாட்கள் அதிகபட்சமாக மூன்று நாளில் அப்படி ஒரு சம்பவம்மே நடக்கவில்லை என்பது போல் அமுக்கப்பட்டுவிடுகிறது. எதனால் அமுக்கப்படுகிறது ?.
  
ஒட்டு கேட்பு என்பது என்ன புதுசாவாக செய்கிறார்கள். காலம் காலம்மாக நடப்பது தான். அந்த காலத்தில் ஒற்றர்கள் வழியாக தகவலை பெற்றார்கள். இப்போது டெக்னாலஜி வளர்ச்சி அடைந்தபின் அதன் வழியாக உளவு பார்க்கிறார்கள்.

பார்க்கிறார்கள் என்றால் யார் என கேட்கலாம் ?.

ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு பிற நாடுகளை உளவு பார்க்கின்றன. நாடுகள் என்றால் இராணுவம், அதிபர்கள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், பெரும் தொழிலதிபர்கள், பிரபல பத்திரிக்கையாளர்கள் வரை உளவு பார்க்கிறார்கள். அவர்கள் மூலமாக மறைமுகமாக தங்களுக்கு தேவையான தகவல்களை திரட்டுகிறார்கள். அந்த தகவல் மூலம் தன் நாட்டுக்கு யார் மூலமாவுது ஆபத்து உள்ளதா ?, பொருளாதார கணக்கீடுகள், இராணுவ ரகசியங்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை அறிந்து தன்னை தற்காத்துக்கொள்ளவே எல்லா நாடுகளும் உளவில் ஈடுபடுகின்றன.

இன்று உலகத்தில் உளவில் கொடிகட்டி பறப்பது அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, இங்கிலாந்து. இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக தான் பிற நாடுகள்.

ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்களும் பிறநாடுகளை மட்டுமல்ல உள்நாட்டிலும் உளவு வேலை பார்க்க உத்தரவிடுகிறார்கள். உள்நாட்டில் உள்ள எதிர்கட்சிகள், பிரிவினைவாத இயக்கங்கள், ஜனநாயக இயக்கங்களை கண்காணிக்க உளவு பார்க்கப்படுகின்றன. சொந்த கட்சியில் உள்ள போட்டியாளர்களை கண்காணிக்கவும் உளவு பார்க்கப்படுவதும் நடக்கிறது. 

அதிலும் குறிப்பாக உலகம் முழுவதும் முன்பு முக்கியமானவர்கள் மட்டும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இன்று சாதாரண பொதுமக்கள் வரை கண்காணிப்பு வளையத்துகள் இருக்கிறார்கள். நாம் அனுப்பும் மின்னஞ்சல், நாம் பேசும் செல்பேச்சு, எஸ்.எம்.எஸ், பேஸ்புக், டுவிட்டர், அதி முக்கிய பாதுகாப்பு நிறைந்த வங்கி கணக்குகள்  உட்பட எதுவும்மே ரகசியம் கிடையாது. அது உலகத்தின் ஏதோ ஒரு மூளையில் நமது தகவல்கள் திருடப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இதை தடுக்க முடியாது. தற்காத்துக்கொள்ள மட்டும்மே முடியும்.

ஒரு நாட்டின் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் டெக்னாலஜி வாயிலாக தாங்கள் பேசுவதை, அனுப்புவதை பிற நாட்டு உளவுத்துறைகள் இடை மறிக்க முடியாதபடி டெக்னாலஜி வழியாக தடுக்கிறார்கள். ஆனாலும் இன்றைய டெக்னாலஜி புலிகள் அதை உடைத்து விஷயத்தை அறிந்துக்கொள்கிறார்கள். இப்படி எல்லா நாடுகளும்மே செய்கின்றன. 


டெக்னாலஜி மட்டுமல்ல நேரடியாக பிற நாடுகளுக்குள் உளவாளிகளை அனுப்பி தகவல் சேகரிக்கின்றன எல்லா நாட்டு உளவு நிறுவனங்களும். பல உளவாளிகள் எதிரிகளிடம் சிக்கி உயிர் இழந்த சம்பவங்களும் உண்டு. பல உளவாளிகள் டபுள் ஏஜென்டாக பணியாற்றி செட்டிலானவர்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்களும் உண்டு. ஆட்சியை பிடித்த உளவாளிகளும் உண்டு, ஆட்சியை, ஆட்சியாளர்களை காலி பண்ணிய உளவாளிகளும் உண்டு. இது ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் அறிந்த ரகசியம்.

இந்த ரகசியத்தை தான் உலக நாடுகளை அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறை உளவு பார்ப்பதாக ஆதாரங்களுடன் விக்கிலீக்ஸ், ஸ்டென்னோவன் இருவரும் அம்பலப்படுத்தி அமெரிக்காவை மக்கள் மத்தியில் நாறடித்துவிட்டார்கள். பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்தததால் உளவு பார்ப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது என நினைத்தால் அப்படி நினைப்பவர்கள் மட சாம்பிராணி என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளலாம். ஏன் எனில் எந்த காலத்திலும் எந்த அரசும் அப்படி ஒரு முடிவு எடுக்காது. அப்படி எடுத்தால் அது சிக்கலில் தான் போய் முடியும். அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஓட்டு கேட்பது என்பது பெரிய விஷயம்மே கிடையாது. 

போன் பேச்சு, நேரடி பேச்சு ஒட்டு கேட்கப்படுகிறது என்பது மைய, மாநில, உலகளாவிய இன்றைய, முந்தைய ஆட்சியாளர்களுக்கும், புரட்சியாளர்கள், தீவிரவாதிகள் உட்பட அனைவருக்கும் தெரியும். இது அநியாயம் என சவுண்ட் விடுவததால் மாறிவிடாது என்பது அவர்களுக்கு புரியும். இருந்தும் அநியாயம், அக்கிரமம் என சவுண்ட் உடுவதுயெல்லாம் சும்மா லுல்லாய்க்கு. அரசியல் செய்ய வேண்டும்மே அதற்காக சவுண்ட் விடுகிறார்கள். அதனால் தான் இரண்டு, மூன்று நாளில் விவகாரம் நமுநமுத்து போகிறது. 

ஒட்டு கேட்பால் ஆட்சி கவிழ்ந்ததுயெல்லாம் அந்த காலம்..... இப்போது ஓட்டு கேட்கவில்லையென்றால் தான் ஆட்சி கவிழும்.

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

மோடிக்கு ஜெ எழுதும் காதல் கடிதம். - இலங்கை சீண்டல்



மீனவர்களை காப்பாற்றுங்கள் என தமிழக முதல்வர் ஜெ, இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை குறிப்பிட்டு ஜெயல்லிதா நரேந்திரமோடிக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறாறே அதுயென்ன காதல் கடிதம்மா என அநாகரிகமான முறையில் ஒரு மாநில முதல்வரையும், ஒரு நாட்டின் பிரதமரையும் இணைத்து கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதி அதை அரசின் பாதுகாப்புதுறை இணைய தளத்தில் வெளியிட்டு தங்களது அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது இலங்கையின் ராஜபக்சே அரசாங்கம்.

இது முதல்முறையல்ல, ஏற்கனவே இதே முதல்வரை சேலையை தூக்குவது போல கொச்சையான முறையில் கார்டூன் வரைந்து தன் கோபத்தை காட்டியது. அதற்கு முன்பு, தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என நேரடியாகவே தாக்கியது. இப்படி பலமுறை தங்களது பாதுகாப்பு துறை இணையதளத்திலும், அரசின் ஆதரவுடன் வரும் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதி தமிழக அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை கிண்டலடித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட செயல்களுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு வலிமையான எதிர்ப்போ, கண்டனம்மோ தெரிவிப்பதேயில்லை. இதுதான் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தைரியத்தை தருகிறது.

சமீபத்திய கட்டுரையில், கடந்த கால காங்கிரஸ் அரசை மிரட்டியது போல இப்போது மோடி அரசை மிரட்ட முடியாது. மோடி அரசு இலங்கைக்கு சாதகமாகயிருக்கும் என சுப்பிரமணியசாமி நம்பிக்கையான உறுதி தந்துள்ளார் என்கிறது அந்தக்கட்டுரை.


இந்தியா சார்பில் உறுதிமொழி தர இந்த சுப்பிரமணியசாமி க்கு யார் அதிகாரம் தந்த்து. யாரிந்த சு.சாமி ?.

அரசியலில் உள்ள காட்டிக்கொடுக்கும் பரம்பரயை சேர்ந்த புரோக்கர் சு.சாமி. தமிழகத்தில் கோமாளியாக பார்க்கப்படும் சு.சாமி, இந்தியாவின் அதிகாரவர்க்கத்தின் புரோக்கர். இப்போது நாடுகள் இடையேயான புரோக்கராகவும் செயல்படுகிறார். அமெரிக்காவின் ஏஜென்டாகவும் செயல்படுகிறார் என்பது பலரின் குற்றச்சாட்டு. இவர்தான் இப்போது இந்திய – இலங்கை இடையேயான வெளியுறவுக்கொள்கை, வர்த்தக்கொள்கை, இராணுவ கொள்கையை தீர்மானிக்கிறார். அதனால் தான் சு.சாமியே சொல்லிவிட்டார் எங்களுக்கு கவலையில்லை என்கிறது இலங்கை அரசாங்கம்.

நூற்றுக்கணக்கான மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை சிங்கள இராணுவத்தை கண்டிக்கச்சொல்லியும், இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணம். அதைத்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வர் கேட்கிறார். பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தமிழகத்தின் பரப்பளவு கூட இல்லாத ஒரு நாடு இந்தியாவின் பிரதமரையும், முதல்வரையும் மிரட்டுவது, கொச்சைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கடந்து இந்த போக்குக்கு நம் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும். கடுமை காட்டினால் மட்டும்மே இலங்கையின் அதிகார வர்க்கம் திருந்தும்.

ஆனால் இதை செய்யத்தான் தயங்குகிறார்கள் நமது அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள். 


காரணம் பணம்… பணம்… பணம்…

நடிகர் விஜய் நடித்த கத்தி என்ற திரைப்படம், இலங்கையின் “சிங்கள“ அதிபர் ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கிறார். ராஜபக்சேவின் பணமும் அதில் உள்ளது. ஆனால் சிறு எதிர்ப்பு வந்ததும்மே, இயக்குநர் முருகதாஸ், நெடுமாறனை சந்தித்துவிட்டேன், சீமானை சந்தித்துவிட்டேன், வை.கோவை சந்திக்கபோகிறேன். சந்தித்தபின் படம் வெளியாகிவிடும் என தைரியமாக அறிவிக்கிறார். சந்திப்பில் பேசப்பட்டது பற்றி ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. ராஜபக்சேவின் பணத்தில் சென்னையில் உருவாகியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தேவையான வசதிகளை ஜெ அரசாங்கம் செய்து தந்துள்ளது. கடந்த காலத்தில் இதுபோன்ற உதவிகளை திமுக அரசாங்கமும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு செய்து தந்துள்ளது.

பதிலுக்கு நம்மவூர் அரசியல்வாதிகளும், இலங்கை ஆட்சியாளர்கள் ஆதரவுடன் கொழும்பில், யாழப்பாணத்தில் தொழில் தொடங்கி சக்கபோடு போடுகிறார்கள். இந்த பணம் தான் இவர்களை வாய் மூடி மவுனியாக வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இந்தநிலையென்றால் இந்திய ஆட்சியாளர்கள் முந்தைய காங்கிரஸ் அரசாங்கமாகட்டும், இப்போதைய மோடி அரசாங்கமாகட்டும் ராஜபக்சே பெயரை கேட்டாலே மண்டியிட்டு மரியாதை செய்கிறார்கள். ஆனால் வெளியே நாங்க வல்லரசாக போகிறோம் என பீற்றிக்கொள்கிறார்கள்.

அவன் இவனை திட்டுவதும், இவன் அவனை திட்டுவதும் சகஜமாகிக்கொண்டுயிருக்கிறது.

உலக அரங்கில் இந்தியாவின், தமிழர்களின் மானம் தான் வான்வெளியில் பறக்கிறது.

வாழ்க உங்கள் அரசியல்…….