புதன், அக்டோபர் 19, 2011

திமுக எதிர்ப்பாளர்களுக்கு…….



தமிழக அரசியல் களத்தில் அதிகம் விமர்ச்சிக்கப்படும் ஒரு அரசியல் கட்சி எதுவென்றால் திமுக தான். ஆட்சியில் இருந்தபோதும் அதை விமர்சித்தார்கள், ஆட்சியில் இல்லாமல் போய் 6 மாதமான பின்பும் விமர்சன கனைகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எதனால் இது?. இன்றைய ஆளும் கட்சியான அதிமுக தவறுகளே செய்யவில்லையா?. என யோசித்தபோது தற்போதைய நிலையில் ஆளும் தலைமை பலப்பல தவறுகள் நம் கண் முன்னே செய்கின்றன.

உதாரணத்திற்க்கு, கேபிள் டிவிக்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. வரவேற்க்கத்தக்கது. ஆனால், சேனல்கள் பாதி வருவதில்லை. லோக்கல் சேனல்கள் தடை செய்கிறோம் என அறிவித்த அரசாங்கம். தற்போது சத்தம்மில்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் லோக்கல் சேனல்கள் நடத்த அனுமதி தந்துள்ளது. அதோடு எந்த லோக்கல் சேனல்களிலும் திமுக மற்றும் பிற கட்சியினர் தரும் அரசியல் விளம்பரங்களை உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்ற கட்டுப்பாடு. ஆனால் ஜெ ஓட்டு கேட்கும் விளம்பரம் கட்டணம்மில்லாமல் ஒளிப்பரப்பாகின்றன. இது அதிகார துஸ்பிரயோகம்மில்லையா? திமுகவை விமர்சிப்பவர்கள் ஏன் இதுப்பற்றி பேசுவதில்லை. ஜெயலலிதா அரசாங்கம் செய்தால் சரியா?.

இரண்டாவது. சென்னையில் அரசுக்கு சொந்தமானயிடத்தை சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி கடந்த கால அதிமுக ஆட்சியில் நீண்ட கால குத்தகைக்கு எடுத்தவர் குத்தகை காலம் முடிந்தும் அதை அரசாங்கத்திடம் திருப்பி தரவில்லை. கடந்தமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தயிடத்தை போராடி மீட்டது. அந்தயிடத்தை ஆட்சிக்கு வந்து 5வது மாதத்தில் மீண்டும் அதே தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்த்துள்ளது அதிமுக. அதன் இன்றைய மதிப்பு 250கோடி. இதை திமுக தலைவர் கண்டித்து அறிக்கை வெளியிட்டபோது, உடனே ரியாக்ட் காட்டினார் ஜெ. எப்படி? திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய இடம் ஜமின் குடும்ப வாரிசுகளிடம்மிருந்து மிரட்டி பிடுங்கப்பட்டது என்றார். கருணாநிதி அண்ணா அறிவாலயம் நேர்மையாக வாங்கப்பட்டது, அதை உயிர் தந்தாவது காப்போம் என்றார். தோட்டக்கலை விவகாரத்தை மறந்தார். அதற்க்கு காரணம், ஜெ அதிகார போதையில் இருப்பவர். அவர் தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்க்காக அண்ணா அறிவாலயத்தை இடிக்கவும் செய்வார் என்பதாலயே அதை காக்க போராடுகிறார். திமுகவினர் ஆட்சி காலத்தில் அடித்து உதைத்து இடங்களை வாங்கினார்கள் என காவல்துறையை வைத்து வழக்குகள் பாய்ச்சியபோது சரியான நடவடிக்கை என்றவர்கள் ஜெ வின் இந்த 200 கோடி மதிப்புள்ள இடம் சுவாகா செய்யப்பட்டது பற்றி நடுநிலையாளர்கள் பேச மறுப்பது ஏன்?.

கடந்த காலங்களில் மக்களை பிச்சைக்காரர்களாக்கி வாக்குக்கு பணம் தருகிறார்கள் என திமுக மீது ஜெ குற்றச்சாட்டு வைத்தார், திமுக எதிர்ப்பாளர்களும் திமுக கொள்யைடித்த பணம், பண திமிர் என பேசினார்கள். அதிமுக ஆட்சியில் தற்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் தான் வாரி இறைக்கிறார்கள். இதை பற்றி மூச் விட மறுக்கிறார்களே ஏன் ?. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆளும்கட்சியாக இருந்த திமுக காவல்துறையை வைத்து அரசியல் களத்தை குழப்புகிறது என்றார்கள். தற்போது அதிமுக காவல்துறையை வைத்து வெற்றியை நிர்ணயிக்க பார்க்கிறது இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் ?.

திமுக ஆட்சிகாலத்தில் திமுக அமைச்சர்கள் அரசு ஊழியர்களை மிரட்டினார்கள், அடித்தார்கள் என்றவுடன் கருணாநிதி கம்முனு இருக்கிறார் என குதியோ குதியென குதித்தவர்கள். அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் அம்மா அம்மிக்கல் மாதிரி இருக்க மாட்டார். அதிரடி காட்டுவார் என்றார்கள். தற்போது அதிமுக ஆட்சி தான் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விதி அமுலில் இருக்கும் போதே, அதிமுக அமைச்சர்கள், அவரது அடிப்பொடிகள் அதிகாரிகளை பத்திரிக்கையாளர்கள், மற்ற அரசியல் கட்சியினர் முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். திமுகவை பாய்ந்து பிராண்டிய பத்திரிக்கைகள் இந்த விவகாரத்தில் ஏன் வாய் மூடிக்கொண்டன. திமுகவை குற்றம் சொல்கிறவர்கள் இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் ?.

திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் வாழ்த்து கோஷங்கள் கேட்டன மறுப்பதற்க்கில்லை. அதேபோல் எதிர்கட்சியான அதிமுகவுக்கு உரிய பிரதிநிதித்துவம் தந்து அவர்கள் கருத்தை பதிவு செய்ய விதிப்படி நேரம் ஒதுக்கப்பட்டது. பேசினார்கள், பதிவுகள் சட்டமன்ற கோப்புகளில் உள்ளது. ஜெ முதல்வாரன பின் சட்டமன்றம் கூடடியது, திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஒரேயிடத்தில் இருக்கை வேண்டும் என கேட்டு கேட்டு சலித்துப்போனார்கள், பேச நேரம் வேண்டும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற நேரம் கேட்டார்கள் ஆனால் எதற்க்குமே சபாநாயகர் அனுமதி தரவில்லையென திமுக வெளிநடப்பே செய்துக்கொண்டுயிருந்தன. இதை மூன்றாவது முறையாக முதல்வாரன ஜெ வெகுவாக ரசிக்கிறார். தான் மட்டுமே பேச வேண்டும், எதிர்ப்பே வரக்கூடாது என நினைக்கிறார். தான் பேசுவது எல்லாம் சரி என்கிறார். நாங்கள் மக்கள் மனதை பிரிதிபலிக்கிறோம் என திமுகவை விமர்சிப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா?.

ஈழ விவகாரத்தில் கருணாநிதி நாடகம் நடத்துகிறார். ஈழ மக்களை கொன்ற கொலைக்காரர் என விமர்சிக்கப்பட்டது. ஈழ போரில் திமுகவுக்கும் பங்குண்டு மறுப்பதற்க்கில்லை. அதேபோல் கச்சத்தீவில் மீன் பிடிக்க போகிறவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் இதற்க்கு கருணாநிதி கடிதமே எழுதுகிறார். இதுவே ‘அம்மா’ ஆட்சியில் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்துயிருக்கும் என பேசிய சீமான் உட்பட தமிழ் உணர்வாளர்கள், நடுநிலைமையாளர்கள் இப்போது வாய் மூடி மவுனியாகி கிடப்பது ஏன்?. இப்போது மீனவர்கள் சுடப்படவேயில்லையா, ஈழத்தில் தற்போது பாலும், தேனும் ஓடுகிறதா? ஏன கேட்டால் இப்போதும் திமுக மீதே குற்றச்சாட்டு. ஆட்சியில இருந்தாலும் திமுக மீதே பழி, ஆட்சியில் இல்லாத போதும் திமுக மீதே பழி என்றால். அப்பறம் எதுக்கு அம்மா முதல்வராக வேண்டும் என கேட்டீர்கள். அவர் தான் பாயும் புலியாச்சே. பாய வேண்டியது தானே இலங்கை மீது?.

மெகா மகா வரலாற்று ஊழல் 2ஜி என பேசியவர்களே திமுக ஊழல் கட்சி தான். அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், பி.ஜே.பியில் இருப்பவர்கள் எல்லாம் நேர்மையின் உருவங்களா என்ன?. திமுக ஊழல் செய்தால் வீட்டுக்காக, மற்றவர்கள் செய்தால் நாட்டுக்காகவா செய்கிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க தான் தற்போது கட்சியே நடத்துகிறார்கள் அப்படியிருக்க ஊழல் நடந்துவிட்டது என கத்துவது வேடிக்கையானது. 10 ஆண்டுகளாக கோர்ட்டுக்கே போகமல் 100 முறைக்கு மேல் வாய்தா வாங்கியதை பற்றி பேசாமல் கிடப்பது ஏன்?.

ஊழல் செய்வதும், அதிகாரிகளை ரவுடிகளை வைத்து அடிப்பதும், ஆசிட் வீசுவது என்பதை தமிழக அரசியல்வாதிகளுக்கு கற்று தந்ததே ஜெ தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தன் மீதான தீர்ப்பை விலை தந்து, கஞ்சா வழக்கை காட்டி மிரட்டி வாங்கலாம் என்ற உயரிய நீதிமன்ற பண்பாட்டை இந்தியாவில் பகிரங்கமாக கொண்டு வந்தது ஜெ தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?. தனக்கு மேல் அதிகாரம் மிக்கவர்கள் தனக்கு ‘படியா’விட்டால் நாலாந்தர பெண் சொல்லும் குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைக்கலாம் என்பதை கொண்டு வந்தவர் யார்?.

கருணாநிதி அவரது குடும்பத்தார் அதிகாரத்தில் இருந்தபோது செய்த குற்றங்களை விட ஜெ-சசிகலா குடும்பங்கள் செய்த குற்றங்கள் மிக மிக அதிகம். ஆதார பூர்வமாக விளக்க முடியும்.

இது தெரிந்தும் திமுகவை தொடர்ந்து விமர்சிக்கின்றன பத்திரிக்கைகள், நடுநிலை வேடதாரிகள் உட்பட பலர். இது எதனால் ?.

திமுக மக்களுக்காக செய்யும் என எதிர்பார்த்தார்கள் செய்யவில்லை அதனால் எதிர்க்கிறார்கள் இது ஒரு வகை. ஒருவரைப்பற்றி விமர்சிக்கும் போது அதை சார்ந்த சாதகமான கருத்துகள் வந்தால் அதைப்பற்றியே விமர்சிப்பது. தொடர்ந்து அதைப்பற்றியே அதிகம் பேச வைத்து விடுவது மற்றொரு வகை.( இது ஒரு வகை மனோவியாதி) அடுத்து, திமுகவை அழிக்க வேண்டும் என்ற மேல் சாதி பத்திரிக்கைகள், அதன் சார்ப்பானவர்கள், ஆளும் கட்சியை சார்ந்துயிருந்தால் லாபம் பார்க்கலாம் என்ற பத்திரிக்கைகள். இவர்கள் திமுகவை அழிக்க எந்த அஸ்திரத்தையும் எடுக்க தயங்காதவர்கள். அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்த வகையினர் தான் ஆதரிப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் தவறே செய்யவில்லை என்பது போல் நடிப்பார்கள் அவர்கள் எதிரில் இருப்பவர்கள் மீது பாய்வார்கள் இந்த வகையினர் தான் தற்போது திமுக மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

இது திமுகவிற்க்கு வீழ்ச்சியாகாது வளர்ச்சியை தான் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக