வெள்ளி, மார்ச் 09, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 21.
க்ளாஸ்குள் நுழைந்ததும் நேத்து நீ எங்கடா போயிருந்த என ஜானை பாத்து கேட்டதும். 

அதான் சொன்னேனே. 

பொய் சொல்லாத. 

என்னத்த பொய் சொல்றாங்க என சிடுசிடுத்தான். 

உங்கப்பா என்ன வேலை வச்சாரு?.

எங்க மாமா பணம் தரனும் அதப்போய் வாங்கிவான்னாரு. அதுக்காக ஊருக்கு போனன். 

ஒழுங்கா உண்மையை சொல்லு. 

ஏய். அதான் உண்மை.  

நேத்து நீ அமிர்திக்கு காலையில போய் சாயந்தரம் தான் வந்துயிருக்க என்றதும் அதிர்ந்து போனவனை பார்த்து நீ யார்கூட போனன்னு சொல்லட்டுமா?. நம்பிக்கை துரோகி என கத்தியதும் ரமேஷ், அகிலன், தயா உட்பட வகுப்பை அமைதியாக எங்களை கேள்விக்குறியோடு பார்த்தது. விருட்டென வகுப்பை விட்டு எழுந்து வந்துவிட்டேன். 

ரூம்கு வந்தும் மனம் ஆறவில்லை. அவன்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சியிருந்தன். நாய் எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சிட்டான். என்னை நல்லா புரிஞ்சவன்னு நினைச்சன். என்கிட்டயே எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சியிருக்கான். இது எனக்கு தெரியாதுன்னு சொன்னா எவனாவது நம்புவானா?. அவன் சொல்லலன்னு சொன்னா எங்க நட்ப பத்தி என்ன நினைப்பாங்க. அவன் தான் பெஸ்ட் ப்ரண்ட்னு சொன்ன அவனே இப்படி பண்ணியிருக்கானேன்னு கேள்வி கேட்டா என்னச்சொல்றது. எல்லாமே நம்ம தப்பு. எல்லாரையும் நாம தான் நம்பறோம் போல. எவ்ளோ முட்டாளாக்கியிருக்கான். 

நாம அவனுக்கு நம்பகமான நண்பனா இல்லைங்கறதால தானே இத சொல்லல. அவனுக்கு நாம நம்பிக்கையான நண்பன் கிடையாது. தப்பு பண்ணிட்டன்டா. பக்கபலமா இருப்பான்னு நம்பறவனே இப்படி இருக்கான்னா மத்தவங்க. நண்பர்களுக்கு எதுவுமே தெரியாம இருக்காதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நினைச்சியிருந்தா நம்மக்கிட்ட மறைச்சியிருப்பானா?. மனம் கொதிக்க ஆரம்பித்தது. 

ரூமில் இருந்த பேக்கை எடுத்து துணியை எடுத்து வைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டேன். வீட்டுக்குள் நுழையும்போதே என்னடா திடீர்ன்னு வந்துட்ட என அம்மா கேட்க. ஸ்ட்ரைக்மா அதான் என சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருக்கறன் என ரூமில் போய் படுத்தேன். தூக்கம் வரவில்லை. இப்படி மறைச்சி துரோகம் பண்ணுவான்னு நினைக்கவேயில்லை. என் புத்திய செருப்பால அடிக்கனும். நம்பனது உன் தப்பு. நண்பர்கள்ள ஒளிவு மறைவு இருக்ககூடாதுன்னு தானே சொல்றாங்க. அப்படியிருக்க இவன் மட்டும் மறைக்கறான்னா நாம அவனுக்கு உண்மையா இல்லைன்னு தானே அர்த்தம். நாம அவனுக்கு உண்மையா இல்லாதப்ப நாம விளகி நிக்கறது தான் நல்லது. இனிமே நல்லது கெட்டத அவனே பாத்துக்கட்டும். அவன் தொடர்பே இனிமே கிடையாது. இன்னையோட இரண்டு பேருக்கும் இடையில எதுவுமேயில்ல, எல்லாமே முறிஞ்சிடுச்சி. இனிமே அவன் யாரோ நான் யாரோ என முடிவெடுத்தபடி ரூமை விட்டு வெளியே வந்தேன். 

அக்கறையாக விசாரித்த அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசிவிட்டு ஊருக்குள் நடக்க தொடங்கினேன். அவன் ஏற்படுத்திய காயம் மனதில் வலிக்க ஆரம்பித்துயிருந்தது. 

அப்போது தான் மஞ்சுவை கண்டேன். தண்ணி குடத்துடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். இரண்டு ஆண்டுக்கு பின் அவளை பார்க்கிறேன். ஊருக்கு லீவுக்கு வந்தபோது கூட அவள் கண்ணில் தட்டுப்படவில்லை. இப்போது தான் காண முடிந்தது. கொஞ்சம் சதை போட்டுயிருந்தாள். குழந்தை பக்குவம் போய் தாய்மை பக்குத்தில் இருந்தாள். 

என்னை கண்டதும் ஒரு நிமிடம் அவள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. பின் தலையை குனிந்துக்கொண்டு வந்தவளை அருகே வந்ததும் எப்படி இருக்க என நான் கேட்க பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடினாள். 

நல்லா இருக்கன். 

நீ ?.

ம். எங்க உன் வீட்டுக்காரன். 

வீட்ல. 

வேப்பமரத்தாண்ட நான் வரச்சொன்னன்னு சொல்லு. 

ம் என சொல்லிவிட்டு நடந்தாள். 

வேப்பமரத்தின் கீழ் யாரும்மில்லை. ஜான் விவகாரமே மனதில் ஓடியது. 

என்னடா படிச்சவனே. திடீர்னு ஊருக்கு வந்துயிருக்கற. 

ஒன்னும்மில்லடா. சும்மா தான் வந்தன். நீ எப்படிடா இருக்கற ?. எங்க பசங்கள காணோம்.

வேலைக்கு போனாதாண்டா சோறு. பசங்க வேலைக்கு போயிருக்கானுங்க. 3 மணியாகிடுச்சி வந்துடுவானுங்க. 

நீ போகலயா?.

மஞ்சுவோட அக்காவை பக்கத்தல திமிறியில இருக்கு. அதப்போய் பாத்துட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் வந்தோம். நீ வரச்சொன்னன்னு மஞ்சு வந்து சொல்லுச்சி அப்படியே வந்தன். 

குடும்பஸ்தனாயிட்ட வாழ்க்கை எப்படிடா போகுது. 

பிரச்சனையில்ல மச்சான். குடும்பம் நல்லா நடக்குது. 

எத்தனை பசங்க?

ஒரு பையன். ராசுன்னு பேரு. கல்யாணத்துக்கு தான் வரல. இப்பவாவுது வீட்டுக்கு வாயேண்டா?. 

பசங்க வரட்டும். எல்லாரும் போலாம். அவனுங்க என்ன துபாய்ல இருந்தா வர்றானுங்க. வாடா என்றான். 

கொஞ்சம் யோசித்துவிட்டு சரி வா போலாம் என கிளம்பினோம். முத்துவின் பெரிய ஓட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் தோட்டத்து பக்கம்மிருந்து வீட்டுக்குள் வந்த என்னை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு வாங்க என மரியாதையாக அழைத்துவிட்டு தண்ணி கொண்டு வந்து தந்தது.  தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை முத்து தூக்கி வர குழந்தை முழித்துக்கொண்டு சினுங்கியது. அழுவாதடா கண்ணா இங்க பாரு ஒரு புது மாமா வீட்டுக்கு வந்திருக்காரு பாரு, ஏன் என்னை வந்து பாக்கலன்னு கேளு என்றபடி என் கையில் தந்தான். 

கையில் வாங்கி டேய் குட்டி இங்கப்பாரு, இங்கப்பாரு அங்கிள பாரு என்றதும் பொக்கை வாய் கொண்டு சிரிக்க தொடங்கியது. 

சாப்பிடறியாடா?

வீட்ல சாப்டுட்டு தான் வந்தன். இன்னோரு நாள் சாப்பிடறன் என குழந்தையுடன் விளையாடியபடி பார்மாலிட்டிக்காக மஞ்சுவிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு வா பசங்க வந்துயிருப்பானுங்க போலாம் என கிளம்பினேன். உனக்கு அடுத்த முறை வரும்போது மாமா கார் பொம்மை வாங்கி வர்றன் எனச்சொல்லிவிட்டு குழந்தையை மஞ்சுவிடம் தந்துவிட்டு கிளம்பறேங்க எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம். 

வரும்போது உன் முகமே சரியில்ல. என்ன நடந்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சிக்க. மனச போட்டு குழப்பிக்காத. ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றன் என்றவனை உத்து பாத்துவிட்டு கல்யாணம் ஆனதும் ரொம்ப மாறிட்டடா. 

கல்யாணம் ஆன எல்லாரும் மாறுவான்டா நடடா. ஜீவாவும், ஏழுமலையும் வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தனர். எங்களை கண்டதும் வாடா நீ எப்ப ஊருக்கு வந்த. இவன் கூட எங்க சுத்திக்கிட்டுயிருக்கற. 

மதியமே வந்துட்டன். இவனை வரச்சொன்னன். வந்தான். நீங்க ஆள்யில்ல. இவன் வீட்டுக்கு வாடான்னான். கல்யாணத்துக்கே வரல. இப்பவும் போகலன்னா நல்லாயிருக்காதுன்னு தான் போய் குழந்தைய பாத்துட்டு வந்தன். சரி நீங்க எப்படிடா இருக்கிங்க?. 

நல்லாயிருக்கறோம். அதிருக்கட்டும் நீ என்ன நல்லது, கெட்டதுக்கே ஊர் பக்கம் வர்றமாட்டேன்கிற. என்ன ஏதாவது குட்டிய மடக்கிட்டியா என ஜீவா கொக்கி போட்டான். 

அதெல்லாம் ஒன்னும்மில்லாடா. வந்தா தங்க முடியாது அதான் வர்றதில்ல என்றபடி ஊர் கதைகளை பேச தொடங்கினோம். இருட்ட தொடங்கியதும் வீட்டுக்கு கிளம்பறன்டா என்றதும். 

மாப்ள இன்னும் இரண்டு மாசத்தல ஏழுமலைக்கு கல்யாணம். ஞாபக படுத்துறோம் வந்துடு என்றான் ஜீவா. 

எந்த ஊர்டா பொண்ணு. 

அதையேன் கேட்க. பக்கத்து ஊர் தான். சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனயிடத்தல நைட் ஒரு பொண்ண பாத்து ஜாடையா பேசியிருக்கான். அது அவுங்க அண்ணன்கிட்ட போட்டு கொடுத்துடுச்சி. அவன் வந்து இவனை கல்யாண வீட்டுக்கு பின்னாடி கூப்டும் போய் செம மாத்து மாத்தியிருக்கான். இதப்பாத்த அந்த பொண்ணு அய்யோ பாவம்னு பரிதாபப்பட்டு மன்னிச்சிடுங்க இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாதுன்னு ஐஸ் வச்சியிருக்கு. இவுரு உடனே உனக்காக இன்னும் எவ்ளோ வேணும்னாலும் அடிவாங்குவன்னு பில்டப் தந்ததுல இரண்டு பேரும் செட்டாகிட்டாங்க. இப்ப கல்யாணத்தல வந்து நிக்குது என ஜீவா கூற அதைக்கேட்டு அசடு வழிந்தான். 

தேதி சொல்லு வந்துடறன். 

அப்படியே ஜான்கிட்ட சொல்லி கூப்டுவாடா என்றான் ஏழுமலை. அப்போது என் முகம் இறுகுவதை கண்டு என்னடாச்சி. 

அவன்கிட்ட பேச புடிக்காம தான் ஊருக்கே வந்தன். 

என்னடா பண்ணான். 

அப்பறம் சொல்றன் என வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தேன். இரவும் ஜான் மீதான கோபம் குறையவில்லை. அவன் பண்ணியதை நினைத்தபோது எரிச்சலாக இருந்தது. 

காலை எழுந்திருக்கும்போதே போன் மணியடித்தது. அம்மா தான் எடுத்து இங்கதான் இருக்கான்பா என்றார். நல்லாயிருக்கியாப்பா என கேட்டுவிட்டு போனை வைத்தவர் என்னடா பிரச்சனை. 

போன்ல யாரு?

ஜான் பேசனான். 

அதற்கு மேல் எதையும் கேட்காமல் அமைதியாக எழுந்து ஏரிக்கரையை நோக்கி நடந்தேன். இப்படியே ஒருவாரம் போனது. ஒருநாள் நிலத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த என்னை ஓடிவந்த ஒரு சிறுமி உன்ன பாக்க நிறைய பசங்க வந்துயிருக்காங்க. அத்தை உன்னை சீக்கிரம் வரச்சொல்லுச்சி எனச்சொல்லிவிட்டு திரும்பி ஓடினாள். 

யாராயிருக்கும் என யோசித்தபடி வீட்டிக்கு வந்தபோது ஜான், ரமேஷ், அகிலன், தேவி பாயில் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். என்னை பார்ததும் சைலண்டானவர்களை எல்லாருக்கும் வந்தனம். வாங்க. எப்படி இருக்கிங்க என புன்னகையுடன் கேட்டுவிட்டு கழனியில் இருந்து பறித்து வந்த கத்தரிக்காயை வைப்பதற்காக சமையல் கட்டுக்குள் போனபோது ப்ரியா அம்மாவிடம் பேசிக்கொண்டே காபி போட்டுக்கொண்டிருந்தாள். 

வாடா உன்ன விட உன் கூட படிக்கறவங்க நல்லவங்களா இருக்காங்க. பாரு இந்த பொண்ண வீட்டுக்கு வந்ததும் நான் தனியா காபி போடறன்னு எழுந்துவந்து உதவி பண்ணுது நீயும் இருக்கியே. எப்பவாவுது இந்தமாதிரி செய்துயிருப்பியா என கேட்கும்போது லுங்கியில் கட்டி எடுத்து வந்த கத்தரிக்காயை கொட்டியதும். 

அதை பாத்துவிட்டு இத பாத்து ஏமாந்தடாதம்மா. அவனுக்கு கத்திரிக்கா கொழம்பு காரமா செய்தா புடிக்கும். அதனால தான் அக்கறையா பறிச்சி எடுத்து வந்துயிருக்கான். 

என்ன குத்தம் சொல்லலனா உனக்கு தூக்கம் வராதே. 

உங்கப்பா எங்க?.

மோட்டர் போட்டுட்டு வர்றன்னாரு எனச்சொல்லி சமையல் கட்டில் இருந்து வெளியே வர ப்ரியா காபி தட்டுடன் பின்னால் வந்தாள். நீ எதுக்கு இதெல்லாம் செய்துக்கிட்டு.

வாயை மூடிக்கிட்டு இரு. 

காபி சாப்பிட ஆரம்பிக்கவும் யாருப்பா இவுங்கயெல்லாம் என்றபடி உள்ளே வந்தார். காலேஜ்ல எல்லாரும் ஒன்னா படிக்கறோம் என அறிமுகப்படுத்தியதும் ஜானை பாத்து எப்படிப்பா இருக்கற?. 

நல்லாயிருக்கறன்பா. 

நல்லா படிக்கறாப்பளயா என கேட்கும் போதே கரண்ட் கட்டானது. 

இவனுங்க தொல்லை எப்ப தீரும்னே தெரியல என சலித்துக்கொண்டவர் நம்ம கண்ணயனை ஆஸ்பத்திரியில சேர்த்துயிருக்காங்க நான் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறன். ஒரு மணிக்கு கரண்ட் வந்துடும். நீ போய் மோட்டர் மட்டும் போட்டுட்டு வந்துடு. போறியா?. 

ம் என்றதும். 

தண்ணீ ஆறுது பாருங்க வந்து குளிங்க என அம்மா உள்ளிருந்து குரல் கொடுத்ததும். 

இவன்கிட்ட வேலை வச்சா அவளுக்கு வேக்குது முனகியபடியே இதே வர்றன் என்றபடியே உள்ளே சென்றார். 

எதுக்கு காலேஜ்கு வராம ஊருக்கு வந்த என அகிலன் தான் ஆரம்பித்தான். 

புடிக்கல வரல. 

படிக்கறது புடிக்கலயா இல்ல எங்களையே புடிக்கலயா என்றான் ரமேஷ். 

மவுனமாக இருந்ததும். 

நீ வந்தது பிரச்சனையில்ல. யார்கிட்டயும் சொல்லாம எதுக்காக வந்த, என்ன பிரச்சனை?.

அம்மா பாக்கனும்னாங்க வந்துட்டன். 

அதுக்கு எதுக்கு சொல்லிக்காம கொள்ளிக்காம ஓடி வந்த என அகிலன் கேள்வி எழுப்ப. 

நான் போய் மோட்டர் போட்டுட்டு வர்றன். நீங்க பேசிக்கிட்டு இருங்கடா என்றதும். இரு நாங்களும் வர்றோம் என்றபடி எழுந்தார்கள். 

தூரமா போகனும். 

பரவாயில்ல என்றவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு சமையல்கட்டுக்கு சென்று எல்லாரையும் நிலத்துக்கு அழைச்சி போய்டு வர்றன். நீ எல்லாருக்கும் மதியம் சாப்பாடு செய்மா?. நான் ஜீவாவ அனுப்பறன். உளுந்துவடையும், சிக்கனும் செய்மா எனச்சொல்லிவிட்டு வெளியே வந்து அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். 


வழியில் தெண்பட்டவர்கள் சிலர் யாருப்பா இவுங்க என கேட்க பதில் சொல்லிக்கொண்டு நடந்தேன். ஜீவா வீட்டருகே வந்ததும் குரல் கொடுத்ததும் ஏண்டா கத்தற என்றபடி வெளியே வந்தான். என்னுடன் இருந்தவர்களை பார்த்தும் முழித்தவன் ஜானை பார்த்து புன்னகைத்தவனிடம் வீட்டுக்கு போ அம்மா ஏதாவது சொன்னாங்கன்னா செய்துட்டு சீக்கிரம் எங்க பம்பு செட்டாண்ட வந்துடு. சீக்கிரம் வாடா என்றதும் சரிடா என்றவன் கதவை சாத்திவிட்டு கிளம்பினான். 

வரப்பில் நடந்தபோது, அந்த தென்னந்தோப்பு, நெல் வயல் எல்லாம் எங்கள்துதான். கரண்ட் பிரச்சனையால பாதி நிலத்துக்கு மேல பயிர் வைக்கல என்றபடியே நடக்க பலயிடங்களில் ப்ரியா தடுமாற ஆரம்பித்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டு வரப்பில் நடப்பது எப்படி என கத்து தந்தேன். 

தென்னந்தோப்புக்கு வந்ததும் நிழலாக பார்த்து உட்காரச்சொல்லி அமர்ந்தேன். 

இப்பவாவுது சொல்லுடா எதுக்கு சொல்லிக்காம வந்த என ரமேஷ் ஆரம்பித்தான். 

நம்பிக்கை துரோகத்த ஏத்துக்க முடியல அதனாலதான் வந்தன். 

உங்களுக்குள்ள என்ன பிரச்சனைடா என கேட்டான் அகிலன்.

எங்கிட்ட என்ன மயிருக்கு கேட்கறிங்க. அதே உட்காந்துயிருக்கானே ஜானை கைகாட்டி அவன்கிட்ட கேளுங்க. தப்பு பண்ணது அவன். என்கிட்ட வந்து கேள்வி கேட்கறிங்க. 

அவன் எதுவும் சொல்லலடா ?. 

சொல்லலயில்ல. அப்ப அப்படியே விடு. விளையாட்டுக்கு பொய் சொல்றது, ஏமாத்தறது வேற. நிஜ வாழ்கைங்கறது வேற. நாம நம்பறவங்க நம்பளை ஏமாத்தும் போது ஏற்படற வலி அனுபவிச்சா தான் தெரியும். நட்புக்கு இல்லக்கணமே நம்பிக்கை தான். அவனை நண்பன்னு நினைச்சி ஏமாந்தது போதும். நான் இனிமே காலேஜ் வரல. இதான் என் முடிவு என கோபத்தில் கத்தியபோது தலையை தொங்க போட்டபடி நின்றிருந்தான் ஜான். 

தப்பு பண்ணியிருந்தா அவனை ரெண்டு அடி அடிச்சிடு. காலேஜ் வரலன்னு சொன்னா என்னடா அர்தம் என ரமேஷ் கேட்க. 

அவனைப்பத்தி பேசி வீணா கோபத்த கிளப்பாத எனும்போதே என்ன பிரச்சனையா இருந்தாலும் காலேஜ் வாடா பேசிக்கலாம் என அகிலன் என் தோள் மேல் கை போட்டதும் விடுடா என அவன் கையை தள்ள தோள் பட்டியை இறுக்கி பிடிக்க ஜீவா இளநீர் வெட்டும் கத்தியுடன் 50 அடி தூரத்தில் வந்தவனை பார்த்து அவனை வெட்டுடா என ஜீவாவை நோக்கி சொன்னதும் அறுவாளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு முகத்தில் வெறியுடன் ஓடிவந்தான். 

தொடரும்………..

1 கருத்து: