திங்கள், ஜூன் 20, 2011

உறவுகளை தீர்மானிக்கும் பணமும்-சுகமும்.


இன்றைய நவீன யுகத்தில் மனித வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக பணம் பங்கு வகிக்க தொடங்கிவிட்டது. உறவு, காதல், மனைவி, கணவன், பிள்ளைகள் கூட முக்கியமல்ல பணமே முக்கியம், சுகமே லட்சியம் என்ற எண்ணத்திற்க்கு ஒவ்வொருவரும் வர தொடங்கிவிட்டனர். காலங்காலமாக மேல்தட்டு மக்களிடம்மிருந்த இந்த வழக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தர குடும்பங்களில் கிளை விட்டது. இன்று வெளிநாட்டு மோகத்தால் அதிவேகமாக பரவதொடங்கிவிட்டது.

இந்த வாரம் நக்கீரன் இதழில் வந்துள்ள ஒரு செய்தியை படித்துவிட்டு இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் எப்படியிருக்கும் என யோசித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமெரிக்காவில் பணிபுரியும் தமிழக இளைஞனுக்கும் அதே ஈரோட்டில் பிறந்து நன்கு படித்த பெண்ணுக்கும் திருமணம் ஈரோட்டில் நடந்துள்ளது. தம்பதிகள் வாழ்க்கையை அமெரிக்காவில் தொடங்கியுள்ளார்கள். ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. பின் கணவனுக்கு உடன் வேலை பார்க்கும் ஒரு குஜாரத்தி பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, பெண்ணுக்கு பக்கத்து பிளாட்டில் தங்கியிருந்த தமிழ் இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மொழியில் அதற்க்கு பெயர் காதல். குடும்பத்தில் சண்டையோ சண்டை. கணவன் - மனைவியாக அமெரிக்கா சென்றவர்கள் தங்களது ஜோடிகளுடன் ஈரோடு திரும்பியுள்ளார்கள். இதை கண்டு அதிர்ந்த பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்த அமெரிக்காவுல இதெல்லாம் சகஜம் என்று 4 பேரும் காரணம் கூறியுள்ளார்கள். திருமண பந்தம் முறித்துக்கொண்டு காதலர்கள் தங்களது ஜோடிகளை பதிவு திருமணம் செய்துக்கொண்டு மீண்டும் அமெரிக்கா பறந்துவிட்;டார்கள்.

இதை படித்தபோது வேலைக்கு போனயிடத்தில் அந்நாட்டு கலாச்சாரம் எந்தளவுக்கு நம்மவர்களை மாற்றியுள்ளது என்பதை கண்டு அதிரவேண்டியுள்ளது. பிடித்தவர்களுடன் பிடிக்கும் வரை வாழலாம். பிடிக்காதபோது மற்றொருவருடன் சேர்ந்து வாழலாம் என்ற மேலை நாட்டு கலாச்சாரத்திற்க்கு எவ்வளவு வேகமாக அடிமையாகிறார்கள். அப்படி என்ன பிடிக்கவில்லை பிரிந்து போக?. கணவன்-மனைவி இடையே புரிந்துக்கொண்டு வாழந்தாலே போதும் பிரியவே நேராது. அப்படியிருக்க பிடிக்கல என சொல்வது அபத்தம். என் மனைவியை பிடிக்கவில்லை, என் கணவனை பிடிக்கவில்லை என இவர்கள் சொல்வது உடல்பசிக்காக தானே தவிர வேறில்லை. அதுமட்டுமல்ல, எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம். மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியதில்லை என்ற படித்த கர்வம். இவர்களை பிரிய வைக்கிறது.

வெளிநாட்டு மனிதர்களின் மனநிலை வேறு. மாற்றான் ஒருவனுக்கு பிறந்த பிள்ளையை தனது மனைவிக்கு பிள்ளை தனது பிள்ளையாக நினைத்து பாசம் காட்டுவார்கள். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மனநிலை வேறு. முதல் கணவன்க்கு பிறந்த குழந்தையுடன் நான் இவளை மனந்துக்கொள்கிறேன் என இந்த இளைஞன் கூறலாம் காலப்போக்கில் அப்பெண் சலித்துப்போன பின் குழந்தையிடம் பாசம் காட்டுவானா?, அப்பெண்ணை காலம் முழுக்க நன்றாக கவனித்துக்கொள்வான?. இன்று ஜோடி சேருபவர்கள் நீ வேண்டாம் நான் போறன் என ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் முடிவு எடுத்து பிரிந்துவிட்டால் அதன் பின் மற்றவரின் நிலை….. இந்தியா என்ன வெளிநாடா முதியோர்களை காப்பாற்ற அரசாங்கம் தெருவுக்கு தெரு காப்பகம் திறந்து சேவை செய்ய.

இந்த போக்கு தொடரும் பட்சத்தில் வெளிநாடுகளில் தமிழ் பிள்ளைகளுக்கு அப்பா யார் என்ற பிரச்சனை வரும். அது கலாச்சார சீரழிவை நோக்கி தள்ளும். ஏற்கனவே வெளிநாடுகளுக்கு போய் அந்நாட்டு குடிமகனாகும் நம்மவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பேச, எழுத, படிக்க கற்று தரவில்லை என்ற நிலையில் இருக்கிறது. இப்போது கலாச்சாரத்தையும் மறக்க வைக்கிறார்கள். இது பரவ பரவ இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாகி பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் நிலை ஏற்படும்.

6 மாதம் ஒருவன் அ ஒருத்தியுடன் அடுத்த 6 மாதம் இன்னோருவன் அ இன்னொருத்தியுடன் வாழும் வாழ்க்கை வாழ்க்கையல்ல அதற்க்கு பெயர் வேறு……. பணம் சம்பாதிக்கலாம் அது நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறந்துவிட்டல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் இளைஞர்-இளைஞிகள். ஏன் எனில் வருங்காலம் உங்களது கரங்களில்……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக